Embar vaibhavam | எம்பார் வைபவம்

Embar vaibhavam | எம்பார் வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்வாமி எம்பார் வைபவம்

திருநக்ஷத்திரம் : “தை”- புனர்பூசம்
அவதார ஸ்தலம் : ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம்

ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வா நபாயிநீ |
ததாயத்தத் ஸ்வரூபா ஸா ஜீயாந்மத்விச்ர மஸ்தலீ ||

அர்த்தம் : ஸ்ரீ ராமானுஜரை எப்போதும் விட்டுப்பிரியாத அவர் திருவடி நிழலாகவும், அத்திருவடிகளாலே ஸ்வரூபம் நிறம் பெற்றிருப்பவராகவும், ஸ்ரீ கோவிந்தப் பெருமாள் என்ற திருநாமம் உடையவராகவும், அடியேனுக்கு இளைப்பாறும் இடமாகவும் உள்ள எம்பார் விஜயத்துடன் விளங்க வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு.

தை புனர்பூச நக்ஷத்திரத்தில்,மதுரமங்கலம் என்னும் திருத்தலத்தில் அவதரித்தவர் எம்பார் என்றும், இவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்றும், மேலும் அவர் பகவத் ஸ்ரீ ராமானுஜரே தஞ்சம் என்று அடைந்து அவருக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர் என்றும் பார்த்து, அவரது குண விசேஷங்களையும் பகுதி 1இல் இந்த "முக நூலில்"(Facebook) லக்ஷ்மி நரசிம்ஹன் இன்று வெளியிட கட்டுரையின் மூலம் அனுபவிக்கப் பெற்றோம்.

கோவிந்தப் பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட இவர் எம்பெருமானின் குணங்களில் உயர்ந்த ஞானத்தைப் பெற்றிருக்க, இவருக்கு இராமானுசரே, எம்பார் என்னும் பெயரைச் சூட்டி, அவருக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலியவற்றை அருளினார். இவர் கீழ்காலத்தில்,அதாவது, தம் இளைய பிராயத்தில் சைவ மதத்தில் இருந்து, பரமசிவனுக்குத் தொண்டுகள் புரிந்துவர, இதைக் கண்டு மிகவும் வருத்தமுற்று, இவரைத் திருத்தி, எம்பெருமானுக்கே இவரை ஆட்ப்படும்படி செய்தவர் என்று சுருக்கமாக முதல் புகுதியில் அனுபவித்திருந்தோம். "தையில் மகத்திற்கு" ஏற்றமளித்த திருமழிசை ஆழ்வாரும், தன் வாழ்க்கையில் முதல் 1000 ஆண்டுகள் (இவர் 4700 ஆண்டுகள் வாழ்ந்தவர்) பிற மதங்களில் புகுந்து, பின் சைவ மதத்தில் சேர்ந்து, சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சிவனைப் பாடியும் போற்றியும் வணங்கிவர, எம்பெருமான் பெயாழ்வாரைக் கொண்டு இவரைத் திருத்திப் பணிகொள்ள விருப்பப்பட்டு, பேயாழ்வாரும் எம்பெருமானின் குறிப்பறிந்து செயல்பட்டு, திருமழிசை ஆழ்வாரைத் திருத்திப் பணிகொள்ள, ஆழ்வாரும் எம்பெருமானே பரதெய்வம் என்பதை நன்கு உணர்ந்து, பின்னர் 3700 வருடங்கள் எம்பெருமானுக்கே தன்னை ஆட்படுத்திக் கொண்டு, திருக்குடந்தையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைப்போல், கோவிந்தப் பெருமாளான எம்பாரும் சிவனைப் போற்றும் சைவராய் இருக்க, இவர் பின்னர் ஸ்ரீவைஷ்ணவர் ஆனது எப்படி? அனுபவிப்போம்:

இராமானுச முனிக்கும் ஆளவந்தாரின் விசேஷ கடாக்ஷத்தால் விரோதிகள் கழிந்தன. அதாவது, இவரது ஸ்ரீவைஷ்ணவத் தொண்டின்மீது பொறாமை கொண்ட பலர் இவரை கொன்றுவிடத் துணிய, ஆசாரியர்களின் அருளாலும், சீடர்களின் உதவியாலும், விரோதிகள் இவரைவிட்டு விலக, இவர் ஸ்ரீவைஷ்ணவத்துக்கே விளக்காய் இருந்து, அது எங்கும் பரவி, உலகோர் அனைவருக்கும் எம்பெருமானே அடையப்பட வேண்டியவன் என்ற அறிவைப் பெற்று உய்யும்படி செய்தவர். இப்படி உலகோர் உய்ய உதவிசெய்த இராமானுசர், தம் சகோதரரான கோவிந்தப் பெருமாள் சைவராய் இருப்பதைப் பொறுக்கமாடாமல்,தம் ஆசாரியரான ஆளவந்தாரைப் பிரார்த்தித்து, நமக்கு உசாத்துணை (உதவி) உண்டாக வேண்டுமே என்று மனதில் விசாரித்தார். ஏனென்றால், கோவிந்தப்பெருமாள் சாஸ்திரங்களைப் புரையறக் (குறைவின்றி) கற்றவர்; நமக்கு ஹிதம் (நன்மை) கோருபவர்; அவரை நம்மோடு சேர்ப்பார் யாரோ? இப்போது அவர் வேறு தெய்வ வழிபாடு உடையவராக இருக்கிறார். அவரைப் பாங்காக்குபவர் (திருத்துபவர்) யாரோ என்று புழுங்கினார் பிறகு, இதைச் செய்யத் தக்கவர்,தன் தாய்மாமனான பெரிய திருமலை நம்பியே என்று தெரிந்து, அவர் பக்கலுக்கு (பக்கம்) ஒரு ஸ்ரீவைஷ்ணவரை நியமித்து, "வட்டமணி கோவிந்தரைத் திருத்தித் தேவரீர் திருவடிக்கு அடிமைகொள்ளவேண்டும்" என்று விண்ணப்பிக்கும்படி அவரிடம் விவரம் சொல்லி அனுப்பினார். கோவிந்தருக்கும் பெரிய திருமலை நம்பியே தாய்மாமன் ஆவார்.

இளையாழ்வாரின் ஆணையின்படியே அந்த ஸ்ரீவைஷ்ணவரும் திருமலைக்குச் சென்று பெரிய திருமலை நம்பிகளிடம் விவரத்தைச் சொல்ல, அவரும் "இது நம்முடைய கடமை என்றிருந்தோம்;ராமானுஜ மினியின் எண்ணமும் கலந்ததே" என உகந்து (மகிழ்ந்து) உடனே அவ்வைஷ்ணவரையும் தம்மைச் சேர்ந்தாரையும்அழைத்துக்கொண்டு காளஹஸ்திக்கு எழுந்தருளி, குளக்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது லிங்கம் உள்ளங்கை கொணர்ந்த நாயனாரான கோவிந்தப்பெருமாள் அங்கு நீர்கொண்டு செல்ல வந்தார். அச்சமயம் பெரிய திருமலை நம்பிகள், "கொன்றைச் சடையானைக் குளிர நீராட்டினால், உனக்குண்டாகும் பயனென்ன? என்று கூறினார். அதுகேட்டு முறுவலித்து, எதுவும் பதில் பேசாமல் போனார் கோவிந்தர். அதுகண்டு திருமலை நம்பிகள் இந்தி நம்மால் ஒன்றும் ஆகாது; இனி அவனை (கோவிந்தரை) எம்பெருமான்தான் திருத்தி அருளவேண்டும் என்று பிரார்த்தித்து, திருமலைக்குத் திரும்பினார்

