Tirukachi Nambi | திருக்கச்சி நம்பி வைபவம்

Tirukachi Nambi | திருக்கச்சி நம்பி வைபவம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருக்கச்சி நம்பி வைபவம்
திருநஷத்ர திருநாள் : மாசி, மிருகசிரீடம்

திருநஷத்ர தனியன் :

கும்பே ம்ருகஸிரோத்பூதம் யாமுனார்ய பதாஸ்ரீதம் |
தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமாஸ்ரயே ||

காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமானின் கருணைக்கு இருப்பிடமாய்,மிகச் சிறந்தவராயும், ஸ்ரீ ஆளவந்தாரின் திருவடிகளை ஆஸ்ரயித்தவரும்,கும்ப (மாசி) மாதம் மிருகசிரீட நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் திருக்கச்சி நம்பி என்னும் ஆசார்யர்.

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீகாஞ்சீபூர்ணமுத்தமம் |
ராமானுஜமுநேர் மாந்யம் வந்தேஹம் ஸஜ்ஜனாசஸ்ரயம் ||

ஸ்ரீவரதராஜனின் கருணைக்கு இருப்பிடமாய், மிகச் சிறந்தவராயும், ராமானுஜமுனிக்கும் மதிக்கத் தக்கவராய், நல்லோர்கள் சென்று சேருமிடமான திருக்கச்சி நம்பியை வணங்குகிறேன்.

மஹீசார க்ஷேத்ரம் என்கிற திருமழிசைக்கு அருகிலேயே பூவிருந்தவல்லி (இன்று இவ்வூர் பூந்தமல்லி என்று அழைக்கப்படுகிறது) என்று ஒரு ஊர் உள்ளது. அதற்கு முன்காலத்தில் இவ்வூர் தர்மபுரீ என்றும் புருஷமங்கலம் என்றும் பெயர் பெற்றிருந்தது. பிறகு, திருக்கச்சி நம்பிகள் திருநந்தவனம் வைத்த காரணத்தால், பூவிருந்தவல்லி என்னும் பெயர் பெற்றது. இந்த திவ்யதேசத்தில், வைஸ்ய குலத்தைச் சேர்ந்த வீரராகவ செட்டியாருக்கும், கமலையார்க்கும் நான்காவது குமாரராய், கலி கடந்த 4110ல் (கி.பி.1009) ஸௌம்ய வருடம், மாசி மாதம், சுக்ல பக்ஷம்,தசமி திதி, வியாழக்கிழமை, மிருகசிரீஷ நக்ஷத்திரத்தில் திருக்கச்சி நம்பிகள் அவதாரம் செய்தார். இவரது இயற்பெயர் கஜேந்த்ர தாசர் என்பதாகும். தாம் கைங்கர்யம் செய்துவந்த பார்க்கவரான திருமழிசை ஆழ்வாருடைய அருளாலே பிறந்ததால், இவர் தந்தையார் இவருக்கு "பார்க்கவப்ரியர்" என்றும் பெயரிட்டார். இவர் ஸ்ரீ ஆளவந்தாருடைய சிஷ்யராவார். ஸ்ரீ ஆளவந்தார் இவருக்கு அளித்த திருநாமம், "பேரருளாள தாஸர்" என்பதாகும். கச்சியில் (காஞ்சிபுரம்) வாழ்ந்ததால், திருக்கச்சி நம்பி, காஞ்சிமுனி, காஞ்சீபூர்ணர் என்றும் அழைக்கப்பட்டார். காஞ்சி ஸ்ரீவரதாரஜ பெருமாளுக்கு திருவாலவட்டம் (விசிறி வீசுதல்)கைங்கர்யம் செய்துவந்தவர்.

எம்பெருமானார் (இராமானுசர்) தம் ஆசார்யர்களில் ஒருவராக அபிமானிக்கப் பெற்றவரும், ஆளவந்தாருடைய அந்தரங்க சிஷ்யர்களில் ஒருவருமான திருக்கச்சி நம்பியின் வைபவம் இனி விவரிக்கப்படுகிறது.

