Alavandhar vaibhavam - 1| ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்
ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்
திருநக்ஷத்திரம் : ஆடி உத்திராடம்

பகுதி 1

திருநக்ஷத்ர தனியன் :

ஸூசௌ மாஸ்யுத்தாராஷாடாஜாதம் யாமுநதேஸிகம் |
ஸ்ரீராமமிஸ்ரசரண ஸரோஜாஸ்ரீத மாஸ்ரயே ||

விளக்கம்: ஆடி உத்திராடத்தில் அவதரித்தவரும், மணக்கால் நம்பியாகிற ஸ்ரீராமமிஸ்ரரின் திருவடித் தாமரைகளை ஆச்ரயித்தவருமான ஆளவந்தார் என்னும் யாமுனாசார்யரை ஆச்ரயிக்கிறேன்.

ஸ்ரீ மணக்கால் நம்பி அவதரித்து 47 வருடங்களுக்குப் பின்பு "தாது" (வருடத்திலே கி.பி.976) ஆடி மாதம், பௌர்ணமி நாளன்று உத்திராடம் கூடிய வெள்ளிக்கிழமையில், ஸ்ரீமந்நாதமுனிகளுடைய திருக்குமாரரான ஈஸ்வர முனிகளுக்கும் அவருடைய தர்மபத்தினியான ஸ்ரீரங்கநாயகிக்கும் குமாரராக, ஸ்ரீமந்நாதமுனிகள் ஆதரித்த திவ்யக்ஷேத்ரமான வீரநாராயணபுரத்திலே யமுனத்துறைவர் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்ரீ ஆளவந்தார் அவதரித்தருளினார்.

நாதமுனிகள் நியமனப்படி அவர் கைங்கர்யம் செய்த வடநாட்டு கோவர்த்தனபுரத்திலுள்ள எம்பெருமானின் திருநாமமாகிய "யமுனைத்துறைவர்" என்னும் திருநாமம் இவருக்குச் சார்த்தப்பட்டது. ஈச்வர முனிகளால் உரிய காலத்தில் அன்ன ப்ராஸனம், சௌனம், உபநயனம் முதலான ஸம்ஸ்காரங்கள் யாமுனருக்குச் செய்யப்பெற்றன. வேதாத்யயனம் செய்யும்போது இவர் மிகுந்த மேதாவிலாசத்தை உடையவராய்த் (வேதத்தில் தேர்ந்த அறிவு பெற்றவராய்) திகழ்ந்தார். உரிய காலத்தில் இவருக்கு விவாஹமும் செய்விக்கப்பெற்றது.

மஹாபாஷ்ய பட்டர் என்பவரிடம் இவர் ஸாஸ்த்ராப்யாஸம் செய்துவந்தார். அக்காலத்தில் ராஜ புரோஹிதனாயிருந்த ஆக்கியாழ்வான் என்பவன் தன வித்யா கர்வத்தாலே அந்நாட்டில் உள்ள எல்லா வித்வான்களிடமும் கப்பம் (வரி) வாங்கிவந்தான். அவன் ஒருநாள் கப்பம்கேட்டு மஹாபாஷ்ய பட்டருக்கு ஓலை அனுப்ப, பட்டர் கப்பம் செலுத்த வழியில்லாமல் திகைத்து ,நிற்பதைப் பார்த்து, யமுனைத்துறைவர் அந்த ஓலையைக் கிழித்தெறிந்து விட்டார். அதைக்கேட்ட ஆக்கியாழ்வான், "ஓலையைக் கிழித்தவன் வெறும் கவியோ அல்லது தந்திரம் (மீமாம்சதி, ஸாஸ்த்ரம்) கரைகண்டவனோ?" என்று கேட்டு அனுப்பினான். அதற்கு, "யாம் கவிகள் மாத்திரம் அல்லோம் (இல்லை); யாம் மீமாம்ஸா ஸாஸ்த்ரக்கடலை மாத்திரம் கரைகண்டவர்கள் அல்லோம்; எதிர்வாதம் புரியுமவர்களாகிற யானைகளின் மிக்க ஆடம்பரமாகிற மத்தகத்தைப் பிளக்க வல்ல வலிமையையும் உடையவர்கள் ஆவோம்" என்று பதில் எழுதி அனுப்பினார் யமுனைத்துறைவர். இதைக்கண்டு வியப்புற்ற அரசன், யமுனைத்துறைவரை உடனே ராஜசபைக்கு வரச்சொல்லி ஓலை அனுப்பினான். அந்த ஒலியையும் யமுனைத்துறைவர் கிழித்துவிட, அதைக்கேட்ட அரசன், "இவர் சாதாரணமானவர் அல்லர்" என்று அறிந்து, இவர் வருவதற்குப் பல்லக்கை அனுப்பினான். யாமுநேயரும் அப்பல்லக்கில் ஏறி ராஜசபைக்கு எழுந்தருளி, "மலையரசன் மகளான பார்வதியின் தளிரடிவைப்பினாலே சிறந்து விளங்கும் தாழ்வரைகளை உடைய இமயமலை முதல் அரக்கனால் அபஹரிக்கப்பட்ட சீதாபிராட்டியின் திருமுகத்தாமரை மலர்வதற்குக் காரணமான ஸேது சமுத்திரம் வரையிலும், சந்திர ஸூர்யர்கள் இருவரையும் தலை அலங்கராமாக உடைய உதயகிரிக்கும் அஸ்தமன கிரிக்கும் நடுவிலும், பூர்வமீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை,எனும் இரண்டு ஸாஸ்த்ரத்திலும் விசேஷமான பயிற்சியினாலே மயர்வற்ற (தளராத) நெஞ்சினை இடைய என்னைப்போன்ற மற்றொருவன் தேடப்படட்டும் (தேடினாலும் கிடைக்கமாட்டான்) என்னும் பொருள் உள்ள ஸ்லோகத்தை எழுதியனுப்பினார். அதன்பின், ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் மத்யஸ்தர்களான வித்வான்கள் முன்னிலையில் தர்க்கம் நடந்தது. அப்போது, அங்கு சிம்மாசனத்திலிருந்த ராஜமஹரிஷியும் ராஜாவும் ஒருவருக்கொருவர் பின்வருமாறு சபதம் செய்துகொண்டனர். "யாமுநேயர் தோற்றாராகில் நான் மகரிஷி பதவியைத் துறந்து, வேலைக்காரியாவேன்" என்றால் ராஜமஹரிஷி. "ஆக்கியாழ்வான் தோற்றாராகில் யமுனைத் துறைவருக்கு நான் பாதி ராஜ்யம் தருவேன்" என்றான் அரசன்.

