Koorathazhwan Vaibhavam - 1 | கூரத்தாழ்வான் வைபவம்

Koorathazhwan Vaibhavam - 1| கூரத்தாழ்வான் வைபவம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

"கூரத்தாழ்வான் திருநக்ஷத்திர வைபவம்"
தை மாதம் - ஹஸ்தம்

தனியன் :

ஸ்ரீவத்ஸசிஹ்நமிஸ்ரேப்யோ நம: உக்திமதிமஹி |
மதுக்தபஸ்த்ரயீகண்டே யாந்தி மங்களஸுத்ரதாம் ||

விளக்கம்: எவருடைய ஸுக்திகள் வேதத்தின் எழுத்தில் கட்டப்பட்ட தாலிபோல் விளங்குகின்றனவோ, அத்தகைய ஸ்ரீவத்ஸாங்கமிஸ்ரரைக் குறித்து "நம்:" (சரணம்) என்னும் சொல்லைச் சொல்கிறோம்.

எம்பெருமானாருடைய (பகவத் ஸ்ரீ ராமானுஜர்) சிஷ்யர்களில் முதல்வராக எண்ணத் தகுந்த கூரத்தாழ்வான், எம்பெருமானார் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகள் முன் ஸௌம்ய வருடத்தில், தை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் க்ருஷ்ண பக்ஷ பஞ்சமி திதி வியாழக்கிழமையில் "அநந்தர்" என்னும் திருநாமமுடைய கூரத்தாழ்வாருக்கும் அவருடைய தேவியான பெருந்தேவி நாயகிக்கும் குமாரராய் யஜுஸ்ஸாகையில் ஆபஸ்தம்ப ஸுத்ரத்தில் ஹாரீத கோத்திரத்தில், "ஸ்ரீவத்ஸாங்கர்"(திருமருமார்பன்) என்னும் திருநாமத்துடன் காஞ்சிக்கும் அருகிலுள்ள "கூரம்" என்னும் அக்ரஹாரத்தில் இராமபிரானுடைய அம்சமாக அவதரித்தவர். இவருடைய வைபவம் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாது என்பது. அதாவது எம்பெருமானுடைய பெருமைகளைப் பற்றி பேசிவிடலாம்; ஆனால், எம்பெருமானாருடைய பெருமைகளைப் பற்றி பெசமுடியாது என்பர் முதலியாண்டான், எம்பார் முதலானோர்! ஆனால், எம்பெருமானாருடைய பெருமைகளைப் பற்றி பேசிவிடலாம்; ஆனால், கூரத்தாழ்வானுடைய பெருமைகளைப் பற்றி பேசித் தலைக்கட்ட முடியாது என்பர் பூருவாசாரியர்கள். இவரோடு ஒப்பிடுவதற்கு இவருக்கு மேம்பட்டவர்களாக இவருக்கு முன்னும் அவதரித்ததில்லை; பின்னும் அவதரிக்கப்போவதில்லை!

புருஷகுணங்கள் எல்லாவற்றிலும் நிறைந்த ஜீவகாருண்யம் ஆசார்ய பக்தி, பகவத் பக்தி, வைராக்கியம் பாண்டித்யம் ஆகிய எண்ணிலடங்காத பல பெருமைகளுக்குப் பிறப்பிடமாக அமைந்த ஆழ்வானின் திவ்ய சரித்திரத்தை ஸ்ரீவைஷ்ணவர்கள் அனுதினமும் அனுஸதிப்பது அவசியம் என்பது பூருவர்களின் ஒருமனதான வாக்கு.

'கூரத்தாழ்வான் அவதார இரகசியம்"

த்ரேதா யுகத்திலே தான் இராமானாகவும், ஆனந்தாழ்வானைத் தன் தம்பியாகவும் (லக்ஷ்மணன்) பிறக்கச் செய்தது உலகோர் அனைவரையும் திருத்தி, நித்யசூரிகளைப் போலவே தனக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியவான்களாய் ஆக்குவதற்காகவே. துவாபர யுகத்திலே பெருமான் தானும் மீண்டும் பிறக்க விரும்பி ஆதிசேஷனைத் துணைக்கழைக்க, ஆதிசேஷன் பெருமானிடம், ஏற்கனவே உமக்குத் தம்பியாகப் பிறந்து கைங்கர்யங்கள் செய்த பரிதாபம் போதுமே என்று வினோதாமாகக் கூற, பெருமான் தானும் மிக்க சௌலப்யனாய் ஆதிசேஷன் கூறியதை செவிமடுத்து திருவுள்ளம் உகந்து ஏற்றுக்கொண்டு, சரி! "இந்தமுறை, நீர் எனக்கு அண்ணனாகப் பிறப்பீர்; நான் உமக்குத் தம்பியாகப் பிறப்பேன்" என்று கூறி, தான் கண்ணனாகவும், ஆதிசேஷனை பலராமனாகவும் பிறப்பித்துத் தோன்றினான். இந்த ராமகிருஷ்ண விபவ அவதாரங்களிலும் திருப்தியின்றி, மீண்டும் அவதாரம் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் கொள்ள, தான் சேஷபூதனாகவும் அதாவது, ராமானுஜராகவும், ஆதிசேஷனை சேஷியாகவும், அதாவது கூரத்தாழ்வானாகவும் பிறப்பித்து, இப்பூவுலகில் மீண்டும் தோன்றினான். சேஷபூதன் (நிர்வாஹன்); சேஷி (நிர்வாஹனுக்குக் கைங்கர்யங்கள் செய்து,அடிமையாய் இருப்பவர்). இந்த அவதாரக் காரணங்களும் நிறைவடைய, பெருமான் தான் அதிலும் திருப்தி கொள்ளாமல், மீண்டும் ஆதிசேஷனை மணவாள மாமுனிகளாகப் பிறப்பித்து, தான் "ஹஸ்திகிரிநாதரண்ணா" என்ற திருநாமத்துடன், ஸ்ரீவத்ஸகுலதிலகராக இப்பூவுலகில் திருவவதரித்தான். ஆழ்வான், ஸாக்ஷாத் எம்பெருமானுடைய திரு அவதாரமாகையால், அவருடைய திருமார்பில் "திருமரு " என்னும் அடையாளம் இருந்ததாம். இதனாலேயே, அவர் "ஸ்ரீவத்ஸசிஹ்நர்" ("திருமருமார்வர்") என்ற எம்பெருமானது திருநாமத்தைப் பெற்றார். "ஸ்ரீவத்ஸாங்கர்" என்பதும் அவருக்கு இடப்பட்ட பிரியமான திருநாமம் ஆகும்

