Anantazhwan Vaibhavam | அநந்தாழ்வான் வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

அநந்தாழ்வான் வைபவம்

அவதார திருநக்ஷத்திரம் : சித்திரையில் "சித்திரை"

தனியன்கள் :

அகிலாத்மகுணாவாஸம் அஜ்ஞாநதிமிராபஹம் |
ஆஸ்ரிதாநாம் ஸூஸரணம் வந்தேஸ்நந்தார்யதேஸிகம் ||

விளக்கம் : எல்லா ஆத்ம குணங்கட்கும் இருப்பிடமானவரும், அஜ்ஞான இருளைப் போக்குகின்றவரும் அடியார்கட்கு நல்ல உபாயமானவருமான அநந்தாழ்வான் எனும் ஆசார்யரை வணங்குகிறேன்.

ஸ்ரீமத்ராமாநுஜாசார்ய ஸ்ரீபதாம்போருஹத்வயம் |
ஸதுத்தமாங்கஸந்தார்யம் அநந்தார்ய குரும் பஜே ||

விளக்கம் : ஸ்ரீமத் ராமாநுஜாசார்யருடைய திருவடித் தாமரை இணையாய் இருப்பவரும், நல்லோர்களின் தலையாலே தாங்கப் படுபவருமான அநந்தாழ்வான் எனும் ஆசார்யரை ஆஸ்ரயிக்கிறேன்.

யதீந்த்ரபாதாம்புஜசஞ்சரீகம்
ஸ்ரீமத்தயாபாலதயைகபாத்ரம் |
ஸ்ரீவேங்கடேஸாஞ்ரியுகாந்தரங்கம்
நமாம்யநந்தார்யம் அநந்தக்ருத்வ: ||

விளக்கம் : யதிராஜருடைய திருவடித் தாமரையில் வண்டு போன்றவரும், அருளாளப்பெருமான் எம்பெருமானாரின் கருணைக்கு ஓர் இலக்காக இருப்பவரும், திருவேங்கடமுடையானுக்குத் திருவடிக் குற்றேவல் (அந்தரங்கக் கைங்கர்யம்) செய்பவருமான அநந்தாழ்வானுக்கு தண்டன் ஸமர்ப்பிக்கிறேன்.

புஷ்பமண்டபமான திருமலையில் நித்யவாஸம் செய்து, சிந்து பூ மகிழும் திருவேங்கடத்தானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்வார் எவரேனும் உண்டோ? என்று எம்பெருமானார் (ஸ்ரீ ராமாநுஜர்) ஒருநாள் தம் காலக்ஷேப கோஷ்டியிலே கேட்க, அங்கு கூடியிருந்த அனைவரும் எம்பெருமானாருடைய பிரிவை நினைத்து வாய் பேசாமல் இருக்க, "அடியேன் செல்கிறேன்" என்று பதில் அளித்து, "நீரே ஆண் பிள்ளை" என்று எம்பெருமானாரால் பாராட்டப்பெற்றவர் அநந்தன் எனும் பெயருடைய இவ்வாசார்யர். இந்தக் காரணத்தாலேயே இவர் குலத்தவர்கள் இன்றும் "அனந்தாண்பிள்ளை" என்னும் பட்டத்தோடு விளங்குகின்றார்கள்.

எம்பெருமானார் நியமனத்தின்படி "இராமானுசப்புத்தேரி"என்னும் ஏரியும், "இராமானுசன்" என்னும் திருநாமத்தில் நந்தவனமும் அமைத்துத் திருமலை அப்பனுக்குப் புஷ்பகைங்கர்யம் செய்து வந்தார் இவர். ஏரிகட்ட மண்வெட்டும்போது, கர்ப்பமாயிருந்த அவருடைய மனைவிக்கு உதவி செய்ய, திருவேங்கடமுடையான் ஒரு சிறுவனாய் வந்து, மண் கூடையை சுமக்கப் புகுந்தான். அதுகண்டு கோபம் கொண்ட அநந்தாழ்வான் "கைங்கர்ய விக்ன விக்நகாரீ!" ((கைங்கர்யத்திற்கு இடையூறு செய்பவனே) கூடையைத் தொடாதே! என்று மண்வெட்டியை எடுத்து அச்சிறுவனை அடிக்கப்புக, திருவேங்கடச் செல்வன் ஓடிச்சென்று கோயிலிலே புகுந்தான் என்பார்கள்.

