Eechambaadi Achan & Jeeyar | ஈச்சம்பாடி ஆச்சான் & ஜீயர்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஈச்சம்பாடி ஆச்சான் மற்றும்
ஈச்சம்பாடி ஜீயர்

(பகவத் ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாஸனாதிபதிகளில் தலைவர்களாய் விளங்கியவர்கள்)
திருநக்ஷத்திரம் : தை - ஹஸ்தம் (ஈச்சம்பாடி ஆச்சான் )

ஸ்ரீ ஆளவந்தாரால் தாஸ்யநாமம் சூட்டப்பட்ட திருமாலிருஞ்சோலை தாஸர் என்னும் திருநாமத்தை உடைய ஸ்ரீஅழகப்பிரான் என்கிற ஸ்ரீசுந்தர தேசிகன் புரட்டாசி மாதம் ஸ்வாதி நக்ஷத்ரத்தில் திருமலைக்கு அருகிலுள்ள "ஈச்சம்பாடி" என்னும் அக்ரஹாரத்தில் ஸ்ரீநிவாஸாசார்யர்க்குத் திருக்குமாரராகத் திருவவதாரம் செய்தருளினார். திருத்தகப்பனார் இக்குமாரருக்கு ஜாதகர்மம், நாமகரணம், அந்நப்பிரசாவ சௌல உபநயாதிகளை அந்தந்தக் காலகட்டத்தில், சாஸ்திரக் க்ரமப்படி செய்தருளினார். இப்படி மஹாப் பிரபாவம் உடையவரான இவ்வழகப்பிரான் சகல வித்யைகளையும் காலக்ரமப்படி கற்றுத் தேர்ந்தார். இக்குமாரரைக் கண்டு உகந்த திருமலை நம்பிகள் இவருக்குத் தன் குமாரத்தியை மணம் செய்து கொடுக்க விரும்புவதைத் தெரிவிக்க, அதை உகந்து இவரது திருத்தகப்பனார் ஸ்ரீநிவாஸாசார்யரும் தம் குமாரரான சுந்தர தேசிகனுக்குத் திருக்கல்யாணமும் செய்தருளினார். பிறகு, சுந்தரதேசிகனும் க்ருஹஸ்தாஸ்த்ர தர்மத்தை நன்றாக அனுட்டித்திருந்து, பின்னர் திருத்தகப்பனார் நியமனத்தாலே ஸ்ரீஆளவந்தார் திருவடிகளை ஆச்ரயித்து, பஞ்சஸம்ஸ்காரம் பெற்று, யமுனைத் துறைவராலே (ஸ்ரீஆளவந்தார்) தாஸ்யநாமம் சாற்றப்பட்டவராய் அவரிடத்தில் திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் முதலிய ரஹஸ்யார்த்தங்கள், வேதவேதாந்தார்த்த வியாஸஸூத்ரார்த்த சகல புராண இதிஹாச திவ்யப்ரந்தார்த்தங்கள் தன் ஆசார்யரான ஸ்ரீஆளவந்தார் செய்தருளின "ஆகம ப்ராமாண்யம், புருஷ நிர்ணயம், ஆத்மஸித்தி, ஈஸ்வரஸித்தி, ஸம்வித் ஸித்தி, கீதார்த்த ஸங்ரஹம், ஸ்ரீஸ்தோத்ர ரத்னம், சதுச்ச்லோகி முதலிய க்ரந்தங்கள் மற்றும் இன்னமும் வேண்டுவன அத்யாத்ம வித்யைகளையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.

ஆசார்யரான யமுனைத் துறைவரையே தமக்குப் ப்ராப்ய ப்ராபகமாகக் (கதியாய்) கொண்டு, அவரிடத்திலேயே சகல அடிமைகளும் செய்துகொண்டிருந்த காலத்தில், ஆசார்யரான ஸ்ரீஆளவந்தார் அழகப்பிரான் என்ற சுந்தர தேசிகனுக்குத் "தெண்ணீர்பாய் வேங்கடம்", குளிரருவி வேங்கடம்", "வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடம்", "செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம்" ...இப்படி ஆழ்வார்கள் ஈடுபட்டதும், புராணங்களிலும் "வேங்கடாத்ரிஸமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சந வேங்கடேஸஸமோ தேவோ நபூதோ ந பவிஷ்யதி" என்றும் "மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டம் உத்தமம்: ஸ்வாமி புஷ்கரீணீதிரே ரமயா ஸஹமோததே" என்றும் புகழ் பெற்றதுமான திருவேங்கடமென்னும் திருப்பதியில் திருமஞ்சனம், திருத்துழாய், புஷ்பம் முதலிய சகல கைங்கர்யங்களையும் நீரும் நம்பியைப் போல் திருவேங்கடத்தானுக்குச் செய்துகொண்டு வாரும் என்று நியமித்தபடி, திருவேங்கடம் என்னும் திருப்பதியில் திருமலைமேல் எந்தைக்குக் கைங்கர்யங்கள் செய்துவந்தார்.

இவ்வழகப்பிரான் திருமலையில் ஸ்வாமி புஷ்கரிணிக்கரையில் திருமலை நம்பிகள் திருமாளிகைப் பக்கத்தில் இருந்துகொண்டு, சந்நிதி ப்ராகார வெளியில் அனேகம் திருநந்த வனங்களின் நடுவே தாமும் ஓர் உத்யானவனம் அமைத்து, அந்தத் தோட்டத்திற்குத் தம்முடைய திருநாமமான திருமாலிருஞ்சோலை தாஸர் என்னும் பெயர் சார்த்தி, அந்தத் தோட்டத்திலிருந்து பலவகைப் புஷ்பங்கள், திருத்துழாய் தவனம் மருகு முதலான மாலைகளும் மலையப்பனுக்கு நித்யம் சமர்பித்துக்கொண்டு திருவாராதன காலத்தில் வாசிக கைங்கர்யமான திருப்பல்லாண்டு பாடுகை,வேதபாராயணம், மந்திரபுஷ்பம், முதலான சகல கைங்கர்யங்களிலும் ஈடுபட்டு எழுந்தருளியிருந்த காலத்தில் நம் இராமாநுசர் ஒருமுறை திருவேங்கட யாத்ரை மேற்கொண்டிருந்தபோது, நம்பிகளின் நியமனத்தால் இம் மஹாப்ரபாவம் உடையவரான இந்த சுந்தர தேசிகரிடத்தில் தாபநீயோபநிஷத்தையும், ந்ருஸிம்ம மந்த்ரம் முதலியவைகளையும் பெற்றுக்கொண்டபடியால், சுந்தர தேசிகர் இராமாநுசருக்கும் குருவாகி விளங்கினார்.

பிறகு, கோவிந்தன் கைங்கர்யத்தைப் பண்ணிக்கொண்டு விளங்கிய இந்த சுந்தர தேசிகனுக்குச் சில நாளில் "தை மாஸம் ஹஸ்த நக்ஷத்திரத்தில்" ஒரு குமாரர் அவதரித்தார். அதற்கும் பிறகு, நான்கைந்து ஆண்டுகள் கழித்து மற்றொரு குமாரர் "ஆனி மாதம் திருவோண நக்ஷத்திரத்தில்" அவதாரம் செய்தார். திருத்தகப்பனார் சுந்தர தேசிகன் இக்குமாரர்களுக்கு ஜாதகர்மம் நாமகரணம் முதலியவைகளை அந்தந்தக் காலங்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் சாஸ்திர விதிப்படி செய்தருளினார். முதலில் திருவவதரித்த குமாரருக்கு "ஆச்சான் ஸ்ரீநிவாஸாசாரியார்" என்றும், இரண்டாவது குமாரருக்கு "ஸ்ரீவேங்கடேசம்" என்றும் திருநாமம் சாற்றி அருளினார். மேலும், இக்குமாரர்களுக்கு அந்தந்தக் காலகட்டங்களில் செய்யவேண்டிய அந்நப்பிரசாவ சௌல உபநயாதிகளை சாஸ்திரக் க்ரமப்படி செய்து, வேதாத்யாயனம் முதலான சகல வித்யைகளையும் செய்தருளினார். இத்திருக்குமாரர்களும் சகல வித்யைகளிலும் சமர்த்தர்களாய் விளங்கும் சமயத்திலே, இவர்களுக்குத் திருக்கல்யாண மஹோத்ஸவத்தையும் சாஸ்திர விதிப்படி செய்தருளினார்.

பிறகு, இவ்விரு திருக்குமாரர்களும் க்ருஹஸ்தாஸ்த்ர தர்மத்தை அடைந்து விளங்கும் காலத்தில், ஸ்ரீசுந்தர தேசிகன் தன் திருக்குமாரர்களை நன்கு கடாஷித்து, நீங்கள் இனி நம் இராமாநுசன் திருவடிகளை அடைந்து உய்ம்மின் என்று நியமிக்க, அப்படியே இக்குமாரர்களும் இராமாநுசர் திருவடிகளை அடைந்து, பஞ்சஸம்ஸ்காரம் பெற்று, திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் முதலிய ரஹஸ்யார்த்தங்கள், ஸ்ரீபாஷ்யம், திவ்யப்ரந்தார்த்தங்கள், இதிஹாஸ புராண வியாகரண தர்க்க மீமாம்ஸாதி சகல சாஸ்த்ரங்களையும், ஆளவந்தார் சாதித்த க்ரந்தங்கள் இன்னம் மற்றுமுள்ள அத்யாத்ம க்ரந்தங்களையும் இராமாநுசரிடத்தில் கற்றுத் தேர்ந்து, இராமாநுசரையே எல்லா உறவுமாகக் கொண்டு எல்லா அடிமைகளையும் செய்து, காலக்ரமேண புத்ர பௌத்ர சிஷ்ய ப்ரசிஷ்ய யுக்தர்களாய், பகவத் பாகவத கைங்கர்ய விசிஷ்டர்களாய், ஸ்ரீபாஷ்யாதி திவ்யப்ரபந்தார்த்த காலக்ஷேபாதிகளுடன் கூடினவர்களாய், சதுஸ் ஸப்ததி பீடர்களில் (74 ஸிம்ஹாஸனாதிபதிகளில்) தலைவர்களாயும் எழுந்தருளியிருந்தார்கள்.

இப்படி சிலகாலம் கழித்தபிறகு, சுந்தர தேசிகனுடைய த்வீதிய (இரண்டாவது) குமாரர் ஞான பக்தி விரக்தி யுக்தராய் யதிராஜரிடத்திலே (இராமாநுசர்) ஸன்யாஸாச்ரம ஸ்வீகாரமும் மந்த்ர த்ரிதண்ட கமண்டலாதிகளையும் பெற்று, அதுமுதல் "ஈச்சம்படி ஜீயர்" என்று பெயர் விளங்கி மிகவும் நிஷ்டையுடன் அதிவிரக்தராய் சிஷ்ய ப்ரசிஷ்யர்களுக்கு ஸ்ரீபாஷ்ய திவ்யப்ரபந்தார்த்தங்கள் ரஹஸ்ய மந்த்ரார்த்தங்கள் எல்லாம் சாதித்துக்கொண்டு ந்ருசிம்ஹன் திருவாராதனத்துடன் எழுந்தருளியிருந்தார் என்பது ப்ரசித்தம்.

"திருவவதாரக் காலம்"

ஸ்ரீசுந்தர தேசிகன் (அழகப்பிரான்) : கலி-4089 ஸர்வஜித் ஆண்டு, புரட்டாசி மாதம், ஸ்வாதி நக்ஷத்திரம், சுக்லபக்ஷம் த்ருதியை திதி.

ஈச்சம்பாடி ஆச்சான்: கலி-4126, ரக்தாக்ஷி ஆண்டு, தை மாதம், ஹஸ்தம் நக்ஷத்திரம், க்ருஷ்ணபக்ஷம், பஞ்சமி திதி.

ஈச்சம்பாடி ஜீயர் ஸ்வாமி: கலி-4131, ஆனி மாதம், திருவோணம் நக்ஷத்திரம், க்ருஷ்ணபக்ஷம், சதுர்த்தி திதி.

"வாழித் திருநாமங்கள்"

ஸ்ரீசுந்தர தேசிகன் (அழகப்பிரான்)

புரட்டாசிச் சோதிதனில் புவிவந்தோன் வாழியே
பொழிலமரும் வேங்கடவர் புரோகிதனார் வாழியே
ஆளவந்தார் தாளிணையாய் அமர்ந்தருள்வோன் வாழியே
வேங்கடமாம் விண்ணகரை விரும்புமவன் வாழியே
செண்பகத்தில் பொற்கூபம் செய்துகந்தான் வாழியே
யதிராசர்க்குத் தாபநீயம் ஈந்தருள்வோன் வாழியே
மாதவனை மறையதனால் வாழ்த்துமவன் வாழியே
திருவழகப் பிரானார் தம் திருத்தாள்கள் வாழியே.

ஈச்சம்பாடி ஆச்சான்

ஏராரும் தைய்யத்தம் இங்குதித்தோன் வாழியே
சுந்தரேசன் திருமகனாய்த் துலங்குமவன் வாழியே
பார்புகழும் யதிராசன் பதம்பணிவோன் வாழியே
சீராரும் வேங்கடத்தில் திகழுமவன் வாழியே
பார்மகிழும் பாடியத்தைப் பகருமவன் வாழியே
உத்தமமாம் குலமதனில் உதித்தபிரான் வாழியே
தொண்டர் குழாம் கண்டுகக்கும் தொல்புகழோன் வாழியே
நம் ஈச்சம்பாடி வாழ் நம்மாச்சான் வாழியே.

ஈச்சம்பாடி ஜீயர்

ஆனிதனில் ஓணத்தில் அவதரித்தோன் வாழியே
வேங்கடத்தைப் பதியாக விரும்புமவன் வாழியே
பூவார்த்த கழல்களையே போற்றுமவன் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பகருமவன் வாழியே
அனவரதம் அரியுருவன் அடிதொழுவோன் வாழியே
எப்பொழுதும் யதிபதியை ஏத்துமவன் வாழியே
முத்திதரும் முந்நூலும் முக்கோலும் வாழியே
எழில்ஈச்சம் பாடிஉறை ஜீயர்தாள் வாழியே.

அழகப்பிரான் ஸ்ரீசுந்தர தேசிகன் திருவடிகளே சரணம்.
ஈச்சம்பாடி ஆச்சான் ஸ்ரீநிவாஸாசாரியார் திருவடிகளே சரணம்.
ஈச்சம்பாடி ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.