இவர் தந்தையார் தான் முதுமை அடைந்தபோது, தன்னிடம் இருந்த செல்வங்களை நான்கு பிள்ளைகளுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்து, அந்த தனத்தைக் கொண்டு நல்வழியில் செலவுசெய்து, தம் குலத்தாரும் மற்றோரும் மெச்சும்படி தனம் பெருக்கி வாழும்படி அறிவுரை கூறினார். அவர் சொற்படியே இவர் சகோதரர்கள் மூவரும் பணத்தைப் பெருக்கினர். ஆனால் நம்பிகளோ, தன் பங்கை பகவத் பாகவத கைங்கர்யங்களுக்கு உபயோகப்படுத்தினார். தந்தையார் இவரிடம், "பணத்தை என்ன செய்தாய்" என்று கேட்டபோது, "கலங்காப் பெருநகரிலே சேமித்து வைத்துள்ளேன்" என்று பதில் கூறினார். தந்தையார் இதைக்கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டவராயினும், குல தர்மத்துக்கு ஏற்றவாறு நடக்கவில்லையே என்று, "நீ தாஸானு தாஸனாகப் போகத் தகுந்தவன்" என்று நிறையும் குறையும் தெரியும்படிக் கூறினார். அதைத் தந்தையின் கட்டளையாகக் கொண்டு நம்பியும் எம்பெருமானுக்கே தொண்டு பூண்டு ஒழுக எண்ணி, திருவல்லிக்கேணி முதலான திவ்ய தேசங்களைச் சேவித்துவிட்டு, மறுபடியும் பூவிருந்தவல்லிக்கு வந்தார்.

பேரருளாளனான காஞ்சீ வரதராஜ பெருமாள், நம்பிகளின் கனவில் தோன்றித் தமக்குப் புஷ்பம் சமர்ப்பிக்கும்படி நியமித்தார் மேலும்,தம்முடைய ஊருக்கு வழியும் காட்டினார். அந்தக் கனவின்படியே நம்பியும் தமக்குக்கிடைத்த தர்மபாகத்தில் திருநந்தவனம் உண்டாக்கி,அதன் வாசனைப் பூக்களைக்கொண்டு மாலை தொடுத்து நித்தியமாக பூவிருந்தவல்லியிலிருந்து நடந்து, காஞ்சீ வரதராஜ பெருமாளுக்குப் பூச்சார்த்தி, அப்பெருமானிடம் பக்தி பூண்டு வாழ்ந்துவந்தார். இப்படி பல நாட்கள் சென்றபின், நம்பிகளின் அயர்ச்சியைப் பேரருளாளன் பொறுக்கமாட்டாமல்,பின் தமக்கு அக்னியில் தோன்றியதால் உண்டான தாபம் தீரும்படி, ஆலவட்டம் (விசிறி) வீசும்படி நியமித்தார். அதன்படியே, நம்பியும் ஆலவட்டக்கங்கர்யம் செய்துவந்தார். அவருடைய பக்தியில் மகிழ்ந்த பெருமான் அவருடன் தம் அர்ச்சை நிலையைக் குலைத்துக்கொண்டு,நேருக்கு நேர் வார்த்தையாடி (பேசி) வந்தார். பெருமானின் ஆணை கொண்டு, ஸ்ரீ ஆளவந்தாரிடம் திருவடி சம்பந்தம் (பஞ்சஸம்ஸ்காரம்) பெற்று, ஆளவந்தாருடைய மதிக்கக்கூடிய சிஷ்யர்களுள் ஒருவராக விளங்கினார்.

ஒருநாள், நம்பிகள் தீர்த்தமாடிவிட்டு வரும்போது, அவருடைய திருவடித் துகளை (பாதம் பட்ட மண்) ஒருவன் தினமும் தன் தலையிலும் உடம்பிலும் பூசிவந்தான். ஒருநாள் இதைக்கண்ட நம்பிகள், "இதுவென்ன?" என்று அவனைக் கேட்க, "தேவப்பெருமாளோடு பேசுகிற தேவரீரின் திருவடிப் பொடி அடியேனுக்கு மிகவும் வேண்டியது; அதனால் இப்படிச் செய்கிறேன்" என்று சொல்லி, "ஸ்வாமி! அடியேனுக்கு மோக்ஷம் உண்டா? என்று பெருமானிடம் தெரிந்து சொல்லவேண்டும்" என்று வேண்டினான். அப்படியே அன்றிரவு பெருமாளிடம் நம்பிகள் கேட்க, "பாதத்துளி படுவதால், இவ்வுலகம் (பரமபதம்) பாக்கியம் அவனுக்கு நிச்சயம் உண்டு" என்று பெருமான் விடை அளித்தான். அதை அந்த அடியானிடம் தெரிவிக்க,அவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். பெருமான் சொன்னவாறே அவனுக்கு ஸ்ரீவைகுண்டப் ப்ராப்தியையும் அருளினான்.