சிலநாள் கழித்துத் திருமலை நம்பிகள் மறுபடியும் காளஹஸ்திக்கு வந்து ஆளவந்தார் அருளிய "ஸ்தோத்ர ரத்னத்தில்" இளையாழ்வாரை (இராமானுசர்) வசீகரித்த "நாராயணனே பிரமன், சிவன், இந்திரன் இவர்களிலும் மேலானவனாயும்,வினையின் நீங்கியவனாயுமுள்ள முக்தாத்மா ஆகிய இவர்களெல்லாரும் எந்த உன் பெருமைக் கடலில் துளிகள் ஆகின்றனரோ, அந்த உன்னிடத்தில் இயற்கையானதும், எல்லையற்ற பெருமையை உடையதுமான ஐஸ்வர்யத்தை எவன்தான் பெறாதவன் ஆவான்? என்கிற 11ஆவது ஸ்லோகத்தை ஒரோலையில் எழுதி, கோவிந்தர் வரும் வழியில் போட்டு வைத்தார் எதிர்பார்த்தபடி கொவிந்தரும் அவ்வழியே வந்தவர், அவ்வோலையை எடுத்து வாசித்துப் பார்த்துவிட்டு,அதைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார். மறுபடியும் நீர்கொண்டு திரும்பும்போது, அந்த ஒளியைத் தேடி எடுத்து மறுபடியும் வாசித்துப் பார்த்தார். அதன் பொருள் அவரை மாற்றியிருக்க வேண்டுமென அவர் தோற்றம் காட்டிற்று. அவ்வோலையைக் கையில் கொண்டு, "உங்களிடமிருந்து நழுவிய பொருள் இதுவோ?"என்று நம்பிகளிடம் கேட்க, நம்பியும், "எங்கள் பொருள் நழுவுவதல்ல" (எங்கள் பொருளான எம்பெருமான் ஒழிக்க ஒழியா உறவு உடையவன் ஆகையாலே, நாங்கள் விட்டாலும் தான் விடான் ஆகையாலேயே, எங்களைவிட்டு நழுவாது) என்று இப்படிப் பலபடி பதிலுக்குப் பதிலாக அருளி, அவர் மனத்தில் மாற்றம் உண்டாக்கினார். கோவிந்தர் அதற்கும் பதில் கூறாமல் சென்றார்

நம்பிகள் மறுபடியும் திருமலை சென்று பெருமாள் திருவடி தொழுது மீண்டும் காளஹஸ்திக்கு வந்து சோலையில் தம் சிஷ்ய கோடிகளோடு திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தர் ஒருமாதிரி மரத்தினின்றும் பூப்பறித்துக் கொண்டிருந்தார் அச்சமயம், பெரிய திருமலை நம்பிகள் "திண்ணன் வீடு" என்ற பதிகத்துக்கு அர்த்தம் அருளிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தரும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் நாலாம் பாட்டில், "தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த தேவன்" என்றவரை விஸ்தாரமாகப் பொருள் விரித்து, "தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனை ஆகுமே" என்று சொன்னதும் கோவிந்தர், முன்னுள்ள பாட்டுக்களின் பொருள் நெஞ்சில் உறுத்தி இருந்தமையால், சடக்கென மரத்தினின்றும் குதித்து, "தகாது தகாது என்று சொல்லிக்கொண்டே, பூக்கூடையை வீசி எறிந்துவிட்டு, தான் கழுத்தில் அணிந்திருந்த ருத்ராக்ஷ மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு, நம்பிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார் "அந்தோ! லோக நாயகன் என்று முடி சூடியவன் இருக்க, நாயகனை உபாசிக்கும் வேடமுடைய விரிசடையானை (பரமசிவனை) விரும்பினேனே! அழகான தாமரைக் கண்ணன் இருக்கத் தழல் (நெருப்பு) வீசும் பொறிக்கண்ணனை பூசித்தேனே! கல்லெடுத்துக் கல்மாரி காத்த கையன் இருக்க, கபாலம் ஏந்திய கையை வணங்கினேனே! திருவிருந்த மார்பன் இருக்க, திருவில்லாத் தேவனை நாடினேனே! என்று இப்படியெல்லாம் நொந்துகொண்டு, "இந்த ஆத்மாவை அடிமைகொண்டு வாழச் செய்யவேண்டும் என்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்து கிடந்தார்

