Azhagia Manavalapperumal Nayanar | அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

"அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்" வைபவம்
அவதார திருநக்ஷத்திரம் : மார்கழி, அவிட்டம்

த்ராவிடாநாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதே வேந தர்ஸிதம் க்ருஷ்ணஸூநுநா ||

(ஆசார்ய பரம்பரா ப்ராப்தமான திராவிடவேத ஹ்ருதயம் வடக்குத் திருவீதிப்பிள்ளையின் குமாரரான அழகிய மணவாளப் பெருமாள் நாயானாரால் (ஆசார்யஹ்ருதயநூலில்) காட்டப்பட்டது.

அவதார வைபவம் :

கார்த்திகையில் கார்த்திகைநாள் காசினியில் வந்துத்தித்த கலிகன்றியாம் திருமங்கை மன்னனே "கண்ண நிந்தனைக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே" (பெரிய திருமொழி, 7-1--10) என்ற தம் திருவாக்கின்படி, ஸ்ரீஜயந்தியிலேயே அவதரித்த கண்ணனாம் பெரியவாச்சான் பிள்ளைக்குக் கவியின் பொருளைக் கற்பிக்கக் கார்த்திகையில் கார்த்திகை நாளிலேயே கலிகன்றி என்னும் திருநாமத்துடன் அவதரித்த பெருமையுடைய லோகாசார்யரான நம்பிள்ளை ஒருநாள் நித்யப்படி காலக்ஷேபம் நிறைவடைந்தவுடன் நடுப்பகலில் ஏகாந்தமாய் எழுந்தருளியிருக்க, அவரது சிஷ்யரான வடக்குத்திருவீதிப்பிள்ளையின் திருத்தாயாறன அம்மி என்பவள், "உம்முடைய சீடனான என் பிள்ளைக்கு ஓர் கல்யாணம் செய்துவைத்தீரே ! அவன் பத்தினியோடு வாழ மறுக்கிறான்; வம்சத்திற்கும் பிள்ளையில்லாமல் போய்விடும் போலிருக்கிறதே!" என்று பெருத்த வருத்தத்துடன் விண்ணப்பிக்க, அவளைத்தேற்றி, அவளுடைய மானாட்டுப்'பெண்ணை அழைத்துவரச்சொல்லி, திருவயிற்றைத் தம் திருக்கைய்யாலே தொட்டுத்தடவி, "நம்மைப்போல் இருக்கும் ஒரு பிள்ளையைப் பெறும் பாக்கியத்தை அடைவாய் என்று அனுக்ரஹித்து, வடக்குத் திருவீதிப்பிள்ளையை அழைத்து, "உம்முடைய விஹிதவிஷய வைராக்யத்தை உணர்ந்தோம்; ஆயினும், லோக மரியாதைக்கு நாம் சொன்னதற்காக இன்று இரவு கூடியிரும்" என்று நியமிக்க, பிள்ளையும் அப்படியே கூடியதால் உண்டான கர்ப்பம் பன்னிரண்டாம் மாதத்தில் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில், ஐப்பசித் திருவோணத்தில் ஆண் குழந்தையாகப் பிறந்தது "லோகாசார்யப் பிள்ளை: என்று நம்பிள்ளை யுடைய திருநாமத்தையே சாத்தி, திருத்தகப்பனாரான வடக்குத் திருவீதிப்பிள்ளையால் சகல அர்த்த விசேஷங்களையும் அளித்து வளர்க்கப்பட்ட அவரே பிள்ளை உலகாசிரியர். இவர் திருத்தாயார் திருநாமம் ஸ்ரீரங்கநாச்சியார். இவர் கச்சிநகர் எழுந்தருளும் பேரருளாளனாம் வரதனின் அம்ஸாவதாரவமே என்பதை மாமுனிகள் தாமே ஓர் ஐதிஹ்யத்தின் மூலம் ஸ்ரீவசனபூஷண வியாக்யான பிரவேசத்தில் நிலைநாட்டியருளினார்.

பிள்ளைலோகாசார்யாருடைய அப்தபூர்த்திக்கு, நம்பெருமாளை சேவிப்பதற்காகக் குழந்தையைப் பல்லக்கில் எழுந்தருளுவித்து, நம்பிள்ளை முதலான பெரியவர்கள் அனைவரும் கோயிலுக்குச் சென்று மங்களாசாசனம் செய்ய, பெருமாளும் நம்பிள்ளையை அர்ச்சாமுகமாக, "உம்மைப்போல் ஒரு பிள்ளையை அருளினீரே!" இனி நம்மைப்போல் ஒரு பிள்ளையை அருளும்" என்று நியமிக்க, நம்பிள்ளையும் அதை அங்கீகரிக்க, அவ்வனுக்ரஹத்தாலே பிள்ளை உலகாசிரியர்க்குத் திருத்தம்பியார் அவதரித்தருளினார். அழகியமணவாளனின் பிள்ளை என்பது தோற்ற அழகியமணவாளப்பெருமாள் நாயனார் என்று அவருக்குத் திருநாமம் சாதத்தில், ராமலக்ஷ்மணர்கலைப்போலும், பலராம க்ருஷ்ணர்களைப்போலும் அவர்களை வளர்த்து வந்தனர். இது இவர்களின் அவதாரப் பெருமை.