நம்பிகள் தமக்குப் பரமபதப் பேறு நிச்சயம் என்று உறுதி கொண்டிருந்தார். அதைப்பற்றி பெருமானிடம் கேட்க,பெருமானும் புன்சிரிப்புடன், "அதெப்படி முடியும்? பரமபதமானது வானவர் நாடு என்றும் விண்ணவர் நாடு என்றும் சொல்லப்படுகிறதே. அதனால், நீர் பாகவத அபிமானம் (அடியவர் ஒருவருக்குக் கைங்கர்யம் செய்வது) பெற்றால்தான் ஸ்ரீவைகுண்டத்தை அடையமுடியும் என்று கூறி, மேலும் உம்முடைய பக்திக்கு, அதாவது, நீர் விசிறி வீசும் கைங்கர்யத்திற்கு எம் அர்ச்சை நிலையைக் குலைத்துக்கொண்டு உம்முடன் பேசினோம்; பட்டுக்கும் ஆட்டத்துக்கும் சமமாயிற்று. எனவே பாகவத அபிமானம் பெற்றால், பரமபதத்தை அடையும் பேறு பெறலாம்" என்று அருளினான். அதுகேட்டு, நம்பியும் அந்த அபிமானத்தைப் பெற ஸ்ரீரங்கத்தில் திருக்கோட்டியூர் நம்பியிடம் தம்மை மறைத்துக்கொண்டு, மாட்டுக்காரனாக இருந்துவந்தார்.

ஒருநாள், மாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துப் போன இவர், இரவு நெடு நேரமாகியும் வரவில்லை. மழையும் பெய்துகொண்டிருந்தது. திருக்கோட்டியூர் நம்பியும் மாட்டுக்காரனான இவரைத் தேடிக்கொண்டு போனபோது, மாட்டுக்காரனான இவர் தம் ஆடையை மாட்டின்மேல் போர்த்தித் தாமும் அதன்மேல் கவிழ்ந்து படுத்திருந்தார். "ஏன் இப்படிச் செய்தாய்?" என்று திருக்கோட்டியூர் நம்பி கேட்க, நம்பிகளும், "பசு மழையில் நனைந்தால், சீதளம் பிடித்து, அதிலிருந்து பெறப்படும் பாலும் சீதள குணத்தைப் பெறும்;அதைப் பருகும் உமக்கும் சீதளாமாகி நோய் செய்யுமே என்று கருதி, இவ்வாறு செய்தேன்" என்றார். இதனால் மகிழ்ந்த திருக்கோட்டியூர் நம்பி, அவரைத் தன் இல்லத்திற்கு அழைத்துச்சென்று,தன் மனைவியிடம், "நம் மாட்டுக்காரனுக்கும் உணவுகொடு" என்று கூறினார். அதுகேட்டு மகிழ்ந்து, தம்மைத் திருக்கச்சிநம்பிகள் என்று திருக்கோட்டி நம்பிகளிடம் காட்டிக்கொண்டு, அவரிடம் விடைபெற்றுக் காஞ்சியை அடைந்து, முன்போலவே கைங்கர்யம் செய்துவந்தார்.

நம்பிகளின் பக்தியில் மகிழ்ந்த பேரருளாளன், அவர் கரத்தாலே அமுது செய்தருளத் திருவுள்ளம் கொண்டு, ஒருநாள், தளிகை அமுதுசெய்யும் அவசரத்தில் (தளிகையைப் பெருமான் முன்வைத்து உண்ணப்பண்ணும் நிலை) திரை போடப்பட்டதும், அர்ச்சகரை வெளியே போகச்சொல்லி,நம்பிகளைப் பிரசாதத்தை எடுத்துத் தரும்படி நியமித்து, எல்லாவற்றையும் அர்ச்சை நிலையை மாற்றி அமுதுசெய்துவிட்டான். பிறகு, திரையை நீக்கிப் பார்த்தபோது, வெறும் பாத்திரங்கள் இருப்பதைக் கண்டவர்கள், "அர்ச்சாமூர்த்தி அமுது செய்திருக்க முடியாது; நம்பிகள்தான் எல்லாவற்றையும் உண்டிருப்பார்" என்று அவர்மேல் பழி சுமத்தினர்