அவரை முடி பிடித்து எடுத்து, குளிர நோக்கித் தடவிக் கொடுத்தார் நம்பிகள். மேலும் நல் வார்த்தைகள் சொல்லி, "ஆளவந்தார் கிருபைக்குக் குறை ஏதும் இல்லை" என்று எண்ணி நெஞ்சு நெகிழ்ந்தார். இவ்விவரம் அறிந்த காளஹஸ்தி நாதனை உடையார் பலரும் ஓடிவந்து நம்பிகளைப் பார்த்து, "அம்மான் பொடித் தூவினீரோ?" என்றார்கள். அதற்கு நம்பிகள், "அவரையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று பதில் கூறினார்.

அவர்களும் கோவிந்தரின் கையைப் பிடித்து, "வாரும் கோவிந்தரே"! என்றழைக்க, "என் கையை இனித் தொடவேண்டாம்; உங்களோடு எனக்கு இனி உறவில்லை" என்று கருவூலச் சாவி, இலச்சினை, மோதிரம் முதலியவற்றை அவர்களிடம் வீசிவிட்டு நம்பிகளின் பின் போனார். அவர்களும், "நேற்றே காளஹஸ்தி நாதன்" எங்கள் கனவில், தேவாம்சங்களான இவர் (கோவிந்தர்) முதலானவர்கள் பாஷண்ட, பௌத்த (பிற சமயங்கள்) நாஸ்திகங்களைப் போக்கித் திருமாலிடம் உறவை வளர்க்கத் தோன்றியவர்கள் என்று கூறியிருந்ததற்கு ஏற்ப நடந்தது" என்று சொல்லிப் போனார்கள்.

பெரிய திருமலை நம்பிகளும் கோவிந்தப் பெருமாளைத் திருமலைக்கு அழைத்துச் சென்று, பஞ்ச ஸம்ஸ்காரம் (ஸமாஸ்ரயனம்) முதலிய செய்து அவரைத் திருத்தி, அடிமைகொண்டு, திராவிட வேதங்களையும் (திவ்யப்ரபந்தங்கள்) மற்றும் சம்பிரதாய இரகசியங்களையும் தெளிவுற அருளிச் செய்து கொண்டிருந்தார். கோவிந்தப் பெருமாளும் அவர் திருவடியள்ளது வேறு அறியாதவராக வாழ்ந்திருந்தார்.

உடையவரின் தம்பியும் “எம்பார்” என்கின்ற மறுபெயரையும் உடைய கோவிந்தப் பெருமாள் தமக்குத் தாய் மாமனும், ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிக்கு எல்லாவித ஊழியங்களையும் செய்து கொண்டிருந்தார். ஒருநாள், ஆசார்யருக்குப் படுக்கை அமைத்து அதில் முதலில் தாம் படுத்து உறங்கி எழுவதை உடையவர் கண்டார். இதனை நம்பிகளிடம் விண்ணப்பஞ்செய்தார். நம்பிகள் கோவிந்தப்பெருமாளை, “இப்படிச் செய்யலாமோ! இதற்குப் பலன் என்ன தெரியுமோ?” எனக் கேட்டார். கோவிந்தப் பெருமாளும் “படுக்கையில் ஏதேனும் உரித்தல், ஊறுதல், கடித்தல் முதலானவற்றால் தேவரீரின் தூக்கத்துக்கு ஊறு (தீங்கு) விளையாமல் இருக்கவேண்டும் என்பதே அடியேனுடைய குறிக்கோள். அதனால் அடியேன் செய்த செயலுக்கு பலன் நரகம் தான் என்றாலும் அது அடியேனுக்கு விருப்பமே என்று பதில் கூறினார். இந்த பதிலைக் கேட்டு உடையவர் வியப்புக்கு உள்ளானார்.