திருத்தகப்பனரைப்போலே பரமவிரக்தரான இப்பிள்ளைகள் இருவரும் வைராக்யபங்கம் ஏற்படலாகாது என்னும் திருவுள்ளத்தாலே நைஷ்டிகப்ரஹ்மசாரிகளாகவே இறுதிவரையில் வாழ்ந்து வந்தனர். இப்பெருமையாலேயே க்ருஹஸ்தர்களாய் இருந்த மற்ற ஆசார்யர்கள் பிரபந்நனுக்கு விஹிதவிஷய நிவ்ருத்தி தன்னேற்றம் (சிறப்பு) என்று சொல்லத் துணியாதபோது, பிள்ளை உலகாசிரியர் ஸ்ரீவசனபூஷணத்திலே இவ்வரும் பொருளை சூத்திரம் இட்டு அருளினார்.

பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான நாயனாரின் திருநக்ஷத்ரம் மார்கழி அவிட்டம். பஞ்சஸம்ஸ்காரங்களும் நித்யாநுஸந்தானமும் ஸாதித்து அருளினவர் திருத்தகப்பனாரான வடக்குத்திருவீதிப்பிள்ளை. ஸ்ரீபாஷ்யாதி கிரந்தங்களும், ஸ்ருதப்ரகாஸிகையும், ரஹஸ்யங்களும், ரஹஸ்ய வியாக்யானங்களும் ஆகிய சகலார்த்தங்களையும் ஸாதித்தருளின சார்யர் நம்பிள்ளை. திருவாய்மொழி முதலான திவ்யப்ரபந்தங்களும், அவற்றின் வ்யாக்யானங்களும் ஸாதித்து அருளின ஆசார்யர் திருத்தமையனாரான பிள்ளைலோகாசார்யர். இவர் திருத்தாயார் ஸ்ரீரங்கநாச்சியார், இவர் செய்தருளின தலைசிறந்த கிரந்தம் "ஆசார்ய ஹ்ருதயம்." ஸ்ரீ வசனபூஷணத்தைப் பற்றிச் சிலர் ஆட்சேபிக்க, அதில் அருளப்பட்ட அர்த்தங்களை நிலைநிறுத்துவதற்க்காகவே அழகியமணவாளன் திருமுன்பே, அவர் திருத்தம்பியாரான அழகியமணவாளப்பெருமாள் நாயனாராலே ஆசார்யஹ்ருதயம் என்னும் அற்புதக்ரந்தம் அருளிச்செய்யப் பெற்று, நம்பெருமாளின் அங்கீகாரத்தையும் அனுக்ரஹத்தையும் இந்த திவ்யக்ரந்தம் அடைந்தது. திருப்பாவை ஆறாயிரப்படி, அமலனாதிபிரான், கண்ணிநுண்சிறுத்தாம்பு முதலான சில திவ்யப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள், அருளிச்செயல் ரஹஸ்யம் ஆகியவை இவரது மற்ற க்ரந்தங்கள். "தஞ்சீரால் வைய்யகுருவின் தம்பி மன்னு மணவாள முனி செய்யுமவை தாமும் சில" (உபதேசரத்தினமாலை, 47) என்று இவர் சில திவ்யப்ரபந்தங்களுக்கு விரிவாக வியாக்யானம் செய்து அருளியதை மாமுனிகள் எடுத்துக் காட்டினார். பிள்ளைலோகாசார்யருக்கு இரண்டு அல்லது மூன்று வருஷங்களே இளையவரான இவர், சுமார் நூறுவருடங்கள் வாழ்ந்து, பிள்ளைலோகாசார்யருக்கு முன்னதாகவே ஸ்ரீரங்கத்தில் பரமபதித்தருளினார். பிள்ளைலோகாசார்யர் பரமபாகவதரான வரது விஸ்லேஷத்தாலே மிகவும் வருந்தியவராய், இவர் திருமுடியைத் தம் மடியிலே வைத்துக்கொண்டு "மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலோடு சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்" - மாமென்று தொட்டுரைத்த சொல்லும் துயந்தன்னின் (த்வயம்) ஆழ்போருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பார் யார்?" என்று பலவாறு புலம்பித் திருமுத்து உதிர்த்து (கண்ணீர் பெருக்கி) முதலிகள் தேற்றத் தேறி நின்று, நாயனாருக்குச் சரம கைங்கர்யம் செய்து, திருவத்யயனமும் நடத்தியருளினார்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வாழித்திருநாமம்

மன்னியசீர் மதிளரங்கம் மகிழ்வந்தோன் வாழியே
மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே
மின்னுப்கழ் ஆர்யமனம் மொழிந்தருள்வோன் வாழியே
மேன்மைமிகு திருப்பாவை விரித்துரைத்தான் வாழியே.
தன்னுரையில் உலகாரியன் திருவடியோன் வாழியே
ஸ்ரீக்ருஷ்ணபாதகுரு செல்வமைந்தன்தன் வாழியே!
அன்னபுகழ் முடும்பை நம்பிக்கன்புடையோன் வாழியே
அழகியமணவாளன்தன் அடியிணைகள் வாழியே.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.