லக்ஷ்மிக்குப் பிடித்தவன்
எம்பெருமானின் இடது புறம் இருக்கும் லக்ஷ்மிதேவியின் திருவடிகளைப் பற்றினால், பெருமானின் திருவடிகளைப் பற்றிவிடலாம். அவர் தனது இடது திருவடியை மடித்துக் கொண்டிருக்கிறார். வலது திருவடியைக் கீழ்நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறார்.
லஷ்மியின் திருவடிகளைப் பற்றிய பிற்பாடு, நம்முடைய திருவடிகளைப் பற்றுங்கள்.
கிட்டும். இவ்வுலக இன்பமும் கிட்டும்.
அவ்வுலக இன்பமும் கிட்டும். மோக்ஷானந்தத்தையே பெறலாம் என்று சொல்லிக்கொண்டே இந்தத் திருத்தலத்தில் – மைசூரில் உள்ள யதுகிரி யதிராஜ மடத்தில் – பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.
எல்லா ஆழ்வார்களுமே ஸ்ரீநரசிம்மனைப் பாடியிருக்கிறார்கள். மணவாள மாமுனிகள் தனது உபதேச ரத்தினமாலையில் தெரிவிக்கிறார்.
ஐப்பசியிலோணம் அவிட்டம் சதயமிவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்
பொதுவாக நம்மை மாதங்களை எண்ணச் சொன்னால் நாம் சித்திரை, வைகாசி என்று எண்ணிவிடுவோமாம். ஆனால், ஐப்பசி என்று ஆரம்பிக்க வேண்டுமாம். ஏனெனில் ஆழ்வார்களில் முதல்வர் ஐப்பசியில் அல்லவா அவதரித்தார்? நட்சத்திரங்களை எண்ணச் சொன்னால் அஸ்வினி, பரணி, கார்த்திகை, என்று… எண்ண ஆரம்பிப்போம் அல்லவா? அப்படி எண்ணாமல் திருவோணம் என்று ஆரம்பித்து எண்ண வேண்டுமாம்!
திருக்கோவிலூர் என்ற ஊரிலே இடைகழியில் மூன்று ஆழ்வார்களும் சந்தித்துக் கொண்டார்களாம். இவர்கள் மூன்று பேரும் வெவ்வேறு இடத்திலே திருஅவதாரம் பண்ணினவர்கள். முதலாமவர் காஞ்சியில் அவதரித்தார். இரண்டாமவர் திருக்கடல் மல்லையிலே அவதரித்தார். மூன்றாமவர் மைலாப்பூரில் அவதரித்தார். அவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். அவர்கள் மூவரும் திருக்கோவிலூரில் போய்ச் சேர்ந்தார்கள். மூன்று பேரும் மூன்று திருவந்தாதிகள் பாடினார்கள். முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் பாடினார்.
‘வையந்தகளியா வார்கடலே
நெய்யாக வெய்யகதிரோன் விளக்காக
செய்ய சுடராழியான் அடிக்கே
சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குக’ என்றார்.
நம் பாபங்கள் அத்தனையும், இடர்கள் அத்தனையும் நீங்குமாம். அதற்காக இதோ விளக்கேற்றினேன் என்ற பொய்கையாழ்வார் ஏற்றிவிட்டார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா
நன்புருகி ஞானச்சுடர்
விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்
இரண்டு பேருமாகச் சேர்ந்து பெரிய விளக்காக ஏற்றிவிட்டார்கள்.
மூன்றாவதாக, பேயாழ்வார் பாடினார்
திருக்கண்டேன்; பொன்மேனி
கண்டேன்; திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;
செருக்கிளறும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம்
கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று
என்று சேவித்தார் பேயாழ்வார்.
இந்த மூன்று ஆழ்வார்களும் ஐப்பசி திருவோணம், அவிட்டம் மற்றும் சதய நட்சத்திரத்தில் அவதரித்ததால்தான், ஐப்பசியில் ஆரம்பிப்பார்கள்.
அப்படியானால் கடைசி மாசம் எது என்ற கேட்டால் கார்த்திகை மாசம். திருமங்கையாழ்வார் அவதரித்த மாதம். அப்படியானால் கடைசி நட்சத்திரம் எது என்று கேட்டால், கிருத்திகா நட்சத்திரம். அவர் கார்த்திகையில் கிருத்திகையில் திரு அவதாரம் பண்ணினார் திருமங்கையாழ்வார். இவர்கள் நரசிம்மரை எப்படி தரிசனம் பண்ணினார்கள்?
தழும்பு இருந்த சார்ங்கநாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத வண்ணர் விரல்
கடல் போன்ற நீல வர்ணம் படைத்த பெருமானின் விரல் என்றால் சக்தி! அழகிய இடது தோளில் எப்போதும் வில் இருக்குமாம். அது தேய்ந்து தேய்ந்து அவரது இடது தோளில் தழும்பு ஏற்பட்டு விட்டதாம். சொரசொரப்பு இருக்கும். எப்போது லக்ஷ்மிதேவி பெருமாளை ஆலிங்கனம் பண்ண வந்தாலும் அந்த சொரசொரப்பு இருந்தால்தான் அணைப்பாளாம். ஏனெனில் மழுமழுவென்றிருந்தால் அந்த ஆணுக்கு வீரமில்லை என்று அர்த்தமாம்.
ஒரு ராஜாவை அவனுடைய தர்மபத்தினி கைப்பிடிக்க வேண்டுமானால் அங்கங்கே அடிபட்டுத் தழும்பு இருக்க வேண்டுமாம். நாட்டை, ஜகத்தை ரக்ஷிக்கும்போது அந்தத் தழும்பு ஏற்பட்டிருக்க வேண்டுமாம். அப்படி இருந்தால்தான் பத்தினிக்குப் பிடிக்குமாம்.
வில் தேய்ந்து தேய்ந்து, அவரது இடது தோளில் தழும்பு ஏற்பட்டு விட்டதாம்.
வைபவம் வளரும்...