மகாபாரதம் | 1 ஆதிபருவம் | பகுதி - 48
துறவி வேடத்தில் இருந்த அர்ஜுனன் சுபத்திரை முன்பாக தனது துறவி வேடத்தை கலைத்தான். சுபத்திரைக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனென்றால் எந்த ஆடவனை மணந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாலோ அதே ஆடவன் இங்கு துறவி வேடத்தில் வந்துள்ளார். அர்ஜுனன் சுபத்திரையிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டான். சுபத்திரையும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். இருவரும் கிருஷ்ணனின் ரதத்தில் ஏறி சென்று கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட விருஷ்ணி வம்சத்தினர் சுபத்திரையை துறவி வேடத்தில் வந்தவன் தூக்கிச் செல்கிறான் என்று எண்ணிக் கொண்டு இந்த ரதத்தை பின்தொடர்ந்து துரத்தினார்கள். ரதத்தின் அருகே வந்து பார்த்தவர்கள் சுபத்திரை ரதத்தை ஓட்டிச் செல்வதையும் அர்ஜூனன் பின்னால் அமர்ந்து இருப்பதையும் பார்த்து அவர்களுக்கு குழப்பம் உண்டாகியது. கிருஷ்ணன் தனது விருஷ்ணி வம்சத்தினரை சமாதானப்படுத்த முயன்றார் நிகழ்ந்ததில் கேடு ஏதும் இல்லை என்று கூறி நடந்தவைகள் அனைத்தையும் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினான். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட பலராமன் தன்னிடம் கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை என்று அவன் மீது சிறிது கோபம் கொண்டான்.

பலராமன் மற்றும் விருஷ்ணி வம்சத்தவர்கள் அர்ஜுனன் சுபத்திரை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். இந்திரப் பிரஸ்தம் நாட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருட காலம் முடிந்தபின் அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் இந்திரப் பிரஸ்தத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்த விருஷ்ணி வம்சத்தினர் அனைவரும் துவாரகைக்கு திரும்பினார்கள். ஆனால் கிருஷ்ணர் மட்டும் சிறிது காலம் அர்ஜுனனோடு வசித்திருந்தான். சிறிது காலத்திற்குப் பிறகு சுபத்திரை அபிமன்யு என்னும் மகனைப் பெற்றெடுத்தாள்.

கோடைப் பருவத்தில் தோன்றிய வெக்கை மிக புழுக்கமாக இருந்தது. அதை முன்னிட்டு கிருஷ்ணனும் அர்ஜுனனும் யமுனா நதி தீர்த்தத்தில் நீராடி ஒரு நாளைக் கழிக்க எண்ணினர். யுதிஷ்டிரனிடம் இருந்து அனுமதி பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். உற்றார் உறவினர் பலர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். கூட்டத்தார் அனைவரும் நதியிலும் நிலத்திலும் உல்லாசமாக பொழுது போக்கி கொண்டிருந்தனர். கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. பெரியவர் ஒருவர் அவர்கள் முன்பு தோன்றி தனக்கு மிகவும் பசி எடுக்கிறது என்றும் ஆதாரம் தேவை என்றும் கூறினார். அதற்கு அருஜூனன் உங்களுக்கு எத்தகைய ஆகாரம் தேவை என்று கேட்டான். அதற்கு அவர் நான் மானிடன் இல்லை நான் அக்னிதேவதை. இந்த காண்டவ வனம் மிகவும் பழுதுபட்டு விட்டது. இதில் பயங்கரமான விலங்குகளும் விஷம் நிறைந்த சற்பங்களும் ஏனைய ஐந்துக்களும் பெருகி இருக்கின்றன. ஆகையால் இதை பொசுக்கித்தள்ளி பசியாற பல தடவை முயன்றேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது எனது கோட்பாடு. ஒவ்வொரு முறையும் இந்திரன் என்னுடைய முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மழையைக் கொட்டித் தள்ளுகின்றான். இதன் காரணமாக நான் பசிப்பிணியால் வருந்துகிறேன் என்றார்.