Parasara & Vedavyasa Bhattar | பராசரபட்டர் & வேதவ்யாசபட்டர்

Parasara & Vedavyasa Bhattar
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பராசரபட்டர் & வேதவ்யாசபட்டர் (கூரத்தாழ்வான் திருக்குமாரர்கள்)

திருநக்ஷத்திரம் : வைகாசி அனுஷம்

கூரத்தாழ்வானது திருக்குமாரர்களாக இவர்கள் அவதரித்த வைபவம்

தனது செல்வங்கள் அத்தனையும் துறந்து, இராமானுசரே தெய்வம் என்று அவரை அடைந்து,அவர் திருவடிகளில் தஞ்சம் பெற்ற நாள் முதலாக ஆழ்வான், தினமும் உஞ்சவிருத்தி செய்தே தம் குடும்ப காரியத்தை நடத்திவந்தார். அப்படி செய்யும்போது கிடைக்கும் உணவுப் பொருட்களில் மறுநாளைக்கு என்று சிறிதும் வைத்துக்கொள்ளாமல் தனக்கும் தன மனைவிக்கும் வேண்டியதை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை மற்றவர்களிடம் கொடுத்துவிடுவார். ஒருநாள் அடாத மழை பொழிந்தது. அதனால் ஆழ்வானால் உஞ்சவிருத்தி செய்ய வெளியே செல்ல முடியவில்லை. இரவுப்பொழுதும் வந்துவிட்டது. மழை நிற்பதாகத் தெரியவில்லை; வெளியே செல்லமுடியாததால், ஆழ்வானும் அவர் மனைவியும் உண்ணாமலேயே இருந்தனர். ஆனால், உணவு உண்ணாவிட்டாலும் ஆழ்வான், அதைப் பட்டினியாகக் கிடப்பதாகவே நினைக்கவில்லை! வெறும் தீர்த்தம் மட்டும் பருகி, "உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன்" என்று கண்ணனையே நினைத்துக்கொண்டிருந்தார்! அதனால், கண்ணனை நினைக்காத நாள்தான் பட்டினியான நாளேதவிர, உடல் வளர்க்கும் சோறு கிடைக்காத நாள் ஒன்றும் பட்டினியான நாள் கிடையாது என்று கூறி, ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் மூழ்கிவிட்டார்.

ஆனால் தன் கணவர் உணவின்றி இருக்கிறாரே! என்று அவர் மனைவியார் (ஆண்டாள்) மிக்க வருத்தத்தில் இருந்தார். அச்சமயம், திருவரங்கம் பெரியகோயிலில் பெருமானுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டிருந்தது. அதை அறிவிக்கும் மணியோசையைக் கேட்ட ஆண்டாள் பெருமானிடம், "உம்முடைய அடியார் பட்டினி கிடக்க, நீர் மகிழ்ந்து மகிழ்ந்து உணவு உண்கிறீரோ?" என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டார். எங்கும் நிறைந்திருப்பவனான எம்பெருமான், ஆண்டாள் தன் மனதில் நினைத்ததை அறிந்த அந்த நொடியே, அர்ச்சக முகமாக தேவஸ்தான நிர்வாகியான உத்தமநம்பியை அழைத்து, தான் அமுதுசெய்த அக்காரவடிசலை சகல மரியாதைகளுடன் எடுத்துக்கொண்டுபோய் ஆழ்வானுக்குக் கொடுக்கவும் என்று கட்டளையிட, நிர்வாகி அப்படியே செய்தார். இப்படி பெருமான் தனக்காக மஹாப் பிரசாதத்தை அனுப்பியுள்ளானே என்று பதறிய ஆழ்வான், அதிலிருந்து தனக்கும் தன் மனைவிக்கும் தேவையான இரண்டே இரண்டு பிடி எடுத்துக்கொண்டார். உத்தமநம்பி சென்றவுடன், பக்தவத்ஸலனான பெருமான் எல்லையற்ற கருணை உடையவனாய் இருக்கிறானே என்று வியந்து, அந்தப் ப்ரசாதத்திலிருந்து ஒரு பிடி எடுத்து, அதில் ஒரு பகுதியைத் தான் உண்டு, மிச்சத்தை ஆண்டாளுக்குக் கொடுத்தார். நெடுங்காலம் பிள்ளைப்பேறு இல்லாது இருந்த தசரத சக்ரவர்த்தி, நல்ல பிள்ளையைப் பெறும்வண்ணம், பெரியோர்களின் அறிவுரைகொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்; அப்படிச் செய்யும்போது அதிலிருந்து வெளிப்பட்ட பாயசக் கூறுகளைத் தானும் உண்டு தன் தேவிமார்களும் உண்ணும்படி செய்ய, சத்புத்திரர்களாய் இராமலக்ஷ்மண பரதசத்துருக்கணன் திருஅவதாரங்கள் நிகழ்ந்தது. அதேபோல், பெருமான் அமுதுசெய்த பிரசாதத்தை ஆழ்வானும் அவர் மனைவியும் உட்கொள்ள, சத்புத்திரர்களாக இரண்டு புதல்வர்கள் ஆழ்வானுக்குப் பிறந்தனர். அவர்கள் ஸ்ரீபராசரபட்டர் மற்றும் ஸ்ரீவேதவ்யாச பட்டர் ஆகியோர் ஆவர்.

இவர்கள் உபதேசம் பெற்ற வைபவம்

இந்த இருவரும் பிறந்த பதினோராம் நாளன்று எம்பெருமானார் இக்குழந்தைகளைப் பார்க்கும் வண்ணம் ஆழ்வானின் திருமாளிகைக்கு வந்து, தம் ப்ராதன சீடர்களில் ஒருவரான "எம்பாரை"அழைத்து, குழந்தைகளை எடுத்துவாரும் என்று பணித்தார். எம்பாரும் குழந்தைகளை எடுத்துவந்து இராமானுசரிடம் கொடுக்க, அந்தக் குழந்தைகளிடத்திலிருந்து நல்ல நறுமணம் உண்டானதாம். இதைக் கண்ட இராமானுசர் எம்பாரிடம், குழந்தைகள் மணம் வீசும்படி என்ன உபதேசித்தீர் என்று எம்பாரைக் கேட்க, எம்பார் அதற்கு, குழந்தைகளுக்குக் காப்பாக இருக்கட்டும் என்று "த்வய மஹா மந்திரத்தை உபதேசித்தேன்" என்று கூறினாராம். இதைக்கேட்டு பூரிப்படைந்த இராமானுசர் எம்பாரிடம், "இன்றுமுதல், ஆழ்வானின் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் நீரே ஆச்சார்யராக விளங்குவீர். குழந்தைகள் பின்னர் சற்று பெரியவர்களான பின், ஆழ்வான் அவர்களுக்குத் திருவாய்மொழி அர்த்தங்களை விவரித்துவந்தார்.திருவாய்மொழியில், "எண்பெருக்கந் நலத்து ஒண் பொருள் ஈறில" ("வீடுமின் முற்றவும்"பதிகம், 1.2.10) என்ற பாசுரம் திருமந்திரம் விஷயமாக இருந்ததால், அதற்கான அர்த்தங்களை உங்கள் ஆசார்யரான எம்பாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் நல்லது என்று அர்த்தத்தை மேலும் தொடராமல் நிறுத்தினார். உடனே அவர்கள் உடனே அந்த அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம் என்று அப்போதே ஆசார்யர் இருக்கும் இடத்திற்குச் செல்ல எழுந்தபோது, ஆழ்வானுக்கு உடனே "மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்" வீடுமின் முற்றவும்"பதிகம், 1.2.2) என்கிறபடியே, ஆக்கை (உயிர்) நிலையாமையை மனதில் கொண்டு, ஆழ்வான் அவர்களிடம், "எப்போது யார் இருப்பார் யார் இறப்பார் என்று தெரியாது; ஆதலால், திருமந்திர அர்த்தத்தை உபதேசிக்கும் மேற்பாசுரத்தை இருந்து கேளுங்கள்" என்று அவர்களுக்குத் தானே உபதேசித்தாராம். இதனால், அன்றுமுதல் ஆழ்வானும் தன் குமாரர்களுக்குத் தானும் ஒரு ஆசார்யனாகத் திகழ்ந்தார். இதை உணர்த்தும் வண்ணம், பராசர பட்டர் பின்னர் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீபாஷ்யம் (விளக்க உரை) அருளும்போது ஆசார்ய வந்தனமாக, "வந்தே கோவிந்த தாதௌ" - ஆசார்யர்களான எம்பாரையும், என் திருத்தகப்பனாரையும் வணங்குகிறேன் - என்று அருளிச்செய்தார்.

ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவைக்கு "நீளாதுங்கஸ்தநகிரிதடிஸுப்தமுத்போத்யக்ருஷ்ணம்" என்னும் தனியனும், ஸ்ரீநம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிக்கு "வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்" மற்றும் "மிக்க இறைநிலையும்" என்று தொடங்கும் தனியன்களை அருளிச்செய்தவர் ஸ்ரீபராசரபட்டர்.

ஸ்ரீபராசரபட்டர் வாழித்திருநாமம்

தென்னரங்கர் மைந்தனெனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் புதூரன் அடிபணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக் காட்செய்வோன் வாழியே
மன்னுதிருக் கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசி அனுடத்தில் வந்துத்தித்தான் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர்பட்டர் பாருலகில் வாழியே.

ஸ்ரீவேதவியாசபட்டர் (ஸ்ரீராமப்பிள்ளை) வாழித்திருநாமம்

தெண்டிரைசூழ் திருவரங்கம் செழிக்க வந்தான் வாழியே
தென்னரங்கர் மைந்தனெனச் சிறக்கவந்தோன் வாழியே
பண்டிதராம் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகர்ந்துரைப்போன் வாழியே
மண்டுபுகழ்க் கூரனார் மகிழ்ந்த செல்வன் வாழியே
வைகாசி அனுடத்தில் பாருதித்தான் வாழியே
எண்டிசையும் சீரெம்பார் பதம் பணிந்தோன் வாழியே
எழில் சீராமப்பிள்ளை இணையடிகள் வாழியே.

பட்டர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!