Sri Selva Nambi | ஸ்ரீ செல்வநம்பி வைபவம்
ஸ்ரீ செல்வநம்பி வைபவம்
(பெரியாழ்வார் வைபவத்திலிருந்து தொகுக்கப்பட்டவை)

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள பெருங்கருணை என்னும் சிற்றூரில் அவதரித்தவர் வைணவ சீலரான ஸ்ரீ செல்வ நம்பிகள். இளம் வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத்தேர்ந்து, பெருந்தன்மை, தியாகபுத்தி போன்ற குணங்களுடன் திகழ்ந்து வந்த இவரை பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியன் தனது நாட்டின் ராஜ புரோகிதராக நியமித்ததுடன் பெருங்கருணையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு கோயிலும் அமைத்துக் கொடுத்து செல்வநம்பிகள் பொறுப்பில் ஒப்படைத்தான்.

பாண்டிய குலத்தைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் என்னும் அரசன் கூடல் என்ற மதுரை நகரில் அரசு செலுத்திவந்தான். ஒரு சமயம் ஒரு ஏழை அந்தணனின் வாக்கின்படி இகத்திலேயே (இந்த உலகத்திலேயே) பரலோகத்திற்கு வேண்டியவைகளுக்கு பரவத்ஸம் செய்யவேண்டும் (நற்கதியைப் பெறுவதற்கான விஷயங்களை ஏற்படுத்தித் தருதல்) என்பதை அறிந்து தன் புரோகிதனான செல்வநம்பியை பரம்பொருளை நிர்ணயம் செய்வது எவ்வாறு என்று விளவினான். அதாவது, எது முழுமுதற்கடவுள் என்பதை அனைவரும் அறியும்படி நிரூபணம் செய்தல்.

செல்வநம்பி வித்வான்களைக் கூட்டி விவாதம் நடத்தி செல்வம் நிறைந்த பொற்கிழி (ஸ்வர்ண நாணயங்கள் நிறைந்த பொற்கிண்ணம்) ஒன்றை சபா மண்டபத்தில் ஒரு தோரணத்தில் கட்டி,, எந்த வித்வானுக்குக் கிழி தாழ்கிறதோ, "பரம்பொருள்" இதுதானென்று அவர் அளிக்கும் விளக்கமே உண்மையானது என்றுகொள்ளவேண்டும் என்று பணித்தான்.

பின்னர், எம்பெருமானின் அருளால், விஷ்ணுசித்தர் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார், "விஷ்ணுவே பரதெய்வம்" (முழுமுதற்கடவுள்) என்பதை வேதங்கள் என்று வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்தும் ஆயிரமாயிரம் மேற்கோள்களுடன் சந்தேகத்தை அறவே ஒழிக்கும் வண்ணம் விளக்கினார். இவர் இப்படி உரைத்தபோது பொற்கிழி இவர் பக்கம் தாழ, இவரும் அக்கிழியை அறுத்துக் கொண்டருளினார். இதனைக் கண்ட அரசன் மற்ற வித்வான்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம், பட்டத்து யானைமேல் விஷ்ணுச்சித்தரை ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்றதுடன், விஷ்ணுசித்தரைப் போற்றும் வண்ணம் புகழ்துதிகள் பாடி, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தனர். மேலும் அரசன் இவருக்கு "பட்டர்பிரான்" என்ற திருநாமத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.

தன்னை ஸ்தாபித்து (நிரூபித்து) இப்படி இவர் ஊர்வலமாக வருவதைகக்காண, எம்பெருமான் தன் பிராட்டியரான லக்ஷ்மியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் தன் பரிவாரங்களுடன் வந்து காட்சி தந்தான். தன் சிறப்புக்கு எம்பெருமானே காரணம் என்றறிந்த விஷ்ணுசித்தர், இப்படி அனைவரும் காணும்படி வந்து நின்ற எம்பெருமானுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி, தன் அன்பு மிகுதியால் காப்பாக, தான் அமர்ந்திருந்த யானைமேல் இருந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு "பல்லாண்டு பல்லாண்டு" என்று பாடல் பாடத் தொடங்கினார்.

பின்பு விஷ்ணுசித்தர் செல்வநம்பியாலும் அரசனாலும் மேலும் கொண்டாடப்பட்டு, பரிசுகள் பெற்று வில்லிபுத்தூர் திரும்பினார்.

செல்வநம்பி வாழித்திருநாமம்

அன்னவயல் கோட்டிநகர்க்கதிபதியோன் வாழியே
ஆவணிசேர் பூசத்தில் அவதரித்தான் வாழியே
வண்ணமலராள்கோனாய் வந்துதித்தான் வாழியே
மறையவர்கோன் பட்டர்பிரான் வாழ்த்துமவன் வாழியே
பன்னுபல நற்கலைகள் பயிலுமவன் வாழியே
பண்புடனே கோட்டிநம்பி பணியுமவன் வாழியே
தென்னவனுக்காரியனாய்த் தேர்ந்துரைப்போன் வாழியே
செல்வநம்பி திருவடிகள் சகதலத்தில் வாழியே

செல்வநம்பி திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.