மற்றொரு நாள் உடையவர் நந்தவனத்தில் குளிர நோக்கி வருகையில், கோவிந்தப் பெருமாள் ஒரு பாம்பின் வாயில் கையிட்டு வாங்கித் தீர்த்தமாடி வந்ததைக் கண்டார். என்ன காரணம் என்று உடையவர் வினவ, “பாம்பு நாக்கை நீட்டிக்கொண்டு துன்பப்பட்டுக் கொண்டிருந்தது; அதன் நாவில் முள் இருந்தது; அதை எடுத்துவிட்டு நீராடினேன்” என்று பதில் கூறினார். அது கேட்டு உடையவர், “என்னே இவரின் பூததயை (மற்ற ப்ராணிகளிடம் கருணை)! என்று உளங்கனிந்தார்.

ஸ்ரீ இராமாயண காலக்ஷேபம் முடிந்ததும் உடையவர் “திருவரங்கம் புறப்படுகிறேன்; விடை தரவேணும்” என்று திருமலை நம்பிகளிடம் வணங்கி வேண்டினார். நம்பிகள் “இத்தனை தூரம் வந்து செல்லும் உமக்கு நாம் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” என்று குறைபட்டார். உடனே உடையவர், “அப்படியானால், அடியேனுடைய எண்ணப்படியே திருத்திப் பணிகொண்ட கோவிந்தப்பெருமாளை தந்தருள வேணும்” என்று வேண்டினார். நம்பிகளும் கோவிந்தப் பெருமாளை அழைத்து, “நம்மைப் போலே இவரையும் நினைத்திருப்பீராக!” என்று நியமித்து, தாரை வார்த்து தத்தம் பண்ணி எம்பெருமானாரோடு அனுப்பி வைத்தார்.

உடையவரும் கோவிந்தப்பெருமாளை அழைத்துக் கொண்டு சோளசிங்கபுரம் (சோளிங்கூர் என்கிற திருக்கடிகையில் அக்காரக்கனி பெருமாளையும் திருப்புட்குழியில் போறேற்றம்பெருமானையும் திருவடி தொழுது காஞ்சிபுரம் வந்து சேர்ந்து திருக்கச்சி நம்பிகளை வணங்கியிருந்தார். அவ்வளவில், கோவிந்தப் பெருமாள் ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிந்த துயராலே உடல் மெலிந்து முகம் வெளுத்துப் போனார். இந்நிலையை அறிந்த உடையவர், “வாரீர்! கோவிந்தப் பெருமாளே! திருமலை சென்று பெரிய திருமலை நம்பியை சேவித்து வாரும்” என்று கூறி இரண்டு சிஷ்யர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். அவரும் பேராவலுடன் திருமலை சென்று நம்பிகளை வணங்கி நிற்க, நம்பிகள் முகம் கொடாமல், “பித்தனைப் போகச் சொல்லுங்கோள்” என்று வெறுத்துக் கூறினார். இது கேட்ட நம்பிகளின் தேவியார், “இதென்; இத்தனை தூரம் இளைத்து வந்தவரை அழைத்து முகம் காட்டி, தீர்த்த ப்ரஸாதங்களும் கொடுத்து அனுப்பவேண்டாவோ” என்று கூறி, மேலும், “விற்ற பசுவுக்கு புல் இடுவாருண்டோ?” என்று கடிந்து முகம் கொடாதேயிருந்தார் நம்பிகள். கோவிந்தப்பெருமாளும் திருமாளிகை வாசலில் தண்டனிட்டு(விழுந்து வணங்குதல்) காஞ்சிக்கு திரும்பி உடையவரை தண்டனிட்டு நின்றார். உடன் வந்தவர்கள் நடந்த விவரங்களைச் சொல்ல, எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியின் எல்லாம் உணர்ந்த நிலையை எண்ணி மகிழ்ந்தார். பிறகு, கோவிந்தப்பெருமாளுடன் புறப்பட்டு திருவரங்கம் சென்றடைந்தார்.

