மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 47
ஒருநாள் யுதிஷ்டிரனும் திரௌபதியும் தங்கள் மண்டபத்தில் இனிது உரையாடிக் கொண்டிருந்தனர். ஓர் அவசர நெருக்கடியை முன்னிட்டு அர்ஜுனன் தன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுக்க யுதிஷ்டிரனும் திரௌபதியும் இருக்கும் மண்டபத்தின் வழியாக அவர்கள் இருப்பதை அறியாமல் மற்றொரு அறைக்கு விரைந்து சென்று சென்றான். வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வந்த பிறகு அவர்கள் இருப்பதை அறிந்தான். சகோதரர்கள் தங்களுக்குள் செய்த உடன்படிக்கையை அர்ஜூனன் மீறிய படியால் ஓராண்டுக்கு நாட்டை விட்டு வெளியேற கடமைப்பட்டவான் ஆனான். அதன் பொருட்டு 4 சகோதரர்களிடமும் விடைபெற்றுச் செல்ல வந்தான்.

யுதிஷ்டிரன் அர்ஜுனனிடம் நீ உன்னுடைய கடமையை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தாய். நீ அந்த மண்டபத்தின் வழியாக சென்றது எனக்கும் திரௌபதிக்கும் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. நீ எங்கள் முன்னிலையில் சென்றதை நாங்கள் ஆட்சேபம் ஏதும் செய்யவில்லை. எனவே நாட்டை விட்டு ஒரு வருட காலம் வெளியே செல்ல வேண்டாம் என்றான். அதற்கு அர்ஜுனன் நமக்கிடையில் நாம் வைத்துக் கொண்டிருக்கும் சட்டதிட்டங்களை ஏதோ ஒரு சிறிய காரணத்தைச் சொல்லி மீறல் ஆகாது. நாம் தர்மத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். ஆகையால் நான் அதை யாத்திரை செல்கிறேன் என்று புறப்பட்டுச் சென்றான். நாடெங்கும் தீர்த்த யாத்திரை செய்தான். தென்பகுதியில் உள்ள காவிரியில் நீராடினான். தென் குமரியை அடைந்து மேற்குக் கரையோரமாக வடதிசை நோக்கி அவன் சென்றான். பிரபாஸா என்னும் இடத்தைச் சென்று அடைந்து அங்கு சந்நியாசி போல் மாறு வேஷம் பூண்டு கொண்டு ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான். கிருஷ்ணன் அர்ஜூனன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அந்த சந்நியாசியை சந்திக்க அங்கு வந்து சேர்ந்தான்.

சுபத்திரா இன்னும் கன்னிகை கிருஷ்ணனுடைய சகோதரி ஆவாள். அவளை மணந்து கொள்ள வேண்டும் என்பது அர்ஜுனனுடைய விருப்பமாக இருந்தது. சுபத்திரையும் அர்ஜுனனை திருமணம் செய்து கொள்ள விருப்பத்துடன் இருந்தாள். இவர்கள் இருவருடைய மனப்பாங்குகள் கிருஷ்ணன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் அவர்களுடைய எண்ணத்தை நிறைவேறுவதற்கான திட்டம் ஒன்றை கிருஷ்ணன் வகுத்தான். முதலில் விஷயத்தை குந்திதேவியிடமும் யுதிஷ்டிரனிடமும் சொல்லி அவர்களுடைய சம்மதத்தை வாங்கிக்கொண்டான். அதன் பிறகு சந்நியாசி வேடம் அணிந்த அர்ஜூனனை தனது நாட்டிற்கு அழைத்துச் சென்றான். கிருஷ்ணனின் மூத்தவனாகிய பலராமன் அர்ஜூனனை ஒரு துறவி என்று நம்பினான். சந்நியாசி தங்குவதற்கு பலராமன் ஏற்பாடு செய்தான். சந்நியாசிக்கு பணிவிடைகள் செய்ய தனது தங்கை சுபத்திரையை நியமித்தான். பொருத்தமான சூழ்நிலை தானாக அமைந்ததை எண்ணி கிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தான்.