Tirumalai Andan Vaibhavam | திருமாலை ஆண்டான் வைபவம்

Tirumalai Andan Vaibhavam | திருமாலை ஆண்டான் வைபவம்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமாலை ஆண்டான் வைபவம்
திருநக்ஷத்திரம் : மாசி “மகம்”

தனியன் :

பக்தாம்ருதம் வாஞ்சித பாரிஜாதம்
மாலாதரம் யாமுனபாதபக்தம் |
ஸ்ரீபாஷ்யகாரார்த்த ஹிதோபதேசம்
ஸ்ரீஞானபூர்ணம் ஸிரஸா நமாமி ||

பக்தர்களுக்கு அமுதம் போன்றவராய், கேட்பார்க்குக் கேட்டதைக் கொடுக்கும் கற்பக வ்ருக்ஷமாய், யாமுனாசார்யரின் (ஸ்ரீ ஆளவந்தார்) திருவடியில் அன்பு கொண்டவராய், ஸ்ரீ பாஷ்யகாரருக்குத் (இராமானுசர்) திருவாய்மொழியின் பொருளாகிற பரமஹிதத்தை உபதேசித்தவராய் ஞானபூர்ணர் (நல்லறிவு நிறைந்தவர்) என்னும் திருநாமம் உடைய திருமாலை ஆண்டானைத் தலையாலே வணங்குகிறேன்.

ஸர்வதாரி வருடத்தில் மாசி மாதம் மக நக்ஷத்திரத்தில் அழகர் கோயிலான திருமாலிருஞ்சோலையில் வாமநர் என்னும் நித்யஸுரியின் அம்சமாகப் பூர்வசிக ஸ்ரீவைஷ்ணவ பிராம்மண குலத்தில் காஸ்யப கோத்திரத்தில் அவதரித்தவர் திருமாலை ஆண்டான். திருமாலை ஆண்டான் என்பது இவர்களுக்கு வம்ஸ பரம்பரையாக வரும் பட்டப்பெயர் ஆகும். இவருடைய திருநாமம் ஞானபூர்ணர் என்பதாகும். இவருடைய மூதாதையர்களில் ஒருவர் கண்ணுக்கினியான் ஸ்வாமி என்பவர்.

ஒருமுறை சில மலையாள மாந்திரிகர்கள் வந்து அன்ஜன மையைக் கண்ணில் இட்டுக்கொண்டு, மாயம் செய்பவராய் அவர்கள் இருப்பை யாரும் அறியாதபடி மறைந்து நின்று திருமாலிருஞ்சோலை எம்பெருமானாகிய அழகரது தேஜஸ்ஸை அபகரித்துக் கொண்டுபோக வந்திருந்தனர். இதை அறிந்த கண்ணுக்கினியான் ஸ்வாமி, இந்த மாந்திரிகர்கள் பெருமான் கண்டருளும் பலிப் பிரஸாதத்தை உண்டே உயிர் வாழ்கிறார்கள் என்று அறிந்து, அந்தப் பிரசாதத்தில் மிளகு அதிகமாகச் சேர்க்கும்படி செய்தார். இப்படி அவர்கள் பலிப் பிரசாதத்தை உண்டபின், மிளகின் காரம் மிகுதியால், அவர்கள் கண்ணிலிருந்து நீர் பெருகி, அவர்கள் இட்டுக்கொண்டிருந்த அஞ்சன மையானது கரைந்து போனது. இவ்விதம் மை கரைந்துபோக, அவர்கள் உருவம் வெளிப்பட்டு அனைவர் கண்ணிலும்படி தெரிய, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதனால் அந்த ஸ்வாமிக்குத் திருமாலை ஆண்டான் என்கிற பட்டப்பெயர் ஏற்பட்டு, அழகருக்குப் புரோஹிதராகவும் நியமிக்கப்பட்டு, பரம்பரையாக இன்றளவும் அப்பெருமைகள் அவருடைய வம்சத்தவர்களால் அனுபவிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் திருமாளிகைச் சரித்திரம் கூறுகிறது.

திருக்கோட்டியூர் நம்பி என்னும் ஆச்சார்யரின் நியமனத்தால், இராமானுசருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை காலக்ஷேபம் செய்து உபதேசித்தவர் திருமாலை ஆண்டான். ஒருமுறை, இராமானுசர் திருவாய்மொழி காலக்ஷேபம் செய்யும்போது, ஒரு பாசுரத்திற்கு அர்த்தம் கூற, அந்த அர்த்தத்தைத் தன் ஆசார்யரான ஆளவந்தார் கூறியதுபோல் இல்லாமல் வேறுபட்டிருப்பதாகவும், இராமானுசர் தான்தோன்றித் தனமாக அர்த்தம் சொல்கிறார் என்று கோபம் கொண்டு, அவரை மேலே சொல்லவேண்டாம் என்று நிறுத்தச் சொன்னார் திருமாலை ஆண்டான். இதை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி ஓடிவந்து, இராமானுசர் கூறிய அர்த்தங்களைப் பற்றி அறிந்து, இது ஆளவந்தார் அருளிச்செய்தபடியே உள்ளது என்றும், தன் நெஞ்சில் தோன்றியதை இராமானுசர் ஒருபோதும் உரைக்கமாட்டார் என்று உறுதிசெய்து, திருமாலை ஆண்டானிடம் தெரிவிக்க, திருமாலை ஆண்டான் அதை ஏற்றுக்கொண்டு, திருவாய்மொழி காலக்ஷேபத்தைத் தொடரும்படி கூறினார்.

