Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 4

Sri Narasimha Vaibhavam | ஸ்ரீ நரஸிம்ம வைபவம் - 4
சேராததைச் சேர்ப்பவன்!

பகவான் கொடுத்த ஓடம்தான் இந்த சரீரம். துடுப்பு சரியாகப் போட்டு மோக்ஷத்துக்குச் சென்று சேர்வதற்காகத்தான் இந்த சரீரம் உள்ளது. நாம் அனர்த்தப்பட்டுப் போனால் சரீரத்தைக் கொடுத்தவனைக் குற்றம் சொல்ல முடியாது.

அதேபோல் பகவான் சாத்திரமும் கொடுத்து, ஞானமும் கொடுத்து, நல்லது எது தீயது எது என்று விவேகிக்கிற சக்தியையும் கொடுத்து, சரீரத்தையும் கொடுத்தானென்றால் நாம் அந்த வழியில் போகிறவர்கள் கிடையாது!

அசுர சுபாவத்தோடு இந்த பூமண்டலத்திலே உழலுகிறோம். கீதையிலே பகவான் சொல்கிறான். ‘அர்ஜுனா, தெய்வ சுபாவம் இருந்தால் மோக்ஷம் கிடைக்கும். ஆசுர (அசுர) சுபாவம் இருந்தால் சம்சாரம்.’ எது ஆசுர சுபாவம்?

கோரைப் பற்கள் இரண்டு நீட்டிக் கொண்டு தலையை சிலுப்பிக் கொண்டு கையில் பெரிய கத்தி சூலங்களுடன் “ஹா ஹா” என்று சிரித்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தால்தான் அது ஆசுர சுபாவம் என்று நாம் நினைப்போம். கிருஷ்ணன் சொன்னது அப்படி அல்ல. “அர்ஜுனா நான் வேதத்தில் எதை விதித்தேனோ, அதை மீறி எவன் நடந்தாலும் அவன் அசுரன். வேதத்தில் சொன்னதை யார் ‘ஆம்’ என்று ஒத்துக்கொண்டு அதன்படி நடக்கிறானோ, அவர்கள் எல்லோரும் தேவர்கள்.” பிறப்பால் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கீதையிலே கண்ணன் பிரிக்கவில்லை.

தேவர்கள் என்பதும் அசுரர்கள் என்பதும் நடத்தையாலே விதிக்கப்படுபவை தான். நாம் வேதத்தை ஒத்துக் கொள்கிறோமா? முதலில் நமக்கு வேதமே தெரியாதே! தெரிந்தாலன்றோ, ஒத்துக் கொள்வதும் ஒத்துக்கொள்ளாமல் போவதும். அத்யயனத்தின் பக்கம் நாம் போனதே கிடையாது.

சரி; நாம்தான் பண்ணவில்லை என்றாலும் அறிந்தவர்கள் வாய்மொழியைக் கேட்டாவது தெரிந்து கொள்ளலாம் இல்லையா? பெரியோர்கள் எத்தனையோ பேர் அத்யயனம் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் சொல்படி கேட்டாவது நடக்கலாமே என்றால், பெரியோர் சொல்படி கேட்பது என்பதே கிடையாது.

ஒருவனுக்கு துர்த்தசை (கெட்டநேரம்) வந்துவிட்டது என்றால், அதற்கான முதல் லக்ஷணம் என்ன தெரியுமா? பெரியோர் வாய்ச்சொல்படி கேட்பதை நிறுத்திவிடுவான். அப்படி நிறுத்திவிட்டானென்னால் அடுத்தது அவனுக்கு அனர்த்தம்தான் என்பது நிச்சயப்பட்டுவிடும்.

ஆக, வேதத்தையும் கற்காமல் கற்றவர்களையும் கேட்டு நடக்காமல் இருப்பவர்கள்தான் அசுரர்கள். அப்படியானால் நாம் யார்? சுலபமாய்ச் சொல்லிவிடலாம் நாம் அசுரர்கள்தான்.

ஒருவன் ஆசார்யனிடத்தில் போய்ச் சொன்னானாம், “ராமாயணமெல்லாம் கதை. பாகவதமெல்லாம் கற்பனை. மகாபாரதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. யாரோ ஒருவர் வால்மீகியையெல்லாம் தூண்டிவிட்டுக் கற்பனைக் கதை எழுத வைத்துவிட்டார்கள். சாத்திரம் அத்தனையும் பொய்” என்றானாம். அதற்கு ஆசார்யன் சொன்னாராம், “வாஸ்தவம்தான். ராவணன் என்பவன் கிடையாது. சிசுபாலன் என்று ஒருவன் இல்லவே இல்லை. ஹிரண்யகசிபு வாழவே இல்லை. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து நீ ஒருவன்தான் இருக்கிறாயே!” என்றாராம்.