இதன்மூலமாக நம்பியின் பக்திப் பெருமையை உலகறியச் செய்ய நினைத்த எம்பெருமான், வடக்கே ஒரு அடியவர் கனவிலே தோன்றி, தனக்கும் 1000 தளிகை (1000 அண்டாக்கள்) சர்க்கரைப் பொங்கல் தளிகை சமர்ப்பிக்கும்படி நியமித்தான். அவரும் மிக மகிழ்ந்து, காஞ்சிக்கு வந்து, பகவானின் நியமனப்படி, 1000 தளிகை சர்க்கரைப் பொங்கல் செய்து, பெருமானுக்குக் கண்டருளப்பண்ண ஏற்பாடுகள் செய்தான். தளிகைகள் ஆயிரத்தையும், திரை போடச்சொல்லி, பெருமான், மீண்டும் அர்ச்சகரை வெளியே போகச்சொல்லி, முன்போலவே, நம்பிகளை அந்தத் தளிகைகளை எடுத்துத் தரச்செய்து, அத்தனை தளிகைகளையும் அமுதுசெய்து, வெறும் பாத்திரங்களை இட்டுவைத்தான். பின்னர் திரை விலக்கபட்டபின், அத்தனை பாத்திரங்களும் காலியாக இருந்ததைக் கண்டு, அனைவரும் வியந்தனர். தாங்கள் முன்பு நம்பிகளின்மீது சந்தேகப்பட்டு, பழி சுமத்தியதற்கு அபராத க்ஷாபனம் (மன்னிப்பை வேண்டுவது) பெற்றனர். உடனே பெருமான், மறுபடியும் திரையிடச் சொல்லி, முன்பிருந்தபடியே, பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கல் நிறைந்திருக்கும்படி செய்து, பின் திரையை நீக்கச்செய்து, அனைவரையும் பெரும் ஆச்சர்யத்திற்கு ஆளாக்கி, திருக்கச்சி நம்பிகளின் பக்தியின் பெருமையை வெளிப்படுத்தினான்.

நம்பிகள் ஒரு சமயம் இரவு நெடுநேரம் பெருமானுடன் வார்த்தைகளாடி வெளிவந்தார். மழை பெய்துகொண்டிருந்தது. தம் சிஷ்யனான வரதனைக் கூப்பிட்டார் நம்பிகள். வரதன் அங்கு இல்லை. இரண்டுமுறை அழைத்தபின், ஸாஷாத் வரதராஜ பெருமானே, சிஷ்ய வரதானாக வந்து, அவருக்குப் பாத ரக்ஷையை இட்டு, ஒரு கையில் தீவட்டியையும் (வெளிச்சம் தரும் நெருப்புப் பந்தம்), இன்னொரு கையில், குடையையும் பிடித்துக்கொண்டுபோய், அவரை மடத்தில் சேர்த்துவிட்டான். சற்று நேரத்திற்க்கெல்லாம், உண்மையான சிஷ்ய வரதன் வந்து தான் உறங்கிவிட்டதாகவும், அதனால், தன்னை மன்னிக்கும்படியாகவும் நம்பிகளிடம் விண்ணப்பித்தபோது, இதை அறிந்த நம்பிகள், பேரருளாளனே இதைச் செய்தான் என்று வியந்து, ஒரே நேரத்தில் பெருமான் தன் அடியார் மீது வைத்துள்ள அன்பை நினைத்து உருகியும் இக்காரியத்தைப் பெருமான் போய் நமக்குச் செய்தானே என்று வேதனைப் பட்டும் கலங்கினார்.

பின்பு, பெருமான் இவருக்குப் பகலிலேயும் மேற்கூறிய தொண்டைச் செய்ததால், நாம் அபசாரப்ப்படும்படி ஆகிறதே என்று நினைத்து, பெருமானிடம் வெறுப்புகொண்டு,திருமலைக்குச் சென்று, திருவேங்கடவனுக்கு விசிறி வீசும் கைங்கர்யம் செய்ய எண்ண, திருவேங்கடவனும், குளிர் பிரதேசமான திருமலையில் வாசம் செய்யும் எமக்கு விசிறி கைங்கர்யம் தேவையில்லை; அக்னியில் தோன்றிய தேவப்பெருமாளுக்கே இந்தக் செய்யும் என்று அருளினான்.