இவர் தம் குமாரரான சுந்தரத் தோளுடையானை உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளிலே ஆச்ரயிக்கச் செய்தார். திருமாலை ஆண்டானுடைய வம்சத்தில் அவதரித்தவர்களில் யாமுனாசார்யர் என்பவர் வாதிகேசரி அழகிய மணவாளச் சீயருக்கு சிஷ்யராய் இருந்தவர்.

ஸ்ரீமாலாதரவம்ஸமௌத்திகமணி: கண்டீரவோ வாதிநாம் |
நாம்நா யாமுநதேஸிக: கவிவர: பாதஞ்சலே பண்டித: ||

திருமாலையாண்டான் வம்சமாகிற கடலில் விளைந்த சிறந்த முத்துப் போன்றவரும், வாதிகளுக்கு சிங்கம் போன்றவரும், கவிகளில் சிறந்தவரும், யோகசாஸ்த்ரத்தில் தேர்ந்தவருமாய் இருந்தவர் யாமுநாசார்யர்.

இவர் பல க்ரந்தங்களை அருளியிருந்தாலும், ப்ரமேயரத்னம், தத்வபூஷணம் ஆகிய இரண்டு க்ரந்தங்கள் மட்டும் இன்றளவும் உள்ளன. திருமாலை ஆண்டானின் வம்சத்தவர்கள் இன்றும் திருமாலிருஞ்சோலையில் அழகருக்குப் புரோஹிதராக இருந்துகொண்டு விசேஷ கௌரவங்களைப் பெற்று வருகின்றனர். சித்ரா பௌர்ணமியில் அழகர் மதுரைக்கு எழுந்தருளும் மஹோத்ஸவத்தில் அழகருக்கு முன்னமேயே திருமாலை ஆண்டான் வம்சத்தவர் பல்லக்கில் எழுந்தருளுவதைக் காணலாம். "ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே" என்பது பொதுஜன வழக்கு.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய "திருப்பள்ளியெழுச்சி" என்னும் பிரபந்தத்திற்கு "தமேவ மத்வா பரவாஸுதேவம்" என்று தொடங்கும் தனியன் அருளியவர் திருமாலை ஆண்டான்.

திருமாலை ஆண்டான் வாழி திருநாமம் :

அம்புவியில் ஆளவந்தார் அடி இணையோன் வாழியே
ஆரியனாம் அவர் பதத்தை அன்புசெய்தோன் வாழியே
வெம்பிவரும் வாதியரை வேர்களைந்தோன் வாழியே
மேதினியில் நாலூர் விளக்கவந்தோன் வாழியே
எம்பெருமானார் எதிராசர்க்கு ஈடுரைத்தான் வாழியே
ஏற்றமுள்ள மாசிமகம் இலங்கவந்தோன் வாழியே
வம்பவிழும் சோலைமலை வாழவந்தோன் வாழியே
மாலாதராரியன்தாள் மாநிலத்தில் வாழியே.

வீசுபுகழ் சங்காழி விளங்குபுயம் வாழியே
விண்ணுயர்ந்த மலையழகர் விரும்புமவன் வாழியே
மாசிமகப் புவியில் வந்துதித்தோன் வாழியே
மறைப்பொருளை உடையவர்க்கு வகுத்துரைத்தான் வாழியே
காசிபதற் குலத்துதித்த கருணைநிதி வாழியே
கையாழி சங்கதினால் கதிதருவோன் வாழியே
தேசுபுகழ் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருமாலை ஆண்டான்தாள் செகதலத்தில் வாழியே.

வாழிமாலையான்டாந்தாள் வாழியவன் மன்னுகுலம்
வாழி திருமாலழகர் வாழியவே - வாழியரோ
திண்புதூர் மாமுனிக்குத் திருவாய் மொழிப்பொருளை
உண்மையுடன் ஒதியருள் சீர்.

பூத்த தாமரைத் தாளிணை வாழியே
பொன்னினாடை பொலியிடை வாழியே
சாத்து நாலும் திருமார்பும் வாழி
தயங்கு சுந்தரச் சங்காழி வாழியே
ஏற்ற திங்கள் திருமுகம் வாழியே
இலங்கு புண்டரம் எழில்முடி வாழியே
வாய்த்த நாலூர்த் திருமாலையாண்டான்
வாழி வாழி நீடூழி வாழியே.

எட்டெழுத்தும்வாழ எழிலரங்கம் தான்வாழ
சிட்டர்தொழும் ஆரியர்கள் சீர்வாழ - அட்டதிக்கும்
மன்னுபுகழ் ஆரியனே மலைகுனிய நின்றானே
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

திருமாலை ஆண்டான் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!