Koorathazhwan Vaibhavam - 3 | கூரத்தாழ்வான் வைபவம்

Koorathazhwan Vaibhavam - 3 | கூரத்தாழ்வான் வைபவம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

"கூரத்தாழ்வான் திருநக்ஷத்திர வைபவம்"

தை மாதம் - ஹஸ்தம்
பாகம் - 3

"அழகர் சன்னிதியிலே தம் குறையை வின்னப்பம் செய்தல்"

இப்படி பரம பாக்கியமான இரண்டு ஸ்தவங்களை அருளிச்செய்தபின் ஆழ்வான் திருமாலிருஞ்சோலையை அடைந்து, அவ்விடத்திலே "அடிவாரந்தன்னில் அழகர் வடிவழகைப் பற்றி முடியும் அடியும் படிகலனும் முற்றும் அனுபவித்தார் முன்" (மணவாள மாமுனிகள்,திருவாய்மொழி நூற்றந்தாதி, பாசுரம் 21) என்கிறபடியே சுந்தரத்தோள் உடையானை நம்மாழ்வார் அனுபவித்தாற்போல் தானும் அனுபவித்து, அவ்வெம்பெருமான் விஷயமாய் அமுதக்கடல் என்னும்படியாய், 132 ஸ்லோகங்கள் கொண்டதான "சுந்தரபாஹு ஸ்தவம்" அருளிச்செய்து அதன் முடிவில், சோழமன்னனால் திருவரங்கம் பெரிய கோயிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து அனைத்தும் நீங்கப்பெற்று, திருவரங்கமாநகர் மீண்டும் பொலிவடைந்து, இராமானுசர் திருவடிகளிலே தாம் வாழப்பெற வேண்டுமென்றும் உள்ளமுருகிப் பிரார்த்திக்கொண்டு அங்கே சில காலம் வாழ்ந்தார். எங்கு சென்றாலும், இராமானுசரையே தஞ்சம் கொள்ளவேண்டும் என்று இவர் ஆவல் கொண்டதால், "உள்ளார் கண்டீர் - ஆழ்வான் எங்கு சென்றாலும் அவர் உள்ளத்தில் இராமானுசர் உள்ளார் கண்டீர்" என்றுதான் பாடவேண்டும்.

"ஆழ்வான் மீண்டும் திருவரங்கம் சேர்தல்"

ஒருநாள், சோழமன்னன் கழுத்திலே புண் தோன்றி அது பழுத்து இறந்தே போனான் என்ற செய்தி கேள்விப்பட்டு, ஆழ்வான், அழகர் சன்னதியிலே விடைபெற்றுக்கொண்டு மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார்.


"இராமானுசர் திருவரங்கம் வந்தடைதல்"

சோழமன்னானால் உம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று முதலிகளின் அறிவுறுத்தலால்,, திருநாராயணபுரம் சென்று அங்கு இருந்த இராமானுசர், அங்கு வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம், ராஜசபையில் பெரிய நம்பிகளுக்கும் ஆழ்வானுக்கும் நேர்ந்த தீங்குகளைக் கேட்டறிந்து, நம்பிகள் ஆசார்யன் திருவடி அடைந்தார் என்பதையும் கேள்விப்பட்டு, மிகவும் மனம் வேதனை அடைந்து, ஆழ்வானாவது உயிரோடு இருக்கும் பாக்கியம் பெற்றோமே என்று மகிழ்ந்து, மற்ற விஷயங்களையும் கேள்விப்பட்டு, இப்போது, சோழமன்னன் இறந்துவிட்டதால், திருவரங்கம் பழைய பொலிவுடன் இருக்கிறது என்றும், ஆழ்வானும் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்துவிட்டார் என்றும் அறிந்து, மிக்க ஆனந்தம் கொண்டு, தன் சீடர்களும் தானுமாய் திருநாராயண புரத்திலிருந்து புறப்பட்டு, மீண்டும் திருவரங்க மாநகரை அடைந்து, நேரே ஆழ்வானது திருமாளிகைக்கு எழுந்தருள, ஆழ்வானும் இராமானுசர் திருவடியில் வேரறுந்த மரம்போல் விழுந்து சேவித்து, அவர் திருவடிகளைப் பற்றிக் கிடக்க, இராமானுசரும் ஆழ்வானை வாரி அணைத்துக்கொண்டு சோக வேகத்தால் ஒரு வார்த்தையும் பேச முடியாமல், "உள்ளெலாம் உருகிக் குரல் தழுத்தெழுந்து உடம்பெலாம் கண்ணநீர் சோர" (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, "வாடினேன்" பதிகம், 1.1.5), விம்மல் பெருமலாய், "வாரீர் ஆழ்வான்! உம் ஆத்ம தர்சனத்திற்கு திருஷ்டி ஏற்பட்டாற்போல், கண்களை இழந்தீரே! நான் செய்த பாவங்களின் விளைவோ இது?" என்று பலவாறு புலம்பி, "உம்மைப் பிரிந்து வாழ்ந்த வாழ்வும் ஒரு வாழ்வா" என்று ஆழ்வானையும் தேற்றி, அணைத்துக்கொண்டு, அவரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, தன் மடத்திற்கு எழுந்தருளினார்.