சாத்திரம் அத்தனையும் பொய் என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவன் தான் ராவணன் கும்பகர்ணன் ஆவானே தவிர வேறு யாருமில்லை!
ஆக, சம்சாரிகளான நாம் ஒவ்வொருவரும், பகவானுடைய வைபவத்தை மறந்து அவனாலே சரீரம் கொடுக்கப்பட்டது என்பதை மறந்து அவனைச் சென்று சேர்வதுதான் நமக்குக் கடமை என்பதையும் மறந்து அவனுக்குக் கைங்கர்யம் என்றால் இன்னது என்பதையே ஞாபகத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம்.

வென்றிய வேண்டி வீழ்பெருக் கிணங்கி வேர்க்கனார்க்கலவியே கருதி
நின்னவானெல்லாம் நெஞ்சென உடையேன்
வேத நூல் பிராயம் நூறு மனிஷர்தான் புகுவரேலும்
பாதியும் உறங்கிப்போகும் நின்னையிப்பதினையாண்டு
பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே

என்று ஆழ்வார் சாதித்தார்:

“இன்னும் எத்தனை காலம்தான் இந்த சம்சாரத்தில் உழலப்போகிறேன் என்று தெரியவில்லை. மறுபடியும் மறுபடியும் இப்பிறவி வேண்டாம்’ என்கிறார். ஆழ்வார்கள் கதறுகிறார்கள். நமக்கோ இதுதான் சௌக்கியமாக இருக்கிறது.

நாம் வெளுத்த ஆடையுடன் வந்துவிடுகிறோம். ரொம்பவும் அழகாக சிரித்துக் கொண்டு இருந்துவிடுகிறோம். சுபாவம் அத்தனையும் அசுரர்களுக்கும் ராட்சதர்களுக்கும் உள்ள சுபாவம்தான். நாம் அசுரர்கள் என்றால், எவ்வளவு தாழ்ந்து போய்விட்டோம். அப்படித் தாழ்ந்து போய்விட்டோம் என்றால், பகவானை அடைவதற்கு வழியே கிடையாதா? அவன் திருவடிகளே கிடைக்காதா? தவறு செய்தது உண்மை. ஆனால், ‘ஐயோ நாம் தவறிழைத்துவிட்டோமே…இனி நாம் இதுபோல் இருக்கக்கூடாது’ என்கிற நல்லெண்ணம் தோன்றிவிட்டால், அவர்களுக்காவது வழி கிடைக்குமா கிடைக்காதா? என்கிற சந்தேகத்தைப் போக்குவதற்காக ஏற்பட்ட தனிச்சிறப்பான அவதாரம் ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.

நாமெல்லாம் ரிஷிகளை சேவிக்கப்போகிறோம். ரிஷிகளைப் பற்றிய சித்திரங்களை… படங்களை எழுதி வைத்திருப்பார்களல்லவா? ஒரு பக்கம் ஒரு மான் இருக்கும். இன்னொரு பக்கத்தில் ஒரு புலிக்குட்டி படுத்துக் கொண்டிருக்கும். நமக்குத் தோன்றும்… மானும் புலியும் என்றைக்காவது சேர்ந்து இருந்து நாம் பார்த்திருக்கிறோமா? உடனே பிடுங்கிக் கடித்து விடும் அல்லவா? ஆனால், அந்த ரிஷியின் பக்கத்தில் இருக்கும் போது, மான் குட்டியும் பேசாமல் இருக்கிறது. புலியும் பேசாமல் இருக்கிறது.

அதைப் போலத்தான் யோகேஸ்வரனான பகவான், சேராத இரண்டை சேர்த்தான். இதைத்தான் ‘அகடிதகடணா சாமர்த்தியம்’ என்று சொல்வார்கள். நரசிம்மப் பெருமானிடம் ஆச்சர்யப்பட்டதே இந்த ‘சேராததை சேர்க்கும் தன்மை’தான்.

நல்குரவும் செல்வம் நரகமும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
திருவிண்ணகர் ஒப்பிலாத அப்பன்
ஒப்பிலியப்பன் பற்றி, ஆழ்வார் ஆறாம் பத்தில் பாடும்போது, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துவிட்டார்.

சுகம் - துக்கம், லாபம் – நஷ்டம், வெற்றி – தோல்வி, அமுதம் – விஷம், பணம் தாரித்ரியம் என்று எதிரெதிராக என்னென்ன உண்டோ, அவை மொத்தத்தையும் சேர்க்கிறார். ‘சேராததை சேர்க்கும் தன்மை’ நரசிம்மரின் பெருமை. இது ஒரு கோணம்.

இன்னொன்று, ‘தாரக தார்ய பாவம்!’ அதென்ன?

வைபவம் வளரும்...

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!