பின்னர், திருவேங்கடவனின் நியமனப்படி காஞ்சீபுரம் போக விரும்பாமல், ஸ்ரீரங்கத்தை அடைந்து, ஸ்ரீரங்கநாதனுக்கு விசிறி வீச விரும்புவதாக தெரிவிக்க, பெருமான், காவிரி ஆற்றுப் படுகையில், திரைக்கையால் அடி வருடும்படி பள்ளிகொண்டிருக்கும் எமக்கு உம் ஆலவட்ட கைங்கர்யம் அவசியமில்லை. அத்திகிரி அருளாளனுக்கே (காஞ்சீ வரதர்) இத்தொண்டு ஏற்றதாகும் என்று கூறி, அங்கேயே சென்று தொண்டு செய்யும் என்று நியமித்தான். ஆனால், அத்திகிரிக்குச் செல்ல விரும்பாமல், ஸ்ரீ ஆளவந்தார் கோஷ்டியில் ஆசைகொண்டு, ஆசார்ய கைங்கர்ய அரசராய் வாழ்ந்துவந்தார்.

இவர் பிரிவைச் சகியாத (பொறுக்காத) அத்திகிரி அருளாளன், ஆளவந்தார் கனவில் தோன்றி, திருக்கச்சி நம்பிகளை அனுப்பிவைக்கும்படி நியமிக்க அவரும் அப்படியே நம்பிகளை காஞ்சிக்கு அனுப்பிவைத்தார்.நம்பிகளும், காஞ்சியை அடைந்து, முன்போலவே தொண்டு பூண்டிருந்தார்.

இவ்வாறு, பெருமானின் ஆணைப்படி திருக்கச்சி நம்பிகள் மீண்டும் காஞ்சி நகரை அடைந்து, பெருமானுக்குத் திரு ஆலவட்டக் கைங்கர்யங்களைத் தொடர்ந்து செய்துவந்தார்.

மற்றொரு சமயம், நம்பிக்கு ஏழரை ஆண்டுச் சனியின் சம்மந்தம் நேரப்போவதாக இருந்தது. இதைப் பேரருளாளன் நம்பிக்குத் தெரிவித்து, அதுவரை பிரிவைச் சகித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்ல, நம்பிகள் அதற்கு, "பிரிவைச் சகித்துக் கொள்ளமாட்டேன்" என்றுகூற, பெருமான், ஏழரை மாதமாகிலும் அதை அனுபவித்தே தீரவேண்டும் என்றும், ப்ராரப்த கர்மத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்றும் கூறினான். நம்பிகள் அதுவும் முடியாது என்றுகூற, பெருமான் ஏழரை வாரமாவது? என்று கேட்க, அதுவும் முடியாது என்று நம்பி கூற, ஏழரை நாழிகை (இரண்டரை மணி நேரம்) நேரமாவது சனியின் ஆதிக்கத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்; வேறு எந்த வழியுமில்லை என்று பெருமான் கூறினான்.

ஒருநாள் பெருமானுடைய ரத்னஹாரம் காணாமல் போய்விட்டது. இதை அறிந்த ஊர்மக்கள், அர்ச்சகர்தான் அதைத் திருடி இருக்கவேண்டும் என்று எண்ணி, அவரைக் கேட்க, அவர், தமக்கு ஒன்றும் தெரியாது; நம்பிகள்தான் பெருமானின் சந்நிதியில் எப்போதும் விசிறி வீசிக்கொண்டிருக்கிறார்; அவர்தான் எடுத்திருப்பார் என்று கூற, ஊரார் அவர் சொல்லைக்கேட்டு, நம்பியை அழைத்து அவர்மீது பழி சுமத்தி,நம்பிகளைக் காவலில் வைத்தனர். இது நடந்து சரியாக ஏழரை நாழிகைப்போது கழித்து, பெருமான் திருமேனியிலேயே புஷ்பங்களில் மறைந்திருந்த அந்த ரத்னஹாரம் அர்ச்சகரின் கண்களில் பட, அவர்கள் நம்பிகள் மீது தாங்கள் சுமத்திய பழி தவறு என்று வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டனர். உடனே, பெருமானும் அவர்கள்முன் தோன்றி, நம்பிகள் சனியின் ஆதிக்கத்தை ஏழரை நாழிகையாவது அனுபவிக்கும்படி செய்யவே, தாம் ரத்னஹாரத்தைத் தான் அணிநிதிருந்த புஷ்பமாலைக்குள் மறைத்துக் கொண்டதாக தெரிவித்தான். மேலும், அவரைக் காவலில் இருந்து விடுவிக்கும்படி கூறி, மீண்டும் தம் கைங்கர்யத்திற்கு ஏற்றுக்கொண்டான். ஏழரை ஆண்டுகள் அனுபவிக்கவேண்டிய துன்பத்தை, தாம் விண்ணப்பித்தபடி மிகவும் குறைத்து ஏழரை நாழிகையாய் ஆக்கி அருளினானே பெருமான் என்று ஆனந்தப்பட்டார் நம்பிகள். பேரருளாளன் பெருமை பேசும் விதமாக, "தேவராஜ அஷ்டகம்" என்னும் கிரந்தத்தை அருளிச்செய்து, பரம ஸாத்விகராய் தன் தொண்டுகளைத் தொடர்ந்து செய்துவந்தார்.