கண்ணன் எம்பெருமான் இந்திரனிடம் கூறினாரே புகழ், பதவி, செல்வம், அதிகாரம் என்று. இவை அனைத்தும் நிரம்பப் பெற்றவர் கூரத்தாழ்வான். இவர், உயர்ந்த குலத்தில் பிறந்தவர்; நல்ல கல்வி ஞானம் பெற்றவர்; செல்வந்தராக இருந்தவர். இவை அனைத்தும் இருந்தும், இவை என்றும் அழியக்கூடியதே என்ற ஞானத்தால், இவைகளின் தாக்கம் சிறிதும் இல்லாமல் வாழ்ந்துவந்தார் ஆழ்வான். இதனாலேயே, "வஞ்ச முக்குறும்பை அழித்தவர்" என்று போற்றப்பட்டார் இவர். "வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடந்த" ஆழ்வானின் சரித்திரத்தை அனுபவிப்போம்:

"ஆழ்வான் வரதராஜஸ்தவம் அருளிச்செய்தல்"

அடுத்தநாள், உடையவர் (இராமானுசர்) ஆழ்வான் திருமாலிருஞ்சோலை யாத்திரை செல்லும்போதும், அழகர் சன்னிதியிலும் அருளிச்செய்த மூன்று ஸ்தவங்களைப் பற்றிக் கேட்டறிந்து, அவற்றை மீண்டும் ஆழ்வானை சாதித்து அருளும்படி செய்து மிகவும் மகிழ்ந்து,"ஆழ்வான்! இந்த மூன்று அருளிச்செயல்களாலன்றோ நம் திருவரங்கம் மீண்டும் களைபெற்று, நாமும் உயிரோடு இருக்கப்பெற்றோம்" என்று கூறினார். மேலும் ஆழ்வானிடம் உடையவர், எது கேட்டாலும் தரவல்ல வள்ளலாக,பெருமாள் கோயிலில் பேரருளாளப் பெருமான் (காஞ்சி வரதராஜர்) இருக்கிறார். வாரும், அங்கு சென்று, அவரிடத்தில் ஒரு ஸ்லோகம் அருளி, நீர் இழந்த கண்களைக் கேளும்" என்று கூற, ஆழ்வான், "எனக்கு இந்தக் கண்கள் வேண்டாம்" என்று பதிலளித்தார். உடையவர் ஆழ்வானிடம் "அப்படிச் சொல்லலாகாது! பேரருளாளன் விஷயமாக ஒரு ஸ்லோகமாவது அருளவேண்டும் என்று கூற, ஆசார்யனின் நியமனத்தை மறுக்கலாகாது என்று "வரதராஜஸ்தவம்" அருளச்செய்யத் தொடங்கி, "நீலமேகநிபம் அங்ஜநபுஞ்சச்யாமகுந்தளம் அனந்தசயம் த்வாம் அப்ஜபாணிபதம் அம்புஜநேத்ரம் நேத்ரஸாத் குரு கரிச ஸதா மே" (ஸ்லோ.23) - அதாவது, "எப்போதும் உன்னை சேவித்து கழிப்பதற்கு உறுப்பான அப்ராக்ருத திவ்யநேத்ரம் (விசேஷமான ஞானக் கண்கள்) அடியேனுக்குத் தந்தருளவேண்டும்"என்று விண்ணப்பிக்க அன்று இரவே, பேரருளாளர் ஆழ்வானின் கனவில் காட்சி தந்து, "நீர் வேண்டியதைத் தந்தோம் என்று அருளிச்செய்ய, ஆழ்வாரும் மகிழ்ந்து எழுந்து நித்ய கர்ம அனுஷ்டாங்களைச் செய்து, வரதராஜ ஸ்தவத்தைப் பூர்த்திசெய்து, உடையவர் சந்நிதியிலே முழுவதும் விண்ணப்பம் செய்துகாட்டி வருகையில், "நீலமேகநிபம்" என்ற ஸ்லோகத்தைக் கேட்டபோது உடையவர், "வாரீர் ஆழ்வான்! இந்த ஸ்லோகத்தைக் கேட்டுப் பேரருளாளன் உமக்குக் கண் தந்து அருளாமல் இருக்கமாட்டான் என்று கூற, "இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே" (திருவாய்மொழி, 4.7.5), ஆழ்வானும் உடையவரிடம், பேரருளாளன் தன் ஸ்வப்னத்தில் தோன்றி கண் தந்ததைச் சொல்ல, உடையவர் அதற்கு ஆழ்வானிடம், "அப்படியிருத்தல் ஆகாது; வாரும்! நேரே சென்று அவனைத் தரிசிப்போம்;நிச்சயம் அவன் நீர் கேட்ட கண்களைத் தந்தருளுவான்" என்று சொல்லி, ஆழ்வானை அழைத்துக்கொண்டு காஞ்சிக்குச் சென்றார்.

"ஆழ்வானுடைய அற்புதமான ஆத்மகுணம் வெளிப்படுதல்"

உடையவரும் ஆழ்வானும் காஞ்சியை அடைந்து, பேரருளாளன் சன்னிதியை அடைந்தபின், ஆழ்வான் பேரருளாளன் முன்பு வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்தார். அந்த சமயம், உடையவர் சந்நிதியைப் பிரதக்ஷணம் செய்யச் சென்றிருந்தார் அப்போது, பேரருளாளன் ஆழ்வான் முன்பு பிரசன்னமாகி, "நீர் வேண்டியதைக் கேளும்" என்று பணிக்க, ஆழ்வான், உடையவர் சொன்னபடி "கண்களைக் கேட்காமல்", நாம் பெற்ற பேறு நாலூரானும் பெறவேண்டும் என்று விண்ணப்பித்தார் நாலூரான் என்பவர்தான் சோழனிடம் இராமானுசரை சபைக்கு அழைத்துவரச்சொல்லி "சிவனே பர தெய்வம்" என்று எழுதிக்கொடுக்கச் சொல்லலாம் என்று கலகம் செய்தவர். அதன் விளைவே, ஆழ்வான் கண்களை இழந்ததும், பெரிய நம்பிகள் ஆசார்யன் திருவடி அடைந்ததும், உடையவர் திருவரங்கத்தைவிட்டுச் செல்லும்படியாகவும் நிகழ்ந்தது. இப்படியிருக்க, ஆழ்வான் ஏன் "நாலூரானுக்கும் மோக்ஷம் நல்கவேண்டும்" என்று பெருமானிடம் பிரார்த்தித்தார்? "சிவனுக்கு மேலான தெய்வமில்லை" என்று எழுதித்தரும்படி சோழன் சொன்னபோது, ஆழ்வான் வேதங்களிலிருந்தும், ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலிருந்தும் உதாரணங்கள் காட்டி, "விஷ்ணுவே பரதெய்வம்" என்றும், "விஷ்ணுவிற்கு மேலான தெய்வமில்லை" என்றும் வாதிட்டார். இதைக் கேட்ட நாலூரான் ஆழ்வார்களையும் அவர்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களையும் இழிவாகப் பேசியவன்! மேலும், அவன் செய்த சூழ்ச்சியினால் நிச்சயம் அவனுக்கு நரகம்தான் கிட்டும் என்று ஆழ்வானுக்குத் தெரியும். நாலூரான் வைஷ்ணவன் ஆகையால், ஒரு வைஷ்ணவன் நரகத்திற்குச் சென்று படுகுழியில் விழுவது கூடாது என்று இரக்கம் கொண்டு, நம்மால்தானே அவன் உய்யமுடியும் என்று உறுதிகொண்டு, பரம துரோகியான அவனுக்கும் நற்கதி வேண்டினார். துரோகிகளிடமும் அன்புடைமை என்னும் இந்தச் சிறந்த திருக்குணம் ஆழ்வான் ஒருவர்க்கே உண்டு என்பது விவாதமற்ற விஷயம். பேரருளாளனும் ஆழ்வான் விண்ணப்பத்திற்கு செவிசாய்த்து, அவர் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.

