Alavandhar vaibhavam - 2 | ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்

Alavandhar vaibhavam - 2 | ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்
ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்

திருநக்ஷத்திரம் : ஆடி உத்திராடம்

பகுதி 2

நிதியைப் பொழியும் முகிலென்று நீசர்தம் வாசல்பற்றி
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனி தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற்றுடைய, இராமானுசன் என்னைக் காத்தனனே

என்று இராமானுசர் துதிபாடும் பிரபந்தமான ப்ரபன்ன சாவித்திரி என்று வழங்கப்படும் இராமானுச நூற்றந்தாதியில் திருவரங்கத்தமுதனார், ஸ்ரீ ஆளவந்தாரின் பெருமையைக் கூறி, அவருக்கும் அப்பேர்பட்ட மகானின் திருவடித் தாமரைகளைத் தஞ்சமாகக் கொண்ட இராமானுசருக்கும் மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் விளக்கமாவது :

தூய்நெறிசேர் எதிகட்கு இறைவன் என்று போற்றப்படுகிறார் ஸ்ரீ ஆளவந்தார் மேற்பாசுரத்தில். அதாவது,பரிசுத்தமான அனுட்டானத்தை முடைய யதிகளுக்குத் (தவச்சீலர்கள் - யோகிகள், முனிவர்கள்) தலைவராக ஸ்ரீ ஆளவந்தார் திகழ்கிறார் என்று தெரிவிக்கிறார் அமுதனார். அப்படிப்பட்ட ஏற்றத்தை (வாழ்ச்சியை) உடையவரான ஸ்ரீ ஆளவந்தாரின் உபய பாதங்களாகிற ப்ராப்யத்தைப் (அருள்) பெற்று, அதனாலே உலகத்தார்கள் அனைவருக்கும் ஸ்வாமியாய் இருக்கிற எம்பெருமானார் (இராமானுசர்) என்னை இரட்சித்து அருளினார்; இத்தகு அருளைப் பெற்றபின் இனிமேல், "நிதிகளை வர்ஷிக்கிற (பொழிகிற) மேகமே!" என்று ஸ்தோத்ரங்களைப் பண்ணிக்கொண்டு இவ்வுலகத்தில் நீசராய் (குறைவுடையவராய்) இருக்கும் தகுதியற்ற மனிதர்களின் வாசலைப் பற்றி நின்று மாட்டேன் என்று உரைத்துள்ளார் அமுதனார்.

ஆசார்யனே உய்ய வழி, அதாவது, நல்ல ஆசார்யனின் சம்மந்தமும் அவரது இன்னருளும் இருந்தால்தான் ஒருவருக்கு நற்கதியானது கிடைக்குமே தவிர, தகுதியற்ற ஒரு சாதாரண மனிதரின் தொடர்பால் நிச்சயம் கிடைக்காது என்பதை உணர்த்தும் வண்ணம் மேற்பாசுரமானது அருளப்பட்டுள்ளது. "ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர் தேனார் கமல திருமாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும்" என்று நல்ல ஆசார்யனின் தொடர்பும், அவரது இன்னருளும் இருந்துவிட்டால், ஒருவருக்கு ஸ்ரீயப்பதியான (திருமாமகள் கேள்வன்) எம்பெருமான் நித்யவாசம் செய்யும் வைகுண்ட லோகத்தை அடையும் பாக்கியமானது தானாகக் கிடைக்கும் என்று ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் உபதேச இரத்தினமாலையில் (பாசுரம் 61) .அருளிச் செய்துள்ளார்.

ஸ்ரீ ஆளவந்தார் பெற்ற நல்ல தொடர்பு, முதற்கண் அவரது பாட்டனாரான ஸ்ரீமந்நாதமுனிகள். நம்மாழ்வாரிடமிருந்து நாலாயிர திவ்யப் பிரபந்தங்களையும் அதன் உபதேசங்களையும் பெற்று, நம்மாழ்வாரை ஆசார்யனாகக் கொண்டவர் ஸ்ரீமந்நாதமுனிகள். இவரது திருவடித் தொடர்பைக் கொண்டு, ஸத்சிஷ்யராய்த் திகழ்ந்தவர் ஸ்ரீஉய்யக்கொண்டார். இவரது திருவடித் தொடர்பைக் கொண்டு, ஸத்சிஷ்யராய்த் திகழ்ந்தவர் ஸ்ரீமணக்கால் நம்பி. இவரது திருவடித் தொடர்பைக் கொண்டு, ஸத்சிஷ்யராய்த் திகழ்ந்தவர் ஸ்ரீஆளவந்தார். ஸ்ரீஆளவந்தார் தொலைவில் இராமானுசரைப் பார்த்து, அவரது தோற்றப் பொலிவைக் கண்ட மாத்திரத்தில், தன் சிஷ்யர்களிடம் இவரே (இராமானுசர்) இனி "ஆமுதல்வனாக"த் திகழ்வார் என்று உரைத்தாராம். அதாவது, இரமானுசரான இவரே இனி ஜகதாசார்யராய் விளங்குவார் என்று உரைத்து அருளினாராம். ஸ்வாமி ஆளவந்தார் சொல்லவொண்ணாத மேன்மைகளை உடையவர். அவர் தனக்கு இளையவரான இராமானுசரை "இவரே இனி ஜகதாசார்யராய் விளங்குவார்" என்று உரைத்தார் என்றால், இதன் மூலம் இவர் தன் மேன்மைகளுக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்டார் என்றுதான் கொள்ளவேண்டும். இனி ஸ்ரீ ஆளவந்தாரின் வைபவங்களைத் தொடர்ந்து அனுபவிப்போம்:

உய்யக்கொண்டார் நியமனத்தாலே யமுனைத்துறைவரை தர்சன ப்ரவர்த்தகராக்க (எம்பெருமானின் இன்னருளைப் பெற்றுத்தரும் மகானாக்க) ஆசைகொண்ட மணக்கால் நம்பி கட்டும் காவலுமாய் இருந்த அரண்மனைக்குச் சென்றபோது ஆளவந்தாரைக் காணமுடியவில்லை. அதாவது, தன் அறிவுக் கூர்மையால் ஆக்கியாழ்வானை வென்றதால், அந்த தேசத்து அரசன் தன் ராஜ்யத்தில் பாதியை ஆளவந்தாருக்கு அளித்ததைக் கொண்டு, ஸ்ரீ ஆளவந்தாரும் ராஜ்ய பரிபாலனம் செய்து வாழ்ந்துவந்தார். அப்போதுதான் மணக்கால் நம்பி ஸ்ரீ ஆளவந்தாரைக் காணும்பொருட்டு அவரது அரசவைக்கு வந்தார். ஆனால், அங்கே இருந்த காவலாளிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவரை எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று இருந்தார் நம்பி. அந்த நோக்கத்தில், தான் வந்திருப்பதை ஆளவந்தாருக்கு உணர்த்தும் வண்ணம், "திருமடைப்பள்ளியில் (தளிகை செய்யும் இடம்) பணிபுரிவரிடமிருந்து "தூதுவளைக் கீரையே ஆளவந்தார் விரும்பி அமுதுசெய்யும் கறியமுது" என்று தெரிந்துகொண்டு, மடைப்பள்ளிக்கு ஆறுமாத காலம் தூதுவளைக் கீரையை அளித்துவந்தார். அப்போதும் இவரைப்பற்றி ஆளவந்தார் விசாரிக்காமல் இருந்ததால், மிகவும் வருந்தி, நான்கு நாட்கள் தூதுவளைக் கீரையை அளிக்காமல் இருந்தார். ஆளவந்தார் அமுதுசெய்யும்போது "நான்கு நாட்களாக தூதுவளைக் கீரை இல்லாமல் இருப்பதேன்?" என்று கேட்க, ஊழியர்கள் "ஆறுமாதமாக வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் கீரை அளித்துவந்தார்; ஆனால், நான்கு நாட்களாக அவர் வரவில்லை" என்று கூறினார்கள். ஆளவந்தாரும் இதைக்கேட்டு வியப்புற்று, அடுத்தபடி அவர் வந்தால் தமக்குத் தெரிவிக்குமாறு ஊழியர்களிடம் கூறினார். மறுநாள் நம்பியும் "முயற்சி செய்து பார்ப்போம்" என்று தூதுவளையை எடுத்துவந்து, திருமடைப் பள்ளியில் கொடுத்தார். அவர்களும் நம்பியை ஆளவந்தாரிடம் அழைத்துச் சென்றனர். ஆளவந்தாரும் அவரைக்கண்டு வணங்கி, ஆசனம் தந்து, "நீர் இத்தனைநாளாகக் கீரை கொண்டு வந்து தருவது எதற்காக? உமக்கு வேண்டிய தன தான்யங்களை அளிக்கிறோம்" என்று நம்பியைக் கேட்க, நம்பியும், "நமக்கு இவையொன்றும் வேண்டாம்; உமது பாட்டனார் (தாத்தா) தேடிவைத்த (சேர்த்துவைத்த) நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை உம்மிடம் அளிப்பதற்கு நான் இங்கு வந்து போவதைத் தடை செய்யாமல் இருக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கூறினார். அதன்படியே, அரண்மனை ஊழியர்களிடம் கட்டளையிட்டார் ஆளவந்தார். அன்றுமுதல் தினந்தோறும் நம்பி அரண்மனைக்கு எழுந்தருளி, கீதையின் உயர்ந்த அர்த்த விசேஷங்கள் அனைத்தையும் அருளிச்செய்ய, ஒருநாளைக்கு ஒருநாள் ஆர்த்தி விஞ்சப்பெற்ற (ஆர்வம் மிகுதி கொண்ட) ஆளவந்தார், "இவ்வெம்பெருமானை அடையும் உபாயம் (வழி) எது?" என்று நம்பியைக் கேட்க, நம்பியும் தனியே அவரை அழைத்துச்சென்று, "மெய்ம்மைப் பெருவார்த்தையான" (கீதையின்) சரம ச்லோகத்தின் அர்த்தத்தை ஆளவந்தாருக்கு அருளிச்செய்து, "அவனை அடைவதற்கு அவனே உபாயம் (வழி)" என்னும் உறுதியை அவருக்கு உண்டாக்கினார்". மேலும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும் அவற்றின் அரும்பொருள்களையும் உபதேசித்து அருளினார். அதற்குப்பின் திருவரங்கம் திவ்யதேசத்திற்கு அவரை அழைத்துச் சென்று, பெரியபெருமாளைத் (மூலவர்) திருவடி தொழச்செய்து, "உங்களுடைய பாட்டனார் (ஸ்ரீமந்நாதமுனிகள்) தேடிவைத்த பெருநிதி இதுவே! தரிசித்துக் கொள்ளும்" என்று காட்டிக்கொடுக்க, "அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று திருப்பாணாழ்வார் அருளிச்செய்தபடி, பெரியபெருமாளைத் தரிசித்தபின் அவனிடம் முழுவதுமாய் ஈடுபட்ட ஆளவந்தார் ராஜ்யம் முதலான எல்லாவற்றையும் துறந்து, துரீயாஸ்ரமத்தை (சன்னியாசம்) ஏற்றுக்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தர்சன நிர்வாஹம் செய்து வந்தார். அக்காலத்திலே பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலையாண்டான் முதலான ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்ம்மணோத்தமர்களும் , திருக்கச்சி நம்பி, மாரனேறி நம்பி முதலான பாகவதோத்தமர்களும் ஸ்ரீ ஆளவந்தாரை ஆச்ரயித்திருந்தார்கள்.