பூப்பறிக்கும்போது இவரைப் பாம்பு கடிக்க, அருகில் இருந்தவர்கள் விஷ வைத்யம் செய்து கொள்ளலாமே! என்று கூற, இவர் அதற்கு மறுத்துவிட்டார். திருவேங்கடமுடையான் திருமுன்பே சென்றவுடன், அப்பெருமான் "ஏன் விஷ வைத்யம் செய்துகொள்ளவில்லை? என்று கேட்டருள, இவர் "கடியுண்ட பாம்பு வலிதாகில்,, அதாவது விஷத்தைத் தாங்கும் அளவு தன சரீரமானது வலிமையானது என்றால், திருக்கோனேரியிலே தீர்த்தமாடித் திருவேங்கடமுடையானை சேவிக்கிறேன்; அவ்வாறன்றி கடித்த பாம்பு வலிமையுடையது என்றால், விரஜா நதியிலே தீர்த்தமாடி ஸ்ரீவைகுண்டநாதனை சேவிக்கிறேன் என்று விண்ணப்பம் செய்தார்.

ஒருமுறை இவர் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, அவிழ்த்துப் பார்த்தவுடன், அச்சோறு நிறைய சிற்றெறும்பாய் இருக்க, "எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே" என்னும் உறுதியுடைய நித்ய முக்த முமுக்ஷுக்களில் சிலராகவும் இச்சிற்றெறும்புகள் இருக்கலாம்; எனவே, இவர்களை இத்திருமலையைவிட்டுப் பிரிக்கக்கூடாது" என்று எண்ணி, அக்கட்டுச் சோற்றைத் திரும்பவும் திருமலையிலே கொண்டுபோய் வைக்கச் செய்தார். எம்பெருமானார் தம் அந்திம தஸையிலே இவரை அருளாளப்பெருமான் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஸ்ரயிக்கச் செய்தார். இவர் அருளிய ஸ்ரீவேங்கடாச்சல இதிஹாஸமாலா" திருப்பதி தேவஸ்தானத்தாரால் அச்சிடப்பட்டுள்ளது. "கோதா சதுஸ்லோகீ", "ராமாநுஜ சதுஸ்லோகீ" என்னும் துதி நூல்களும் இவர் அருளிச் செய்தவையாக வழங்குகின்றன.

திருநக்ஷத்திரத் தனியன் :

மேஷே சித்தா ஸமுத்பூதம் யதிநாதபதாஸ்ரிதம் |
ஸ்ரீவேங்கடேஸ ஸத்பக்தம் அநந்தார்யமஹம் பஜே ||

விளக்கம் : சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் அவதரித்தவராய், யதிராஜரின் திருவடியை ஆஸ்ரயித்தவராய், திருவேங்கடமுடையானின் நல்லன்பரான அநந்தாழ்வானிடம் பக்தி செய்கிறேன்.

வாழித்திருநாமம் :

விண்ணவர்கள் வந்துதொழும் வேங்கடமாம் அடியிணையைத்
திண்ணமிது வென்று தெளிவுற்று - நண்ணிக்
காலமலர் பறித்திட்டுக் கண்டுகக்கும் தாழ்வானைப்
பாடி அடிதொழுவோம் யாம்.

அருமறைகள் தேடரிய அணிவேங் கடமாம்
திருவிருக்கும் மார்பில் திருமாலை - ஒருமையுடன்
தேடி அளித்தருளும் சீர்அனந் தாழ்வானைப்
பாடி அடிதொழுவோம் யாம்.

மலையில்; வேங்கடவற்கு மாமனார் வாழியே
மணிச்சுடர்க்கோன் அனந்தனென வந்துதித்தோன் வாழியே
உலகுக்கோர் தஞ்சமென உதித்தருள்வோன் வாழியே
உலகமுண்ட மாலடியை உகந்துய்ந்தோன் வாழியே
இலகு சித்திரைதன்னில் சித்திரையோன் வாழியே
எந்தை எதிராசர் இணையடியோன் வாழியே
அலர்மேல் மங்கை அப்பனார் வாழியே
அநந்தாழ்வான் திருவடிகள் அனவரதம் வாழியே.

ஸ்ரீமத் அநந்தாழ்வான் மங்களம்

ஸ்ரீவேங்கடாத்ரி கமிது:
கைங்கர்யேஷு ந்யயுங்க்த யம் |
ராமாநுஜார்யஸ் தஸ்மை ஸ்யாத்
அனந்தார்யார்ய மங்களம் ||

விளக்கம்: ஸ்ரீராமானுஜரால் திருவேங்கடமுடையானின் கைங்கர்யத்தின் பொருட்டு நியமிக்கப்பெற்ற அனந்தாழ்வானுக்கு மங்களம்.

அநந்தாழ்வான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.