Periya Nambi Vaibhavam | ஸ்ரீ பெரியநம்பிகள் வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீ பெரியநம்பிகள் வைபவம் - "மார்கழி கேட்டை"

திருநக்ஷத்ர தனியன் :

தனுர்ஜ்யேஷ்டாஸமுத்பூதம் யாமுநாங்க்ரி ஸமாஸ்ரீதம் |
மஹாபூர்ணம் யதீந்த்ராய மந்த்ராத்தப்ரதம் பஜே ||

மார்கழி கேட்டையில் அவதரித்தவரும் ஆளவந்தார் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும் எம்பெருமானாருக்கு (ஸ்ரீ ராமானுஜர்) த்வய மந்தரத்தை உபதேசித்தவருமான பெரிய நம்பிகளை வணங்குகிறேன்
.
தயாநிக்னம் யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணமாஸ்ரயே |
யேந விஸ்வஸ்ருஜோ விஷ்ணோபூர்யத மனோரத: ||

ஒன்றியொன்றி உலகம் படைத்த விஷ்ணுவின் மனோரதம் (சேதனலாப) எவராலே நிறைவேற்றிக்கப்பட்டதோ, கருணை நிரம்பியவரும், யதிராஜருடைய (ஸ்ரீ ராமானுஜர்) அசார்யருமான அத்தகைய பெரிய நம்பிகளை ஆஸ்ரயிக்கிறேன்.

கமலாபதி கல்யாணகுணாம்ருதநிஷேவயா |
பூர்ணகாமாய சததம் பூர்ணாய மஹதே நம: ||

ஸ்ரீமந் நாராயணனுடைய கல்யாண குணங்களாகிற அமுதத்தைப் பருகையால் எப்போதும் விருப்பம் நிறைவேறப் பெற்றவராயிருக்கும் பெரிய நம்பிகளுக்கு நமஸ்காரம்.

ஆளவந்தார் (என்னும் ஆசாரியர்) அவதரித்து, 21 ஆண்டுகள் கழித்து, கி.பி.997-998 ஹேவிநம்பி வருடத்தில், மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்திரத்தில், புதன் கிழமை ப்ருஹச்சரண ப்ராஹ்மண குலத்தில், பாரத்வாஜ கோத்திரத்தில் ஸ்ரீ பராங்குஸதாஸர் என்னும் திருநாமம் உடையவராய், குமுதர் என்னும் நித்யஸூரியின் அம்சமாக அவதரித்தவர் பெரியநம்பி.

மார்கழி மாதத்தின் சிறப்புகளைப் பற்றி, (விசேஷங்களை) "ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்" வைபவத்தில் அனுபவிக்கப் பெற்றோம். மணவாள மாமுனிகள் தன் "உபதேச இரத்தினமாலை" என்னும் பிரபந்தத்தில், ஆழ்வார்கள் அவதரித்த மாதங்களையும், நக்ஷத்ரங்களையும் பற்றிப் பாடும்போது, "ஐப்பசியில் ஓணம் (திருவோணம்) அவிட்டம் சதயம் இவை என்று முதலாழ்வார்களான பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார் ஆகியோர்களது அவதாரத்தையும், திருமங்கையார் அவதரித்ததை " கார்த்திகையில் கார்த்திகை" நாள் என்றும், திருப்பாணாழ்வார் அவதாரத்தை கார்த்திகையில் உரோகிணி நாள் என்றும், திருமழிசைப்பிரான் அவதரித்ததை " தையில் மகம் இன்று" என்றும், நம்மாழ்வார் அவதரித்ததை "ஏரார் வைகாசி விகாசகத்தின் ஏற்றத்தை" என்றும், குலசேகரர் அவதரித்ததை "மாசிப் புனர்பூசம்" என்றும், பெரியாழ்வார் அவதாரத்தை "நல் ஆனியில் சோதி (சுவாதி) நாள்" என்றும், மதுரகவிகள் அவதரித்ததை " சீராரும் சித்திரையில் சித்திரை நாள்" என்றும் பாடியுள்ளார்.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்க, நம்மாழ்வார், மதுரகவிகள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த மாதங்களை முறையே "ஏரார் வைகாசி" என்றும், "சீராரும் சித்திரை" என்றும் "நல் ஆனியில் சோதி" நாள் என்றும் பாடி, இம்மாதங்களை ஏரார், சீரார், நல் என்ற சொற்களை மாதங்களுக்கு முன் வைத்து சிறப்பித்துள்ளார். ஏரார், சீரார், நல என்ற மூன்று சொற்களுமே "நல்ல அல்லது உயர்ந்த அல்லது சிறந்த" என்ற பொருளைக் குறிக்கும். மற்ற ஆழ்வார்களது அவதாரத்தைப் பற்றி குறிப்பிடும்போது, அவர்கள் பிறந்த நக்ஷத்திரத்தைப் பற்றிப் பாடி, அந்த தினத்தின் சிறப்பைப் பற்றித்தான் பாடியுள்ளார். ஆனால், தொண்டரடிப்படி ஆழ்வாரது அவதார தினத்தைப் பற்றிப் பாடுகையில், "மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்" என்று விசேஷித்துப் பாடியுள்ளார். "மார்கழி" என்று வெறுமே பாடவில்லை; "சீர் மார்கழி" என்று சுருக்கவில்லை; "மன்னிய சீர் மார்கழி" என்று விரித்துரைத்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார். "மன்னிய சீர்" என்றால் சிறப்பிலும் சிறப்பான, உயர்ந்ததிலும் உயர்வான என்று அர்த்தம். நம் சம்பிராதயத்தைப் பொருத்தவரை, தமிழ் மாதங்கள் அனைத்துமே சிறப்பனாவை. ஏனென்றால், ஒவ்வெரு மாதமும் ஆழ்வார்கள் அவதரித்த மாதமாகவோ அல்லது ஆசார்யர்கள் அவதரித்த மாதமாகவோ இருக்கிறது. ஆனால், 12 மாதங்களில், மற்ற 11ஐக் காட்டிலும், மார்கழி மாதமானது "மன்னிய சீர் மார்கழி" என்று போற்றப்படுவதர்க்குக் காரணம் ஒன்றுதான் - அது " "மாதங்களில் நான் மார்கழி"யாக இருக்கிறேன் என்று எம்பெருமானே கீதையில் திருவாக்கு மலரந்தருளியிருப்பதே. மாமுனிகள் இதை உறுதிப்படுத்தும் வண்ணமே "தொண்டரடிப்பொடிகள்" அவதாரம் செய்த மாதத்தை "மன்னிய சீர் மார்கழி" என்று போற்றியுள்ளார். இதே, மன்னிய சீர் மார்கழிக் கேட்டை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் "பெரிய நம்பிகள்".

எம்பெருமானாருக்கு ஸமாஸ்ரயணம் (பஞ்ச ஸம்ஸ்காரம்)செய்த முக்கிய ஆசார்யர் இவர். ஆகையால்தான், ஆளவந்தாருடைய சீடர்களுக்குள் பெருமை பெற்றவராய், "பெரியநம்பி" என்று அழைக்கப்பெற்றார் ஆளவந்தார் நியமனத்தின் பேரில் இவரே, ஸ்ரீ ராமானுஜரைத் திருவரங்கத்துக்கு அழைத்துவந்தார். ஆளவந்தார் காலத்திற்குப்பின், ஆளவந்தாருடைய மற்ற சீடர்களாலே ப்ரார்த்திக்கப்பெற்ற இவரே, ஸ்ரீ ராமானுஜருக்கு ஸமாஸ்ரயணம் செய்து அழைத்து வருவதற்காக ஸ்ரீ காஞ்சிக்குப் புறப்பட்டார். அதே சமயம், தேவப் பெருமாளின் (ஸ்ரீ வரதராஜர்) நியமனம் பெற்று, பெரியநம்பியை ஆஸ்ரயிப்பதற்காக ஸ்ரீ ராமானுஜர் திருவரங்கத்தை நோக்கிப் புறப்பட்டார். ஒரே நோக்குடன் புறப்பட்ட இருவரும், மதுராந்தகம் ஏரி காத்தபெருமாள் கோயிலிலே சந்திக்க, அங்கு "ஸ்ரீ ராமானுஜ ஸமாஸ்ரயணம்" நxடைபெற்றது.

பெரியநம்பிகள் தம் ஆசார்யரான ஆளவந்தாரின் மற்றொரு சீடராய், தாழ்ந்த குலத்தில் தோன்றிய மாறனேறி நம்பி, ஆளவந்தாரை ராஜபிளவை என்னும் கொடிய நோய் தாக்க, அவருடைய புண்ணைக் கழுவி, மருந்திட்டு, உணவும் அளித்து கைங்கர்யங்கள் புரிந்து வந்தார். அதனால், மற்ற பிராமணர்கள் அவரைத் திட்டுவதையும் அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு சமயம், ஆசார்யரான ஆளவந்தாரிடம் அவர் அனுபவிக்கும் உபாதை நோயைத் தனக்குப் பிரசாதமாக அளிக்கவேண்டும் என்று வேண்ட, ஆளவந்தாரும் அவரது ஆசார்ய பக்தியைப் பார்த்து மகிழ்ந்து, தன் நோயை மாறனேரி நம்பிக்குக் கொடுத்தார். அந்தக் கொடியநோயை வாங்கிக் கொண்டதால், மாறனேறி நம்பி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே, இந்தப் பூத உடலை விட்டு அகன்று, திருநாடு அலங்கரித்தார். மாறனேறி நம்பியின் தியாக உள்ளத்தை மெச்சி, பெரிய நம்பிகள், அவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பாராமல், ஆசார்ய பக்தியில், ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயதத்திற்கே ஏற்றம் அளித்தவர் என்று போற்றி, அவருக்கு ஈமச்சடங்குகள் செய்து, அவரைத் திருப்பள்ளிப்படுத்தினார். இதை அறிந்த எம்பெருமானார், வர்ணாஸ்ரம தர்மத்தின் வரம்பை மீறி நீர் இப்படிச் செய்யலாமோ என்று பெரியநம்பிகளிடம் கேட்க, நம்பிகள் அதற்கு, சாமான்ய தர்மத்தை நிலைநாட்டுகிற சக்கரவர்த்தித் திருமகனார் (ஸ்ரீ ராமர்), பக்ஷி ஜாதியான (பறவை) ஜடாயுவுக்கு இறுதிச் சடங்ககுகளைச் செய்தாரே! அவரிலும் நான் பெரியனோ? அந்தப் பறவையைக் காட்டிலும், இவர் (மாறனேறி நம்பி சிறியவரோ? என்றும், மேலும் யுதிஷ்டிரர் (தருமர்) விதுரருக்கு (தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாகத் தோன்றியவர்) இறுதிக் கிரியைகள் செய்தாரே! நான் என்ன யுதிஷ்டிரரைக் காட்டிலும் பெரியவனோ? மாறனேறி நம்பி விதுரரைக் காட்டிலும் தாழ்ந்தவரோ? என்றும், மேலும், நம்மாழ்வார், "பயிலும் சுடரொளி" (திருவாய்மொழி, 3.7) என்ற பதிகத்திலும், "நெடுமாற்க்கடிமை"(திருவாய்மொழி, 8.10) என்ற பதிகத்திலும், பாகவதர்களின் (பெருமானின் அடியார்கள்) சிறப்பைக்கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும், "என் கொழுகுலந் தாங்களே" என்றும் கூறினவையெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகளோ? அவை நடப்பிற்கு ஒத்துவராததோ? என்றும் கேட்டு பாகவத உத்தமர்கள் எல்லாவற்றாலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்பதை நிலை நிறுத்தினார். இவற்றைக் கேட்ட எம்பெருமானாரும் சந்தோஷம் அடைந்தார். இவற்றையெல்லாம் தாம் அறிந்திருந்தாலும், பெரியோர் மூலமாக உணர, உணர்த்தவேண்டும் என்பதற்காகவே கேட்டேன் என்றாறாம் எம்பெருமானார்.

ஒரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்க, அவருக்குப் பெரியவரான பெரிய நம்பிகள் கீழே விழுந்து அவரை நமஸ்கரித்தாராம். சிறியவரின் காலில் பெரியவர் விழலாமா, அதுவும் அவருக்கு ஸமாஸ்ரயணம் செய்த ஆசாரியராயிற்றே நீர்? சிஷ்யன் காலில் விழலாமா என்று கேட்க, நம்பிகள், ஸ்ரீ ராமானுஜரின் தோற்றம், தன் ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தாரைப் போலவே இருந்ததால், இவர் ராமானுஜர் என்பதை மறந்து, ஆளவந்தாராகவே பாவித்து வணங்கினேன் என்று கூறினாராம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையில் ஊறி, அதன் அமுதச் சுவையை நன்கு புருகியவர் ஸ்ரீ ராமானுஜர். இதனாலேயே அவருக்குத் "திருப்பாவை ஜீயர்" என்ற பெயருமுண்டு. ஒரு நாள் காலை, இப்படி அவர் திருப்பாவைப் பாசுரங்களை சொல்லிக்கொண்டு, நம்பிகளின் இல்லத்தை நெருங்க, நம்பிகளின் திருக்குமாரத்தியான (மகள்) அத்துழாய் ராமானுஜரைத் தரிசிக்க, தன் இல்லத்தின் வாசற்க் கதவைத் திறக்க, அவளைப் பார்த்த ராமானுஜர் அவளை விழுந்து வணங்கி மயக்கமுற்றுக் கிடந்தாராம். ஒரு பெரியவர் தன் காலில் விழுவதைக் கண்டு அஞ்சிய அத்துழாய், தன் தந்தையான நம்பிகளை அழைத்து, இதைத் தெரிவிக்க, நம்பிகள் துளியும் பதறாமல், எம்பெருமானாரைப் பார்த்து, "உந்து மதகளிற்றன்" பாசுரம் (திருப்பாவை, 18) அனுஸந்தானமோ என்று கேட்டாராம். அதாவது, இந்தப் பாசுரத்தில் "நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்" என்ற வரியை ராமானுஜர் அனுசந்திக்கும் அதே சமயம், அத்துழாய்க் கதவைத் திறக்க, அத்துழாய் அவர் கண்ணிற்கு "நப்பின்னைபிராட்டியை"ப் போலத் தெரிந்தாளாம். இராமருக்கு சீதபிராட்டியைப் போல், ஸ்ரீ வராஹருக்கு பூமிப்பிராட்டியைப் போல், நப்பின்னை கண்ணன் எம்பெருமானின் திருத்துணைவி ஆவாள். இது "மூவாயிரப்படியில்" உள்ளபடி. ஆனால், இந்த சம்பவம் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருக்குமாரத்தியான தேவகிபிராட்டியார் விஷயத்தில் நடந்ததாக "ஆறாயிரப்படி" தெரிவிக்கிறது.

அத்துழாய் மணம் கொண்டு தன் புகுந்த வீட்டிற்க்குச் செல்ல, சீதனமாக பணிப்பெண் ஒருவரையும் அனுப்பவில்லையே உன் தந்தை (நம்பிகள்) என்று கேட்க, அத்துழாய் தன தந்தையிடம் இதைத் தெரிவிக்க, நம்பிகள் வருத்தமுற்று பணிப்பெண்ணுக்கு நான் எங்கே செல்வேன் என்று கேட்டு, ராமானுஜரிடம் சென்று இதைப் பற்றிக் கூறு என்று அவளிடம் சொல்ல, அவளும் உடனே சென்று அவரிடம் இதைக் கூற, இதைக் கேட்ட ராமானுஜர், தன் சீடரான முதளியாண்டனை அழைத்து அவளுடன் பணிப்பெண்ணாகச் செல்லும்படி கட்டளையிட, முதலியும் ஆசார்யனின் கட்டளையை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம், அத்துழாயின் பணிபெண்ணாக, அவள் மாமியார் வீட்டிற்க்குச் சென்றார். ராமானுஜர் துறவறம் பூண்டபோது, அனைத்தையும் துறந்தேன், முதளியாண்டனைத் தவிர என்று கூறியவர். அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் முதலியாண்டான். அவரையே அத்துழாயுடன் பணிப்பெண்ணாக அனுப்பி, தியாகம் செய்தார் என்றால், அது ராமானுஜர் தன் ஆசார்யரான பெரிய நம்பிகளுக்குச் செய்யும் கடமை என்ற எண்ணத்தில்தான்.

ஒரு சமயம், வைணவ மதம் சிறந்ததா, சைவ மதம் சிறந்ததா என்று வாதம் எழ, சைவ மதமே சிறந்தது, சிவனைக் காட்டிலும் மேலான தெய்வமில்லை" என்று அதில் ஊற்றம் கொண்ட சோழ மன்னன் கூற, அவன் சபையில் இருந்த மந்திரிகள், இதை ஒரு வைணவர் சொன்னால்தான் எடுபடும் என்றும், மேலும் அவர் ஒரு சாதாரண வைணவராக இருக்கக்கூடாது என்றும், வைணவ சம்பிராதயத்தில் ஊற்றம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று கூற, அப்படிப்பட்டவர் யார் இருக்கிறார் என்று கேட்க, வைணவ மதம் சிறக்கத் தோன்றிய ராமானுஜரே அப்படிப்பட்டவர் என்றும், அவரை அழைத்துவந்து, சைவ மதமே சிறந்தது என்று கூறி, கையெழுத்து இட்டால்தான் அரசனின் கூற்று எடுபடும் என்று தெரிவித்தார்கள். உடனே, அரசன், ராமானுஜரை அழைத்துவரும்படி ஊழியர்களைப் பணிக்க, ராமானுஜர் அங்கு சென்றால் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும், ஒப்புக்கொள்ளாமால் போனால், மன்னன் அவரைக் கொன்றுவிடுவான் என்றும் நினைத்து, அவரது சீடரான கூரத்தாழ்வான் இதை ராமானுஜரிடம் தெரிவித்து, ராமானுஜருக்கு தான் உடுத்தியிருந்த வெள்ளை வேட்டியைக் கொடுத்து உடுத்தச் சொல்லி, அவரது காவி உடையைத் தான் அணிந்துகொண்டு, ராமானுஜராய் அரசனின் சபைக்கு, ஆழ்வான் பெரிய நம்பிகளுடன் சென்றார். சபைக்குச் சென்றவுடன், ராமானுஜராய் வேடமளிந்த ஆழ்வானைப் பார்த்து, "சிவாத் பரதரம் நாஸ்தி" என்று கையெழுத்திடச் சொன்னான். அதற்கு ஆழ்வான், ஒருவன் உலகளந்தான் (எம்பெருமான்); ஒருவன் (பிரமன்) அவன் திருவடிகளைக் கழுவினான்; கழுவப்பட்ட அந்தத் தீர்த்தத்தை ஒருவன் (சிவன்) தலையில் தாங்கிப் புனிதனானான். இதனால், யார் சிறந்தவன் என்பதை நீயே உணர்ந்து பார் என்று பல படியாக ஸ்ரீமந்நாராயணனே பரதெய்வம் என்று உறுதிபடுத்தினார். நீர் வித்வான் ஆகையால் எப்படியும் பேச அல்லவர். இதில் நீர் கையெழுத்திடும் என்று அரசன் ஆணையுடன் நிர்ப்பந்திக்க, ஆழ்வான், சிவனைத் தாழ்த்தி விஷ்ணுவை உயர்த்திவைத்து கையெழுத்திட்டார். இதனால் கோபமடைந்த அரசன், பெரிய நம்பியைப் பார்த்து, கையெழுத்திடும்படி கட்டளையிட, அவரும் அதற்கு மறுத்தார். உடனே, தன் ஊழியர்களை அழைத்து, அவர்கள் இருவரின் கண்களையும் பிடுங்கும்படி கட்டளையிட்டான். உடனே ஆழ்வான், துஷ்டனான உன்னைக் கண்ட கண்கள் எனக்கு உதவாது என்று கூறித் தம் நகங்களைக் கொண்டே தம் கண்களைப் பிடுங்கி அரசன் மேல் வீசினார். பெரிய நம்பிகளின் கண்கள் பிடுங்கப்பட்டன. பின்னர் இருவரும் ராஜ சபையிலிருந்து வெளியேறினர். வழியில் வலி தாங்காமல் அந்திம காலத்தை அணுகினார் நம்பிகள். அதனால் விரைவில் ஸ்ரீரங்கத்தை அடைவோம் என்று ஆழ்வானும் அத்துழாயும் கூறினர். அதுகேட்டு நம்பிகள், "அது வேண்டாம்; அப்படி செய்வோமானால் பெரியநமபிகள் திருமேனியை விடுவதற்கு ஸ்ரீரங்கம் போனார்; அதனால், நாமும் திவ்யதேசத்தில்தான் சரீரம் விடவேண்டுமென்று அனைவரும் எண்ணுவர். முதலிலே ஆசார்யனாலே அனுக்ரஹிக்கப் (அங்கீகரிக்கப்)பட்டவருக்குப் பரமபதம் நிச்சயமாகையாலே, அந்த தேச நியமம் என்று கூறி, தன் ஆசார்யரான ஸ்ரீ ஆளவந்தாரை தியானித்துக்கொண்டு ஆழ்வான் மடியிலே திருமுடியும், மகள் அத்துழாய் மடியிலே திருவடியுமாகப் பரமபதம் அடைந்தார். இதனால், பகவானே பேற்றுக்கு உபாயம் என்று அவனைத் தஞ்சமாகப் பற்றிவனுக்கு, இறுதிக் காலத்தில் இன்ன தேசத்தில் தேகத்தை விடவேண்டும் என்ற கட்டுப்பாடில்லை என்பதை நிலை நாட்டினார் நம்பிகள்.

திருப்பாணாழ்வார் அருளியுள்ள "அமலனாதிபிரான்" என்னும் பிரபந்தத்திற்கு, "ஆபாதசூடமனுபூய ஹரிம் ஸயாநம்" என்று தொடங்கும் அற்புதமான வடமொழித் தனியன் இட்டவர் பெரியநம்பிகள்.

பெரியநம்பிகள் வாழிதிருநாமம்:

அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்து உய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக்கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே
மாறனேறி நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே
எழில் பெரியநம்பி சரண் இனிதூழி வாழியே.

பெரிய நம்பிகள் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.