மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 39
வேந்தர்களில் சிலர் வில்லையும் அம்புகளையும் அருகில் வந்து உற்றுப் பார்த்தனர். வியப்பின் அறிகுறி அவர்களின் முகங்களில் தாண்டவமாடியது. ஒன்றும் பேசாமல் பின்வாங்கினர். மேலும் சிலர் வில்லை கையில் தூக்கி பார்த்தனர். அஞ்சி அவர்களும் பின்வாங்கினர். சிசுபாலன் மற்றும் ஜராசந்தன் என்னும் அரசர்கள் அந்த வில்லை தூக்கி அதில் அம்மை ஏற்றி இலக்கை அடிக்க முயன்றனர். ஆனால் பெரும் தோல்வி அடைந்தார்கள். பகட்டே வடிவாக தெரிந்த துரியோதனன் உறுதியான தீர்மானத்துடன் இலக்கை நோக்கி அடித்தான். ஆனால் அதில் அவனும் வெற்றி காணவில்லை. கர்ணனுடைய முயற்சி மிக நேர்த்தியாக இருந்தது. மேடையை நோக்கி அவன் ஒரு வேங்கையை போன்று கம்பீரமாக நடந்தான். சுழன்று கொண்டிருந்த சக்கரத்தின் துவாரத்தின் வாயிலாக அம்பை அவன் சிரமம் ஏதுமின்றி செலுத்தினான். ஆனால் இலக்கை மட்டும் அடிக்க அவனால் முடியவில்லை. போட்டிக்கு வந்த மன்னர்கள் அனைவரது முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சுயவரம் தோல்வி அடையும் போல தென்பட்டது.

திருஷ்டத்யும்னன் மீண்டும் ஒருமுறை மேடையில் வந்து பிரகடம் பண்ணினான். இவ்வளவு நேரம் நடந்த போட்டியானது நாட்டை ஆளும் வேந்தர்களுக்கு என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இனி இது அனைவருக்கும் பொதுவாக அமைகிறது. பிராமணர்கள் க்ஷத்திரியர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் ஆகிய யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். வில்லால் இலக்கை அடிக்கின்றவர்களுக்கு என் சகோதரி மனைவியாவாள் என்று அறிவித்தான். பிராமணர்களின் கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுந்து நின்றான். அவனுக்கு பலர் உற்சாகம் ஊட்டினார்கள். வேறு சிலர் அவனை அதட்டி உட்கார சொல்லினர். ஆனால் அவன் அர்ஜூனன் என்பதை கிருஷ்ணன் அறிந்துகொண்டான். திரௌபதியின் விவாகம் நிச்சயமாக நடைபெறப்போகிறது என்று கிருஷ்ணன் எண்ணினான். கூட்டத்தில் இருந்து வந்தவனுடைய நடையில் ராஜரீதி மிளிர்ந்தது. வில்லையும் அம்புகளையும் நெருங்கி அதற்கு தலைவணங்கினான். பின்பு வில்லை கையில் எடுத்து ஓசையை கிளப்பினான். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து அம்புகளையும் எய்தான். மீன் போன்று அமைக்கப்பட்ட குறியானது கீழே தரையில் விழுந்தது. பிராமணனாக வேடம் போட்டு வந்திருந்த அர்ஜூனன் வெற்றி பெற்றான்.

கொட்டகை முழுவதிலும் திடீரென்று கர்ஜனை முழங்கியது. அங்கு இருந்தவர்கள் அனைவரையும் விட பிராமணர்கள் யாண்டும் க்ஷத்திரர்களுக்கும் மேலானவர்கள் என்ற சொல் காதைத் துளைத்தது. திரௌபதி அன்னப்பறவைக்கு நிகராக மெதுவாக நடந்து வந்து பிராமண வாலிபன் நின்று கொண்டிருந்த இடத்தை அணுகி அவனுக்கு மாலை சூட்டினாள். அப்போது சங்குகள் ஒலித்தன. துத்தாரிகள் கதறின. பேரிகைகள் கொட்டின. காளங்கள் கத்தின. தம்பட்டங்கள் அடித்தன. வாத்திய முழக்கங்கள் வானை எட்டியது. தம்பதிகள் மீது பூக்கள் தூவப்பட்டது. மணமகன் மணமகளின் கரத்தைப் பற்றிக்கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கினான். தகுதி வாய்ந்த மருமகன் தனக்கு வாய்த்தது குறித்து திருபத மன்னன் மிக மகிழ்வு அடைந்தான். இதனை பார்த்துக் கொண்டிருந்த கர்ணன் ஏமாற்றமடைந்தான். அதற்கு காரணம் இரண்டு இருந்தது. வில்வித்தையில் தன்னை விட மேன்மையானவன் ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணம் ஒன்று. உலகறியாத பிராமணன் ஒருவன் அக்கலையில் உச்ச நிலையை எய்தியது மற்றொன்று. உண்மையில் அவ்விளைஞன் வில் வித்தையில் வல்லவனா அல்லது குருட்டுப்போக்கில் வெற்றி பெற்றானா இன்னும் சந்தேகம் கர்ணனுக்கு வந்தது.