உடையவரின் கோஷ்டியில் கலந்து உடையவரின் எளிமை, நீர்மை முதலான குணங்களால் ஈர்க்கப்பட்டு கோவிந்தப்பெருமாள் உடையவரை விட்டகலாது தொண்டு பூண்டு, ஞான பக்தி வைராக்யங்கள் வெளித்தோன்ற வாழ்ந்து வந்தார். ஒருநாள் உடையவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகக் கூடியிருக்கையில் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களும் சேர்ந்து கோவிந்தப்பெருமாளின் ஞானம், பக்தி, வைராக்யம், ஆசார்யனே தனக்கு எல்லாம் என்ற உயர் குணங்களைக் கொண்டாடினர். இப்படி தன் குணங்களைத் தானே கொண்டாடிக்கொள்வது ஆணவத்தைக் காட்டுமதாயிருக்கையாலே உடையவர் “எல்லாரும் உம்மைப் புகழ்ந்தால், நீர் உம்முடைய தாழ்மையை அன்றோ சொல்லிக்கொள்ள வேணும்; அதை விடுத்து நீரே உம்மை புகழ்ந்துக் கொண்டு தற்பெருமையைக் காட்டலாமா?” என்று கோவிந்தரைக் கேட்டார். அதற்கு அவர், “ஐயோ! இந்த குணங்களை எல்லாம் அடியேனிடம் தோற்றுவித்தது தேவரீர் ஆகையாலே இந்த புகழெல்லாம் தேவரீருக்கேயாம். அடியேனைக் கொண்டாட வேண்டுமென்றால் அடியேன் காலஹஸ்தியில் இருந்த நிலையை அல்லவோ சொல்லவேண்டும்?” என்று பதில் கூறினார். இது கேட்டு எல்லோரும் அவரது நிலையை வியந்து கொண்டாடினர். எம்பெருமானார், “நல்லீர்! இந்த உம்முடைய குணங்களெல்லாம் எமக்கும் உண்டாகும்படி உம்முடைய நன்நெஞ்சாலே அணைத்துக் கொள்ளீர்!” என்று வாரி அணைத்துக்கொண்டார்.

முக்காலத்திலும் எம்பெருமானாரையே (இராமானுசர்) நோக்கி அவர் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்றிருந்த கோவிந்தப் பெருமாளை அவர் தாயார் அழைத்து, உம் மனைவி பக்குவமானாள் (பெரியவள் ஆனாள்);அவளோடு தனித்திருக்கவேண்டும் என்று கூற, இவர் தன் தாயிடம்,இருட்டும் தனியாய் இருக்கும்போது சொல்லுங்கள் அப்போது வந்து அவளுடன் கூடுகிறேன் என்றாராம். பலநாட்கள், இது நடக்காமல் போகவே, அவர் தாயார் எம்பெருமானாரிடம் சென்று, தன் மகன் மனைவியுடன் கூடாமல் இருக்கிறான் என்று கூற, எம்பெருமானார் அவரை அழைத்து,"கோவிந்தரே! இது நம் ஆணை! ருது காலத்திலேயே உம் மனைவியோடு இருந்து வாரும் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.கொவிந்தரும், ஏகாந்தத்தில் அந்தர்யாமியையும் (எம்பெருமான் எங்கும் உறைபவன்) அவன் குணங்களையும் எடுத்துரைத்து, தன் மனைவியைத் திருப்பி அனுப்பிவைத்தார். இதுகண்ட அவர் தாய் இப்படிச்செய்வது சரியல்ல என்று கூற, அதற்கு அவர், இருள் அறையிலும் எம்பெருமான் அந்தர்யாமியாய் வியாபித்திருக்கிறான்;அப்படி இருக்கும்போது, அவன்முன்னே இந்தத் தவற்றைச் செய்தால் அது சரியாகுமோ என்று கேட்க, இவருடைய வைராக்யத்தைப் புரிந்துகொண்டு எம்பெருமானார், "இல்லறமில்லேன் துறவறம் இல்லை" (திருமழிசைப்பிரான், நான்முகன் திருவந்தாதி) என்றபடி கோவிந்தப் பெருமாளுக்கு த்ரிதண்டம்,காஷாயம் முதலானவைகளைக் கொடுத்து, அவருடைய பெயரை "எம்பார்" என்று சுருக்கிவைத்து அவரைப் பெருமைப் படுத்தினார்

ஸ்வாமி எம்பாருக்கு ஒரு குறை இருந்ததாம். "ராமானுஜ" என்றழைத்து அத்திருநாமத்தின் அமுதச்சுவையை பருக தமக்கு ஒரு சிறுவன் இல்லையே என்று ஏங்கினாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சுவாமி, எம்பாரை அழைத்து, அழகான திருவாழி திருச்சங்கு, திருமண்காப்பு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தமது உபபாத்ரத்தை அவருக்குத் தந்தருளி, "இத்தை நமது பெயரால் அழைப்பீராக" என்று நியமிக்க, எம்பாரும் அப்பாத்திரத்தை நிதியெனப் பெற்றுக்கொண்டு அதை "ராமானுஜம்" என்று அழைத்து வந்தார். அது முதலாக ஸ்ரீவைஷ்ணவர்கள் தாம் கையாளும் உபபாத்ரத்தை ராமானுஜம் என்றே அழைத்து வருகின்றனர்.

எம்பாரும் திருத்திப் பணிகொள்ளப்பட்டவரே. அதாவது, இவரும் திருமழிசைப்பிரானைப் போலவே "சிவனே தெய்வம்" என்று காளஹஸ்தி என்னும் இடத்தில் வாழ்ந்து வந்தார். "வைணவமே சிறந்தது-விஷ்ணுவே பரதெய்வம் என்று இருக்கவேண்டிய தம் சகோதரன் இப்படி உயர்ந்த வைணவத்தில் சேராமல், சைவனாய் இருந்துகொண்டு சிவனை வழிபடுவதை விரும்பாத இராமானுசர், இவரைத் திருத்த நினைத்து, ஒரு ஸ்ரீவைஷ்ணவரைக் காளஹஸ்திக்கு அனுப்ப, அது கைகூடாமல் போக, தன் தாய்மாமன் மற்றும் ஆசார்யரனான பெரிய திருமலை நம்பிகளை (கோவிந்தருக்கும் இவரே தாய் மாமன்) அனுப்பி, அவரைத் திருத்தி, எம்பெருமானுக்குப் பணிசெய்யும்படி நியமித்து, அவரை மீண்டும் ஸ்ரீவைணவனாக்கினார். இதன்பின்னரே, இவர் இராமானுசரே தெய்வம் என்று, அதாவது மதுரகவிகள் தேவு மற்றறியேன் குருகூர் நம்பி" என்று நம்மாழ்வாரையே தன் தெய்வமாகக் கொண்டதைப்போல், இராமானுசரே தஞ்சம் என்று தன் காலத்தைக் கழித்தவர்

ஆசார்ய கைங்கர்யமே பரமப் பிரயோஜனமாக தம்மைப் பேணாமையும், ஆசார்ய விஷயத்தில் விற்கவும் பெறும்படி பணிந்திருக்கையும், ஆசார்யன் திறத்தில் நிழல்போல பரதந்தரனாய் இருப்பும், ஆசார்யனைப் பிரிந்தறியாத அனுஷ்டானமும் எம்பாருக்கே அமைந்த சிறப்புகள்.

