ஸ்ரீமதே ராமானுஜாய நம:
"கூரத்தாழ்வான் திருநக்ஷத்திர வைபவம்"
பாகம் 2
"ஆழ்வான் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெறச் செல்லுதல்"
"கூரத்தாழ்வான் திருநக்ஷத்திர வைபவம்"
பாகம் 2
"ஆழ்வான் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெறச் செல்லுதல்"
பின்னர் உரை எழுதும் பணி முடிந்தபின், இராமானுசர் ஆழ்வானை அழைத்து, நமக்குள் நடந்த இந்த விவாதத்தை, ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் தெரிவித்து இதைப் பற்றிய அவர் கருத்தையும் கேட்டு வாரும் என்று சொல்ல, ஆழ்வான் திருக்கோஷ்டியூருக்குச் சென்று அவரை விழுந்து வணங்கி, நடந்ததைக் கூறினாராம். ஆனால், ஆறுமாத காலங்கள் கடந்தபின்னும், நம்பிகள் இதைப்பற்றிய தன் கருத்தை வெளியிடாமல் இருக்க, ஆழ்வான் அவரிடம் விடைபெற்றுக்கொள்ளும் வண்ணம், எம்பெருமானாரை சேவித்து வருகிறேன் என்று கூறினாராம். அதாவது, இராமானுசரைப் பிரிந்து இனியும் இங்கு இருக்க நமக்கு விருப்பமில்லை; சென்றுவருகிறேன் என்ற அர்த்தத்தில் கூற, அதற்கு, நம்பிகள் ஆழ்வானிடம், பகவானால் நல்ல ஞானத்தை அருளாகப் பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில், "அடியேனுள்ளான்" ("கண்கள் சிவந்து" பதிகம், 8.8.1) என்று கூறியிருக்கிறாரே என்று கூற, ஆழ்வான் அவரிடம் "நன்றி!" என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டாராம். அதாவது, நம்மாழ்வார் "பகவான் ஆத்மாவின் உள்ளே உள்ளான் என்று கூறவில்லை; என்னுள்ளான் என்றும் கூறவில்லை; "அடியேனுள்ளான்" என்று கூறியிருக்கிறார்! "அடியேனுள்ளான்" என்றால்,ஆத்மாவானது பகவானுக்கு அடிமை என்பதை உணர்த்துவதே! மேலும், இதன் மூலம், "ஆத்மாவானது ஞான ஆனந்தங்களைக் கொள்வதைக் காட்டிலும், பகவானுக்கு அடிமைபடும் வண்ணம் இருப்பது" என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதே என்று கூறி, ஆழ்வான் இராமானுசரைத் திருத்தி எழுதியது சரிதான் என்பதைத் தான் ஏற்றுக்கொண்டேன் என்பதை இந்தப் பாசுரத்தின் மூலம் தெரிவித்தாராம்.
சகல ஞானங்களும் நிரம்பப் பெற்றவர் இராமானுசர். இப்படியிருக்க, முதலில் அவர் எப்படி ஒரு கருத்தைத் தவறாக வெளியிட்டார் என்ற கேள்வி நம் மனதில் எழும்! இந்தக் கேள்வி எழுந்தால்தான் நல்லது. அப்படி ஒரு கருத்தைத் தான் தவறாகக் கூறி, அதை சகல ஞானவானான ஆழ்வானால் திருத்தப்பட்டு வெளியிட்டால்தான் அதன் ஆழ்ந்த அர்த்தம் உலகோர் மனதில் நன்கு பதியும் என்பதற்காகவே.
