Tirukkoshtiyur Nambi Vaibhavam | திருக்கோட்டியூர் நம்பி வைபவம்
திருக்கோட்டியூர் நம்பி வைபவம்

திருநட்சத்திரம் : வைகாசி ரோகிணி

ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம் ருதஸாகரம் |
ஸ்ரீமத கோஷ்டீபரிபூர்ணம தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||

ஸ்ரீயப்பதியின் (திருமகள் கேள்வன்) திருவடித்தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும், திருக்கோட்டியூர் நம்பி என்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆச்ரயிக்கிறோம் (வணங்குகிறோம்).

ஸ்ரீ ஆளவந்தார் என்னும் மஹாசார்யர் அவதரித்துப் பதினொரு வருடங்கள் கழிந்தபின் (கி.பி.987) ஸர்வஜித் வருஷத்தில் வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில், காஸ்யப கோத்ரத்தில் ருக்ஸாகையில் பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான (ப்ரீதியுடையவரான) செல்வநம்பியின் வம்சத்திலே, ஸ்ரீபுண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாய், பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தவர் ஆவார் திருக்கோட்டியூர் நம்பி.

ஸ்ரீமந்நாதமுநிகளிடமிருந்து உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி போன்ற மஹாசார்யர்களின் மூலம் கிடைத்த பவிஷ்யதாசார்ய (ஸ்ரீராமானுஜர்) விக்ரஹத்தை ஸ்ரீஆளவந்தார் தம் சரம தசையிலே (இறுதி காலத்தில்) இவரிடம் ப்ரஸாதித்து (அளித்து), அது வந்த வழியையும் அருளிச்செய்து, ரஹஸ்யார்த்தங்கள் அனைத்தையும் ஸ்ரீராமானுஜருக்கு உபதேசிக்கும்படியும், நம் தர்சனத்தை அவர் திருநாமத்தாலே விளங்கவைக்கும்படியும் நியமித்துச் சென்றார். அதாவது, நம்மாழ்வார் தம் ஞான த்ருஷ்டியாலே ராமானுஜர் என்னும் மஹாசார்யர் அவதரிக்கப்போகிறார் என்று உணர்ந்து, அவரது திருவுருவ விக்ரஹத்தை உருவாக்கி, ஸ்ரீமத்நாதமுநிகளிடம் திராவிட வேதமான நாலாயிர திவ்யப்பரபந்தங்களை உபதேசிக்கும்போது அளித்தார். அந்த விக்ரஹத்தை ஸ்ரீமத்நாதமுனிகள் பின்னர் தம் சீடரான உய்யக்கொண்டாரிடம் அளித்தார்; உய்யக்கொண்டார் தம் சீடரான மணக்கால் நம்பிகளிடம் அளித்தார்; நம்பிகள் ஸ்ரீஆளவந்தாரிடம் அளித்தார்; ஸ்ரீஆளவந்தார் திருக்கோட்டியூர் நம்பிகளிடம் அளித்தார்.

ஸ்ரீஆளவந்தார் நியமித்தபடியே மஹாதீர்க்க தரிசியான திருக்கோட்டியூர் நம்பி - அனுவ்ருத்தி பிரஸன்னாச்சர்யர்களுடைய முடிவுபெற்று, எம்பெருமானார் (ஸ்ரீராமானுஜர்) தொடங்கி க்ருபாமாத்ர ப்ரஸன்னாசார்யகளுடைய பரம்பரை வளரவேணும் என்னும் திருவுள்ளத்தாலே (தயையாலே) ஸ்ரீராமானுஜரைப் பதினெட்டுமுறை திருக்கோட்டியூருக்கு நடக்கச்செய்து, வேறு எவர்க்கும் உபதேசிக்கக்கூடாது என்று பிரதிக்ஞை (சத்தியம்) பெற்றுக்கொண்டு, அவருக்குத் திருமந்திர அர்த்தத்தை உபதேசித்தார். ஆனால் "காரேய் கருணையரான" பகவத் ராமானுஜர் ஆசார்ய கட்டளையையும் மீறி, "நமக்கு நரகம் வந்தாலும் வரட்டும்; பலர் உஜ்ஜீவித்தால் (மோக்ஷமாகிய நற்கதியை அடைதல்) போதும்" என்று தயை கொண்டு பலருக்குத் திருமந்திர அர்த்தத்தை உபதேசித்தார். இதைக் கண்டு திருக்கோட்டியூர் நம்பிகள் ராமாநுஜரிடம், "எம்பெருமானாரே! என்று ஸ்ரீராமானுஜரை அணைத்துக்கொண்டு "எம்பெருமானார் தர்ஸனம்" என்று எம்பெருமானார் திருநாமத்தாலே தர்ஸனம் விளங்கும்படி அனுக்ரஹித்து, அதாவது, "இராமானுசாய நம:" என்று உரைப்பவர்கள் நற்கதியைப் பெரும் பாக்கியத்தை அருளி, அவருக்குத் தாமே சரமச்லோக அர்த்தத்தை உபதேசித்து, அதைத் தக்க அதிகாரிகளுக்கு உபதேசிக்கும்படி நியமித்து அருளினார். திருமாலை ஆண்டானை எம்பெருமானாருக்குத் திருவாய்மொழி காலக்ஷேபம் சொல்லும்படி நியமித்தவரும் இவரே. ஆளவந்தாரிடம் கேட்காத அர்த்தங்களை, விஸ்வாமித்ர ஸ்ருஷ்டியுமாக எம்பெருமானார் கூறியதாலே, திருமாலை ஆண்டான் கோபமடைந்து திருவாய்மொழி காலக்ஷேபத்தை நிறுத்தியபோது, பவிஷ்யதாசார்யரான எம்பெருமானாருடைய பெருமையைத் திருமாலை ஆண்டானுக்கு எடுத்துரைத்து, மறுபடியும் காலக்ஷேபம் தொடங்கும்படி செய்தவரும் திருக்கோட்டியூர் நம்பிகளே. ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் விஷம் வைத்ததாலே, எம்பெருமானார் உபவாசம் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, திருக்கோட்டியூரிலிருந்து பதறிவந்து, எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) சிஷ்யர்களாக இருப்பவர்களில் ஒருவரான கிடாம்பியாச்சானுக்கே எம்பெருமானார் திருமேனியில் பரிவு (கருணை) உள்ளதை பரிட்சித்து (சோதித்து) அறிந்து, அவரை உடையவருக்கு திருமடைப்பள்ளி (தளிகை செய்யுமிடம்) கைங்கர்யம் செய்யும்படி நியமித்தவரும் திருக்கோட்டியூர் நம்பிகளே. இவற்றிலிருந்து இவர் பெரிய தீர்க்கதரிசி என்பதும் எம்பெருமானாரிடம் பொங்கும் பரிவை உடையவர் என்பதும், தமக்குக் கேட்ட பெயர் ஏற்படுமானாலும், எம்பெருமானாருக்கு சிறப்பு விளைவிப்பதில் (பெருமை சேர்ப்பதில்) ஊன்றி நின்றவர் என்பதும், ஸ்ரீஆளவந்தார் சிஷ்யர்களில் தலைமை பெற்றவர் என்பதும் விளங்கும்.

