அடியவர்க்கு எளியவன்!
தூணிலிருந்து நரசிம்மமாக பகவான் வெளிப்பட்டார் என்று பார்த்தோம்.
சிங்கத்துக்கு ஒரு பழக்கம் உண்டு. குகையிலிருந்த வெளிப்படுமுன், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இருபுறமும் பார்த்து விட்டுத்தான் வெளியே வரும். யானை ஏதாவது இருக்கிறதா? என்று கவனமாகப் பார்ப்பது அதன் வழக்கம். விரோதி யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பிறகுதான், மேற்கொண்டு நான்கடி எடுத்து வைக்கும்.
அதேபோல், ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் பெருமாளைக் கோயிலிருந்து எழுந்தருளப் பண்ணும்போது, கிழக்குப் பக்கமும் மேற்குப் பக்கமுமாக ஒருமுறை பார்த்து, மீண்டும் ஒருமுறை இருபுறமும் பார்த்த பிறகுதான், மேலப்படிக்கு மேலே வந்த நின்று ஆசார்ய புருஷர்கள், ஸ்தலத்தார், தீர்த்தக்காரர்கள் எல்லோருக்கும் மரியாதை நடந்து, கீழே இறங்குவார். பிறகு புலிப்பாய்ச்சல், பிறகு ரிஷப கதி, பிறகு கஜகதி, கடைசியாக சர்ப்ப கதி எல்லாம் நடக்கும். இவர் எப்போதிலிருந்து இவ்வாறு நடக்கிறார் என்று கேட்டால்... இவர் ரொம்ப காலமாக நடந்து கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்துத்தான் அர்ச்சக ஸ்வாமி நடக்கக் கற்றுக் கொண்டார்.
இந்த நடைகளையெல்லாம் ராமர் நடந்திருக்கிறார். ராமன் சிங்கநடை நடந்தான். சிங்கம் சிங்கநடை நடந்தாலல்லவோ நன்றாக இருக்கும். அவர் ரகு குல திலகனான ராகவ சிம்மம். தன் பக்தன் அபசாரப்பட்டதைப் பொறுக்காமல், நரசிங்கமாகத் தோன்றினார். ஹனுமனிடத்தில் ராவணன் செய்த அபசாரம் தாங்காமல், இன்றைக்குத் தன் சக்தி என்ன என்பதை ஊர் பார்க்கட்டும் என்று யுத்தம் செய்தார். ஏழு நாட்கள் மகா யுத்தம் நடக்கிறது. ராவணன், எவ்வளவு அடி எப்படி அடித்தாலும் துளிக்கூடக் கலங்கவில்லை ராமன். ‘இனி இவனை அடித்துப் பிரயோஜனம் இல்லை. இவனுடைய வாகனமாகிய ஹனுமனை அடிப்போம்’ என்று நினைத்தான். அடித்து சல்லடைக் கண்ணாய்த் துளைத்து விட்டான். எப்படி? இன்னும் ஒரு அம்பு விட்டால் ஹனுமனே இல்லை என்னும் அளவுக்கு அடித்துவிட்டான்!
அப்போதுதான் அதீத கோபம் பகவானுக்கு வந்தது. இன்றைக்கு ராமனுடைய ராமத்வம் என்ன என்பதை உலகம் பார்க்கட்டும் என்று சூளுரைத்து, ராமன் சண்டை போட ஆரம்பித்தான். அது என்ன ராமத்வம்? வீரம்தான். அன்றே ராவணனை முடித்தான் என்கிறது சரித்திரம்.
அப்புறம் யாதவ சிம்மம். யதுகுலத்தில் பிறந்தவனான கண்ணன். கண்ணனே ஒரு சிங்கம்தானே?
சீறிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் போந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா உன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
காரியமாராதருளேலோரெம்பாவா
என்று ஆண்டாள் திருப்பாவையில் 23வது பாசுரத்தில் பிரார்த்திக்கிறாள். இது ரொம்பவும் முக்கியமான பாசுரம். ஆகவே, கண்ணனே ஒரு சிங்கம். அந்தக் கண்ணனுக்கு எப்போது கோபம் வந்தது? பீஷ்மாசார்யார் சல்லடைக் கண்ணாக அர்சுனனை அம்பால் துளைத்தார். கண்ணனை அடித்த போதெல்லாம் அவருக்குக் கோபமே வரவில்லை. அவர் பட்ட அடிகளால் முகம் முழுக்க வடுக்கள் ஏற்பட்டன. அந்த வடுக்களோடேதான் இன்றைக்குத் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதிப் பெருமாளாக சேவை சாதிக்கிறார். நரசிம்மன், ராகவ சிம்மன், யாதவ சிம்மன் ஆகிய யாருமே, தன் பக்தன் சிறுமைப்பட்டால் பொறுக்கமாட்டார்கள்.
விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னைப் புறம் எரி செய்த சிவன் உரு துயர் களை தேவை
பற்றலர் வீயக்கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடிதுறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உற்வசப் பெருமானை சேவித்தால், சல்லடைக் கண்ணா அம்பு துளைத்திருக்கும். அந்த சேவை நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அதை வாங்கித் தாங்கிக் கொண்டார் போலிருக்கிறது! ஏனெனில், ஒரு பக்தன் அடித்தால், தான் வாங்கிக் கொள்ளத் தயாராய் இருக்கிறார் என்பதற்கு சாட்சி வேண்டாமா? அந்தப் பெருமாள் அங்கே இருக்கவேதானே நமக்கு அந்த சாட்சி இருக்கிறது? பார்த்தசாரதி பெருமாள், அர்சுனன் அடிபட்ட கோபத்தினாலேதான், இனி அர்சுனனை நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை. நாமே யுத்தத்தை முடித்து விடுவோம் என்ற தீர்மானத்துக்கு வந்தார்.
அவன் சத்ய சங்கல்பன். ஆனால், பீஷ்மருக்காகத் தம்மை அசத்ய சங்கல்பனாக ஆக்கிக் கொண்டான்!
‘ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று பிரதிக்ஞை செய்திருந்த கண்ணன், பீஷ்மாசார்யனுக்காக ஆயுதம் எடுத்தான்.
இங்கே நரம் கலந்த சிம்மமாத் தூணிலிருந்து வெளிப்பட்ட பெருமான் ஆயுதமே இல்லாமல் முடித்தான்.
ஆக, பகவான் எடுத்த இத்தனை அவதாரங்களும் எதற்காக? பாகவதர்களிடத்திலே அபசாரம் செய்ததற்காக. பாகவத அபசாரத்தைப் பொறுக்க மாட்டாமல் எடுத்த அவதாரங்கள்தான் அவை. நாமும் மனப்பூர்வமான பக்தி வைத்தால், நம்மைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன் என்று, இந்த சாட்சிகளின் மூலம் உறுதி செய்கிறான் அவன்.
அப்புறம் என்ன? நாம் அவனிடத்திலே உண்மையான பக்தியை வைத்துவிட்டு, அப்பாடா என்று இருக்க வேண்டியது தானே? சரணாகத ரட்சகனாக, பக்தவத்சலனாக பகவான்தான் இருக்கிறானே! அந்த நம்பிக்கையோடு, பக்தியோடு, அவனையே சரணாகதி என்று அடைவோம். அவன் நம்மை அளித்துக் காப்பான்!