"ஆழ்வானுடைய ஆத்மகுண பரிபூர்த்தி"
அந்த காலத்தில் அரசாண்டுவந்த சோழமன்னன் வைஷ்ணவ துரோகியாய் இருந்தான். ஆகையால் அவன், திருமால் சிலைகளையும் விக்ரஹங்களையும் அழித்துவிட எண்ணினான். மந்திர பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளையும் விக்ரஹங்களையும் அழித்தால், பெருத்த தீங்கு விளையும் என்று அங்கிருந்தவர்கள் கூற முயற்சிக்க, அதைக்கேட்ட மன்னன் தெய்வ சக்தியை அழிக்கும் விஷயங்களை உபயோகித்து அவற்றை அழிப்பேன் என்று கூறினான். பிறகு அவன் ஒரு பார்ப்பானை அழைத்து, அவனுக்கு நிறைய பணங்கள் கொடுத்து, "நீ ஒருவர் கண்ணிலும் படாதபடி உன் உருவத்தை மறைத்துக்கொண்டு (முகமுடி, கவசங்கள் ஆகியன அணிந்து) ஒவ்வொரு சிலையையும் எடுத்துக் கடலில் வீசிவிடு" என்று கட்டளையிட, அவனும் பணத்திற்காக அப்படியே செய்யத் தொடங்கினான். இதைக் கேள்விப்பட்ட இராமானுசர், நாம் வெகுநாட்களாக இந்தத் திருவரங்கம் பெரிய கோயிலை நிர்வாகித்து வருகிறோம். சைவ வெறிகொண்ட சோழ மன்னனால், இந்தக் கோயிலுக்கு வரப்போகும் அழிவை எப்படித் தடுப்பது என்று தன் ஆசார்யரான பெரிய நம்பிகளை அழைத்து ஆலோசனை கேட்க, நம்பிகள் அதற்கு, "நான் இந்தக் கோயிலின் எல்லைப்புரத்திலிருந்து தொடங்கி முழுவதும் ஒரு சுற்று (பிரதட்சிணம்) வருகிறேன். என்னுடன் உம்முடைய சீடர்கள் ஒருவரை அனுப்பவும்; ஆனால், அந்த சீடர் என்னுடன் வரும்போது அவர் நிழல் அவர்மீது படாதபடி, அவர் என்னைப் பின்தொடர்ந்தே வரவேண்டும்; எனவே, அப்படிப்பட்ட ஒரு சீடரை என்னுடன் வரும்படி அனுப்பவேண்டும்" என்றார். அப்படிப்பட்ட ஒரு சீடர் ஆழ்வானே என்று இராமானுசருக்கு நன்கு தெரியும்! இருந்தாலும், அதை நம்பிகளின் திருவாக்கிலிருந்து வெளிவருவதுதான் ஆழ்வானுக்குப் பெருமை சேர்க்கும் என்று எண்ணி, "அப்படிப்பட்ட சீடர் இங்கு இருப்பதாகத் தெரியவில்லையே! ஒருவேளை, நீர் அவரை அறிந்திருந்தால் நீரே அவரை அழைக்கலாமே?" என்று கேட்க, நம்பிகள் உடனே, "ஆழ்வானை அனுப்பமாட்டீரோ?" என்று கேட்க, இதைக்கேட்ட ஆழ்வான், "பல அடியார்கள் இங்கு இருக்கும்போது, தம்மை அழைத்து நம்பிகள் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த பாக்கியத்தை அளித்தாரே என்று வியந்தாராம்! இப்படிப்பட்ட ஆத்மகுண பரிபூர்த்தி (ஆசார்யனுக்கு அடிமையாய் இருப்பதையே விரும்புவது) கொண்டவர் ஆழ்வான் ஒருவரே என்பது பூருவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
"ஆழ்வானுக்குத் திருக்குமாரர்கள் அவதரித்தல்"
தனது செல்வங்கள் அத்தனையும் துறந்து, இராமானுசரே தெய்வம் என்று அவரை அடைந்து,அவர் திருவடிகளில் தஞ்சம் பெற்ற நாள் முதலாக ஆழ்வான், தினமும் உஞ்சவிருத்தி செய்தே தம் குடும்ப காரியத்தை நடத்திவந்தார். அப்படி செய்யும்போது கிடைக்கும் உணவுப் பொருட்களில் மறுநாளைக்கு என்று சிறிதும் வைத்துக்கொள்ளாமல் தனக்கும் தன மனைவிக்கும் வேண்டியதை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை மற்றவர்களிடம் கொடுத்துவிடுவார். ஒருநாள் அடாத மழை பொழிந்தது. அதனால் ஆழ்வானால் உஞ்சவிருத்தி செய்ய வெளியே செல்ல முடியவில்லை. இரவுப்பொழுதும் வந்துவிட்டது. மழை நிற்பதாகத் தெரியவில்லை; வெளியே செல்லமுடியாததால், ஆழ்வானும் அவர் மனைவியும் உண்ணாமலேயே இருந்தனர். ஆனால், உணவு உண்ணாவிட்டாலும் ஆழ்வான், அதைப் பட்டினியாகக் கிடப்பதாகவே நினைக்கவில்லை! வெறும் தீர்த்தம் மட்டும் பருகி, "உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன்" என்று கண்ணனையே நினைத்துக்கொண்டிருந்தார்! அதனால், கண்ணனை நினைக்காத நாள்தான் பட்டினியான நாளேதவிர, உடல் வளர்க்கும் சோறு கிடைக்காத நாள் ஒன்றும் பட்டினியான நாள் கிடையாது என்று கூறி, ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் மூழ்கிவிட்டார்.