"ராமானுஜாங்க்ரிஸராணோஸ்மி குலப்ரீதீபஸன்
வாஸீத் ஸ யாமுனமுனேஸ் ஸச நாதவம்ஸ்ய |
வஸ்ஸ்ய பராங்குஸமுநேஸ்ஸ ச ஸோ தேவ்யா:
தாஸஸ்தவேதி வரதாஸ்மி தவேக்ஷணீய: ||
(கூரத்தாழ்வான் அருளிய "வரதராஜஸ்தவம்" ஸ்லோகம் 102).

விளக்கம் : எம்பெருமானாரின் (இராமானுசர்) திருவடிகளை உபாயமாக உடையவனாகிறேன். அந்த எம்பெருமானார் யாமுநமுனியின் (ஆளவந்தார்) குலவிளக்காக இருக்கிறார். அந்த யாமுநமுனியாகிற ஆளவந்தார் நாதமுனிகள் திருவம்சத்தவர். அந்நாதமுனிகள் நம்மாழ்வாரின் வழி வந்தவர். அந்த நம்மாழ்வாரும் பெரியபிராட்டியின் (ஸ்ரீரங்க நாச்சியார்) திருவருள் பெற்றவர். வரதராஜரே! இவ்விதம் தேவரீருக்கு (உமக்கு) வழிவழித் தொண்டன் அடியேன் என்று கடாக்ஷத்துக்குப் பாத்திரமாக இருக்கக் கடவேன் ஆகிறேன் என்று உரைக்கிறார் கூரத்தாழ்வான்.

