Periyavachan Pillai | பெரியவாச்சான் பிள்ளை வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெரியவாச்சான் பிள்ளை வைபவம்
திருநக்ஷத்திரம் : ஆவணி "ரோகிணி"

தனியன் :

ஸ்ரீமத் க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூனவே |
யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம ஸுலப: ஸ்ரீதரஸ்ஸதா ||

விளக்கம் : எவருடைய திருக்கண் நோக்கு ஒன்றுக்கே இலக்காமவர்களுக்கு, ஸ்ரீமந்நாராயணன் எப்போதும் எளியவனாகிறானோ, யாமுனாசார்யரின் குமாரராய், "க்ருஷ்ணர்:" என்னும் சிறப்புமிக்க திருநாமத்தை உடையவரான அந்தப் பெரியவாச்சான் பிள்ளைக்கு நமஸ்காரம்.

ஆவணி ரோகிணியின் மகாத்மியம் அனைவரும் அறிந்தது; அதாவது, எம்பெருமான் கண்ணனாக இப்பூவலகில் அவதரித்த நன்னாளாகும். இதன் இன்னொரு மகாத்மியம் பரமகாருண்யரான (கருணையே வடிவாக உடையவரான) பெரியவாச்சான் பிள்ளை என்னும் மகான் அவதரித்த உயர்ந்த நாளாகும்.

இம்மகான் அவதரித்தது ஸர்வஜித் ஆண்டு (1167) ஆவணி மாதம் "க்ருஷ்ண" அஷ்டமி கூடிய ரோகிணி நன்னாளாகும். இவர், யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், "திருவெள்ளியங்குடி" என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணன் எம்பெருமானின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு "ஸ்ரீக்ருஷ்ணர்" என்னும் திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தனர் இவரது பெற்றோர்.

இராமபிரானுக்கு இளையபெருமாள் (இலக்குவன்) எப்படியோ, அதைப்போலவே இவர் "நம்பிள்ளை" என்னும் ஆசார்யருக்கு வலதுகரமாகத் திகழ்ந்தார். ஆழ்வார்களின் ஸ்ரீஸுக்திகள் (திவ்யப்ரபந்தங்கள்)பலவற்றுக்கு நம்பிள்ளை அருளிய உபன்யாசன்களைக் கைவிளக்காகக் கொண்டே இவர் வியாக்யான உரைகளை அருளிச்செய்தார்.

பெரியபெருமாளான திருவரங்கனாதனின் பெருமையைப் பேசி தலைக்கட்டிவிடலாம் (பேசி முடித்துவிடலாம்); ஆனால், பெரியவாச்சான் பிள்ளையின் பெருமைகளைப் பேசித் தலைக்கட்ட முடியாது என்று இவரைப் போற்றியுள்ளனர் பூருவர்கள். ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமானது அனைத்து திக்குகளிலும் (திசைகள்) நன்கு பரவும்படித் தொண்டாற்றியவர் இவர். ஒரு ஆசார்யனுக்கு ஸத்ஸிஷ்யனாக (நல்ல சீடனாக) எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும், ஒரு சீடனுக்கு எப்படி ஸத்குருவாக (நல்ல ஆச்சார்யராக) இருக்கவேண்டும் என்பதற்கும் இவர் ஒரு சிறந்த முன்னோடியாகத் திகழ்ந்தார். இவருக்கு "பரமகாருணிகர்" மற்றும் "அபாரகருணாம்ருதஸாகரர்" என்ற இரண்டு உயர்ந்த பட்டங்களை அருளிச்செய்துள்ளனர் பூருவர்கள்.
பெரியாழ்வாருக்கு நிகரான ஆழ்வார் இல்லை என்று "பிள்ளைலோகாசார்யர்" என்னும் ஆசார்யர் கூறுவாராம்; அதைப்போல், பெரியவாச்சான் பிள்ளைக்கு நிகரான ஆசார்யர் என்று எவருமில்லை என்று உரைத்துள்ளனர் பூருவர்கள்.
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏற்றிவைத்த கிரந்தங்களுள், "ரஹச்யத்ரயம், திருவாய்மொழி மற்றும் ஸ்ரீராமாயணம்" ஆகிய மூன்றும் பிரதானமான (முதன்மையான) கிரந்தங்களாகக் கருதப்படுகிறது. பெரியவாச்சான் பிள்ளை இம்மூன்று கிரந்தங்களின் உயர்ந்த அர்த்த விசேஷங்களைத் தன் உள்ளத்தில் நன்கு தேக்கிவைத்துக் கொண்டது மட்டுமன்றி, அவற்றைத் தனது சீடர்களுக்கும் தெளிவாகப் புரியும்படி உபதேசித்து அருளினார். அவற்றோடு மட்டுமல்லாமல், அவ்விஷய அர்த்தங்களை வியாக்யான உரையாகத் தொகுத்தளித்து, தனது காலத்திற்குப் பின் பிறக்கப்போகும் ஸ்ரீவைஷ்ணவர்கள் பயனடையும்படி அருளிச்செய்தார். ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ரபந்தம் அனைத்துக்கும் உரைகள் அருளிச்செய்தவர் ஆவார் இவர். இதனாலேயே, இவருக்கு "வியாக்யான சக்ரவர்த்தி " என்ற பட்டத்தையும் அருளிச்செய்தனர் பூருவர்கள்.

ஆழ்வார்கள் தங்கள் பிரபந்தங்களில் "ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை", அதாவது, எம்பெருமானே (அதாவது ஸ்ரீவிஷ்ணுவே) முழுமுதற்கடவுள் என்பதைத் தெள்ளத் தெளிவாக உரைத்தனர். அதை நன்கு உணர்ந்து தெளிந்தனர் ஆசார்யர்கள் அனைவரும். திவ்யப்ரபந்தங்களைக் கைவிளக்காகக் கொண்டே "விசிஷ்டாத்வைதத்தை" அருளிச்செய்தார் பகவத் ராமானுஜர். அப்படிப்பட்ட ஆழ்ந்த பொருள்களை உடைய திவ்யப்ரபந்தங்களை அறிவதற்கு, பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த வியாக்யான உரைகளைத் தாண்டி புரிந்துகொள்வதற்கு ஏதுமில்லை! ஆகவே, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் பெரியவாச்சான் பிள்ளையின் சிஷ்யர்களே ஆவர் என்று பூருவர்கள் உரைத்துள்ளனர்.

இவரது வியாக்யான உரைகளைக் கேட்டு, திருவரங்கநாதன் "அபயப்ரதராஜர்" என்னும் பட்டத்தை இவருக்கு அருளிச்செய்தான். இராமாயண அர்த்த விசேஷங்களை எடுத்துரைத்ததால், "இராமாயணப் பெருக்கர்" என்னும் பட்டத்தையும் பரிசாகப் பெற்றார் இவர். இராமாயணத்துக்கு இவர் அருளிச்செய்த வ்யாக்யானங்களைப் படித்து மகிழ்ந்த பூருவர்கள், இவரை வால்மீகி முனிவரின் மறு அவதாரமாகவும் கருதினர்.

வடமொழியை (ஸமஸ்க்ருதம்) இவர் நன்கு கற்றுத் தேர்ந்திருந்தாலும், ஆழ்வார்களின் ஸ்ரீஸுக்திகளுக்கு இவர் அருளிய வியாக்யான உரைகள், அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்ரவாள பாணியிலேயே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட கிரந்தங்களை இவர் அருளிச்செய்திருந்தாலும், அவைகளுள் நிறைய கிடைக்காமல் போனது நம் துரதிருஷ்டமே ஆகும்.

திருவரங்கநாதன் "பெரியபெருமாள்" என்று அழைக்கப்படுகிறான்; இவரோ, "பெரியவாச்சான் பிள்ளை" என்று அழைக்கப்பட்டார்; மணவாள மாமுனிகள், "பெரிய ஜீயர்" என்று அழைக்கப்பட்டார். "பெரிய" என்ற அடைமொழியுடன் இம்மூவரும் அழைக்கப்பட்டது இவர்களது தனிச்சிறப்பாகும்.

வேதங்களின் சூத்திரங்களை அருளிச்செய்தவர் "ஸ்ரீக்ருஷ்ண த்வைபாயன வ்யாஸர்" என்னும் "வியாச மகரிஷி" ஆவார். வேதங்களை ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களைக் கொண்டு தமிழ்படுத்தினான் எம்பெருமான். திவ்யப்ரபந்தங்கள் "திராவிட வேதங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. திராவிட வேதங்களுக்கு உரை அருளிச் செய்ததால், பெரியவாச்சான் பிள்ளை "வியாச மகரிஷியின்" மறு அவதாரமாகவும் கருதப்படுகிறார். உபநிஷத்துக்களின் உயர்ந்த விஷயங்களை ஒருசேரக் கடைந்து, "பகவத்கீதை" என்னும் அமிர்தமாகக் கொடுத்தான் கண்ணன் எம்பெருமான். அதைப்போலவே, உலகோர் உய்ய (அனைவரும் நற்கதி அடைய) ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களை ஒருசேரக் கடைந்து "ஆரா அமுதான" (திகட்டாத அமுதம்) வியாக்யான உரையை அருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளை.

"பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ள வைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால் - அரிய
அருளிச்செயற் பொருளை ஆரியர்கட்கு இப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து."

என்று "பெரியவாச்சான் பிள்ளை"யைப் போற்றி உபதேச இரத்தினமாலையில் அருளிச்செய்துள்ளார் மணவாள மாமுனிகள்.

பாசுர விளக்கம் : பெரியவாச்சான் பிள்ளை என்னும் ஆசிரியர் திருவாய்மொழி தவிர மற்றுமுள்ள திவ்யப்ரபந்தங்களுக்கும் விளக்கமான வ்யாக்யானங்கள் அருளிச்செய்தததாலே, அருமையான திவ்யப்ரபந்தத்தின் பொருள்களை இக்காலத்தில் ஆசாரியர்கள் தெரிந்து ப்ரயசனம் (விரித்துரைப்பது) செய்வதற்கு எளிதாயிற்று.

பிள்ளையின் அவதார ரஹஸ்யம்

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு ஐந்து ஆசார்யர்கள் "ஈட்டு வ்யாக்யானம்" அருளிச்செய்துள்ளனர். அவர்களுள் ஒருவர் பெரியவாச்சான் பிள்ளை ஆவார். திருவாய்மொழிக்கு இவர் அருளிச்செய்தது "இருபத்திநாலாயிரப்படி" வியாக்யானம் ஆகும். அதாவது இந்த வ்யாக்யானத்தில் அடங்கிய சொற்களின் எண்ணிக்கை 24000 x 32 = 7,68,000 ஆகும். இதேபோல், எஞ்சிய நான்கு ஆசார்யர்கள் அருளிச்செய்த ஈட்டு வியாக்யான உரைகள் "ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி மற்றும் முப்பத்திரெண்டாயிரப்படி" ஆகியவை ஆகும். இவை ஒவ்வொன்றையும் 32ஆல் பெருக்கினால் வரும் தொகையே அவற்றில் அடங்கியுள்ள சொற்களின் மொத்த எண்ணிக்கையாகும்.

பெரியவாச்சான் பிள்ளை தனது ஆசார்யாரான நம்பிள்ளையின் நியமனப்படியே (கட்டளை) திருவாய்மொழிக்கு "இருபத்திநாலாயிரப்படி" வியாக்யானம் அருளிச்செய்தார். இதனை,

"நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால் - இன்பா
வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது
இருபத்திநாலாயிரம்" என்று மாமுனிகள் உபதேச இரத்தினமாலையில் (பாசுரம் 43) போற்றியுள்ளார்.

விளக்கம் : நம்பிள்ளை என்னும் ஆசிரியர் தமது பரம க்ருபையினால் நியமித்து அருள, அந்த நியமனத்தை அடியொற்றி, பெரியவாச்சான் பிள்ளை என்னும் ஆசிரியர் ஆனந்தரூபமான பெருகிவந்த பக்தியை உடையவரான நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதமான திருவாய்மொழியினுடைய அர்த்தங்களை விவரித்து அருளிச்செய்த வியாக்யானம் "இருபத்திநாலாயிரப்படி" என்பதாகும்.

இனி, இவரது அவதார காரணத்தை (ரஹஸ்யத்தை) அறிவோம் அல்லது அனுபவிப்போம்

திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் கண்ணன் எம்பெருமான் திருமங்கை ஆழ்வாரிடம் அவர் அருளிச்செய்த திவ்யப்ரபந்தங்களின் அர்த்த விசேஷங்களை அறிய ஆவல் கொள்ள, அதை அறிந்த ஆழ்வாரும், எம்பெருமானே! வாரும், கற்றுத்தருகிறேன் என்பதாய்,

"மெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய கண்ணா
நின்தனக்குக் குறிப்பாகில், கற்கலாம் கவியின் பொருள்தானே"
(பெரிய திருமொழி, திருக்கண்ணமங்கை - "பெரும்புறக்கடலை" பதிகம், 7-10-10)
என்று பாடி அழைத்தாராம்.

ஆனால், இதைச் செவிமடுத்த (கேட்ட) கண்ணன் எம்பெருமான், "ஆழ்வீர்! நாம் நிச்சயம் உம்மிடமிருந்து விஷயார்த்தங்களை அறிந்துகொள்வோம்! ஆனால், இது இப்போது சாத்தியமில்லை; ஏனென்றால், யாம் இப்போது அர்ச்சாமூர்த்தியாய் இங்கு உள்ளோம். எனவே, இப்போது இல்லாவிட்டாலும், நீர் பின்னர் "திருக்கலிகன்றி தாசர்" என்னும் திருநாமத்துடன் கார்த்திகையில் (மாதம்) கார்த்திகை நாளில் (நக்ஷத்திரம்) அவதரிப்பீர்; ஆப்படி நீர் அவதரித்த சில ஆண்டுகள் சென்றபின், யாம் "ஆவணி" மாதம் "ரோகிணி" நக்ஷத்திரத்தில் "ஸ்ரீக்ருஷ்ணர்" என்னும் திருநாமம் கொண்டவராய் அவதரிப்போம்; அப்படி யாம் பிறந்தபின், உம்மை ஆசார்யராய் கொண்டு, உம்மிடம் அனைத்து ஆழ்வார்கள் (ஸ்ரீ ஆண்டாள் உட்பட) அருளிச்செய்த திவ்யப்ரபாந்தங்களின் அர்த்தங்களையும், இதர ரஹஸ்யார்த்தங்களையும், இராமாயண வ்யாக்யானங்களையும் கேட்டு அறிந்து, அவைகளை இந்த உலகுக்கு உபதேசிப்போம் என்று அருளிச்செய்தான். ஆக, நம்பிள்ளை என்னும் ஆசார்யர் திருமங்கை ஆழ்வாரின் அம்சமாகவே அவதரித்தார் (இருவரும் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர்கள்). அதேபோல், பெரியவாச்சான் பிள்ளையும் "கண்ணன் எம்பெருமானின்" அம்சமாக, அவன் அவதரித்த "ஆவணி ரோகிணி"யில் அவதரித்தார்.

இவரது மகாத்மியங்களுள் விசேஷமான இன்னொன்று, இவர் திருவேங்கடமுடையானின் விக்கிரகத்தை அவனிடமிருந்தே பெற்றுக்கொண்டு, அந்த விக்கிரகத்தைத் தனது ஊரான சங்கனல்லூரில் பிரதிஷ்டை செய்து அருளியதாகும். அதன்பின், இவர் சங்கனல்லூரிலிருந்து புறப்பட்டு, திருவரங்கத்தை அடைந்து, அங்கு எழுந்தருளியிருந்த நம்பிள்ளையை அடைந்து, அவரைத் தனது ஆசார்யராகக் கொண்டார். நம்பிள்ளையிடமிருந்து அனைத்து ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யப்ர்பந்தங்கள், பூருவர்கள் அருளிச்செய்த கிரந்தங்கள் (இதிஹாஸ புராணங்கள் உட்பட) ஆகியவற்றின் அர்த்தங்களைக் கேட்டு அறிவதிலேயே தன் பொழுதுகளைக் கழித்தார். பின்னர், ஆசார்யரான நம்பிள்ளையின் அனுமதியுடன், அவரிடமிருந்து அறிந்துகொண்ட விஷயங்களை "வ்யாக்யான உரைநூல்களாக" வெளியிட்டு அருளினார்.

ஆசார்யர் நம்பிள்ளை எம்பெருமானின் திருவடி அடைய, அதாவது, நம்பிள்ளை அவரது ஆசார்யரான (பராசர) பட்டர் நல்லருளால் திருநாட்டுக்கு (வைகுந்தப்பதவி) எழுந்தருள, இவர் "வடக்குத் திருவீதிப்பிள்ளை"யையும் மேலும் சில பெரியோர்களையும் கொண்டு பெரிய கோயிலை (திருவரங்கம்) நிர்வாகம் செய்துவந்தார். இவர் நிர்வாகம் செய்துவந்த காலத்தில், திருவரங்கம் அமைதி தழுவியே இருந்துவந்தது; ஏனென்றால், பகவத் ராமாநுஜர் காலத்திலும், பிள்ளை லோகாசார்யர் மற்றும் வேதாந்த தேசிகர் காலத்திலும் அந்நியர்களின் படையெடுப்பாலும், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அரசர்காளாலும் திருவரங்கத்திற்குப் பல சோதனைகள் வந்தது. அதனால், அச்சமயம் அங்கு எழுந்தருளியிருந்த பூருவர்கள் பெரியபெருமாள் சந்நிதியை (கர்பகிருகம்) "கல்திரை" எழுப்பி மறைத்தும், நம்பெருமாள் (உற்சவமூர்த்தி) விக்கிரகத்தை வேறு இடத்தில் மறைத்துவைத்து காத்தும் தொண்டாற்றும்படி ஆயிற்று. ஆனால், இம்மாதிரியான பிரச்சினைகள் பெரியவாச்சான் பிள்ளையின் காலத்தில் இல்லாததால், அது இவருக்கு நிறைய கிரந்தங்களுக்கு வ்யாக்யான உரை அருளிச்செய்வதற்கு அனுகூலமாக இருந்தது.

பெரியவாச்சான் பிள்ளைக்குக் குமாரர் (மகன்) இல்லை; ஆகவே, இவர் தனது சகோதரியின் மகனான "நாயனாச்சான் பிள்ளை" என்பவரை ஸ்வீகாரம் எடுத்துக்கொண்டு, தான் நம்பிள்ளையிடமிருந்து பெற்ற உபதேசங்களை அவருக்கு அருளிச்செய்தார். மேலும், பெரிய திருமுடியடைவு என்னும் கிரந்தத்தின் மூலம், வாதிகேசரி அழகியமனவாளச் சீயர் (திருவாய்மொழிக்கு "பன்னீராயிரப்படி" வியாக்யானம் அருளிச்செய்தவர்), ஸ்ரீரங்காசார்யார் (அஹோபில மடத்தை நிர்மாணம் செய்த ஆதிவண்சடகோபரின் ஆசார்யர்) மற்றும் பரகால தாசர் ("பரகால நல்லான் ரஹஸ்யம்", "மைவண்ண நறுங்குஞ்சி" மற்றும் இதர சில கிரந்தங்கள் அருளிச்செய்தவர) ஆகியோர் இவரது (பெரியவாச்சான் பிள்ளை) சீடர்கள் ஆவர். மேலும், நம்பிள்ளை திருநாட்டுக்கு எழுந்தருளியபின், அவரது சீடராக இருந்த வடக்குத்திருவீதிப்பிள்ளை சில கிரந்தங்களுக்கான அர்த்தங்களை பெரியவாச்சான் பிள்ளையிடமிருந்து கேட்டு அறிந்துகொண்டார் என்று பூருவர்கள் அறிவித்துள்ளனர். நம்பிள்ளையின் இன்னொரு சீடரான "பின்பழகராம் பெருமாள் சீயர்" என்ற மகான் இவரையும் தனது ஆச்சர்யராகக் கொண்டு ஆச்ரயித்துள்ளார்.

இவரது மகாதமியங்களுள் இன்னொன்று: இவரது சீடர்களாய் இருந்தவர்களில் "வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர்" என்பவரும் ஒருவர் என்று மேலே பார்த்தோம். ஆனால், வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர்" தம் இளையபருவத்தில் சரியான கல்வியைக் கொள்ளாததால், இவர் பெரியவாச்சான் பிள்ளையின் திருமாளிகையில் மடைப்பள்ளி (தளிகை செய்வது) கைங்கர்யம் செய்துவந்தார். ஒரு சமயம், பெரியவாச்சான் பிள்ளையின் திருமாளிகைக்கு சான்றோர்கள் சிலர் எழுந்தருளி, சில கிரந்தங்களுக்கான அர்த்தங்களைப் பற்றி ஆய்வு செய்துவந்தனர். அவர்களிடம் வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர் சென்று "என்ன செய்கிறீர்கள்" என்று கேட்க, அவர்கள் "முசலகிசலயம" என்னும் கிரந்தத்தை ஆய்வுசெய்வதாகவும், அதைப் பற்றி சொன்னால் உமக்குப் புரியாது; ஏனென்றால், நீர் எதற்கும் உதவாத இரும்புத் துகளைப் போல் இருக்கிறீர்" என்று கூறி, அவரைக் கேலி செய்தனர். பின்னர், "முசலகிசலயம்" என்னும் கிரந்தத்தைப் பற்றி உபதேசிக்குமாறு அவர் பெரியவாச்சான் பிள்ளையிடம் பிரார்த்திக்க, பிள்ளை "அப்படி ஏதும் கிரந்தம் இல்லை; உம்மை கேலிசெய்வதரற்காகவே அப்படிக்கூறினர்" என்று தெரிவித்தார். இதனால் வருத்தமுற்ற சீயர், "பிள்ளையின்" திருவடியில் விழுந்து வணங்கி, தனக்கு கிரந்தங்களைப் பற்றிய விஷயங்களை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க, பிள்ளையும் அவர் கேட்டதற்கு இணங்கி, பரம கருணைகொண்டு அவருக்கு வேதங்களையும், சாஸ்திர கிரந்தங்களையும் அதன் அர்த்தங்களையும் உபதேசித்து, அவரையும் நிரம்ப ஞானம் பெற்றவாராய் ஆக்கினார். அதன்பின், சீயர் "முசலகிசலயம்" என்னும் பெயரிலேயே ஒரு கிரந்தத்தை இயற்றி, அவற்றைத் தன்னைக் கேலிசெய்தவர்களிடம் காட்டி, அவர்களின் பாராட்டையும் பெற்றார். சீயர் இயற்றிய இன்னொரு கிரந்தம், "தத்வ நிரூபணம்" என்பதாகும்.

"அபயப்ரதானமானம் அஸ்மத்குருமுஹம் பஜே |
யத்கடாக்ஷதயம் ஜந்து: அபுனர்ஜன்மதம் கதா: ||"

என்பது "சீயர்" தன் பெரியாவாச்சான் பிள்ளைக்கு அருளிச்செய்த ஸ்லோகமாகும். அதாவது, "அபயப்ரதர்" என்னும் திருநாமத்தை உடைய ஆசார்யரை (பெரியவாச்சான் பிள்ளை) நான் வணங்குகிறேன். அவரது இன்னருளே ஞானமற்ற விலங்கைப்போல் இருந்த என்னை, பிறவித் துயர் களையும் மோக்ஷ உபாயத்தைப் (வழியை) பெற்றுத் தந்தது என்று அர்த்தம்.

95 திருநக்ஷத்திரங்கள் (ஆண்டுகள்) இப்பூவுலகில் எழுந்தருளியிருந்து, ஆசார்யர் நம்பிள்ளையின் அருளால் எம்பெருமான் திருவடியைஅடையும் வண்ணம் திருநாட்டுக்கு எழுந்தருளினார் பெரியவாச்சான் பிள்ளை.

பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :
"தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில் உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே."

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.