ஆனால் தன் கணவர் உணவின்றி இருக்கிறாரே! என்று அவர் மனைவியார் (ஆண்டாள்) மிக்க வருத்தத்தில் இருந்தார். அச்சமயம், திருவரங்கம் பெரியகோயிலில் பெருமானுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டிருந்தது. அதை அறிவிக்கும் மணியோசையைக் கேட்ட ஆண்டாள் பெருமானிடம், "உம்முடைய அடியார் பட்டினி கிடக்க, நீர் மகிழ்ந்து மகிழ்ந்து உணவு உண்கிறீரோ?" என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டார். எங்கும் நிறைந்திருப்பவனான எம்பெருமான், ஆண்டாள் தன் மனதில் நினைத்ததை அறிந்த அந்த நொடியே, அர்ச்சக முகமாக தேவஸ்தான நிர்வாகியான உத்தமநம்பியை அழைத்து, தான் அமுதுசெய்த அக்காரவடிசலை சகல மரியாதைகளுடன் எடுத்துக்கொண்டுபோய் ஆழ்வானுக்குக் கொடுக்கவும் என்று கட்டளையிட, நிர்வாகி அப்படியே செய்தார். இப்படி பெருமான் தனக்காக மஹாப் பிரசாதத்தை அனுப்பியுள்ளானே என்று பதறிய ஆழ்வான், அதிலிருந்து தனக்கும் தன் மனைவிக்கும் தேவையான இரண்டே இரண்டு பிடி எடுத்துக்கொண்டார். உத்தமநம்பி சென்றவுடன், பக்தவத்ஸலனான பெருமான் எல்லையற்ற கருணை உடையவனாய் இருக்கிறானே என்று வியந்து, அந்தப் ப்ரசாதத்திலிருந்து ஒரு பிடி எடுத்து, அதில் ஒரு பகுதியைத் தான் உண்டு, மிச்சத்தை ஆண்டாளுக்குக் கொடுத்தார். நெடுங்காலம் பிள்ளைப்பேறு இல்லாது இருந்த தசரத சக்ரவர்த்தி, நல்ல பிள்ளையைப் பெறும்வண்ணம், பெரியோர்களின் அறிவுரைகொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்; அப்படிச் செய்யும்போது அதிலிருந்து வெளிப்பட்ட பாயசக் கூறுகளைத் தானும் உண்டு தன் தேவிமார்களும் உண்ணும்படி செய்ய, சத்புத்திரர்களாய் இராமலக்ஷ்மண பரதசத்துருக்கணன் திருஅவதாரங்கள் நிகழ்ந்தது. அதேபோல், பெருமான் அமுதுசெய்த பிரசாதத்தை ஆழ்வானும் அவர் மனைவியும் உட்கொள்ள, சத்புத்திரர்களாக இரண்டு புதல்வர்கள் ஆழ்வானுக்குப் பிறந்தனர். அவர்கள் ஸ்ரீ பராசர பட்டர் மற்றும் ஸ்ரீ வேதவ்யாச பட்டர் ஆகியோர் ஆவர்.
ஆழ்வானின் சரித்திரத்தில் இதற்கு அடுத்தாற்போல் நடந்த விஷயம் மிகப்பெரியது. அதாவது, வைஷ்ணவத்தை நிலைநாட்ட, விஷ்ணுவே பரதெய்வம் என்று ஆழ்வான் சொல்ல, , அதனால் கோபம் கொண்ட சோழ மன்னானால் தண்டிக்கப்பட்டு,தன் கண்களையே இழந்தவர் கூரத்தாழ்வான்!
"அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தமில்லவன்" என்று பகவானைப் பற்றி திருமழிசைப்பிரான் பாடியுள்ளார் (திருச்சந்த விருத்தம், பாசுரம் 117) - அதாவது, பகவான் எல்லையில்லாதப் புகழை உடையவன்; அவன் முதலும் முடிவும் அற்றவன் என்று அர்த்தம். பெருமான்தான் கூரத்தாழ்வானாக அவதரித்தான் என்று பார்த்துள்ளோம். ஆக, ஆழ்வானுடைய கீர்த்தியும் எல்லையின்றிதானே இருக்கும்?
