Alavandhar vaibhavam - 3 | ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்

Alavandhar vaibhavam - 3 | ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்
ஸ்ரீ ஆளவந்தார் வைபவம்

திருநக்ஷத்திரம் : ஆடி உத்திராடம்

பகுதி 3

"விதாய வைதிகம் மார்க்கம் அகெளதஸ்குதகண்டகம் |
நேதாரம் பகவத்பக்தேர் யாமுநம் மநவாமஹை ||
( ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்த ஸ்ரீரங்கராஜஸ்தவம், ஸ்லோ.1.4)

விளக்கம் : ஏன் ஏன் என்று கேட்டு விதண்டாவாதம் செய்யும் வாதியராம் இல்லாததாக வைதிக நெறியைச் செய்து (அதில்), அழைத்துச் செல்பவராய் பகவானிடம் தழைத்தோங்கச் செய்பவரான ஆளவந்தாரை தியானிப்போமாக.

ஞானமும் அனுட்டானமும் நன்றாக நிரம்பியவர் ஸ்ரீ ஆளவந்தார். மணக்கால் நம்பி மூலம் பெற்ற உபதேசங்களால் "ஞானம் கனிந்த நலம் கொண்டு", நாள்தொறும் "நமக்கென்றும் மாதவனே என்னும் மனம் படைத்து", அந்தப் "பரமபரம்பரனையே பற்றென்று பற்றி", "மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் இனத்தாரையே" சுற்றத்தவர்களாகக் கொண்டு, "எங்கும் திருவருள் பெற்றவராய்" திகழ்ந்தவர் ஸ்ரீ ஆளவந்தார். அவர் ஒரு சமயம், திருவடிதொழ,கோயிலுக்குள் போகாமல் நிற்க, பிரயோஜன நாந்தாபரையான (பலன்களை விரும்பி அதை யாசிக்க எம்பெருமானை தரிசிப்பது) ஒருத்தி, கண்ணும் கண்ணீருமாகச் சேலையால் கழுத்தைப் போர்த்துக்கொண்டு, பிரதக்ஷனம் பண்ணுவதைக் கண்டார். உடனே கோயிலுக்குள் போகாமல் வெளியிலேயே நின்று "பிரயோஜநாந்தாபரை போய்விட்டாளா?" என்று விசாரித்து, அவள் சென்றபின் .உள்ளே புகுந்தார். சிஷ்யர்கள் அதற்குக் காரணம் கேட்க, "அவள் இருக்கும்போது நாம் எம்பெருமானின் திருவடித் தொழச் சென்றால் இரண்டு விரோதங்கள் ஏற்படும். (1) அவள் பிரயோஜன நாந்தாபரை; நாம் அநன்யப்பிரயோஜனர்கள் (பலனுக்காக எம்பெருமானை வணங்குவதை வெறுப்பது)/ . இது அதிகாரி விரோதமாகிற முரண்பாடு. . அவளுக்கு ஐஸ்வர்யம் முதலான மற்றவை பலம். நமக்கு எம்பெருமானே பலம். இது "பல" விரோதமாகிற இரண்டாவது முரண்பாடு" என்று அருளிச்செய்தார். மற்ற பலன்களை விரும்புவர்களுடன் சேர்ந்தால் அநன்யப்பிரயோஜனர்களுக்கும் (நமக்கும்) தோஷம் தட்டும் என்று கருத்து.

ஸ்ரீ ஆளவந்தார் 105 திருநக்ஷத்ரம் இப்பூவுலகில் எழுந்தருளியிருந்தார். இவர் நம்பெருமாள் அநுஜ்ஞையினாலே திருநாட்டுக்கு திருநாட்டுக்கு எழுந்தருளின ஸ்தலம் கோயில் (திருவரங்கம்).

நாலாயிர திவ்யப்ரபந்தத் தனியன்களில் ஒன்றான,

"மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியவேத மதந்வயாநாம் ||
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த் நா ||

என்ற தனியனை அருளிச்செய்தவர் ஸ்ரீ ஆளவந்தார். இது இவர் அருளிச்செய்த "ஸ்தோத்ரரத்ன"த்திலும் இடம்பெற்றுள்ளது. நம்மாழ்வாரைப் போற்றும் வகையில் இந்தத் தனியனை அருளியுள்ளார் ஸ்ரீ ஆளவந்தார். இதன் விளக்கமாவது:

என் குலத்தவர்க்குத் தாய், தந்தை,மனைவிமக்கள், செல்வம் என்றும் எதுவேயாகிறதோ, எங்களுக்கு ஆதிகுலபதியான நம்மாழ்வாரின் வகுளமாலையால் அழகுபெற்று விளங்கும் அந்தத் திருவடி இணையினைத் தலையால் வணங்குகிறேன்.

ஸ்ரீ ஆளவந்தார் வாழித்திருநாமம் :

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்த்தான் வாழியே
மறைநான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழி
கச்சிநகர் மாயன் இருகழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக்குக் காலுதித்தான் வாழியே
அச்சமர மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!

ஆளவந்தார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!