“உடையவரும் ஆழ்வானும் திருவரங்கம் சேர்தல் “

ஆழ்வான் கேட்ட வரத்தைப் பற்றி கேள்விப்பட்ட உடையவர் பதறி, "ஆழ்வான்! நாம் இல்லாதபோது நம் நியமனத்தையும் மீறி, சுதந்திரனாய், பெருமானிடம் தேவையில்லாததைக் கேட்டீரே! கேட்கும்போது, என் நினைவையும் மறந்தீரே! என்று வரம் கேட்ட ஆழ்வானையும், அதைக் கொடுத்த பெருமானையும் வெறுத்து, இனி என்ன செய்வது?" என்று திகைத்து நிற்க, பேரருளாளன் அவர்முன் தோன்றி, "நம் இராமானுசா! ஆழ்வான் இனி உம்மையும் நம்மையும் காணும்படி, அவர் வேண்டாவிட்டாலும், அவருக்கு ஞானக் கண்களைத் தந்தோம்!" என்று கூற, அதை நிரூபிக்கும் வண்ணம், ஆழ்வான் பெருமான் அணிந்திருந்த திருப்பரிவட்டத்தையும், திருவாபரணங்களையும் அடையாளம் காட்ட, உடையவர் திருமேனியையும் சேவித்துக் காட்ட, உடையவர் ஒருவாறு உள்ளம் மகிழ்ந்து ஆழ்வானுடன் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார்.

ஆழ்வான் அருளால் குற்றமுடைய "நாலூரானும்" குற்றமற்றவனாகி மோக்ஷத்தை அடைந்தான் என்று பார்த்தோம். "பிள்ளை பிள்ளை ஆழ்வான்" என்று ஒருத்தர் இருந்தார். இவர் நற்குலத்தில் பிறந்து நற் செல்வந்தராக இருந்தார். ஆனால், நற்குணங்கள் இல்லாதவராக இருந்தார். தான் என்ற அகங்காரம் கொண்டு, பாகவதர்களை (பெருமான் அடியார்கள்) எப்போதும் நிந்தித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான், இவர் ஞான அனுஷ்டானங்களில் சிறந்திருந்தாலும், இவர் செய்யும் பாகவத அபசாரம் இவரைக் கீழே தள்ளிவிடுமே என்று எண்ணி, அதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், ஒருநாள்\புனித தினத்திலே நீராடிவிட்டு, இவரைப் பார்த்து, "பிள்ளைப் பிள்ளாய்! இந்தப் புண்ணிய தினத்தில் எல்லோரும் பூமி தானம், ஸ்வர்ண தானம் அன்னதானம், வஸ்த்ர தானம் என்று செய்கிறார்கள்; இக்காலத்தில் நீரும் எனக்கு ஒரு தானத்தைச் செய்யலாமே!"என்று கேட்க, அவர் அதற்கு, "அடியேன் எதை தானம் செய்வது எல்லாம் பெருமானின் சொத்து அன்றோ?" என்று ஞானம்கொண்டு கூற, ஆழ்வான் அவரிடம், இனி நீர் மனம், வாக்கு மற்றும் உடற்கொண்டு எந்த பாவதரிடமும் அபசாரப்படமாட்டேன் என்று சத்தியம் செய்யும் என்று கூற, அவரும் அப்படியே உறுதி கொடுத்தார். ஆனால், பழக்க தோஷம் அவரை விடவில்லை! ஒருநாள், மனதினால் ஒரு அடியவரை அபசாரப் படுத்தும் வண்ணம் நினைத்தார். இதனால், தான் ஆழ்வானுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீறினோமே என்று வருத்தப்பட்டு, அதனால் அன்றைய தினம், ஆழ்வான் சன்னிதிக்குச் செல்லாமல் இருந்தார். அன்று அவர் வராததால், அதன் காரணத்தை அறிய ஆழ்வான் இவர் இடத்திற்கு வந்து அதற்கான காரணத்தைக் கேட்க, இவர் தான் மனதால் அடியவர் ஒருவரை நிந்தித்துவிட்டேன் என்றும், அதனால் தான் சத்தியத்தை மீறிவிட்டேன் என்று கண்ணீர் சிந்தி ஆழ்வான் திருவடிகளைக் கட்டிக்கொள்ள, ஆழ்வான் அவரை அணைத்து எடுத்து, பிள்ளாய்! எப்போது நீர் மனதினால் செய்த தவற்றை உணர்ந்தீரோ, அப்போதே, எம்பெருமான் உம் தவற்றை மன்னித்து அருள்வான் என்று கூறி, "பிரத்யக்ஷத்தில் (உடல்மூலம்) ராஜதண்டம் நேரும் என்பதால், சரீரம் மூலமாக ஒருவரையும் துன்புறுத்தமாட்டீர்; இதனால், மனது, வாக்கு என்பவற்றால் விளையும் அபசாரங்கள் இரண்டையும் கழித்துத் தந்தோம்; இனி இவற்றில் (மனம், வாக்கு) ஜாக்கிரதையாக இரும் என்று அவருக்கு அருள்செய்தார். அவரும் அன்றுமுதல் யாரையும் அபசாரப் படாமல் உயர்ந்த ஞானத்துடன் விளங்கினார்.