நம்பிகள் பெருமானுடன் சகஜமாகப் பேசுபவர் ஆதலால், இராமானுசர் நம்பிகளிடம்,தான் சில விஷயங்களை நினைத்துள்ளேன்; அதைப் \பெருமானிடம் விண்ணப்பித்து, அவன் சொல்லி அருளுவதை அடியேனுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று பிரார்த்திக்க, பேரருளாளன், "நம்பி,ஏதோ இருப்பதுபோல் தோன்றுகிறதே? என்ன விஷயம்?" என்று கேட்டான். நம்பிகள் அதற்கு, "இளையாழ்வார் (இராமானுசர்) ஏதோ நினைத்திருக்கிராராம்; அவற்றைத் தேவரீர் கேட்டுச் சொல்லும்படி கூறினார்" என்று சொல்ல, பெருமான் எல்லாம் அறிந்தவரான இராமானுசர், நாம் சாந்தீபினியிடம் கல்வி பயின்றதுபோல, உம்மைவிட்டுக் கேட்கிறார் என்று சொல்லி, இராமானுசர் கொண்ட சந்தேகங்களை நம்பிகளின் மூலம் அறியாமல், தானே உரைத்தான். அவன் உரைத்த விஷயங்கள் "ஆறு வார்த்தைகள்" என்று போற்றப்படுகிறது. அவை:

(1) மும்மூர்த்திகளில் நானே பரன் (முதல்வன்);
(2) நம் சமயம் சித் அசித் ஈசுவரன் என்று மூன்று பொருள்களாகிற பேதம் உடையது;
(3) என்னை அடைவதற்கு (பேற்றுக்கு) சரணாகதியே (நானேதான்) வழி;
(4) என்னைச் சரணடைந்தவனுக்கு இறக்கும்போது என்னைப்பற்றிய
சிந்தனை அவசியமில்லை;
(5) இந்தச் சரீரத்தின் முடிவிலேயே மோக்ஷம் உண்டு;
(6) பெரிய நம்பிகளிடம் பஞ்ஜ ஸம்ஸ்கராதிகளைப் பெறவேண்டும்

என்று இராமானுசர் கொண்டிருந்த சந்தேகங்களுக்கு நம்பிகள் மூலம் பதில் அளித்தான்.

திருமழிசைப்பிரான் அருளிய திருச்சந்த விருத்தம் என்னும் பிரபந்தத்திற்கு தனியன் வழங்கியவர் திருக்கச்சி நம்பிகள். தனியனை அனுபவிப்போம்:

"உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க - உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது"

நல்ல புத்திரனைப் பெற தவம் செய்யவேண்டும் என்றும், அப்படித் தவம் செய்வதற்கு எந்த இடம் சிறந்தது என்றும் பார்கவ மகிரிஷி (திருமழிசைப்பிரானின் தந்தையார்) பிரமனைக் கேட்க, பிரமன் அவரிடம், ஊர் உலகங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து, திருமழிசை என்னும் மஹா க்ஷேத்திரத்தை இன்னொரு தட்டில் வைக்கும்படி பணித்தான். அப்படி வைத்தபோது, உலகங்கள் அனைத்தும் வைக்கப்பட்ட தட்டைவிட, திருமழிசை என்னும் தலம் வைக்கப்பட்ட தட்டே கனத்து ஓங்கி நின்றதாம். இதை உணர்த்தும் வண்ணமே, நம்பிகள் இப்படி ஒரு அற்புதமான தனியனைத் திருமழிசைப்பிரான் அருளிய திருச்சந்த விருத்தத்திற்கு அளித்துச் சிறப்பித்தார்.

மருவாருந் திருமல்லி வாழவந்தோன் வாழியே
மாசி மிருகசிரீடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழிசொல் அதிசயத்தோன் வாழியே
ஆறுமொழி புதூரர்க்கு அளித்தபிரான் வாழியே
திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராசாட்டகத்தைச் செய்பவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே.

திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!