கீரிப்பிள்ளை நடந்த நிகழ்வு ஒன்றை கூற ஆரம்பித்தது. சிறிது காலத்திற்கு முன்பு பக்கத்தில் இருந்த நாடு ஒன்றில் பயங்கரமான பஞ்சம் உண்டானது. பட்டினி கிடந்து பலர் மாண்டு போயினர். உணவு போதவில்லை. அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் அவருடைய மனைவி அவருடைய மகன் மருமகள் என நால்வர் வாழ்ந்து வந்தனர். பஞ்சத்தை முன்னிட்டு அந்த ஆசிரியர் தம்முடைய தர்மமாகிய கல்வி புகட்டும் செயலை நிறுத்தி விடவில்லை. ஆசிரியரின் குடும்பம் பட்டினியால் வாடுவது பற்றி அறிந்த மாணவன் ஒருவன் அந்த ஆசிரியருக்கு கொஞ்சம் கோதுமை மாவு கொடுத்தான். அதை கொண்டு நான்கு சப்பாத்திகள் செய்தனர். உணவை அவர்கள் அருந்த போகும் தருவாயில் பட்டினியுடன் ஒருவன் விருந்தாளியாக வந்து சேர்ந்தான். விருந்தாளிக்கு ஆசிரியர் தனது பங்கு சப்பாத்தியை கொடுத்து அதை ஏற்கும் படி வேண்டினார். அந்த சப்பாத்தியை சாப்பிட்டதன் விளைவாக அவனுக்கு பசி அதிகரித்தது. ஆசிரியரின் மனைவி தனக்குரிய பங்கு சப்பத்தியை வந்தவனுக்கு எடுத்து வழங்கினாள். அதன் விளைவாக விருந்தினருக்கு பசி மேலும் அதிகரித்தது. மகன் தனக்குரிய பங்கை வழங்கினான். விருந்தாளிக்கு மேலும் உணவு தேவைப்பட்டது. மருமகள் தனது உணவை விருந்தாளியின் இலையில் வைத்து அவனை வணங்கினாள். அதனையும் சாப்பிட்ட விருந்தாளி மிகவும் திருப்தி அடைந்தவனாக அனைவரையும் வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
தங்களது உணவை விருந்தாளிக்கு கொடுத்த ஆசிரியரின் குடும்பம் பசியில் சாகும் நிலையில் கிடந்தனர். அவர்கள் செய்த தியாகத்தை அறிந்த விண்ணுலகத்தவர்கள் வியந்தனர். தேவர்கள் ரதம் ஒன்றை மண்ணுலகிற்கு கொண்டு வந்து ஆசிரியர் குடும்பத்தார் உடலிலிருந்து அவர்களை விடுவித்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகத்தில் அவர்கள் பசியில்லாமல் தாகமில்லாத மேல் நிலைக்கு சென்றனர்.
கீரிப்பிள்ளை தொடர்ந்து பேசியது. நான் என் வலையில் இருந்து வெளியே வந்து அவர்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப்பட்ட தரையின் மீது படுத்து உருண்டேன். தரையில் சிதறிக் கிடந்த கோதுமை மாவின் புனிதம் சிறிதளவு என் உடலின் ஒரு பகுதியில் ஒட்டியது. மாவு ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பொன்நிறமாக மாறியது. எனது உடலின் மீதி பகுதியையும் பொன்நிறமாக மாற்றுவதற்காக தானதர்மங்கள் செய்யும் யாகசாலை எங்கேனும் இருக்கிறதா என்று நான் தேடி பார்த்து ஒவ்வொரு இடமாக படுத்து உருண்டு கொண்டிருக்கின்றேன். எங்கும் எனது உடல் பொன்நிறமாக மாறவில்லை. யுதிஷ்டிரன் செய்த இந்த யாகம் நடந்த இடத்திலும் படுத்து உருண்டேன். இங்கும் எனது உடலின் மீதிப்பகுதி பொன்நிறமாக மாறவில்லை. ஆகவே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியரின் தானத்திற்கு நிகராக யுதிஷ்டிரனின் இந்த யாகம் இல்லை. இந்த யாகத்தை நீங்கள் அனைவரும் மிகவும் பெருமையாக பேசுகின்றீர்கள். ஆகவே நீங்கள் பொய் பேசுகின்றீர்கள் என்று கூறினேன் என்று தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது.
கீரியின் இக்கூற்றை கேட்ட பெருமக்கள் அனைவரும் திகைத்துப்போய் மௌனத்துடன் இருந்தனர். ஆசிரியர் செய்த தர்மம் ஆடம்பரமான எந்த வேள்விக்கு நிகராகாது என்பதை அனைவரும் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். எந்த சிறிய செயலானாலும் செய்யும் மனநிலை பொருத்தே அதன் சிறப்பு என்னும் கோட்பாடு இங்கு நிரூபிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுடைய அசுவமேத யாகத்திற்கு வந்திருந்த கிருஷ்ணன் சிறிது காலம் ஹஸ்தினாபுரத்தில் தங்கியிருந்தார். யுதிஷ்டிரனை சிம்மாசனத்தில் அமர்த்துவது கிருஷ்ணனின் முக்கியமான செயலில் ஒன்று. அந்த அரிய செயலும் இப்பொழுது நிறைவேறியது. எனவே கிருஷ்ணனை பாண்டவர்கள் அரைமனதோடு துவாரகைக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.
அசுவமேத பருவம் முற்றியது. அடுத்து அசிரமவாசிக பருவம்.