கைங்கர்யநித்ய நிரஸதா பவதே கபோகைர்
நித்ஸயரநுக்ஷணநவீநரஸார்த்ரபாவை:|
நித்யாபி வாஞ்சி தபரஸ்பரநீசபாவைர்
மத்தைவதை: பரிஜநைஸ்தவ ஸங்கஸீயா ||

ஸ்லோக அர்த்தம்: பெருமானே! கைங்கர்யத்திலேயே எப்போதும் ஈடுபட்டிருப்பவர்களும், தேவரீரையே போகமாகக் கொண்டிருப்பவர்களும், க்ஷணம் தோறும் (ஒவ்வொரு நொடியும்) உன் ரூபங்களை நினைத்து நினைத்து புதிது புதிதான ரஸ அனுபவங்களாலே நெஞ்சுருகுபவர்களும், எப்போதும் ஒருவருக்கொருவர் அடிமையாய் இருப்பதை ஆசைப்படுபவர்களும், எனக்குப் பூஜிக்கத் தக்கவர்களும், தேவரீருடைய பரிஜனங்களுமான நித்யர்களுடன் கூடப்பெறுவேனாக என்று பிரார்த்திக்கிறார். உன் அடியவர்களுடன் கூடி இருக்கும் பாக்கியத்தை அருளவேண்டும் என்று ஆழ்வான் பெருமானிடம் வேண்டுகிறார்.

எம்பெருமானின் கிருபையாலே ஆழ்வானுக்கு இரண்டு திருக்குமாரர்கள் பிறந்தார்கள்.ஒருவர் பராசர பட்டர்; இன்னொருவர் வேதவியாச பட்டர். இந்த இருவரும் பிறந்த பதினோராம் நாளன்று எம்பெருமானார் இக்குழந்தைகளைப் பார்க்கும் வண்ணம் ஆழ்வானின் திருமாளிகைக்கு வந்து, தம் ப்ராதன சீடர்களில் ஒருவரான "எம்பாரை"அழைத்து, குழந்தைகளை எடுத்துவாரும் என்று பணித்தார். எம்பாரும் குழந்தைகளை எடுத்துவந்து இராமானுசரிடம் கொடுக்க, அந்தக் குழந்தைகளிடத்திலிருந்து நல்ல நறுமணம் உண்டானதாம். இதைக் கண்ட இராமானுசர் எம்பாரிடம், குழந்தைகள் மணம் வீசும்படி என்ன உபதேசித்தீர் என்று எம்பாரைக் கேட்க, எம்பார் அதற்கு, குழந்தைகளுக்குக் காப்பாக இருக்கட்டும் என்று "த்வய மஹா மந்திரத்தை உபதேசித்தேன்" என்று கூறினாராம். இதைக்கேட்டு பூரிப்படைந்த இராமானுசர் எம்பாரிடம், "இன்றுமுதல், ஆழ்வானின் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் நீரே ஆச்சார்யராக விளங்குவீர். குழந்தைகள் பின்னர் சற்று பெரியவர்களான பின், ஆழ்வான் அவர்களுக்குத் திருவாய்மொழி அர்த்தங்களை விவரித்துவந்தார்.திருவாய்மொழியில், "எண்பெருக்கந் நலத்து ஒண் பொருள் ஈறில" ("வீடுமின் முற்றவும்"பதிகம், 1.2.10) என்ற பாசுரம் திருமந்திரம் விஷயமாக இருந்ததால், அதற்கான அர்த்தங்களை உங்கள் ஆசார்யரான எம்பாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் நல்லது என்று அர்த்தத்தை மேலும் தொடராமல் நிறுத்தினார். உடனே அவர்கள் உடனே அந்த அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம் என்று அப்போதே ஆசார்யர் இருக்கும் இடத்திற்குச் செல்ல எழுந்தபோது, ஆழ்வானுக்கு உடனே "மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்" வீடுமின் முற்றவும்"பதிகம், 1.2.2) என்கிறபடியே, ஆக்கை (உயிர்) நிலையாமையை மனதில் கொண்டு, ஆழ்வான் அவர்களிடம், "எப்போது யார் இருப்பார் யார் இறப்பார் என்று தெரியாது; ஆதலால், திருமந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் மேற்பாசுரத்தை இருந்து கேளுங்கள்" என்று அவர்களுக்குத் தானே உபதேசித்தாராம். இதனால், அன்றுமுதல் ஆழ்வானும் தன் குமாரர்களுக்குத் தானும் ஒரு ஆசார்யனாகத் திகழ்ந்தார். இதை உணர்த்தும் வண்ணம், பராசர பட்டர் பின்னர் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீபாஷ்யம் (விளக்க உரை) அருளும்போது ஆசார்ய வந்தனமாக, "வந்தே கோவிந்த தாதௌ" - ஆசார்யர்களான எம்பாரையும், என் திருத்தகப்பனாரையும் வணங்குகிறேன் - என்று அருளிச்செய்தார்.

"அருளிச்செயல்களில் ஆழ்வானின் நிர்வாஹம்"
நம் ஆசார்யர்கள் அனைவரும் சகல சாஸ்த்ரங்களில் வல்லவர்களாகத் திகழ்ந்தாலும்,அவர்கள் ஆழ்வார்களின் அருளிச்செயல்களிலேயே மூழ்கிக்கிடப்பர். சகல சாஸ்திரங்களையும் அவர்கள் அருளிச்செயல்கள் மூலமாகவே நிர்ணயம் செய்வார்கள். இப்படிப்பட்ட அனுபவம் ஆழ்வானுக்கு அதிகமாக இருக்கும். திவ்யப் பிரபந்தங்களில் பல பாசுரங்களில் ஆழ்வானுடைய நிர்வாஹம் என்று அருமையாகக் கொண்டாடப்படும் நிர்வாகங்கள் உண்டு. அவை அனைத்தையும் இங்கு அனுபவிப்பது முடியாது. இருந்தாலும் ஒன்றிரண்டு, விஷயங்களைப் பார்ப்போம்:

திருவாய்மொழியில் நம்மாழ்வார் நாயிகா (நாயகி) பாவத்தில் பாடிய திருப்பதிகங்களுள் ஒன்று "மாசறு சோதி" (5.3) என்பதும் ஒன்று. ஒருநாள் ஆழ்வான் இராஜேந்திர சோழனுக்கு இந்தத் திருவாய்மொழியை அற்புதமாக விளக்கிக்கொண்டு வந்தார். அதில், ஏழாம் பாசுரத்தை அற்புதமாக விளக்கும் வண்ணம், "கலைகொளலல்குல்தோழீ நம் கண்களால் கண்டு, தலையில் வணங்கவும் ஆங்கொலோ தையலார் முன்பே" என்பதை விளக்கும்போது, சபையில் கூடியிருந்த ஒரு பெரியவர் எழுந்து ஆழ்வானிடம், "ஸ்வாமின்! நாயகி பாசுரமாகச் சொல்கிற இந்தத் திருவாய்மொழியில் தலைவி தன் தோழியை அழைத்து அவளிடம், நீ என் தலைவனைச் சென்று கண்டு, அவனை உன் தலையால் வணங்கு என்று சொல்வது ஏற்பதாக இல்லையே??"என்று கேட்டார். அதற்கு ஆழ்வான் அவரிடம், சீதாப்பிராட்டி அனுமனிடம் அடையாளம் சொல்லி அனுப்பும்போது, கௌஸல்யா லோகபர்த்தாராம் ஸுஷுவே யம் மநஸ்வினி தம் மமார்த்தே ஸுகம் ப்ருச்ச சிரஸசாபிவாதய"என்று சொன்ன ஸ்ரீராமாயண ஸ்லோகத்தை எடுத்து, அதாவது, பிராட்டி அனுமனிடம், "எனக்காக அவரை (இராமனை) தலையால் வணங்கு" என்று மிக அழகாக விளக்கம் சொல்ல, அப்பெரியவர் மிக்க மகிழ்ச்சி கொண்டார்.

"ஆழ்வானுடைய திவ்யக்ரந்தங்கள்"

ஆழ்வானுடைய திவ்ய ரந்தங்கள் "பஞ்ச ஸ்தவங்கள்" ஆகும். அவை: ஸ்ரீவைகுண்டஸ்தவம், அதிமானுஷ்யஸ்தவம், சுந்தரபாஹு ஸ்தவம், ஸ்ரீவரதராஜ ஸ்தவம் மற்றும் ஸ்ரீஸ்தவம் ஆகியவை ஆகும். ஆழ்வானின் திருக்குமாரர்களில் ஒருவரான ஸ்ரீ பராசர பட்டர் "அவிஜ்ஞாதா" (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்) என்னும் திருநாமத்திற்கு அர்த்தம் சொல்லும்போது, ஸர்வஜ்ஞதாம் யேவமுபாலபாமஹே த்வம்ஹ்யஜ்ஞ யேவ ஆச்ரிததோஷ ஜோஷ்ண:" என்கிற ஸ்லோகத்தை எடுத்துக்காட்டி, இது தம் தகப்பனார் (ஆழ்வான்) அருளிச்செய்ததாகவும், உரைத்துள்ளார். ஆனால், இந்த ஸ்லோகம் ஆழ்வான் அருளிச்செய்த பஞ்ச ஸ்தவங்கள் எதிலும் இல்லை; ஆதலால், வேறு சில ஸ்லோகங்களும் ஆழ்வானால் ஆருளப்பட்டுள்ளன என்பது தெரிகிறது. இதுபோல் இன்னும் நிறைய ஸ்லோகங்கள் ஆழ்வான் அருளிச்செய்ததாக துளித்துளியாக பூருவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவை முழுவதும் கிடைக்கப்பெறாததால் அந்த க்ரந்தங்களை அறியும் பாக்கியத்தை
"ஆழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருள விண்ணப்பித்தல்"

இவ்வாறு ஆழ்வான் பல ஸ்ரீஸுக்திகளை அருளிச்செய்துகொண்டு,ஞானம், அனுஷ்டானம், வைராக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கி, ஒப்புயர்வற்று இருக்கும்போது, எம்பெருமானார் (இராமானுசர்) சந்நிதியிலே திருவாய்மொழி ("சூழ்விசும் பணிமுகில்" பதிகம், 10.9) காலக்ஷேபம் நடைபெற்று வந்தது. இந்தப் பதிகத்தில், "முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள" என்ற அடிக்கு, பரமபதத்திலே முற்பட்டு இருப்பவர்கள் பிற்பட்டு எழுந்தருளுபவர்களை எதிர்கொண்டு உபசரிப்பார்கள் என்ற விளக்கத்தைக் கேட்க, ஆழ்வான், எம்பெருமானார் முதலில் பரமபதம் சென்று, பின்னர் தான் செல்லவேண்டியிருந்தால், அவர் தன்னை எதிர்கொண்டு உபசரிக்க நேரிடும்; அது மஹா அபசாரம் ஆகும் என்று கொண்டு, தாம் அவருக்குமுன் பரமபதம் சென்று, பின்னர் அவர் அங்கு எழுந்தருளும்போது அவரை உபசரிக்கவேண்டும் என்று எண்ணி, இதை இராமனுசரிடத்தில் சொன்னால் அவர் மறுத்துவிடுவார் என்று அஞ்சி, நேரே நம்பெருமாள் சந்நிதிக்குச் சென்று அவரிடம் விண்ணப்பிக்க, பெருமாள் அவரிடம், "நீர் வேண்டுவதெல்லாம் தருவோம்! என்னவேண்டுமோ கேளும்" என்று சொல்ல, ஆழ்வான் அதற்கு, "நீர்தான் அன்றே எல்லாம் நமக்குத் தந்துவிட்டீரே" என்று கூற, பெருமான் அதற்கு, "அது வேறு! இப்போது கேளும், நம் இராமானுசன் ஆணையாகத் தருகிறோம்" என்று கூற, ஆழ்வான் உடனே, "இந்த அழுக்குடம்பை விடுவித்து, நித்யவிபூதியில் (ஸ்ரீவைகுண்டத்தில்) நித்ய அனுபவத்தைத் தந்தருளவேண்டும்" என்று விண்ணப்பித்தார். இதைக் கேட்ட பெருமான், "இதைத் தவிர வேறு ஏதாவது கேளும்" என்று கூற, ஆழ்வான் பெருமானிடம், "எல்லோரும் உம்மை ஒன்றே உரைப்பான்; ஒரு சொல்லே சொல்லுவான் என்பதைப் பொய்யாக்கலாமோ" என்று இருக்கும் நீர், வேண்டியதைத் தருகிறோம் என்று கூறிவிட்டு, இப்போது மறுக்கலாமோ?" என்று ப்ரார்த்திக்க, பெருமானும் இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று, "உமக்கும் உம்முடைய திருநாமத்தைச் சொல்பவருக்கும், உம்முடைய சம்பந்தம் பெற்றவர்களுக்கும் மேல்வீடு தந்தோம் என்று திருவாக்கு மலர்ந்தருளி, ஆழ்வானுக்குத் திருப்பரிவட்டமும் தளிகைப் பிரசாதமும் பூந்தண் மாலைத் தண்துழாயும் (துளசிமாலை),திருக்கைச் சிறப்பும் பிரஸாதித்து விடை கொடுத்தருளினார்.

"ஆழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளும் நியமனம் பெற்றதை எம்பெருமானார் உணர்ந்து மகிழ்ந்ததும், வருந்தியதும்"

ஆழ்வான் பெருமானிடம்,முதலில் தனக்கு பரமபத ப்ராப்தியை நல்கும்படி பெருமானிடம் பிரார்த்திக்க, பெருமானும் சில வார்த்தைகள் கொண்டு ஆழ்வானுக்கு உபதேசிக்க, ஆழ்வான் தன் கருத்தில் இருக்கும் முக்கியத்துவத்தை, அதாவது, ஆழ்வான் தான் எம்பெருமானாருக்கு முன்பு பரமபதத்திற்கு எழுந்தருளி, பின் அவர் அங்கு எழுந்தருளும்போது, அவரை எதிர்கொண்டு அழைப்பதுதான் ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யம் உகப்பாக இருக்கும் என்று உரைக்க, பெருமானும் உகந்து அவர் கேட்ட வரத்தை அருளினான். அது மட்டுமன்றி, உமக்கும் உம்முடன் சம்மந்தம் உடைய அனைவர்க்கும் பெருவீடு (பரமபதம்) தந்தோம் என்று திருவாக்கு அருளினான். பின்னர் இதைப் பற்றி கேள்விப்பட்ட இராமானுசர் முதலில் மகிழ்ந்தார். அதற்குக் காரணம், ஆழ்வானுடன் தொடர்புடைய அனைவர்க்கும் மோக்ஷம் அளிப்பேன் என்று எம்பெருமான் அளித்த உறுதிப் பத்திரமே. இதற்கு ஏன் இராமானுசர் மகிழ்ந்தார்? காரணம் உள்ளது.

அதாவது, எம்பெருமான் உரைத்த சரம ஸ்லோகம் மற்றும் அதன் ஆழ்ந்த அர்த்தங்களை ஆசார்யரான திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து பெற்றுக்கொண்டபோது, ஆசார்யர் (நம்பிகள்) அவருக்கு இட்ட கட்டளையானது, இதனை அறியும் தகுதி இல்லாத எவருக்கும் இதை உரைக்கக்கூடாது என்பதும், அப்படி உரைத்தால், நீர் நரகமே அடைவீர் என்பதும் ஆகும். ஆனால், ஆசார்யர் இட்ட கட்டளையும் மீறி, ஊர் மக்களை அழைத்து, யாரெல்லாம் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களோ, இங்கே வாருங்கள்! நான் சொல்லப்போகும் உயர்ந்த விஷயங்களைக் கேட்டு அதன்படி நடப்பீர்களாக! என்று கூறினார். அவர் கூறியவண்ணம், நல்ல நிலையை அடையும் விருப்பம் கொண்டவர்கள் அனைவரும் அங்கு கூடிநிற்க, அவர்களுக்கு நம்பிகளிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட சரம ஸ்லோகத்தையும் அதன் அர்த்தங்களையும் உபதேசித்தார் இராமனுசர். இதைக் கேள்விப்பட்ட நம்பிகள் முதலில் இராமானுசரைக் கடிந்துகொண்டாலும்,, "நான் ஒருவன் நரகம் போனாலும், இதைக் கேட்கும் பலர் நல்ல கதியை அடைவார்கள் என்பதாலேயே இப்படிச் செய்தேன் என்று இராமானுசர் கூற, ஆசார்யரான நம்பிகள் மகிழ்ந்து, நீரே உயர்ந்தவர் என்று இவரைப் போற்றினாராம். இருந்தாலும், ஆச்சார்யரின் கட்டளையை மீறுபவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று சாஸ்திரங்கள் உரைத்திருந்ததனால், தனக்கு நரகப் ப்ராப்திதான் கிடைக்கும் என்று வருத்துமுற்று இருந்தார் இராமானுசர். இதை மனதில் கொண்டேஇவர், பெருமான் ஆழ்வானிடம், "உம் சம்மந்திகள் அனைவருக்கும் மோக்ஷம் அளிப்போம்" என்று அளித்த உறுதியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சிகொண்டு, தன் காஷாய வஸ்திரத்தை வானில் தூக்கி எரிந்து சந்தோஷப்பட்டாராம்.