இளம் பிள்ளையான இவரை சாஸ்த்ர விவாதம் இல்லாமலே லௌகிக விஷயங்களிலே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணின ஆக்கியாழ்வான், "லௌகிகங்களிலே நீர் இல்லை என்பதை நான் உண்டு என்பேன்; நீர் உண்டு என்பதை நான் இல்லை என்பேன். வென்றவன் தோற்றவன் தலையிலே அடிக்கவேண்டியது என்று கூறினான். அதற்கு ஒத்துக்கொண்ட யமுனைத்துறைவர் (1) 'உன் தாய் மலடியள்ளல்' (2) அரசன் தார்மிகன் (3) ராஜபத்னீ பதிவிரதை (பத்தினி) என்று சொல்லி ஆக்கியாழ்வானை மறுக்கச்சொன்னார் . அவன் அவற்றை மறுக்காமல், மறுக்க முடியாமல், மௌனியாய் இருந்தான். பின்பு சாஸ்த்ர விவாதமும் நடந்தது. அதிலும் தோல்வியுற்றான் ஆக்கியாழ்வான். "நீர் சொன்ன மூன்று லௌகிக லௌகீக வாக்யங்களையும் உம்மால் மறுக்க முடியுமோ?" என்று யமுனைத்துறைவரை ராஜாவும் ராஜமஹரிஷியும் கேட்டனர்.

யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாஸேஷகல்மஷ |
வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் ||
("கீதாபாஷ்ய மங்களம்")

விளக்கம் : எவருடைய திருவடித்தாமரைகளை தியானிப்பதால் எல்லா தோஷங்களும் நீங்கப்பெற்று யான் ஒரு பொருளாக ஆனேனோ, அத்தகைய யமுனைத்துறைவரை வணங்குகிறேன்.

நேற்றைய பகுதியில் யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வானிடம் மூன்று விஷயங்களைச் சொல்லி, அதில் நான் "உண்டு" என்பதை நீர் "இல்லை" என்றும், நான் "இல்லை" என்பதை நீர் "உண்டு" என்றும் நிரூபித்தால் உம் மேதா விலாசத்தை நான் ஒப்புக்கொண்டு உமக்கு நான் தோற்றவனாவேன் என்று கூறினான். யமுனைத்துறைவர் உரைத்த மூன்று விஷயங்கள் : (1) 'உன் தாய் மலடியள்ளல்' (2) அரசன் தார்மிகன் (3) ராஜபத்னீ பதிவ்ரதை (பத்தினி) ஆகியவை ஆகும். இவற்றைத் தவறு என்று மறுக்கவேண்டிய கட்டாயத்தில் இப்போது ஆக்கியாழ்வான் உள்ளாரன் . இவர்களுக்குள் மேற்கொண்டு நடந்த ஸம்வாதத்தை இன்றைய பகுதியில் அனுபவிப்போம்.

இவ்வாறு யாமுநேயர் உரைத்த மூன்று விஷயங்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் மெளனமாக இருந்தான் ஆக்கியாழ்வான். பின்பு ஸாஸ்த்ர விசாரமும் நடந்தது. அதிலும் ஆக்கியாழ்வான் தோல்வியுற்றான். "நீர் சொன்ன மூன்று லௌகிக வாக்யங்களை உம்மால் மறுக்க முடியுமோ?" என்று யாமுநேயரை நோக்கி ராஜாவும் ராஜமஹிரிஷியும் கேட்டனர். அதற்கு "முடியும்" என்று விடை அளித்தார் யாமுநேயர். அவர் உரைத்த பதில்களாவது:

(1) 'உன் தாய் மலடியள்ளல்' : ஒரு குழந்தையையும் பெறாதவளே "மலடி" என்று கருதப்படுவாள். ஆனால் இங்கே யாமுநேயர் ஆக்கியாழ்வானிடம் இப்படிக் கூறியது இக்கருத்துக்கு எதிரானது என்பது நன்கு புரிகிறது. இருந்தும், தான் கூறியது சரி என்று நிரூபிக்கிறார் யாமுநேயர். அதாவது, "ஒரு மரமும் தோப்பல்ல; ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல" என்கிற உலக வழக்கின்படி, நிலையற்றதான இவ்வுலகில் ஒரு பிள்ளையைப் பெற்ற தாய் "இப்பிள்ளை நமக்குத் தங்கவேண்டுமே; நம்மை இரட்சிக்கவேண்டுமே" என்று கலங்கிக்கொண்டெ இருப்பாள். ஆகையால், அவள் பிள்ளை பெற்றும் மலடியே ஆவாள். இம்முறையில் ஒரு பிள்ளை பெற்ற ஆக்கியாழ்வானுடைய தாயார் மலடியே! ஆகையால், முதல் வாக்கியம் மறுக்கப்பட்டது.

(2) "அரசன் தார்மிகன்" : அதாவது, அரசன் தரும சிந்தனை மிக்கவன் (கொண்டவன்) என்று கூறிய வாக்கியம் மறுக்கப்பட வேண்டும். இதையும் யாமுநேயர் தானே மறுத்துக் கூறி பதிலளித்தார். அதாவது, "குடிகள் (மக்கள்) செய்யும் பாபம் அரசனைச் சேருமாகையாலே, மிகுந்த தரும சிந்தனை கொண்ட இந்த அரசனும் குடிமக்கள் செய்யும் பாபத்திலே பங்கு பெறுவதாலே" என்று கூறினார்.

(3) "ராஜபத்னீ பதிவ்ரதை" - அதாவது ராஜாவின் மனைவியானவள் பத்தினி அல்லள் என்று மறுத்துக் கூறவேண்டும். கூறினார் யாமுநேயர். அதாவது, "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருதீயோ அக்நிஷ்டே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜா:" - "ஸோமன் முதல்நாள் உன்னை மணம் புணருகிறான்; கந்தர்வன் அடுத்தநாள் உன்னை மணம் புணருகிறான்; மூன்றாவது நாள் அகினியானவன் உனக்குப் பதியாகிறான்; நாலாவது நாளிலே கைப்பிடித்த மனிதன் உனக்குக் கணவனாகிறான்" என்று இதற்குப் பொருள். இந்த வேத வாக்யத்தின் படி, வைதிக முறையில் திருமணம் செய்துகொண்ட எல்லா ஸ்திரீகளுக்குமே மணமான முதல் மூன்று நாட்களில் தேவதைகளோடு தொடர்பு உண்டாவதால் பதிவ்ரத்யத்தில் குறையுண்டு. அக்குறை பரம வைதிகமான முறையில் அரசனைக் கைப்பிடித்த ராஜபத்னிக்கும் உண்டாகையாலே, யாமுநேயர் தான் உரைத்த மூன்றாவது வாக்யத்திற்கும் தானே மறுப்பு தெரிவித்து விளக்கினார்.

இவ்வண்ணமாக, லௌகிக வாதத்திலும் ஸாஸ்த்ர வாதத்திலும் வெற்றிகொண்ட பின்பும், ராஜபுரோஹிதனுமாய், பிராயத்தில் (வயதில்) முதிர்ந்தவனுமான ஆக்கியாழ்வானை முதலில் பண்ணின ப்ரதிஜ்ஞைப்படி (ஒப்புதலின்படி) தலையிலே அடிப்பதற்கு யாமுநேயர் மறுத்துவிட்டார். இவருடைய பண்பையும், ஸாஸ்த்ர புலமையையும், லோகானுபவத்தையும் கண்டு வியப்புற்ற வித்வான்கள் அனைவரும் இவருக்கு "ப்ரஹ்மரதம்" (பல்லக்கு) பண்ணிப் பெருமைப்படித்தினர். ராஜமஹரிஷியும் "என்னை ஆளவந்தீரோ" என்று யமுனைத்துறைவரைத் தன் பிள்ளையைப் போலே எடுத்து அணைத்துக்கொண்டு, தன் பர்த்தாவுடன் அரண்மனைக்குள் புகுந்தாள். அரசனும் தன் ப்ரதிஜ்ஞைப்படி இவருக்குப் பாதி ராஜ்யத்தைக் கொடுத்தான். ஐவரும் தம் பத்தினியோடு கூடி அரசாட்சி செலுத்திக்கொண்டு அரச போகத்திலே ஆழ்ந்திருந்தார்.