சிங்கம் என்று நினைத்தாலே நமக்கு என்ன தோன்றும்? பயங்கர உருவத்தோடு இருக்கும்; வாய் பிளந்திருக்கும்; பிடரி சிலிர்த்திருக்கும்; கண்கள் எரிதழலைப் போல இருக்கும் ; நாக்கைச் சுழற்றினாலே பிராணிகள் உயிர்போய்விடும் என்றுதானே உடனே நினைக்கிறோம்? இல்லை! இல்லை! பிரியங்கரமான உருவம். நரசிம்மப் பெருமானுடைய உருவம் அழகானது இது ஒரு ஆழ்வாரின் கோணம்.
அடுத்தவர் சொன்னார்: அழகு இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அழகு ஒரு பக்தனுக்கு எப்போது பிடிக்கும்? திருமேனி அழகு மட்டுமல்ல உடல் அழகாய் இருப்பது கூடப் பெரிதல்ல. ஆனால், உள்ளம் அழகாய் இருக்க வேண்டுமே? மனசு அழகாய் இருக்க வேண்டுமே? திருமேனி மட்டும் அழகாய் இருந்து, உள்ளம் அழகாய் இல்லாமல் போய்விட்டால் என்னாகும்? நரசிம்மப் பெருமானுக்கு அப்படி அல்ல. திருவுள்ளமும் ரொம்ப அழகாய் இருக்கிறது. அப்படி என்னதான் அந்தத் திருவுள்ளத்திற்கு ஏற்றம் என்று கேட்டால், ஒரு சிறு குழந்தைக்கு ஆபத்து வந்தபோதும் அவனையும் ரக்ஷிப்போம் என்று ஓடோடி வந்தான் அல்லவா? அதுதான் உள்ளத்தில் இருக்கும் அழகு.
ஒரு குழந்தை கூப்பிட்டால் வரவேண்டிய அவசியம் பகவானுக்கு இல்லையே? அப்படி ஓடோடி வந்ததுடன், அவன் கைகாட்டிய இடத்தில் ‘பிரஹ்லாத வரதனாய்’க் காட்சி அளித்தானல்லவா? இவர் எங்கேயோ காண்பிக்க அவர் எங்கேயோ தோன்றவில்லை! பிரஹ்லாதன் என்ற சிறுவன் எங்கு கைகாட்டினானோ, அதே இடத்தில் தோன்றினார்!
இன்னும் ஒரு அழகும் உள்ளது.
சேராத இரண்டை சேர்த்த பெருமை! அதாவது, மனிதனும் சிங்கமும் ஒன்றிணைந்த திருக்கோலம்.
ஒவ்வொரு அவதாரத்துக்கும் இப்படி தனிச்சிறப்பு உள்ளது. மத்ஸ்யாவதாரத்துக்குத் தனிச்சிறப்புள்ளது. கூர்மாவதாரத்துக்குத் தனிச் சிறப்புள்ளது. அதேபோல் இப்போது நாம் அனுபவிக்கப்போகும் நரசிம்மாவதாரத்துக்கும் தனிச்சிறப்புள்ளது. மற்ற எந்த அவதாரத்தையும்விட இதில் உள்ள தனிச்சிறப்பு, இது நமக்கென்று ஏற்பட்ட அவதாரம். எப்போதும் அடியவர்களுக்குக் கதை கதையாக வேதாந்த அர்த்தங்களாக சொல்லிக் கொண்டுபோனால், பிரயோஜனம் கிடையாது. எனக்கு அதில் ஏதாவது இருக்கிறதா என்றுதானே முதலில் கேட்போம்! நான் வெளிவருவதற்கு ஏதாவது உண்டா என்றுதானே கேட்போம்!
விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மிதிலா தேசத்துக்குச் சென்றார். அப்போது சீதா கல்யாணம் நடக்க வேண்டும். வில்லை முறிக்க வேண்டும். அப்படியானால் அழைத்து வந்த குழந்தைகளை யாரென்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் இல்லையா? ஒவ்வொருவரிடமாக அறிமுகம் செய்துகொண்டே வருகிறார். அப்போது அங்கே சதாநந்தர் என்ற பெரியவர் அமர்ந்திருந்தார். அவரிடம் ராமனைப் பற்றி, “வில்வித்தையைப் பிரமாதமாகக் கற்றவன். அயோத்தியின் சக்கரவர்த்திக்குத் திருமகன்” என்ற பெருமையைச் சொன்னால் அவர் அனாதரத்துடன் இருந்துவிட்டார். சதாநந்தர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பார்த்தார் விஸ்வாமித்திரர். இவருக்கு என்ன பிடிக்குமோ அதைச் சொன்னால், தான் கவனிப்பார் என்று புரிந்து கொண்டு மாற்றினார்.
