வரதன்!
கணவரின் தழும்பை விரும்புவதுதான் வீரபத்தினிக்கு அழகு!
‘கோட்டுக்கால் கட்டில்மேல்’ என்ற ஆண்டாள் பாசுரத்தில் வருகிறதே கட்டில். அந்தக் கட்டில் எப்படி செய்யப்பட்டதாம் தெரியுமா?
கட்டிலுக்குக் கால் செய்ய மரம் இல்லையாம். கண்ணன் பத்து வயசில் மதுரை நகரத்துக்குப் போய், அங்கிருக்கும் குவலயாபீடம் என்ற பெரிய யானையின் தந்தத்தை முறித்து எடுத்து வந்தாராம். அது எவ்வளவு பெரிய வீரச்செயல்! அந்த தந்தத்தைக் கொண்டு கட்டில் செய்து கொடுத்தால்தான் நப்பின்னை படுத்துத் தூங்குவாளாம்! ஏனெனில், அப்போது தான் நம் பர்த்தாவீரன் என்ற நம்பிக்கை அவளுக்கு வருமாம்.
அதுபோல இங்கேயும் ‘தழும்பு இருந்த சார்ங்கநாண் தோந்தவாம் அங்கை’ என்கிறார். அடியார்களை ரட்சிக்க வில் ஏந்தி, அதனால் சொரசொரப்பாகிய ஒரு தழும்பைச் சொன்னார். இது திருத்தோளின் மேல் உள்ள தழும்பு. மற்றொரு தழும்பு உள்ளது. அது திருவடியில் உள்ள தழும்பு.
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் சகடாசுரனாக வந்தான் ஒரு அசுரன். வண்டிச் சக்கரத்தின் மேல் ஆவேசித்து தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையைக் கொல்வதற்காக வருகிறான். அப்போது கண்ணன் ஓங்கி உதைத்தார். கண்ணன் யாரையும் கொல்வதற்காக சண்டையெல்லாம் போடவேமாட்டார். ராமாவதாரத்தில் தான், சண்டையிட்டு ஜெயிப்பதெல்லாம்! கிருஷ்ணாவதாரத்தில், அவர் குழந்தைத் தனத்துக்குத் தகுந்தாற்போலே ஏதாவது பண்ணுவார். அப்படிப் பண்ணும்போது நாலு பேருக்குப் பிராணன் போகும்.
கூரத்தாழ்வார் சொல்கிறார்: ‘விளக்கு ஏற்றி வைக்கிறோம். ஏற்றிய விளக்கில் விட்டில் பூச்சிகள் அதுவாக வந்துவிழும்.’ விளக்கு அதைக் கூப்பிடவே கூப்பிடாது. ஆனால், விட்டில் பூச்சி தானாக விழுந்து உயிரை விட்டுவிடும் அல்லவா? அதுபோல், ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கு! கண்ணனே விளக்கு! பூதனை ஒரு விட்டில் பூச்சி. அகாசுரன் ஒரு விட்டில் பூச்சி. அரிஷ்டாசுரன் ஒரு விட்டில் பூச்சி. தேனுகாசுரன் ஒரு விட்டில் பூச்சி. பகாசுரன் ஒரு விட்டில் பூச்சி. அவர்களாக வந்து விழுந்தார்கள். கண்ணன், வா வா… சண்டை போடுகிறேன்” என்றா அழைத்தார்? அவர் ஏதோ குழந்தைத்தனம் செய்தார். செய்யும் போது அவர்கள் இறந்து போனார்கள். தன் திருவடித் தாமரைகளாலே சகடாசுரனை உதைத்து விரோதிகளை அழித்தார். இதனால் திருவடியில் ஒரு தழும்பு உள்ளதாம்.