பகவானின் குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள்; அதை உரைத்த ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் ஆழ்ந்தவர் ஆழ்வான். ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும் தாழ்வாக நினைப்பவர்கள், ஒருமுறை கூரத்தாழ்வானின் சரித்திரத்தைப் படித்தால், நிச்சயம் தானாகத் திருந்துவார்கள் என்பதில் சிறிதும் கருத்து வேறுபாடு நிகழாது.
"ஆழ்வான் இராமானுசருக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தவிர்த்தல்"
ஆழ்வான் எம்பெருமானாருக்கு உறுதுணையாக இருந்த காலத்தில், இராஜேந்திர சோழபுரத்தை ஆண்டுவந்த குலோத்துங்க சோழ ராஜன் துஷ்ட சைவனாக இருந்தான். இதனால், தானும் தன் புரோஹிதனுமுகாக நாட்டிலுள்ளவர்கள் எல்லாரையும் அழைத்து "சிவாத் பரதரம் நாஸ்தி" (சிவனுக்கு மேற்பட்ட தெய்வமில்லை) என்று எழுதி கையெழுத்திடச் சொன்னான். அப்படிச் செய்யாவிட்டால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி எல்லோரும் அப்படியே எழுதிக்கொடுத்தனர். அப்போது அந்த சபையில் சிறிது மேன்மை பெற்றிருந்த நாலூரான் என்ற வைஷ்ணவன், மன்னனிடம், "இப்படி எல்லோரும் எழுதிக்கொடுப்பதைக் காட்டிலும், இராமானுசர் எழுதிக்கொடுத்தால்தானே அது எடுபடும்" என்று கலகம் செய்ய, மன்னனும் உடனே அவரை அழைத்துவரும்படி அவரது மடத்திற்குத் தன் ஆட்களை அனுப்பினான்.
அதன்படி மன்னனின் பணி ஆட்கள் இராமானுசரின் மடத்தினுள் வர, அவர் அப்போது நீராடச் சென்றிருந்தார். அவர்கள் வருகையின் நோக்கத்தை அறிந்த ஆழ்வான் இராமானுசர் அங்கு சென்றால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அறிந்து, தான் அவரது காஷாயத்தையும் த்ரிதண்டத்தையும் தரித்துக்கொண்டு அவரைப்போல் வேடமிட்டுக்கொண்டு புறப்பட, பெரிய நம்பிகளும் மற்றும் சில சீடர்கள் தாங்களும் உடன் வருவதாகத் தெரிவிக்க, அனைவரும் ராஜசபைக்குப் புறப்பட்டனர். நீராடி வந்த இராமானுசரிடம், இதைத் தெரிவித்தார் முதலியாண்டான். இராமானுசர் அப்படியானால், ஆழ்வானின் வெள்ளை திருப்பரியட்டத்தை (வேட்டி) எனக்குத் தாரும் என்று கேட்டு வாங்கி அதை உடுத்திக்கொண்டு, ஆழ்வானுக்கும் நம்பிகளுக்கும் என்ன தீங்கு வருமோ என்று கவலைப்பட்டுக் கிடந்தார். இனியும் நீர் இங்கிருந்தால் உமக்கு அது நல்லதல்ல என்று முதலியாண்டனும் இன்னும் சிலரும் கூற, அவர் அங்கிருந்து திருநாராயணபுரம் (மேல்கோட்டை) சென்றடைந்தார்.