தன்னுடைய சிஷ்யர்களைத் தன் திருவடி சம்மந்தத்தாலும், பூருவாசார்யர்களைத் தன் திருமுடி சம்மந்தத்தாலும் உயர்கதி அளிக்கும்படி பெருமானால் அருளப்பட்ட இராமானுசர்கூட, ஆழ்வானுடைய சம்மந்தாத்தாலே தமக்கு முக்தி (மோக்ஷம்) நிச்சயம் என்று திருவுள்ளம் கொண்டதனால், இது ஆழ்வானின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனால், நல்ல கதியை அடைவதற்கு நல்ல ஆச்சார்யரின் சம்மந்தம் வேண்டும் என்பது மட்டுமன்றி, நல்ல சிஷ்யரின் சம்மந்தமும் வேண்டும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது அறிக.

அதே சமயம், "ஆசாரியன் சிஷ்யன் ஆருயிரைப் பேணுமவன்" என்பதுபோல் உயிரினும் மேலான தன் சிஷ்யரான ஆழ்வான் தன்னைவிட்டுப் பிரியப்போகிறாரே என்று மிக்க வருத்தம் கொண்டு, இப்படிப்பட்ட ஸத்சிஷ்யனை இழந்து, தான் எவ்விதம் வாழப்போகிறேன் என்று புலம்பித் தளர்ந்துபோனார் இராமானுசர். உடனே, தன் மற்ற சிஷ்யர்களை அழைத்துக்கொண்டு, ஆழ்வானின் திருமாளிகைக்கு (இல்லத்திற்கு) எழுந்தருளி, ஆழ்வானை நோக்கி, "என் செய்தீர் ஆழ்வான்? என் செய்தீர்? பெருமானிடம் இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் வரத்தைக் கேட்டுப் பெற்று, என்னைப் படுகொலை செய்துவிட்டீரே?"என்று கேட்க, ஆழ்வான் பரமபதத்திற்குத் தான் முற்படவேண்டிய காரணத்தை அவரிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட இராமானுசர், இப்படியும் ஒரு ஆசார்ய பக்தியா என்று வியந்து, அவர் பிரிவதைத் தாங்கமுடியாதவராய், அவரை அணைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாராம். மேலும் ஆழ்வானை நோக்கி அவர், "பரமபதத்தை நீர் அடையப்போவதால் அங்கு இருக்கும் பரவாசுதேவனும் மற்றவர்களும் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்; அதே சமயம், நீர் சென்றபின், உம்மை இழக்கப்போவதால், இங்கு உறங்குகிற பெருமானும் (திருவரங்கநாதன்) நாங்களும் பாவிகள் ஆனோமே? இனிமேல் என்னசொல்லி உம்மைத் தடுப்பேன்?" என்றெல்லாம் புலம்பி, அவரது காதுகளில் த்வய மஹா மந்திரத்தை அருளிச்செய்தார். இதை அறிந்த அங்கு கூடியிருந்தவர்கள், இப்போது இது செய்ய (த்வயம் அருளியது) என்ன அவசரம்?என்று கேட்க, இராமானுசர் அதற்கு, த்வயம் இல்லாவிட்டால் இவர் நெஞ்சு வறண்டுபோகும்! என்று கூறி, ஆழ்வானுடைய திருமுதுகைத் தடவிக்கொடுத்து,அவரை அஞ்ஜலித்து (கைகூப்பி) விடைகொடுத்து அருளினார்.

நாளை, ஆழ்வான் பரமபதம் செல்லும் வைபவத்தோடு, இக்கட்டுரை நிறைவுபெறும். நாளை, ஆழ்வானின் வாழித் திருநாமத்தை அனுசந்தித்து, குணங்களில் ஈடு இணையற்ற அந்த மஹானுக்குப் பிரியாவிடை கொடுக்க நாமும் ஆயத்தமாவோம்.


ஆழ்வானின் வைபவம் முதல் பகுதி அவரது திரு நக்ஷத்திர தினத்தன்று (01.02.2013) தொடங்கப்பட்டு,இன்றுவரை பகுதி பகுதியாக தொகுக்கப்பட்டது. இராமானுசரின் பெருமைகளைப் பேசி முடித்துவிடலாம்; ஆனால், ஆழ்வானின் பெருமைகளைப் பேசி முடிக்க முடியாது என்பது பூருவர்களது வாக்கியம். முடிந்தவரை இவை அனைத்தையும் (ஓரிரண்டு விஷயங்கள் தவிர) சுருக்கமாக தொகுத்து, தங்களுடன் பகிர்ந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்பதே உண்மை.


"ஆழ்வான் திருநாட்டுக்கு எழுந்தருளுதல்"