வைணவ ஆசார்யர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல அருளிச்செயல் விரிவுரைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என்று வாழ்ந்தவர்கள் அல்ல வைணவ ஆசாரியர்கள். எனவே இவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் வைணவ மரபை அழகாக விளக்குகின்றன. இவர்களின் மேதா விலாசத்தையும், எளிமையான வாழ்க்கையையும், நாம் புரிந்து கொண்டு பின்பற்றுவதற்கு முயற்சிக்க இக்குறிப்புக்கள் பேருதவி செய்கின்றன. உதாரணமாக,

பெரிய திருமொழியில் ஒரு பாசுரம். திருவாலி திவ்ய தேசத்திற்குரிய பாசுரம். பகவான் தன் மனத்தில் இருந்தாலும், அவனைக் கலந்து அனுபவிக்க ஆசைப்படுகிறார் திருமங்கை ஆழ்வார். ஞான தசையைக் கடந்து பிரேம தசை வந்து விடுகிறது. ஆழ்வார் நாயகி பாவத்தில் பாட ஆரம்பிக்கிறார். ஒரு வண்டினை அழைத்து, "ஏ வண்டே! வயலாளி மணவாளன் என்னைக் கவனிக்காது - என் பசலை நோயைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே! நீ போய், அவனையே நினைத்து நினைத்து உள்ளம் தடுமாறி, பசலை நோயினால் துன்புற்றிருக்கும் என் நிலைமையை எடுத்துரைப்பாயாக என்கிறார். பாடல் இது.

பிணியவிழ நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
அணிமலர்மேல் மதுநுகரும் அறுகால சிறுவண்டே
மணிகெழு நீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
பணியறியேன் நீ சென்று என் பசலை நோய் உரையாயே!
("தூவிரிய"பதிகம், 3.6.2)

அறுகால சிறுவண்டே என்று ஆழ்வார் அழைத்து தூது அனுப்புகிறார். இந்த வண்டிற்கு உதாரணம் யார் என்று கருதிய உரையாசிரியர் எம்பாரை உதாரணமாகக் காட்டுகிறார். எம்பார் சிறிய திருமேனி உடையவர். ஆனால் பேராற்றலும் பேரறிவும் படைத்தவர். அதைப்போலவே வண்டு வடிவில் சிறியது. ஆனால் ஆழ்வாருக்காக எம்பெருமானிடமே தூது போகும் பெருங்காரியத்தை அல்லவா செய்யப்போகிறது. வடிவில் சிறு உருவம். காரியத்தில் பெருமை. வண்டுக்கு எம்பாரைத் தவிர யாரை உதாரணம் காட்ட முடியும்!

"திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி என்னும் பிரபந்தத்திற்கு "எங்கள் கதியே இராமானுச முனியே" என்று தொடங்கும் ஒரு தனியனும் இட்டவர் இவர்.

இராமானுசர் மீது "அவயவப் பிரபாவம்" (வடிவழகுப் பாட்டு) இயற்றி, அவரைப் புகழ்ந்தவர் இவர்.

பற்பமெனத் திகழ் பைங்குழலும் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்
முப்புறிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலையழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் கனநற்சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே!

பிறகு இவர் இராமானுசரை வந்து சேவித்து, அவருக்கு சகல உபசாரங்களையும் செய்து, அவருக்கே ஆட்பட்டு, அவர் மூலம் சந்நியாசம் பெற்றுக்கொண்டு, அவராலேயே "எம்பார்" என்ற திருநாமத்தைப் பெற்றுக்கொண்டார்.
பெரிய திருமொழித் தனியன்

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கைகேடுத்தாண்ட தவராசா - பொங்குபுகழ்
மங்கையர்க்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்
தங்குமனம் நீ எனக்குத் தா.

மங்கள ஸ்லோகம்

மங்களம் தேசிகேந்த்ராய மங்களம் குனஸிந்தவே |
மங்களம் கோவிந்தார்யாய நித்யஸ்ரீர்நித்ய மங்களம் ||

எம்பார் வாழித் திருநாமம்

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கைமுதல் பதின்மர்கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் புதூரான் மலர்பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
தேவும் எப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலை நம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவி இருள் பகல் என்றான் வாழியே
பட்டர் தொழும் எம்பார் பொற்பதம் இரண்டும் வாழியே.

எம்பார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!