‘நின் அன்னை சாபம் முடித்தனன்’ – அகல்யையின் சாபத்தைப் போக்கினவன் இந்த ராமன்தான், என்று புரியவைத்தார் (அகல்யையின் மைந்தன்தான் சதாநந்தர்). துணுக்கென்று எழுந்துவிட்டார் சதாநந்தர். நமக்கு என்ன வேண்டுமோ, அதைத்தான் எடுத்துக்கொள்வோம். இதைத்தானே எல்லோருமே பண்ணுகிறார்கள்!
ஆக, பத்து அவதாரங்களிலே நமக்கென்று ஏற்பட்டிருக்கும் அவதாரம் நரசிம்மாவதாரம். இந்த அவதாரத்தின்போது, பகவான் எழுந்தருளியிருந்தது வெகு குறைவான நேரம். ஒரு முஹூர்த்தகாலம்தான் பகவான் இருந்திருக்கிறார். அதற்குள்ளே பக்த பிரஹ்லாதனுக்கு அனுக்ரஹித்தார்; ஹிரண்ய கசிபுவை முடித்தார்.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
என்று கண்ணன் கீதையிலே சாதித்தாற்போலே, மூன்று பிரயோஜனங்களையும் நரசிம்மர் முடித்தார். பகவான் அவதரிக்கிறான் என்று சொன்னாலே, அது இந்த மூன்று பயன்களுக்காக! சாதுக்களை ரக்ஷிக்க வேணும். ப்ரஹ்லாதன் என்னும் சாதுவை ரக்ஷித்துவிட்டார். துஷ்டர்களை முடிக்க வேணும். ஹிரண்யகசிபு என்ற துஷ்டனை முடித்தார். தர்மத்தை நிலை நிறுத்த வேணும். ஒரு சிறுவன் கூப்பிட்டாலும், பகவான் உடனே ஓடோடி வருகிறார். எங்கும் இருக்கிறார். இது முதலான தர்மங்களையெல்லாம் நிலை நிறுத்திக் கொடுத்தார்.
நரசிம்மாவதாரம் வெகு குறைச்சலான நேரத்துக்கு இருந்தாலும் மூன்று பயன்களையும் பகவான் முடித்தார். வைகுந்தத்துக்குத் திரும்ப எழுந்தருளினார்.
ஆனால், இன்றைக்கு இருக்கும் நாம் எப்படி சேவிக்க முடியும்? அது புரிய வேண்டும் என்றால், ‘நமக்கு’ என்பதன் அர்த்தம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.
‘நாம்’ என்றால் அசுரர்கள்; ராட்சதர்கள். எந்த விதமான புண்ணிய சிந்தனையும் இல்லாதவர்கள். நல்வழியில் போகாமல், இந்த சரீரம் நம்மை எந்த வழியில் பிடித்து இழுக்கிறதோ அந்த வழியில் செல்பவர்கள். இதுதான், ‘நமக்கு’ என்கிற வார்த்தைக்குச் சரியான விளக்கம்.
ஆழ்வார் தெரிவித்தார் ‘அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்’ அதாவது சரீரம் போனபடி தான் நான் போவேனே ஒழிய, நீ சாத்திரத்தில் சொன்னபடி, நான் போன நாளே கிடையாது.
‘அகிருத்திய கரணம்; கிருத்திய அகரணம்’ அதாவது, ‘எதையெல்லாம் பண்ணு என்று நீ சொல்லியிருக்கிறாயோ அதையெல்லாம் நான் பண்ணப் போவதில்லை. எதையெல்லாம் பண்ணாதே என்று சொல்லியிருக்கிறாயோ, அதையெல்லாம் நிச்சயமாகப் பண்ணுவேன்.’ இதைத்தான் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
“நீ இந்த அனுபவங்களை இந்த உலகத்தில் கொடுக்காமல், வைக்காமல் இருந்திருந்தால் அந்தப் பக்கமே நான் போயிருக்கமாட்டேனே” என்று தெய்வத்திடம் புலம்புகிறோம். அதற்கும், தெய்வத்தின் தலையிலே குற்றம் ஏற்றிக்கொண்டிருக்கிறோம் நாம்! ஓடக்காரன் ஓடத்தைக் கொடுத்தான்; துடுப்பையும் கொடுத்தான். இவன் துடுப்புப் போடத் தெரியாமல் பிரவாகத்தில் அடிபட்டு விழுந்து பிராணனை விட்டால் ஓடத்தைக் கொடுத்தவனைக் குற்றம் சொல்ல முடியுமா? முடியாது; ஆனால், நாம் அதைச் சொல்லாமல் இருக்கிறோமா?
வைபவம் வளரும்...