"ஸ்ரீவத்ஸசிஹ்நர்" ஆழ்வான் என்ற திருநாமத்தைப் பெற்றது ஏன்?

இவர் எம்பெருமானது குணங்களையே அனுபவித்துக் கொண்டு இருக்க, எம்பெருமானார் தானும் இவரிடம் மிக்க ப்ரியம் கொண்டு, இவரிடம் திருவாய்மொழி அர்த்தங்களைக் கேட்க விரும்பினார் ஆனால், இவரோ, எம்பெருமானார் தனக்கு ஆசார்யராக இருக்கும்போது, அவருக்குத் தான் அர்த்த விஷயங்களைக் கூறுவது தவறு என்று இவர் இராமானுசரிடம் கூற, இராமானுசர் தன் சிஷ்யரான முதலியாண்டானுக்கு அர்த்த விஷயங்களைக் கூறுமாறு பணித்தார். இப்படி ஒருமுறை முதலியாண்டான் கூரத்தாழ்வானிடம் திருவாய்மொழி அர்த்த விஷயங்களைக் கேட்கத் தொடங்கியபோது, இவர் ("ஸ்ரீவத்ஸசிஹ்நர்") இன்னும் சில முதலிகளும் அங்கே கோஷ்டியாய் எழுந்தருளினர். இவர், திருவாய்மொழியின் தொடக்கப் பாடலான "உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்" என்ற வாக்கியத்திற்கு அர்த்த விஷயங்கள் சொல்ல முற்பட்டு, ஆனால், "உயர்வற உயர்நலம் உடையவன்" எம்பெருமான் என்று நம்மாழ்வார் கூறியதில், அந்த உயர்ந்த அர்த்தத்திலேயே திளைத்து மூர்ச்சையாகி நிலத்தில் சாய்ந்தார்! அப்படி விழுந்தவர் எழுந்திருக்காது கண்ட கோஷ்டியினர் நேரே இராமானுசரிடம் ஓடிச்சென்று இவ்விஷயத்தைப் பற்றிக் கூற, இராமானுசரும் இந்த அதிசயக் காட்சியைக் காண விழைந்து (விருப்பமுற்று) அந்த இடத்திற்கு எழுந்தருளினார். அவர் வந்தபின்பும் இவர் எழுந்திருக்காமல் மயங்கி இருப்பதைக் கண்டு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் இப்படியும் ஒருவர் ஆழ்ந்து போவரோ என்று ஆச்சர்யப்பட்டு, இவருக்கு "ஆழ்வான்" என்ற உயர்ந்த திருநாமத்தைத் தந்தருளினார். அன்றுமுதல், கூரம் என்னும் தலத்தில் பிறந்த "ஸ்ரீவத்ஸசிஹ்நர்", "கூரத்தாழ்வான்" என்று அழைக்கபடலானார்.

"மொழியைக் கடக்கும் பெரும்புகழான்" என்று "இராமானுச நூற்றந்தாதியில்" அமுதனாரால் போற்றப்பட்டவர் கூரத்தாழ்வான்.

கூரத்தாழ்வானை பெருமான் உயர்த்திவைத்தல்:

எம்பெருமானாரை (பகவத் ஸ்ரீ ராமானுஜர்) ஆசார்யராகக் கொண்டு அவரை ஆஸ்ரயிக்குமுன், ஆழ்வான் தான் அவதரித்த கூரம் என்னும் கிராமத்தில் நித்யம் அங்கு உள்ள கோயிலுக்கு வரும் அடியார்களுக்குத் ததீயாரதனம் செய்து வந்தார். ஒரு சமயம், கூரத்திற்கு அடுத்துள்ள காஞ்சீபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு வைகாசி விசாகத் திருநாளன்று நடைபெறும் "கருட வாகன" உத்ஸவம் நாளன்று, பெருமானை சேவிக்குமுன், வட இந்தியாவிலிருந்து இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூரத்திற்கு வந்து ஆழ்வான் திருமாளிகையில் ததீயாரதனம் முடித்துவிட்டு, காஞ்சிக்கு செல்லத் தயாராயினர். அவர்கள் தங்களுக்குள், காஞ்சியில் பெருமான் உயர்ந்த உத்ஸவம் கண்டருளுவதைசேவிக்க, நாம் 2000 மைல்களுக்கும் மேல் உள்ள நம் இடத்திலிருந்து இங்கு வந்துள்ளோம்; ஆனால் காஞ்சிக்கு மிக அருகிலுள்ள கூரத்தில் இருக்கும் இவர், பெருமானை சேவிக்காமல் இங்கேயே இருக்கிறாரே என்று பேசிக்கொண்டனர். பின்னர், பெருமானை சேவிக்கக் அவர்கள் காஞ்சிக்குச் சென்றபோது பெருமான் அவர்களுக்கு தரிசனம் தரவில்லை; இதனால் மிகவும் வருத்தமுற்று அவர்கள் பெருமானிடம், "சேவை தந்தருளவேண்டும்" என்று பிரார்த்திக்க, பெருமான் அசரீரியாய் அவர்களிடத்தில் தோன்றி, "ஆழ்வானைப் பற்றி நீங்கள் குறையாகப் பேசியதால், நாம் வருத்தம் கொண்டதாலேயே, உங்களுக்கு சேவை தருவதில் விருப்பமில்லாதவனாய் இருக்கிறேன்" என்று கூறி மேலும் "நீங்கள் மீண்டும் ஆழ்வானிடத்தில் சென்று நடந்ததை அப்படியே கூறி, அவரிடத்தில் தண்டன் சமர்பித்து மன்னிப்பு கேட்டால்தான் நம் தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும்" என்றும் திருவாக்கு அருளினான். அவர்களும் தங்கள் தவற்றை உணர்ந்து பெருமான் இட்ட ஆணையைச் செவ்வனே நிறைவேற்றி காஞ்சிக்கு வந்தபோது, பெருமான் தானும் உகந்து அவர்களுக்கு சேவை சாதித்து அருளினான். எம்பெருமான் அடியவர்களுக்கேன்றே இருப்பவன்; அடியவர்களிடத்தில் மிக்க சௌலப்யனாக இருப்பவன் என்பதை இதன் மூலம் அறிவோம். என்னே ஆழ்வானின் பெருமை!

"ஆழ்வானது தேவியார் பெருமை"

ஆழ்வானது வைபவத்தைக் காட்டிலும், அவரது துணைவியார் வைபவம் பெரியது; ஆழ்வானுக்கு சாஸ்திர அர்த்தங்களில் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம், தன் தேவியாரிடம் கேட்டு, அந்த சந்தேகத்தைப் போக்கிக் கொள்வாராம்.

"ஆழ்வான் செல்வங்களைத் துறந்து எம்பெருமானாரை ஆஸ்ரயித்தல்"

ஆழ்வான் மூன்று விஷயங்களில் மிகவும் உயர்ந்தவராய் இருந்தார். (1) உயர்ந்த குலத்தில் அவதரித்தவர்; (2) அதிகமான ஞானத்தைப் பெற்றிருந்தவர்; (3) மிக்க செல்வந்தராக இருந்தவர். ஆனால், இவை அனைத்தும் தன்னிடம் இருந்தும் இவற்றின் தாக்கங்கள் துளியும் இல்லாதவராய், அதாவது நான், எனது என்ற அகங்கார, மமகாரங்கள் இல்லாதவராய் இருந்தார். இதனாலேயே, அமுதனார் இவரை, "வஞ்சமுக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்" (இராமானுச நூற்றந்தாதி, பா.7) என்று போற்றிப் பாடியுள்ளார். இவரது ஐஸ்வரியம் எப்படிப்பட்டதெனில், அனுதினமும் பல ஏழைகளுக்கும் சாதுக்களுக்கும் தன் திருமாளிகையில் குறைவற ததீயாராதனம் கொடுத்து வந்தார். அன்றைய தினம் ததீயாராதன கைங்கர்யம் முடிந்தபின், இரவில் இவர் திருமாளிகையின் கதவுகளைச் சார்த்தும்போது, அந்தக் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்ந்தரக மணிகளின் ஒலி பல மைல்கள் தூரம் கடந்து, காஞ்சி வரதராஜ பெருமான் சந்நிதி வரை ஒலிக்குமாம். இப்படி ஒருநாள் இரவு, ததீயாராதன கைங்கர்யம் முடிந்தபின் , இவர் தன் திருமாளிகளைக் கதவுகளைச் சார்த்த, வழக்கப்படி அந்தக் கதவின் மணிகள் எழுப்பிய ஒலி, காஞ்சியிலுள்ள வரதராஜப் பெருமானின் காதுகளில் விழுந்தது; இவ்வோசையைக் கேட்ட பெருமான், தனக்கு அந்தரங்கக் கைங்கர்யங்கள் புரியும் திருக்கச்சி நம்பிகளிடத்தில் நமக்கு இன்னும் திருவாராதனம் முடியவில்லையே; அதற்குள் யார் நம் கோயில் கதவுகளைச் சார்த்துவது என்று கேட்டானாம். (நம்பிகள் பெருமானுக்கு நித்யம் ஆலவட்ட (விசிறி வீசும்) கைங்கர்யங்கள் புரிபவர். அவர் செய்தது சாதாரண கைங்கர்யம் அல்ல; ஏனெனில், இவர் வாழ்ந்த காலம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது! அப்போதே இவர் தன் இருப்பிடமான பூந்தமல்லியிலிருந்து நித்யம் காஞ்சீபுரத்திர்குச் சென்று, அங்கு எழுந்தருளியுள்ள தேவப் பெருமாளுக்கு சாமரம் வீசி, கைங்கர்யங்கள் புரிந்துவந்தார். நம்பிகளிடம் பெருமான் கேட்ட கேள்விக்கு, இவர், "இந்த ஓசை நம் கோயிலில் இருந்து வரும் ஓசை அல்ல என்றும், அது ஆழ்வானின் திருமாளிகையிலிருந்து எழும் ஓசை ஆகும் என்றும், கூரத்தாழ்வானின் ஐஸ்வர்யச் சிறப்பாம் இது என்று பெருமானிடம் தெரிவிக்க, பெருமான் மிகவும் மகிழ்ந்து, "ஆழ்வானின் ஐஸ்வர்யமோ நம்மை இவ்விதம் நம்மை மயக்கிற்று!" என்று புன்முறுவல் செய்தானாம்.

இப்படி, நம்பிகளுக்கும் பெருமானுக்கும் இடையில் நடந்த உரையாடலைப் பற்றி ஆழ்வான் கேள்விப்பட, என்னிடத்தில் இருக்கும், அழிந்துபோகும் இந்தச் செல்வந்தானா பெருமானுக்குப் பெரியதாய்ப் பட்டது? நான் பெற்றிருந்த சிறிதளவு ஞானம் கூட எம்பெருமானின் உகப்புக்குக் காரணமாக இல்லாமல் போனதே? என்று மிக்க வருத்தம் கொண்டு, அந்த நிமிடமே, தன் செல்வங்கள் அத்தனையும் தான் இருக்கும் இடத்தில் வசிக்கும் அத்தனை பேருக்கும் பகிர்ந்தளித்து, பெருமாளிடம் நீ உகக்கும் வண்ணம், ஒரு நல்ல ஆசிரியரை நமக்குத் தந்தருளவேண்டும் என்று விண்ணப்பிக்க, எம்பெருமானாரையே நீர் ஆசார்யராகக் கொண்டு, அவருக்குக் கைங்கர்யங்கள் புரிவீர் என்ற வார்த்தைகள் காதில் விழ, இவர் தானும் தன் தேவியான ஆண்டாளை அழைத்துக்கொண்டு தன் இருப்பிடம் மற்றும் தான் பெற்றிருந்த செல்வங்கள் அனைத்தையும் துறந்து, அங்கிருந்து புறப்பட்டார். இவர் கிளம்பிய நேரம் இரவு; கூரத்திலிருந்து, இராமானுசர் இருக்கும் காஞ்சி மாநகரை அடைய, அவர் வழியிலுள்ள காடுகளைக் கடந்துதான் செல்லவேண்டும். அப்படிச் செல்லும்போது அவர் மனைவி சற்று பயமாக இருக்கிறது; காலையில் செல்லலாமே என்றுகூற, இவர் அவளிடம், "பயப்படும்படி என்ன வைத்திருக்கிறாய்? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயமிருக்கும்?" என்று கேட்க, அவள் அவரிடம், "உயர்ந்த செல்வந்தராகிய நீர் அனைத்தையும் துறந்தீர்! இருந்தாலும், நீர் புசிப்பதற்கு ஏற்ற ஒரு வெள்ளி வட்டில் துணிக்குள் சுற்றிவைத்துள்ளேன் என்று கூற, இவர் அதையும் அருகிலிருந்த ஒரு புதரினுள் வீசி எரிந்துவிட்டு, எம்பெருமானார் இருக்கும் இடம் நோக்கி நடக்கத் தொடங்கினார். பின்னர் காஞ்சியை அடைந்து, எம்பெருமானாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி , அவரிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் முதலியவற்றைத் தந்தருளுமாறு பிரார்த்திக்க, எம்பெருமானாரும் அவரைப் பற்றி நன்கு அறிந்தவராய் அவரை மெச்சி, அவர் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, தன்னுடைய க்ருதார்த்தராய் ஆக்கிக்கொண்டார். பின்னர், ஆழ்வான் அவரை ஒரு காலும் பிரிய விருப்பமில்லாதவராய் இருந்து, அவருக்குக் கைங்கர்யங்கள் புரிந்துவந்தார்.

"எம்பெருமானாரும் ஆழ்வானும் திருவரங்க மாநகர் எழுந்தருளுதல்"

இப்படியிருக்க, தென் திருவரங்கம் கோயில் கொண்ட நம்பெருமாள் இட்ட நியமனத்தின்படி, திருவரங்கப் பெருமாள் அரையர் (இவர் ஸ்ரீமன் நாதமுனிகளின் பேரனான "ஸ்ரீமத் யாமுனாசார்யார்"என்று அழைக்கப்படும் ஆளவந்தாரின் புதல்வர்களில் ஒருவர்), காஞ்சிக்கு எழுந்தருளி, தேவப்பெருமாளின் சந்நிதியை அடைந்து, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை அனுசந்திக்க, பெருமான் மிகவும் மகிழ்ந்து, "அரையரே! உம் கைங்கர்யத்தில் யாம் மகிழ்ந்தோம்! அதற்குப் பலனாக, நீர் கேட்கும் வரத்தைத் தர சித்தமாக உள்ளோம்!" என்று கூற, அரையர்,"நம் இராமானுசனை நம்பெருமாள் சந்நிதிக்குத் தந்தருளவேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, இராமானுசரை விட்டுக்கொடுக்க சிறிதும் மனமில்லாதவனாய் தேவப்பெருமான் இருந்தாலும், வாக்கு கொடுத்தபின், அதிலிருந்து மாறமுடியாது என்றும், "அரையராலே வஞ்சிக்கப்பட்டோம்; சிறந்த இரத்தினத்தை இழந்தோம்" என்றும் திருவுள்ளம் நொந்துகொண்டே, இராமானுசரை அவருடன் அனுப்பிவைத்தானாம்! இப்படி அரையருடன் இராமானுசர் புறப்பட்டபோது, அவர் பிரிவு தம் உயிரை மாய்த்துவிடும் என்று ஆழ்வானும், அவருடன் புறப்பட்டு, திருவரங்கம் அடைத்து, இராமானுசரின் திருவடிக்கீழ் பிரதான சிஷ்யராய், சகல ஸாஸ்த்ர நிபுணர் என்று அனைவரும் போற்றும்படியகத் திகழ்ந்தார்.

"சரம ஸ்லோக அர்த்தம் பெறுதல்"

எம்பெருமானார் தன் ஆசார்யரான திருக்கோஷ்டியூர் நம்பிகளிடமிருந்து சரம ஸ்லோக (பகவத் கீதையில் எம்பெருமான் உரைத்த "ஸர்வ தர்மான்"என்று தொடங்கும் ஸ்லோகம்) பெற்றுக்கொண்டார். ஆனால் நம்பிகள் எம்பெருமானாருக்கு இந்த ஸ்லோக அர்த்தத்தை சாதாரணமாகக் கொடுத்துவிடவில்லை; 18 முறை இராமானுசரை மீண்டும் மீண்டும் ஸ்ரீரங்கத்திலிருந்து தன் திருமாளிகை இருக்கும் இடமான திருக்கோஷ்டியூருக்கு வரும்படி செய்து, எம்பெருமானாருக்கு இதைப் பெறுவதில் நிச்சயம் உண்மையான ஆவல் உள்ளதா என்று சோதித்துப் பார்த்து, 18ஆவது முறை அவர் வந்தபோதுதான் அந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கொடுத்து அருளினார். அப்படிக் கொடுத்தபோதும், இந்த அர்த்தத்தை வேறு யாருக்கும் வெளியிடக்கூடாது என்றும் கட்டளை இட்டார். அப்படி வெளியிட்டால் உமக்கு நரகமே கிடைக்கும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், இவர் அதையும் மீறி நம்பிகளிடம், "என் முதல் சீடரான ஆழ்வானுக்கு இதைத் தெரிவிக்காமல் இருப்பது தன்னால் இயலாதே" என்று கேட்க, நம்பிகள் அதற்கு "சரி! ஒருவேளை நீர் இப்படி நினைத்தீரானால் இந்த அர்த்த விஷயத்தைக் கேட்கும் தகுதி ஆழ்வானுக்குப் பல விதங்களிலும் இருக்கிறதா என்று ஒரு வருட காலத்திற்கு சோதித்து, பின்னர் ஆழ்வான் அதற்குத் தகுதி பெற்றவர் எனில் கொடுக்கலாம்" என்று கூறினார். பின்னர், அங்கிருந்து கிளம்பி ஸ்ரீரங்கத்தை அடைந்த ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வானை அழைத்து, நம்பிகளிடம் தான் பெற்ற சரம ஸ்லோக அர்த்த விஷயங்களைப் பெற்றுக்கொண்டேன் என்றும், பின்னர் நம்பிகள் தனக்கு இட்ட கட்டளையும் பற்றி எடுத்துரைத்தார். ஆழ்வான் அதற்கு, சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் பெற ஒரு வருடம் காத்திருக்கலாம்; ஆனால், அதுவரை இந்த உயிர் நிலைக்குமோ என்று அச்சப்பட்டு, அர்த்தத்தைக் காலம் தாழ்த்தாமல் பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஸ்ரீராமாநுஜரிடம், ஒரு மாத காலம் ஆசாரியனின் திருமாளிகை வாசலில் பட்டினியாய்க் கிடப்பது, ஒரு வருடம் காத்திருந்து அதற்குண்டான தகுதியைப் பெறுவதற்கு ஈடாகுமே என்ற சாஸ்திரத்தைத் தெரிவிக்க, இராமானுசரும் அதை ஏற்றுக்கொள்ள, ஒரு மாத காலம் இராமானுசரின் இல்லத்து வாசலில் பட்டினியாய் கிடந்து, சரம ஸ்லோக அர்த்தத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டார். ஞானம் பெரும் விஷயங்களில் மிகுந்த வைராக்கியம் பெற்றிருந்தவர் ஆழ்வான் என்பதற்கு இதைவிடவும் ஒரு விஷயமுண்டோ?

"ஆழ்வான் திருவரங்கத்து அமுதனாரைத் திருத்திப் பணிகொள்ளுதல்"

திருவரங்கத்து அமுதனார் என்பவர் திருவரங்கம் பெரிய கோயிலின் சாவிகளைத் தன் கையிருப்பில் வைத்துக்கொண்டு, கோயிலில் நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் அதிகாரியாய் இருந்தார். ஆனால், அவற்றில் சில குறைபாடுகள் இருந்தது. ஒருநாள் அமுதனார் இராமானுசரின் திருவடி தொழுது, அவருக்குக் கைங்கர்யம் புரியும் பாக்கியத்தைத் தாம் பெறும் வண்ணம், ஒரு ஆசார்யனைத் தனக்கு நியமித்து அருளவேண்டும் என்று விண்ணப்பிக்க, இராமானுசர் ஆழ்வானை அழைத்து, "இவர் தாழ்வுகளைப் பார்க்காமல், இவரைத் திருத்தி, நம் பக்கம் சேர்க்கவேண்டும் என்று கூற ஆழ்வான் ஆறு மாத காலங்கள் அமுதனாருக்கு சகல விஷயங்களையும் கொடுத்தருளி, அவரை இராமானுசரிடம் கொண்டுசேர்க்க, இராமானுசர், அமுதனாரிடம் ஆழ்வானையே ஆஸ்ரயிக்குமாறு பணித்தார். அமுதனாருக்கு அன்றுமுதல் ஆழ்வான் ஆசார்யர் ஆனார். இப்படித் தனக்குப் பேருதவி செய்தாரே ஆழ்வான் என்று, அவரது ஸாத்வீகமான நடவடிக்கைகளைப் போற்றும் வண்ணமே, "மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின்" என்று "இரா.நூற்"ல் பாடினார்.

"ஆழ்வான் அமுதனார் கிரஹத்தில் ஏகாஹம் அமுது செய்தல்"

இப்படி இருக்க, ஒருநாள் அமுதனாரின் தாயார், ஆசார்யன் திருவடி அடைய, அவரது காரியங்களை நன்கு நடத்த விரும்பி, 11ஆம் நாளான ஏகாஹம் என்று தன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுதுண்ணும் உத்தமர் ஒருவரை நியமித்து அருளவேண்டும் என்று இராமானுசரிடம் விண்ணப்பிக்க, ஆழ்வானை அழைத்து, அமுதனார் இல்லத்துக்குச் சென்று அமுதுசெய்து வாரும் என்று நியமித்தார். இந்த விஷயமாக உணவு கொள்ளச் செல்பவரின் மனம் கோணாமல், அவர் திருப்தி அடையும்படி சகல சவுகரியங்களையும் செய்து தர வேண்டும், காரியம் செய்பவர் (கர்த்தா). இப்படி, ஆழ்வான் இராமானுசர் நியமித்தபடி, அமுதனாரின் இல்லத்திற்குச் செல்லத் தயாராக, இராமானுசர் ஆழ்வானிடம், "நீர் போய் பூஜித்து (உனவுகொள்வது), முடிவில், "ஸகலம் ஸம்பூர்ணம்" (அதாவது திருப்தி) என்று சொல்லாதீர்! அப்படி சொல்லாதிருந்தால், அமுதனார் அதற்கான காரணத்தைக் கேட்பார்; அச்சமயம் பார்த்து, கோயிலின் திறவுகோலை (கொத்துசாவி) நம் கையில் வரும்படிக் கேளும்; அப்படிக் கேட்டபின், அமுதனார் உம் வேண்டுதலை நிறைவேற்றினால்,"திருப்தி" என்று சொல்லும்" என்று பணித்தார். பின்னர், ஆழ்வான் அமுதனார் இல்லத்திற்குச் சென்று, பூஜித்து முடித்தபின், அமுதனார் அவரிடம் "திருப்தியா?" என்று கேட்க, ஆழ்வான் மௌனமாய் இருந்தார்! ஆழ்வானின் மௌனம் அமுதனாருக்குக் கலக்கத்தை உண்டாக்கியது; ஆழ்வான் திருப்தி என்று கூறாவிட்டால், தாம் செய்யும் கருமங்கள் வீணாகிவிடுமே என்று பயந்து, அதற்கான காரணத்தைக் கேட்க, ஆழ்வானும் கோயிலின் கொத்துசாவியைத் தன் கையில் கொடுத்தாலன்றி யாம் திருப்தி அடையமாட்டோம் என்றுகூற, அமுதனார் இது பெருமானின் சித்தம் என்று எண்ணி, ஆழ்வான் கேட்டபடி அவரிடம் சாவிக்கொத்தைக் கொடுத்தார். அதன் பின்னரே ஆழ்வான் "திருப்தி" என்று சொல்லி, அங்கிருந்து புறப்பட்டு, இராமானுசரிடம் அந்தக் கொத்துசாவிகளைக் கொடுத்தார். இப்படி சாவிகளைப் பெற்றபின், இராமானுசர் பல பெரியோர்களின் துணைகொண்டு, கோயில் நிர்வாகங்களைச் சீர்செய்து, சரிவர நடத்திவந்தார். இதனாலேயே, "தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே" என்ற வாழ்த்துரை உண்டு இராமானுசருக்கு.
"பிரம்ம சூத்திரம் உரைநூலைப் பெற்றுக்கொள்ள எம்பெருமானாரும் ஆழ்வானும் காஷ்மீரம் செல்லுதல்"