இவரது குமாரத்தி (மகள்) தேவகி பிராட்டியார் சிறந்த ஞானம் உடையவளாய் இருந்தாள். இவள் எம்பெருமானாரின் சிஷ்யையும் ஆவாள். "உந்துமதகளிற்றன்" (திருப்பாவை, பாசுரம் 18) பாட்டை எம்பெருமானார் அனுசந்தித்துக்கொண்டு உஞ்சவ்ருத்திக்கு எழுந்தருளும்போது, திருக்கோட்டியூர் நம்பி திருமாளிகை வாசலிலே "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்து" என்று அனுசந்தித்தவுடன், தேவகிபிராட்டியார் கதவைத் திறக்க, அவளை நப்பின்னையாகவே எண்ணி, அவள் திருவடியில் விழுந்தார். எம்பெருமானார் என்னும் ஐதிஹ்யம் "வார்த்தமாலை" முதலான பல ப்ராஸீத க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இதே விஷயம் பெரிய நம்பிகளின் குமாரத்தி அத்துழாய் இடத்திலும் நிகழ்ந்ததாக "திருப்பாவை மூவாயிரப்படி" அரும்பத உரைகாரர் (ஆசிரியர்) எழுதியிருப்பது ப்ராமாணிகர்களால் (ஸ்ரீவைஷ்ணவர்கள்) ஆதரிக்கத் தக்கதன்று. திருக்கோட்டியூர் நம்பிகள், தம் குமாரர் தெற்காழ்வானையும், உத்தாரகரான எம்பெருமானாரை ஆச்ரயிக்கச் செய்தார்.

திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த "பெரிய திருமொழி" (1084 பாசுரங்கள்) என்னும் பிரபந்தத்திற்கு

"கலயாமி கவித்வம்ஸம் கவிம்லோக திவாகாரம் |
யஸ்ய கோபி: ப்ரகாஸாபிராவித்யம் நிஹதம் தம: ||"

என்னும் தனியனை அருளிச்செய்தவர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஆவார்.

திருநக்ஷத்ர தனியன்:

வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டிபூர்ணம் ஸமாஸ்ரயே |
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோஸ்வதத் ||

வாழி திருநாமங்கள் :

மன்னியசீர் ஆளவந்தார் மலர்பதத்தோன் வாழியே
வைகாசி ரோகிணிநாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்துதித்தோன் வாழியே
திருக்குருகைப்பிரான் என்னும் பேர் திகழவந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்குரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில் வாழியே.

காசிபன் தன்கோத்திரத்தைக் கருநிலத்தோன் வாழியே
கலையனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருளே திக்குவழங்குமவன் வாழியே
வைய்யகமுன் தரிசனத்தால் வாழுமென்றான் வாழியே
ஏசறவே உகந்தெதியை எடுத்துரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ் செல்வன்மொழி தேர்ந்துரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.

ஈரேழு மூன்றொன்றில் இதமுரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈரேழுலகுக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடிவந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கொட்டிநம்பி நற்பதங்கள் வாழியே.

அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதினியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள்மந்திரம் எதிராசர்க்கு ஒளித்துரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைந்தான் வாழியே
**செல்வநம்பிகுலம் தழைக்கச் செகத்துதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.

** இதிலிருந்து, பெரியாழ்வார் காலத்தில் அவருக்குப் பரம ஆப்தராய், ஸ்ரீவல்லபதேவன் எனும் பாண்டிய அரசனுக்கு மந்திரியாய் இருந்த செல்வநம்பியின் குலத்தில் உதித்தவர் திருக்கோட்டியூர் நம்பி என்று விளங்குகிறது.

"குறிப்பு நமக்கு கோட்டியூர் நம்பியை ஏத்த, குறிப்பு நமக்கு நன்மை பயக்கும்".

திருக்கோட்டியூர் நம்பிகள் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.