"ஆழ்வான் ராஜ சபைக்கு எழுந்தருளுதல்"
மடத்திலிருந்து ஆழ்வானும் நம்பிகளும் மட்டும் சிலரும் ராஜ சபையை வந்தடைந்தனர். ஆழ்வானை இராமானுசர் என்றே நம்பிய சோழமன்னன் ஆழ்வானிடம், "சிவாத் பரதரம் நாஸ்தி" என்று எழுதித்தரச்சொல்ல, ஆழ்வான் சுருதிகள், ஸ்ம்ருதிகள், இதிஹாசங்கள்,புராணங்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம் என்று உபன்யாசம் செய்து எடுத்துரைக்க, மன்னன் கோபமுற்று ஆழ்வானிடம், நீர் வேதவித்து ஆகையால் தோன்றினபடியெல்லம் கூறுவீர்! ஆனால், அது இங்கு எடுபடாது; நான் சொன்னபடி எழுதித்தாரும் என்று கூறினான். ஆழ்வானும் தான் பெற்றிருந்த ஞானத்திற்குக் குறைவின்றி, "த்ரோணமஸ்தி தத: பரம்" என்று எழுதிக்கொடுத்தார். அதாவது, சோழமன்னன் சொன்ன "சிவாத் பரதரம் நாஸ்தி" என்ற வாக்கியத்திற்கு "சிவனைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை" என்பதாக ஆழ்வான் அர்த்தம் கொள்ளவில்லை! ஏனென்றால், சிவம் என்ற சொல்லுக்குக் குறுணி என்று பொருள்; ஆகையால், குறுணிக்கு மேலான பொருள் இல்லை என்றே ஆழ்வான் பொருள் கொண்டார். ஆனால், குறுணிக்கு மேலான வஸ்துவாக பதக்கு என்னும் வஸ்து இருந்தது. ஆகையால், சிவம் (குறுணி என்ற சொல்லுக்கு மேற்பட்ட வஸ்துவான பதக்கைக் குறிக்கும் வண்ணம் ""த்ரோணமஸ்தி தத: பரம்" (பதக்குக்கு மேலான பொருள் இல்லை) என்று எழுதித்தந்தார்.
பெரிய நம்பிகளுக்கும் ஆழ்வானுக்கும் நேர்ந்த ஆபத்து"
ஆழ்வான் இப்படி கேலிசெய்து எழுதியிருக்கிறார் என்றறிந்த சோழன், நம்பிகளிடம் தான் சொன்னபடி எழுதித்தரச் சொல்ல அவரும், " ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம்" என்று கூறினார். இதனால் மிக்க ஆத்திரமடைந்த சோழன், தன் ஊழியர்களை அழைத்து, அவர்கள் இருவரின் கண்களையும் பிடுங்கும்படி கட்டளையிட்டான். உடனே ஆழ்வான், துஷ்டனான உன்னைக் கண்ட கண்கள் எனக்கு உதவாது என்று கூறித் தம் நகங்களைக் கொண்டே தம் கண்களைப் பிடுங்கி அரசன் மேல் வீசினார். பெரிய நம்பிகளின் கண்களும் பிடுங்கப்பட்டன. பின்னர் , இருவரும் ராஜ சபையிலிருந்து வெளியேறினர். வழியில் வலி தாங்காமல் அந்திமகாலத்தை அணுகினார் நம்பிகள். அதனால் விரைவில் ஸ்ரீரங்கத்தை அடைவோம் என்று ஆழ்வானும் அத்துழாயும் கூறினர். அதுகேட்டு நம்பிகள், "அது வேண்டாம்; அப்படி செய்வோமானால் பெரியநமபிகள் திருமேனியை விடுவதற்கு ஸ்ரீரங்கம் போனார்; அதனால், நாமும் திவ்யதேசத்தில்தான் சரீரம் விடவேண்டுமென்று அனைவரும் எண்ணுவர். முதலிலே ஆசார்யனாலே அனுக்ரஹிக்கப் பட்டவருக்குப் பரமபதம் நிச்சயமாகையாலே, அந்த தேச நியமம் என்று கூறி, தன் ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரை தியானித்துக்கொண்டு ஆழ்வான் மடியிலே திருமுடியும், மகள் அத்துழாய் மடியிலே திருவடியுமாகப் பரமபதம் அடைந்தார். இதனால், பகவானே பேற்றுக்கு உபாயம் என்று அவனைத் தஞ்சமாகப் பற்றிவனுக்கு, இறுதிக் காலத்தில் இன்ன தேசத்தில் தேகத்தை விடவேண்டும் என்ற கட்டுப்பாடில்லை என்பதை நிலை நாட்டினார் நம்பிகள். ஆசார்யனுக்காக ஆழ்வான் கண்களைத் துறந்தது ஆசார்ய பக்தி ஆகும்; ஆனால், சிஷ்யனுக்காக (இராமானுசர்) ஆசார்யர் (நம்பிகள்) கண்களைத் துறந்து, உயிரையும் துறந்தது உலகம் போற்றும் விஷயமாயிற்று! "நம்பிகள் செய்த தியாகம்" என்றே இதைக் கூறுவார்கள் பெரியோர்.
