Pillai Lokacharya Vaibhavam | ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

"ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் - ஐப்பசி திருவோணம்"

"லோகா சார்யாய குரவே க்ருஷ்ணபாத ஸ்ய சூநவே |
சம்சாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதயே நம:||"

(ஸ்ரீ கிருஷ்ண பாதர் என்கிற வடக்குத் திருவீதிப்பிள்ளையின் திருக்குமாரரும் ஆசார்யனுக்குரிய இலக்கணங்கள் அனைத்தும் நிரம்பியவரும், பிறவியென்னும் நச்சுப் பாம்பால் கடியுண்ட உயிர்களுக்கு மருந்தாக விளங்குபவருமான பிள்ளை லோகாசார்யருக்கு வணக்கம்).

பிள்ளை லோகாசார்யருக்கு முன் தோன்றிய ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவரும் ஒரு தட்டு என்றால், இவர் (பிள்ளை...) ஒருதட்டு என்னும்படியான பெருமைகளுடன் திகழ்ந்தவர். தோற்றம் முதல் திருநாட்டுக்கு (ஆத்மா உடலை விட்டுப் பிரிவது) எழுந்தருளியது வரை ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்புப் பெற்றவர் பிள்ளை லோகாசார்யர். இவருடைய பெருமைகளை மணவாள மாமுனிகள் அருளிய உபதேச இரத்தினமாலை என்னும் பிரபந்தத்தின் மூலம் நன்கு அறியலாம்.

பிள்ளை லோகாசார்யர் தோற்றத்தின் பெருமை:

நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு "ஈடு முப்பத்தாறாயிரப்படி" என்ற ஒப்பற்ற விரிவுரையை அருளியவர் நம்பிள்ளை அவ்விரிவுரையை ஏடுபடுத்தி (நம்பிள்ளை செய்த உபன்யாசத்தை கேட்டு, அதை வார்த்தை மாறாமல் எழுதியது) நமக்கருளிய அவர் சீடரான வடக்குத் திருவீதிப்பிள்ளைக்கு வெகு நாட்களுக்கு மகப்பேறு இல்லமால் இருக்க, அவருடைய திருத்தாயாரான "அம்மி" என்பவள், நம்பிள்ளையிடம் "உம்முடைய சீடனான என் மகன் உலக வாழ்க்கையில் பற்றற்று (இஷ்டமின்றி) மனைமாளுடன் (மனைவியுடன்) வாழ மறுப்பதால், வம்சத்துக்குப் பிள்ளையில்லாமல் போய்விடும் போலிருக்கிறதே என்று முறையிட்டாள். நம்பிள்ளையும் தம் சீடனான வடக்குத் திருவீதிப்பிள்ளையின் மனைவியை அழைத்து "நம்மைப்போல் (பக்தி, ஞானம் மற்றும் வைராக்யத்தில்) ஒரு மகனைப் பெற ஆசி கூறுகிறோம்" என்று அருளி, பற்றற்று விளங்கும் வடக்குத் திருவீதிப்பிள்ளையை அழைத்து, "உலக வாழ்க்கையில் பற்றில்லாமையை உம்மிடம் கண்டு வியந்து போற்றுகிறோம்; ஆயினும் இன்று ஒருநாள், உம்மனைவியுடன் கூடியிரும்" என்று ஆணையிட, அவரும், ஆசார்யன் கூறியதைக் கேட்டு, நடந்து, 12 மாதங்கள் கடந்து, ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்திரத்தன்று, திருவரங்கத்தில் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்து, தம் ஆசார்யரான நம்பிள்ளையின் பெயரான "லோகாசார்யன்" என்ற திருநாமத்தையே குழந்தைக்கு இட்டு, கல்வி புகட்டி (அளித்து) வளர்த்து வந்தார். திருவரங்கத்தில் அவதரித்த இக்குழந்தைக்கு ஒரு வயது முடிந்தவுடன், நம்பெருமாளை (திருவரங்கம் உற்சவ மூர்த்தி) சேவிப்பதற்காக பல்லக்கில் இக்குழந்தையை எழுதருளப்பண்ணி, நம்பிள்ளை முதலான பெரியோர்கள் அனைவருடன் சந்நிதிக்குச் சென்றனர். நம்பெருமாளும், நம்பிள்ளையை அர்ச்சக முகமாக அழைத்து, "உம்மைப்போல் ஒரு மகனைக் கொடுத்தாற்போல், நம்மைப்போல் ஒரு மகனைக் கொடும்" என்று ஆணையிட, நம்பிள்ளையும் நம்பெருமாள் ஆணையைச் சிரமேற்கொண்டு ஏற்று நிற்க, அவ்வருளால், வடக்குத் திருவீதிப்பிள்ளைக்கு இரண்டாவதாக ஒரு பிள்ளை தோன்றினார். நம்பெருமாளின் திருநாமமான "அழகிய மணவாளன்" என்ற பெயரையே இரண்டாவதாகப் பிறந்த அக்குழந்தைக்கு சூட்டினார், "அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்" என்று. இப்படி, வடக்குத் திருவீதிப்பிள்ளையின் இரண்டு மகன்களும் (பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) இராம லக்ஷ்மணர்களைப் போலவும், பலராம க்ருஷ்ணர்களைப் போலவும் வளர்ந்து வந்தனர்.

உலக வாழ்க்கையில் பற்றில்லாமை : தன்னுடைய திருத்தந்தையாரைப் போலவே பிள்ளை லோகாசார்யரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் உலக வாழ்க்கையில் அடியோடு பற்று இல்லாமல் இருந்தனர் மேலும் தங்கள் பற்றில்லாமைக்கு இடர் (தடை) எதுவும் வரக்கூடாது என்று எண்ணி, திருமணம் செய்து கொள்ளாமலேயே இறுதிவரை வாழ்ந்தனர். இல்லறத்தில் இருந்த மற்ற பூருவாசார்யார்கள் "பிரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்" (மகான்கள் மோக்ஷத்தை மட்டும் பிரார்த்தித்து, அதை அடைவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்வர்; அவர்களுக்கு அதுவே, லோக விஷயங்களிலிருந்து விடுதலை அளித்து, ஏற்றத்தை அளிக்கும்) என்று சொல்லத் துணியாத போது, பிள்ளை லோகாசார்யர் மட்டும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடாத பெருமை உடையவராகி, இந்த அரிய, உயர்ந்த பொருளை ("பிரபந்நனுக்கு விஹித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்") தன்னுடைய "ஸ்ரீ வசன பூஷணம்" என்னும் நூலில் சூத்ரமாக வடித்து (எழுதி) உள்ளார்.

பிள்ளை லோகாசார்யர் அருளிய நூல்களின் பெருமை:

நம்முடைய பூருவாச்சர்யர்களில் மற்ற ஆசார்யர்கள் வேதாந்தம் மற்றும் வேதாந்தத்தின் மொழிபெயர்ப்பான தமிழ் வேதத்துக்கு (நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்) விளக்கவுரை நூல்கள் வரைவதையே (எழுதுவது) முதல் பணியாகக் கொண்டிருந்தனர். நுட்பமான பொருட்களை விளக்கிச்சென்ற அவர்களின் நூல்களில் மிகவும் சாரமான (முக்கியமான) “ரஹஸ்ரயத்ரய” விளக்கம், “தத்வத்ரய” விளக்கம் ஆகியவற்றைத் தேடித் தேடித்தான் கானவேண்டியிருந்தது.

ஆனால், திருமந்தரம், த்வயம், சரம ஸ்லோகம் ஆகிய மூன்று ரஹஸ்யங்களின் விளக்கங்களையும், சித் (ஜீவாத்மா - அறிவுடையது, அழிவற்றது), அசித் (உடல், பிரபஞ்சம் ஆகியன - அழிவுடையது, அறிவற்றது), ஈஸ்வரன் ((பரமாத்மா, பரதத்வம்) ஆகிய மூன்று உண்மைப் பொருள்களின் விளக்கங்களையும் விரிவாக அருளிச்செய்வதையே தம்முடைய முதன்மைப் பணியாகக் கொண்டு இவ்வகை நூல்களையே அருளிய பெருமை பிள்ளை லோகாசார்யர் ஒருவருக்கு உரியதாகும்.

இவர் அருளியுள்ள "அஷ்டாதஸ ரஹஸ்யங்கள்" என்ற புகழுடன் விளங்கும் கீழ்கண்ட 18 நூல்களே ஸ்ரீ வைஷ்ணவ உலகை உய்வித்து வருகின்றன (உயர் நிலையை அடையும் வழியைக் காட்டி, மோக்ஷத்தைப் பெற்றுத் தரும் வழியாய் இருப்பது):

1. முமுக்ஷுப்படி
2. தத்வத்ரயம்
3. அர்த்த பஞ்சகம்
4. ஸ்ரீ வசன பூஷணம்
5. அர்ச்சிராதி
6. பிரமேய ஸேகரம்
7. பிரபன்ன பரித்ரானாம்
8. ஸார ஸங்ரஹம்
9. ஸம்ஸார ஸாம்ராஜ்யம்
10. நவரத்ன மாலை
11. நவவித ஸம்பந்தம்
12. யாத்ருச்சிகப்படி
13. பரந்தபடி
14. ஸ்ரிய:பதிப்படி
15. தத்வ ஸேகரம்
16. தனித்வயம்
17. தனிரமம்
18. தனிப்ரணவம்

பிள்ளை லோகாசார்யர் அருளிய நூல்கள் அனைத்தும் சிறப்பு பெற்றதால், மற்ற நூல்களில் இல்லாத பல உயர்ந்த ரஹஸ்ய பொருள்களைத் தெரிவிப்பதை, பெரிய பெருமாளுடைய (திருவரங்கம் மூல மூர்த்தி) ஆணையால் தோன்றியதாய், பெரிய பெருமாளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதான ""ஸ்ரீ வசன பூஷணம்" என்ற ஒப்பற்ற நூலுக்கே இரண்டு பூர்வாசார்யர்களின் விளக்க உரைகள் தோன்றியுள்ளன. அதிலும், மணவாள மாமுனிகள் அருளிய வியாக்யானம் மிகவும் ஆச்சர்யமான - அரும் பதவுரைகளோடு பொலிகின்றது (சுடர் விட்டு பிரகாசிப்பது).

"ஸ்ரீ வசன பூஷண" நூலுக்கு எதிப்பு தெரிவித்து, சிலர் இதில் கூறப்பட்ட பொருள்களுக்கு உடன்படாமல் (ஒத்துக் கொள்ளாமல்) நிற்க, இந்நூலில், பிள்ளை லோகாசார்யர் அருளிய அனைத்து அர்த்தங்களும் நம் முன்னோர்களால் காட்டப்பட்டு அவர்களால் ஆதரிக்கப்பட்டதே என்று நிலைநாட்ட, இவர் திருத்தம்பியான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் "ஆசார்ய ஹ்ருதயம்" என்னும் அற்புத நூலை நம்பெருமாள் திருவுரு முன்பே இயற்றி அருளினார். அதை நம்பெருமாளும் அங்கீகரித்து (ஏற்றுக்கொண்டு) அருளினார். இவ்வாறு பல பெருமைகளைப் பெற்றது, "ஸ்ரீ வசன பூஷணம்" என்னும் இந்த ஒப்பற்ற நூல்.

“அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் * உன்னில்
திகழ் வசனபூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை *
புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது”* (53)

( புகழ் விளங்கும் முடும்பை என்னும் ஊரில் அவதரித்த பிள்ளை உலகாரியர் அருளிய அணைத்து நூல்களைக் காட்டிலும், ஸ்ரீ வசனபூஷணம் என்னும் நூல் ஒப்பற்ற சிறப்பு வாய்ந்தது என்று சுவாமி மணவாள மாமுனிகள் போற்றிப் பாடியுள்ளார்).

பிள்ளை லோகாசார்யரின் குணப்பெருமை : இவர் குணம் என்னும் குன்று ஏறி நின்றவர். ஒருவரிடத்தும் பகையில்லாமல் விளங்கிய பண்பாளர். இவர் தொடர்பை ஏதோ ஒரு வகையில் பெற்ற விலங்குகளுக்கும் உயர்ந்த நிலையான "மோக்ஷம்" என்கிற பேரின்ப நிலையை அளித்த உத்தமர்.

திருவரங்கம் பெரிய கோயில் துஷ்டர்களால் சூழப்பட்டு தாக்கப்பட்டபோது. ,மூல மூர்த்தியான பெரிய பெருமாளின் கர்ப்ப க்ருஹத்திற்கு கல்லால் திரை எழுப்பி (கல் சுவர்) பெருமானை மறைத்து, உற்சவரான நம்பெருமாளை, வெளியூர்களுக்கு எழுந்தருளப்பண்ணி காத்துத்தந்து உதவிய மகான் இவர். இப்படி நம்பெருமாளை எழுந்தருளிப்பண்ணிக் கொண்டு, உடன் சென்றபோது, "ஜ்யோதிஷ்குடி" என்ற கிராமத்திலே தம் உயிரைத் துறந்தவர். நம்பெருமாளுக்காக தம்மையே தியாகம் செய்த பெருமை இந்த மகான் ஒருவருக்கே உண்டு.

ஒருவகையில் பெரியாழ்வார், பெருமான் அனைவர் முன் தோன்ற, பெருமானுக்கு என்ன வந்துவிடுமோ என்று பயந்து, பரிவு கொண்டு, பெருமானுக்குக் காப்பாய் "திருப்பல்லாண்டு" என்னும் பிரபந்தத்தை அருளியது போல, இவரும் துஷ்டர்களால் திருவரங்கம் பெரிய கோயில் சூழப்பட்டபோது, பெருமானுக்குத் தானே காப்பாய் இருந்தவர். இத்தகு அறிய செயலைச் செய்த இவரை " காக்கும் பெருமானைக் காத்த பெருமான்" என்று சொன்னால் மிகையாகாது.

பிள்ளை லோகாசார்யரின் சீடர்கள் : அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (ஆச்சார்யரின் தம்பி), கூரகுலோத்தம தாஸர், திருவாய்மொழிப்பிள்ளை, மணற்பாக்கத்து (திருச்சானூர்) நம்பி, திகழக்கிடந்தாரண்ணன் முதலான பலபல பெருமக்களைச் சீடராகப் பெற்ற பெருமை பிள்ளை லோகாசார்யருக்கு உண்டு.

“பிள்ளை லோகாசார்யர் வாழி திருநாமம்”

அத்திகிரி அருளாளன் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்சில்வைப்போன் வாழியே
நீள்வசன பூடணத்தால் நியமித்தான் வாழியே
உத்தமமாய் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதோறும் வாழியே.