பிரம்ம சூத்திரத்திற்கு பகவத் போதாயன மஹரிஷி அருளியுள்ள வ்ருத்தி கிரந்தத்தைப் (உரைநூல்) பெற்றுக்கொண்டு அதன்படி ஸ்ரீபாஷ்யம் செய்தருளவேண்டும் என்பது ஸ்ரீமத் ஆளவந்தார் என்னும் ஆசார்யர் தான் உயிர் நீத்தபின் சூஷ்மமாய் இராமானுசருக்கு இட்ட கட்டளை ஆகும். இதனை நிறைவேற்றும் வண்ணம், இந்த பிரம்ம சூத்திரம் உரை நூல் ஸ்ரீகோசம் காஸ்மீர மன்டாத்தில், சாரதா பீடத்தில் உள்ளதென அறிந்து, அதனை அங்குள்ள பாண்டாரத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொள்ள ஆழ்வான் உள்ளிட்ட சில சீடர்களுடன் காஸ்மீரத்திற்கு எழுந்தருளி, அவரிடம் தன் வைபவங்களைக் காட்டி அந்த உரைநூலைப் பெற்றுக்கொண்டு, அதிலுள்ள அர்த்த விஷயங்களை படிக்கத் தொடங்கினார் இராமானுசர். ஆனால், அன்றைய தினம் அவரால் அந்த நூலை மேலோட்டமாக மட்டுமே படித்துவிட்டு, மீண்டும் ஒருமுறை இதை முழுவதும் மறுநாள் படிக்கலாம் என்று முடிவுசெய்து உறங்கிப்போனார். ஆனால், மறுநாள் காலை மீண்டும் அந்த உரைநூலைப் படித்துக்கொண்டிருக்கும்போது, மற்ற வித்வான்களின் தூண்டுதலின் பேரில், அந்த பாண்டாரத் தலைவர் இவரிடம் அந்த நூலைத் திருப்பித் தரும்படி கேட்க, மிக்க வருத்தத்துடன் இராமானுசர் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி நேர்ந்தது. அவரது வருத்தத்திற்குக் காரணம் என்ன என்றால், ஆசார்யர் ஆளவந்தார் அவர்கள் இட்ட பணியை தன்னால் நிறைவேற்றமுடியாமல் போயிற்றே என்பதாலேயே! இதைப் பற்றி ஆழ்வானிடம் மிக்க வருத்தத்துடன் தெரிவிக்க, ஆழ்வான் இராமானுசரிடம், "ஸ்வாமி! கவலை வேண்டாம். நீர் ஏற்றுக்கொண்ட பணி குறைவின்றி நிறைவேறும்!" என்று கூறினார். இதைக்கேட்ட இராமானுசர் ஆழ்வானிடம், நூல் நம் கையைவிட்டுப் போனபின் அது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்க, அதற்கு ஆழ்வான் அவரிடம்,"நேற்றைய இரவு நீர் உறங்கியபின், உமக்குக் கால்கள் பிடித்துவிடும் கைங்கர்யம் செய்துகொண்டிருந்தபோது, அந்த நூலில் உள்ள அர்த்த விஷயங்களை முழுவதும் படித்து மனதில் நன்கு தேற்றிக் கொண்டுவிட்டேன்; அதனால், நீர் எப்போது கேட்டாலும், அந்த நூலில் இருந்த அர்த்த விஷயங்களை வார்த்தை மாறாமல், ஏன்! எழுத்து மாறாமல் அடியேனால் ஒப்பிக்கமுடியும்" என்று சொல்ல, இராமானுசர் மிகுந்த மகிழ்ச்சிகொண்டு, "என்னே நீர் பெற்ற பகவத் கடாக்ஷம்" என்று கூறி, அவரது அறிவாற்றலைப் போற்றிப் புகழ்ந்தாராம்!. அதாவது, பெருமான் இராமபிரானாக அவதரித்தபோது, லக்ஷ்மணர் அவருக்கு சகல கைங்கர்யங்களும் கண்ணிமைக்காமல் (தூங்காமல்) செய்துவந்தார்; இதனால் மகிழ்ச்சியுற்ற இராமபிரான் லஷ்மணரிடம்,
நீ செய்யும் உயர்ந்த கைங்கர்யங்களைப் பெற்றுக்கொள்ளும்போது, நம் தந்தை இறந்துபோனதாகவே எனக்குப்படவில்லை! நீயே தந்தைபோல் இருந்து அத்தனையும் செய்கிறாய் என்று பெருமைப்படுத்திக் கூறினாராம். அதுபோல, ஆழ்வான் சொன்னதைக் கேட்ட இராமானுசர் அவரிடம், "நீர் அந்த நூலிலிருந்த அர்த்தங்களைப் படித்து, நன்கு உள்வாங்கிக்கொண்டபின், அந்த உயர்ந்த நூலை இழந்தோம் என்ற வருத்தமே எமக்கு ஏற்படவில்லை என்றாராம்!

"இராமானுசர் ஆழ்வான் துணைகொண்டு பிரம்ம சூத்திரம் நூலுக்கு ஸ்ரீபாஷ்யம் உரை எழுதுதல்"

பின்னர் திருவரங்கம் வந்துசேர்ந்த இராமானாசர் ஆழ்வானை அழைத்து, "அந்த நூலை ஓரளவே தாம் படித்திருந்தமையால், தான் அதற்கு உரை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் வந்தால், அந்த நூலை முழுவதும் படித்திருந்த உம்மிடம் கேட்கிறேன்; அதைத் திருத்தித் தாரும்!" என்றுகூற, ஆழ்வான் அவரிடம், பரம ஆசார்யரான நீர் இப்படி கூறுவது ஆகாது!" என்றும் "நீர் அறியாதது ஒன்றும் நாம் அறியோம்" என்றும் கூறினாராம். இராமானுசர் அதை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டு ஆழ்வானிடம், "சரி! உம் திருவுள்ளம் (எண்ணம்) அதுவானால், நான் ஒன்று சொல்கிறேன் கேளும்" என்று, "இந்த அர்த்த விஷயங்களை நான் காலஷேபம் செய்துவருகிறேன்; அப்படிச் செய்யும்போது, நான் சொல்வதை நீர் எழுதிக்கொண்டே வாரும்; அப்படி எழுதும்போது, நான் கூறும் அர்த்தங்களில் எது உம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாதபடி இருக்கிறதோ அந்த இடத்தில் எழுதுவதை நிறுத்திவிடும்" என்றுகூற, ஆழ்வான் அதனையும் ஏற்றுக்கொள்ளாமல், இராமானுசர் அர்த்தங்களை உரைக்கத் தொடங்கியபோதும், தாம் அதனை எழுத மறுத்து வெறுமனே அமர்ந்துகொண்டிருந்தார். இராமானுசர் மீண்டும் ஆழ்வானிடம், எப்படி இராமன் லக்ஷ்மணனிடம், "நீ இருக்கும்போது நம் தந்தை இறந்ததாகவே தெரியவில்லை" என்று கூறினானோ, அதேபோல், "நீர் இருக்கும்போது, நம் ஆசார்யர் ஸ்ரீமத் ஆளவந்தார் இல்லை" என்றே தோன்றவில்லை என்று மீண்டும் புகழ்ந்துபேச, இதற்குமேல் ஆசார்யன் மனம் வருந்தும்படி நடப்பது தவறு என்றுகொண்டு,எழுதுவதற்கு இசைந்தார்.

ஒருநாள், இராமானுசர் ஸ்ரீபாஷ்யம் காலக்ஷேபம் நடத்திக்கொண்டிருக்க, அதில் ஆத்மாவைப் பற்றிய ஒரு விஷயம் வந்தது. அதாவது, ஆத்மா என்பவர் ஞானத்தோடும் ஆனந்தத்தோடும் கூடியவர்! என்று ஆத்மாவைப் பரமாத்மாவோடு ஒத்திருக்கும்படி உரை சொல்ல, அதை ஏற்றுக்கொள்ளமுடியாமல், ஆழ்வான் எழுதுவதை நிறுத்தினார். இதைப்பார்த்துக் கோபமடைந்த இராமானுசர் ஆழ்வானைத் தள்ளிவிட்டு, அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார். இதைக்கண்ட மற்றவர்கள் ஆழ்வானிடம், இராமானுசர் இப்படிச் செய்தாரே! என்று சொல்லி, அவர் சொன்ன கருத்துக்கு நீர் என்ன சொல்ல விரும்புகிறீர்? என்று கேட்டனர். அதற்கு ஆழ்வான் அவர்களிடம், "ஆத்மா என்பது பெருமானின் சொத்து! தன் லீலைகளைக் கொண்டு, அவன் ஆத்மாவிடம் எப்படியெல்லாமோ விளையாடுவான்! அதனால், ஆத்மாவிற்குத் தானாகச் செயல்படும் சுதந்திரம் இல்லை" என்று இருக்கும்போது, இராமானுசர் வெளியிட்ட கருத்து தவறே ஆகும் என்று கூறினாராம். பின்னர், இராமானுசர் நன்கு யோசித்து, ஆழ்வானை அருகில் அழைத்து தம் செயலுக்கு வருந்தி, "ஆத்மா என்பவர் பரமாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டிருக்கும் குணம் உடையது; எனவே, அது பகவானுக்கு அடிமைபட்டிருக்கும் தன்மையும் சேர்த்து, ஞானத்தோடும் ஆனந்தத்தோடும் கூடி பகவானுக்கு அடிமையாய் இருக்கும்" என்று கூறி இதை எழுதும் என்றுகூறி ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை எழுதும் பணியை முழுவதும் முடித்து அருளினார்.

இன்னும் சற்று எளிமையாகக் கூறவேண்டும் என்றால், இராமானுசர் முதலில் கூறிய கருத்து என்னவென்றால், ஆத்மா இயற்கையாகவே ஞானத்தையும் ஆனந்தத்தையும் பெற்றிருப்பதனால், அது பரமாத்மாவுக்கு நிகரானது என்பதே. ஆனால், இதற்கு ஆழ்வான் தெரிவித்த மறுப்பு யாதெனில், ஆத்மாவானது பகவானுக்கு அடிமைசெய்யவேண்டும் என்ற ஞானத்தைப் பெறுவதும் பகவானாலேதான்; அந்த ஞானத்தால் அது ஆனந்தப்படுகிறது. ஆக,ஒரு ஆத்மா ஞானத்தைப் பெறுவது என்பது பகவானின் அருளிருந்தால்தான் நடக்குமே தவிர, அது இல்லையென்றால், ஞானம் எது? ஆனந்தம் எது? இராமானுசர் இதை ஏற்றுக்கொண்டு, ஆத்மா பகவானிலிருந்து முற்றிலும் மாறுபட்டது; அது இயற்கையில் ஞானத்தையும் ஆனந்தத்தையும் கொள்ளாது; கொள்ளவும் முடியாது! அது ஞானத்தைப் பெற்று, ஆனந்தத்தை அடையும்படி செய்வது பரமாத்மாவே என்று பின்னர் தன் கருத்தைத் திருத்தித் தெரிவித்தார்.

பாகம் 2:

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!