"ஆழ்வான் கோயிலுக்கு மீண்டும் எழுந்தருளுதல்"
பின்னர், நம்பிகளை திருவரங்கத்திற்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்து, அவரைத் திருப்பள்ளிபடுத்தினர் சீடர்கள். ஆழ்வானுக்கும் கண்களில் ஏற்பட்ட உபாதைக்கு சில உபசாரங்கள் செய்தனர்.
"ஆழ்வான் திருமாலிருஞ்சோலை யாத்திரை செல்லுதல்"
பின்னர், ஆழ்வான் நம்பெருமாளிடம் விடைபெற்றுக்கொண்டு திருமாலிருஞ்சோலை யாத்திரை செல்ல முற்பட்டு, கோயிலின் பெரிய பலிபீடத்தின் அருகே நம்பிகளை அனுக்ரஹித்தது போல் தன்னையும் அனுக்ரஹித்தல் ஆகாதோ என்று நொந்து வேண்டி, பின்பு உள்ளே சென்று சேவிக்கச்செல்ல, அங்கிருந்த ஊழியர்கள் இராமானுசர் தொடர்புடைய யாரையும் கோயிலுக்குள் விடக்கூடாது என்று சோழன் நிபந்தனை விதித்திருப்பதாகக் கூற, அங்கிருந்த சிலர், இவர் மற்றவர்களைப் போல் அல்லர்; ஆத்ம குணங்கள் நிரம்பியவர் என்று கூறி இவரை உள்ளேசெல்ல அனுமதியுங்கள் என்றுகூற, இதைக்கேட்ட ஆழ்வான் திடுக்கிட்டு, "ஐயோ! ஆத்ம குணங்களால் ஆசார்யரின் சம்பந்தம் பெறும் பாக்கியம் போய், ஆத்ம குணங்கள் இப்போது, அந்த சம்பத்தத்தை அறுத்துவிடும் போலிருக்கிறதே! என்று, இராமானுசரை மதிக்காத கோயிலில் தான் நுழையமாட்டேன்" என்று கூறி, மேலும் "என்னுடைய பேற்றுக்கு இராமானுசரின் திருவடி சம்பந்தமே போதும்; பெருமானின் தரிசனம் அவசியமில்லை" என்று அங்கிருந்து புறப்பட்டு, திருமாலிருஞ்சோலை நோக்கிப் பயணமானார்.
"ஸ்தவங்கள் அருளிச்செய்தல்"
இப்படி யாத்திரை செல்லும்போது, தம்முடைய மனத்துயரங்கள் நினைவுக்கு வராதபடி, எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளை நினைந்து நெஞ்சுருகி, "ஸ்ரீவைகுண்டஸ்தவம்" மற்றும் "அதிமானுஷ்யஸ்தவம்" என்னும் இரண்டு அற்புத ஸ்லோகங்களை அருளிச்செய்துக்கொண்டே திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளினார். இவற்றுள், "ஸ்ரீவைகுண்டஸ்தவம்" நூறு ஸ்லோகங்களைக் கொண்டது. ஆழ்வான் அருளிய பஞ்ச ஸ்தவங்களில் இதுவே முதலானது. இதில் பரவாசுதேவனுடைய (வைகுண்டநாதன்) ஸ்வரூபகுண விபூதிகளை விரிவாகக் கூறி அனுபவித்து, பின்னர், பெருமானின் விபவாதரங்களை அனுபவிக்கும் வண்ணம், "அதிமானுஷ்யஸ்தவம்" அருளிச்செய்தார். இதில், நரசிம்ஹாதி அவதாரங்களைச் சுருக்கமாகச் சொல்லி, இராமகிருஷ்ண அவதாரங்களைப் பற்றி விரிவாக அனுபவித்து அருளினார். இதுவரை உலகத்தில் வெளிவந்துள்ள ஸமஸ்கிருத ஸ்லோகங்களில், "அதிமானுஷ்யஸ்தவத்திற்கு" ஈடான சொல் ஏற்றமும், பொருள் ஏற்றமும் வேறொரு ஸ்லோகங்கள் கண்டதில்லை என்று வித்வத் ரசிக விவேகிகள் ஒருமனதாகக் கூறுவார்கள்.
பாகம் 3: