மகாபாரதம் | 15 ஆஸ்ரமவாசிக பருவம் | பகுதி - 2
ஒருநாள் திருதராஷ்டிரன் சபை ஒன்றை கூட்டினான். சபையிலே தன் தம்பி பாண்டுவின் பிள்ளைகளும் பொதுமக்களும் பிரதிநிதிகளும் கூடியிருந்தனர். தான் வனவாசத்திற்கு போக வேண்டிய அவசியத்தை குறித்து திருதராஷ்டிரன் அனைவருக்கும் எடுத்து விளக்கினான். மன்னன் ஒருவன் அறநெறியில் போர் புரிந்து போர்க்களத்தில் உயில் துறக்க வேண்டும். இல்லையேல் கடைசி காலத்தில் தவத்தில் இருந்து தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதுவே அரசனுக்குரிய தர்மமாகும். இந்த கோட்பாடுகளை முன்னிட்டு திருதராஷ்டிரன் காட்டிற்கு செல்ல தீர்மானித்தான். விதுரனும் சஞ்ஜயனும் காந்தாரியும் குந்தியும் அவரை பின்பற்றி தவம் புரிய காட்டிற்குப் போக தீர்மானித்தார்கள். இந்தத் தீர்மானத்திற்கு சபையிலிருந்த அனைவரும் அரை மனதுடன் அவருக்கு சம்மதம் கொடுத்தார்கள்.

வனத்திற்கு சென்றவர்கள் அற்புதமாக தங்கள் இறுதிக்காலத்தை கழித்தனர். இவ்வுலக வாழ்வை அவர்கள் அறவே மறந்து விட்டனர். நிலையற்ற இந்த நிலஉலக வாழ்வு அவர்கள் மனதில் இருந்து மறைந்து பட்டுப் போயிற்று. எப்பொழுதும் மறவாது இருக்கும் பரம்பொருளை பற்றிய எண்ணமே அவர்களுடைய உள்ளத்தில் நிறைந்து இருந்தது. தியானமும் பிரார்த்தனையும் முறையாக நிகழ்ந்தன. சான்றுகளுடன் பேச்சும் உரையாடலும் நடைபெற்றது. நில உலக வாழ்வின் இறுதி காலத்தில் இருக்கவேண்டிய பண்பில் அவர்கள் முற்றும் நிலைத்திருந்தனர். இவ்வாறு ஆண்டுகள் 3 சென்றது.

மகாபாரத யுத்தம் நிகழ்ந்து சரியாக 18 வருடங்களுக்கு பிறகு இப்போது ஊழித்தீ போன்ற நெருப்பு வனமெங்கும் பற்றி எரிந்தது. திருதராஷ்டிரனும் காந்தாரியும் குந்தியும் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுடைய தேகம் தீக்கு இரையாயின. ஆத்ம சொரூபம் இறைவனிடத்தில் ஒன்றுபட்டது. இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர். தீயிலிருந்து தப்பிய விதுரரும் சஞ்ஜயனும் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் பொருட்டு இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.  

ஆஸ்ரமவாசிக பருவம் முற்றியது அடுத்து மௌசல பருவம்.