மணக்கால் நம்பிகளிடம் ஸ்ரீ கீதையின் உயர்ந்த அர்த்த விஷயங்களைக் கேட்டு அறிந்த ஸ்ரீ ஆளவந்தார் அந்த கீதையை அருளிச்செய்த எம்பெருமானை அடையும் வழி யாது என்று நம்பியிடம் கேட்க, "அவனை அடைய அவனே வழி ஆவான்" என்று மேலும் உபதேசித்து அருளி, அவரைத் திருவரங்கத்து எம்பெருமானிடம் அழைத்துச் சென்று, பெருமானிடம் ஆளவந்தாரைக் கடாக்ஷிக்க வேண்டுமாறு விண்ணப்பிக்க, பெருமாளும் ஆளவந்தாரைக் கடாக்ஷித்து அருளினான். அருள்பெற்ற ஸ்ரீ ஆளவந்தார் அதுமுதல் தான் நடத்திவந்த ராஜ்ய பரிபாலனங்களைத் துறந்து, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்று கோதை நாச்சியார் அருளிச்செய்தபடி, பகவத் கைங்கர்யத்துக்குத் தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார்.

அப்போது நம்பிகள் "தேவரீருடைய பாட்டனாரான நாதமுனிகள் அஷ்டாங்க யோகா ரஹஸ்யத்தை குருகைக்காவலப்பனிடம் சேமித்து வைத்திருக்கிறார். அவரிடம் சென்று, அந்த நிதியைப் பெற்றுக்கொள்ளும் என்று நியமித்து அருளினார். ஆளவந்தாரும் குருகைக்காவலப்பன் யோகம் செய்யுமிடத்தில், அவருடைய யோகத்தைக் கலைக்கக்கூடாது என்னும் திருவுள்ளத்தால் ஓசைப்படுத்தாமல் சுவருக்குப் பின்புறம் நிற்க, அப்பனும் பின்புறம் திரும்பிப் பார்த்து "இங்கு சொட்டிக் குலத்தவர் எவரேனும் வந்ததுண்டோ?" என்று கேட்டருள, ஆளவந்தாரும் "அடியேன் யமுனைத்துறைவன் விடை கொண்டிருக்கிறேன்" என்று வணங்கி நின்று, "அடியேன் வந்தது தேவரீருக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்க, "பிராட்டியோடு போக ரஸத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், என்னோடு கலந்திருப்பதை விரும்பும் எம்பெருமான் என்னையும் உபேஷித்துப் பின்புறம் திரும்பிப் பார்த்ததனால், நாதமுனிகள் வம்சத்தவர் ஒருவர் வந்திருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்" என்று அருளிச் செய்தார். ஆளவந்தாரும் "யோக ரஹஸ்யத்தை அருளிச்செய்யவேண்டும்" என்று பிரார்த்திக்க, அப்பனும் தாம் பரமபதம் செல்லவிருக்கும் நாளைக் குறிப்பிட்டு, "அதற்கு முன் வந்தால் உபதேசிக்கிறோம்" என்று திருமுகம் (வாக்குறுதி) எழுதிக் கொடுத்து, ஆலவந்தாரைக் கோவிலுக்கு (திருவரங்கம்) அனுப்பினார்.

கோயிலில் தர்ஸனம் நிர்வஹித்து வரும்போது, நம்பெருமாள் திருவத்யயனோஸவத்திலே அரையர் ஸேவையில் "கேடுமிடர்" பதிகம் (திருவாய்மொழி, 10.2) என்கிற திருவாய்மொழியை அபிநயித்துப் பாடி வருகிற திருவரங்கப் பெருமாள் அரையர் ஆளவந்தாரின் திருமுக மண்டலத்தைப் பார்த்து, "நடமினோ நமர்களுள்ளீர் நாம் உமக்கு அறியச் சொன்னோம்" (திருவாய்மொழி, 10.2.8) என்று பலவாறு பாடி அருள, ஆளவந்தாரும் பெரியபெருமாளுடைய நியமனம் (உத்தரவு) பெற்றுத் திருவனந்தபுரம் திவ்யதேசத்துக்கு எழுந்தருளி, அனந்தபத்மநாதனைத் திருவடி தொழுது, குருகைக்காவலப்பன் எழுதிக்கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர, அதை எடுக்கச் செய்து பார்க்கையில்,அப்பன் பரமபதம் செல்லும் தினம் அன்றேயாக இருக்கக்கண்டு, "ஒரு புஷ்பக விமானம் பெற்றிலோமே" என்று மிக வருந்திக் கோயிலுக்கு (திருவரங்கம்) எழுந்தருளினார்.

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்த க்ரந்தங்கள் எட்டு: அவை: (1) ஆத்ம ஸித்தி, (2) ஸம்வித் ஸித்தி, (3) ஈஸ்வர ஸித்தி, (4)கீதா ஸங்க்ரஹகம் , (5) ஆகம ப்ராமாண்யம், (6) மஹாபுருஷநிர்ணயம், (7) ஸ்தோத்ர ரத்னம் மற்றும் (8) சது:ஸ்லோகீ ஆகியன ஆகும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!