பரமபதம் செல்வதற்கான வரத்தைப் பெருமானிடம் கேட்டுப்பெற்று, பின்னர் இராமானுசர் இதை அறிந்து மிக்க வருத்தம் கொண்டு, பின் மனம் தெளிந்தவராய், பாகவதர் அடையப்போகும் பேற்றுக்குத் தான் ஒருபோதும் தடையாக இருக்கமுடியாது என்று உணர்ந்து, ஆழ்வான் பரமபதம் செல்வதற்கான உத்தரவை அளித்தார் உடையவர் உத்தரவு பெற்ற ஆழ்வான் வேரற்ற மரம்போல் விழுந்துகிடக்க, உடையவரும் தம் இரண்டு கைகளாலும் ஆழ்வானை வாரி எடுக்க, ஆழ்வான் உடையவர் திருவடித் தாமரைகளைத் தம் திருக்கண்களிலும் திருமார்பிலும் ஒற்றிக்கொண்டு, ஸ்ரீபாத தீர்த்தமும் கொண்டு, அவரைக் கைகூப்பி வணங்கினார். பின்னர், ஆழ்வான் தம் மனைவி ஆண்டாளை அழைத்து, தாம் திருநாட்டுக்கு எழுந்தருளுவதில் உன் எண்ணம் என்ன என்று கேட்க, அவர் மனைவி, "தேவரீர் திருவுள்ளப்படி நடப்பதற்கு எதிராக எதுவும் பேசி எனக்கு வழக்கமில்லையே" என்று கூறி, ஆழ்வானின் திருவடிகளில் தெண்டன் சமர்ப்பித்து வணங்கி நிற்க,ஆழ்வான் தன் திருக்குமாரர்களான பட்டரையும் சீராமப்பிள்ளையையும் அழைத்து அவர்களிடம், "பெருமானும் நாச்சியாரும் இருக்க உங்களுக்கு ஒரு குறையுமில்லை; நம்பெருமாள் பெற்று வளர்த்தார் என்று இறுமாப்பு கொள்ளாமல், எம்பெருமானார் (இராமானுசர்) திருவடிகளே சரணம் என்று இருங்கள்; உங்கள் தாயின் முகமும் உள்ளமும் வருந்தாதபடி இருங்கள்; அவள் சொல்லைத் தட்டாமல் வாழுங்கள்; பாகவத விஷயங்களிலே சிந்தையாலும், சொல்லாலும், செய்கையாலும் அபசாரப் படாமல் ஜாக்கிரதையாக இருங்கள்; அவர்களை வணங்கி கைங்கர்யங்கள் செய்யுங்கள்; நீங்கள், தேக உறவைக் கொண்டு வருந்தினால், இராமானுசரின் சம்மந்தத்தை இழந்தவர்கள் ஆவீர்கள்; ஆத்ம உறவைக் கொண்டு வருந்தினால் அவரோடு ஒழிக்க ஒழியாத (அறுக்கமுடியாத) உறவை அடைவோம் என்பதை மறந்தவர்கள் ஆவீர்கள்" என்றெல்லாம் தேற்றி, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, பிள்ளை ஆழ்வான் மடியில் தம் திருமுடியையும், ஆண்டாள் மடியில் தம் திருவடிகளையும் வைத்துக் கொண்டு, ஸ்ரீ ஆளவந்தார் மற்றும் இராமானுசர் திருவடிகளைத் தியானித்துக் கொண்டே, திருநாட்டுக்கு ஏறினார். இதுகேட்டு, உடையவர் அங்கு எழுந்தருளி, பட்டரைக் கொண்டு ஆழ்வானது சரம காரியங்களை நிறைவேற்றினார்.

ஆழ்வான் ஆண்டாள் என்னும் பெண்ணை மணந்ததும் ஒரு பெருமைக்குரிய விஷயமே. ஆண்டாளுக்கு அவர் தந்தை திருமணம் செய்ய எண்ணம் கொண்டு, ஜோசியரை அழைத்து விவரங்கள் கேட்க, அதற்கு ஜோசியர், இந்தப் பெண்ணை மணப்பவர் உடனே இறந்துவிடுவார் என்று கூறினார் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆண்டாளின் தந்தை, இவள் இனி உயிருடன் இருப்பது ப்ரயோஜனமில்லை; இவளுக்குத் திருமணம் செய்யாமல் இருந்தால், உண்மையை அறியாத ஊர் மக்கள் தன்னை நிந்திப்பர் என்று, அவளைக் கொன்றுவிடும்படி இன்னொருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இவை அனைத்தும் சற்றுத் தொலைவில் இருந்த ஆழ்வானின் காதுகளில் விழ, நாம் இறந்தாலும் பரவாயில்லை; ஒரு பெண் அநியாயமாக கொல்லப்பட்டு இறப்பதற்கு தாம் பொறுப்பாகிவிடக்கூடாது - அதாவது, ஒருவரின் துன்பத்தைப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ கேள்விப்பட்டபின் அவரின் துன்பத்தைத் தீர்த்துவைப்பதுதான் தம் லக்ஷணம் என்று உயர்ந்த எண்ணம் கொண்டு, அவள் தந்தையிடம் சென்று, அனைத்து உண்மைகளும் எமக்குத் தெரியும்; இருந்தும், உம் பெண்ணை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற, ஆழ்வானின் உயர்ந்த எண்ணத்தைக் கேட்ட ஆண்டாளின் தந்தையார் மிகுந்த ஆனந்தம் கொண்டு, உடனே திருமணத்திற்க்கான ஏற்பாடுகள் செய்ய, ஆழ்வானுக்கும் ஆண்டாளுக்கும் இனிதே திருமணம் நடந்தது. வெகு நாட்கள் பிள்ளைப்பேறு இல்லாத அவர்களுககு இரங்கி, நம்பெருமாள் தன் அரவணைப் பிரசாதத்தை அர்ச்சகர் மூலம் அனுப்ப, அவற்றைச் சிறிது உண்ட அவர்களுக்கு பரம ஸாத்விகர்களாய் இரண்டு திருக்குமாரர்கள் பிறந்தார்கள்.

இவ்வாறு ஆழ்வான் திருநாட்டுக்கு (பரமபதம்) எழுந்தருளினாலும், மொழியைக் கடக்கும் பெரும்புகழாகிற திருமேனியோடு (அவரது திவ்யமங்கள விக்ரஹம்), அவர் தம் பெருமை எங்கும் நிறைந்து இருக்கும்படி விளங்குகின்றார்; இவர் பார்வையில் பட்ட பொல்லாதவரும் திருந்தி நல்லவராகி விடுவர். இவர் புகழை எத்தனை பேசினாலும் முடியாதே, "அப்போதைக்கு அப்போது என் ஆராவதமே" என்று ஆழ்வார் அருளியுள்ளதுபோல், எப்போது பேசினாலும் ஆழ்வானது பெருமைகள் திகட்டாத அமுதமாகவே இருக்கும் அவரது திவ்ய சரித்திரத்தைக் கேட்டு, அதை செவியின் உட்கொண்டு, மனதினுள் நன்கு தேக்கிக்கொள்ள, பெருமான் நமக்கு நிச்சயம் நற்கதியை அருளுவான். அதுதானே "உம் சம்மந்திகள் அனைவர்க்கும் மோக்ஷம் அளிப்போம்" என்று ஆழ்வானுக்கு அவன் கொடுத்த வரம். ஆழ்வானின் சம்மந்தோத்தோடு வாழ்ந்து, இராமானுசரின் அருள்பெற்று, உயர்நிலையை அடைவோம்.

"ஆழ்வான் வாழித் திருநாமம்"

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளிச் சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே
எராரும் தையில் அத்தத்து இங்குவந்தான் வாழியே
எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே.

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!