ஆக, ஒரு தழும்பு தோளில் உள்ளது. ஒரு தழும்பு தாளில் உள்ளது. ஒன்று பரத்வத்தை சொல்லியது. ஒன்று சௌலப்யத்தை சொல்லியது. பெருமாளுக்குப் பெருமையும் உண்டு; எளிமையும் உண்டு. பெருமையும் எளிமையும் யார் சம்பந்தத்தாலே ஏற்படுகிறது? அடுத்ததாக இன்னொரு தழும்பைப் பற்றி சொல்கிறார். மகாலட்சுமி அமர்ந்து அமர்ந்து மார்பில் ஒரு தழும்பு ஏற்பட்டு விட்டதாம்! இது மூன்றாவது அடையாளம். முதலில் தோளில் பெருமையும், தாளில் எளிமையும் சொன்னாரே, அந்தப் பெருமைக்கும் எளிமைக்கும் யாருடைய சம்பந்தம் காரணம்? இதோ திருமார்பில் தழும்பிருந்த பூங்கோதையாள். அவள் திருமார்பை விட்டு விலகாதிருக்கும் ஸ்ரீமகாலக்ஷ்மி தாயார். வக்ஷஸ்தலம் என்று சொல்வார்கள். மகாலக்ஷ்மி அமர்ந்து அமர்ந்து பெருமாளுடைய திருமார்பில் முக்கோண வடிவில் ஒரு மரு ஏற்பட்டுவிட்டதாம். திருவரங்கத்தில் சேவித்தாலும், வேறு எங்கு சேவித்தாலும் அதைப் பீடமாகக் கொண்டுதான் லக்ஷ்மி எழுந்தருளியிருப்பாராம். அதனால்தான் நித்ய ஸ்ரீ, அஜயா:, சாஸ்வத: என்றெல்லாம் மண்டோதரியின் வாக்கியமாக, வால்மீகி பகவான் ராமாயணத்தில் எழுதி வைத்துள்ளார்.
பெருமாளின் திருமார்பில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருப்பாள் அல்லவா? அவள் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பாள் அல்லவா? அந்தக் கால்களுக்கு அர்சனை செய்து, அடியார்கள் குங்குமம் சமர்ப்பிப்பார்கள் அல்லவா? அந்தக் குங்குமம் பட்டுப் பட்டுப் பெருமாளின் திருமார்பில் தழும்பு ஏற்பட்டுவிட்டதாம்!
தொழும் அடியார்களைக் கடைத்தேற்றுவதற்கு பகவான் பாடுபடுவானே தவிர, தள்ளிவிடுவதற்கு அவன் நினைக்கவே மாட்டான். நாமெல்லாம் பிறப்பாலே எப்படி இருந்தாலும், நடத்தையாலே அசுரர்களாகத் தாழ்ந்து போய்க் கிடக்கிறோம்.
நமக்கு வரம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை பெருமாளுக்கு. அவருடைய பெயரே வரதன் அல்லவா? இன்றைக்கும் வரதனாகக் காஞ்சிபுரத்திலே சேவை சாதிக்கிறார் பகவான். வரதன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? ‘வரம் ததாதீதி வரதஹ.’ அதாவது வரத்தை வாரி வாரிக் கொடுக்கிறான். நீங்கள் எல்லாரும் காஞ்சிபுரத்துக்குப் போய் வரதனை சேவித்திருக்கலாம். வரத்தை வாரி வாரிக் கொடுப்பவர் அவர். அவர் அப்படி ஒரு விரதம் வைத்திருக்கிறாராம். யார் யார் என்னென்ன வந்து கேட்டாலும், அதைக் கொடுத்தே தீர வேண்டும் வேண்டும் என்று வைத்திருக்கிறாராம்! இப்படி ஒரு தீக்ஷை பகவானுக்கு உண்டு. ஆனால், அதில் என்ன கஷ்டம் என்றால், அர்ச்சாவதாரமாக சிலை ரூபத்தில் நின்று கொண்டிருந்தால், சிலை வாய் திறந்து பேசுமா? நாம் அதன்கிட்டே போய் நின்றால் சிரிக்குமா? அதற்காக ஒருவனைத் தேர்ந்தெடுப்போம்’ என்று நினைத்தாராம். அவன் பிறப்பால் அசுரனாக இருந்தாலும், தன் நடத்தையாலும் வளர்ப்பாலும் பாகவதோத்தமனாக இருப்பவனைப் பிடிப்போம். அவன் வாக்காலே நாமும் வந்து அவதரிப்போம்’ என்று முடிவு பண்ணினார் பகவான்.
அதற்காகத் தோன்றிய அவதாரம் ஸ்ரீ நரசிம்மப் பெருமான் அவதாரம். ஆக, வரத்தைக் கொடுப்பவன் வரதன். நரம் கலந்த சிங்கமாக – நரசிம்மமாக, பிரஹ்லாதனுக்கு வரம் கொடுத்தவர் நரசிங்கப் பெருமான்.