குருஷேத்திர யுத்தம் முடிந்த பிறகு கிருஷ்ணர் துவாரகையில் 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வந்தான். தன்னுடைய மண்ணுலக வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்பதை கிருஷ்ணன் அறிந்து கொண்டான். இவ்வையகத்தில் சாதிக்க வேண்டியவைகளை யாவும் முற்றுப்பெற்று விட்டன. தன் உடலை விட வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்பதை கிருஷ்ணர் அறிந்தான்.
உல்லாசப் பயணமாக விருஷ்ணிகள் கடற்கரைக்கு போனார்கள். அங்கு அவர்களுடைய குடிவெறி வரம்பு கடந்து போயிற்று. அதன் விளைவாக அவர்களிடையே சச்சரவு உண்டானது. அது கைச்சண்டையாக உருவேடுத்தது. பிறகு ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கினர். கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல் கொம்புகளை பெயர்த்தெடுத்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். ரிஷிகள் இட்ட சாபத்தின் விளைவாக நாணல் கொம்புகள் பயங்கரமான ஆயுதங்களாக மாறி இருந்தது. சிறிது நேரத்திற்குள் விருஷ்ணி குலத்தினர் முழுவதும் ரிஷிகள் இட்ட சாபத்தின்படி அழிந்தனர். பாற்கடலில் ஆதிஷேசனாக இருந்த பலராமன் இதனை கேள்விப்பட்டதும் தியானத்தில் அமர்ந்து தனது உடலை விட்டுவிட்டு மேலுலகம் சென்றடைந்தான்.
காந்தாரி இட்ட சாபத்தின் படி தன் இனத்தவரின் அழிவை கிருஷ்ணன் அமைதியோடு பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வனத்திற்குச் சென்றார். தன் உடலை விட்டுச் செல்லும் காலம் வந்துவிட்டது என்பதை கிருஷ்ணன் அறிந்து கொண்டார். தன் பாதங்களை வெளியே காட்டிய படி புல் தரையின் மீது யோக நித்திரையில் படுத்தார். பாதத்தை தவிர வேறு எந்த இடத்தில் அடித்தாலும் கிருஷ்ணனுக்கு மரணம் வராது. தூரத்திலிருந்து பார்க்கும் ஒருவனுக்கு கிருஷ்ணன் படுத்திருப்பது மான் போன்று காட்சி கொடுத்தது. ஒன்றோடு ஒன்று அமைந்திருந்த கிருஷ்ணனுடைய இரண்டு பாதங்களும் மானின் தலை போன்று காட்சி கொடுத்தன. இதனை கண்ட வேடன் ஒருவன் மான் என கருதி அம்பு எய்தான். அம்பின் நுனியில் கடற்கரையில் அகப்பட்ட இரும்புத்துண்டு இருந்தது. கிருஷ்ணனின் பாதத்தின் வாயிலாக வேடனின் அம்பு கிருஷ்ணரின் உடலுக்குள் பாய்ந்தது. வினைப்பயன் உடலை தாக்கியவுடன் கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய எதார்த்த நிலையை எய்தினார்.
துவாரகையில் நிகழ்ந்த பரிதாபகரமான நிகழ்ச்சிகள் அனைத்தையும் அஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணனுடைய தந்தையாகிய வாசுதேவர் தெரிவித்துவிட்டு தன் உடலை நீத்தார். துவாரகையில் எஞ்சியிருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாத்து அஸ்தினாபுரத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை அர்ஜுனனிடம் யுதிஷ்டிரன் அளித்தான். உடனடியாக அர்ஜுனன் துவாரகை சென்று கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் செய்ய வேண்டிய சிரார்தம் கடமைகளை முறையாக செய்து முடித்தான். பின்னர் துவாரகையில் எஞ்சி இருந்த பெண்களையும் குழந்தைகளும் தன்னோடு அழைத்துக்கொண்டு அர்ஜுனன் அஸ்தினாபுரம் கிளம்பினான். துயரத்தில் மூழ்கியிருந்த சிறு கூட்டம் கிளம்பி துவாரகையை விட்டு வெளியே வந்தவுடன் துவாரகை கடலில் மூழ்கியது அனைவரும் அஸ்தினாபுரம் நோக்கி சென்றார்கள்.