மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 14
காந்தார தேசத்து மன்னர் சகுனியே ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டாள் திரௌபதி. சகுனி ஆசனத்தை விட்டு எழ ஆரம்பிக்கிறான். துரியோதனன் மாமா சற்று அமருங்கள். இவள் காயை எட்டி உதைத்தாள். ஏதோ கேட்டாள். ஆமாம் என்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டீர்கள். தற்போது காயை எடுத்துவந்து அவள் காலடியில் வைக்கப் போகிறீர்களா? கூடாது. இந்த ஐந்து அடிமைகளில் ஒருவர் அதைச் செய்யட்டும் என்றான். திருதராஷ்டிரன் யுதிஷ்டிராரை பார்த்து காய்களை நீயே எடுத்துக் கொடுக்கலாமே என்றார்.

யுதிஷ்டிரர் மௌனமாய் நடந்து வந்து மன்னர் காலடியில் கிடக்கும் பகடைக்காய்களை இரு கைகளாலும் எடுத்து திரௌபதி முன்னால் காய்களை கையில் ஏந்தி நிற்கிறார். கண்களில் ஆறாய் பெருகும் கண்ணீரால் யுதிஷ்டிரர் கைகளில் உள்ள காய்கள் மீதும் அவர் கால்களிலும் இரு கைகளாலும் ஏந்தி தெளிக்கிறாள் திரௌபதி. தன் வலது காலை அவள் ஒரு அடி முன்னே எடுத்து வைக்க யுதிஷ்டிரரும் காலை மண்டியிட்டு பகடை காய்களை அவள் வலது கால் மேல் வைக்கிறார். யுதிஷ்டிரர் ஓரடி பின்னே நகர்ந்து நிற்க திரௌபதியும் தன் வலது காலை சற்று மேலே தூக்கி முன்னும் பின்னுமாக ஆட்டி காய்களை கைகளினால் உருட்டுவது போல உருட்ட ஆரம்பிக்கிறாள். சபையில் உள்ளவர்கள் யாவரும் என்ன நடக்கப் போகிறது என்று புரியாமல் இருக்கிறார்கள். திரௌபதி யுதிஷ்டிரரை அவமானப்படுத்துவது போல் அனைவருக்கும் தெரிந்தது.

சகுனி யோசித்தான். முதலில் காலால் ஆடுவேன் என்றாள். துரியோதனனும் காலென்ன கையென்ன என்று கூறிவிட்டான். தவிர காயை அவள் வைத்த பகடை காய்களை காலால் எத்தி அரசர் காலடியில் விழச் செய்து பூச்சியை இறக்க செய்து விட்டாள். என்னிடம் கேள்வி கேட்டு என்னையும் தலை குனிய செய்துவிட்டாள். இவள் காலால் எத்தியதை கர்ணனை தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. கர்ணனின் கேள்விக்கு அங்க தேசத்து முதலடிமையே அமரும் என்று கூறி அதையும் முடித்துவிட்டாள். இவள் புத்திசாலித்தனத்திற்கு முன் ஏதும் செய்ய முடியாது போல் தோன்றுகிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

காயை மன்னர் காலடியிலிருந்து எடுத்து வரும் சாக்கில் சிறுவண்டு உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா? இறக்காமல் இருந்தால் வண்டின் துணையோடு ஆட்டத்தை வெல்லலாம் என்று எண்ணினால் இதையும் துரியோதனன் இடத்தை விட்டு நகராதே இன்று கூறிக் கெடுத்தான். வண்டு பிழைத்திருக்க வழியில்லை. திடீரென இவள் உதைத்ததால் அவை இருக்கும் நிலையில் இறந்து போயிருக்கும். இவள் ஒரு நொடி காயை உருட்டுவதை நிறுத்தினாலும் ஏதாவது சூசகம் கிடைக்கும். ஏதாவது பேச்சுக் கொடுத்து இவள் காயை உருட்டுவதை நிறுத்த வைத்தால் காயைப் பார்த்து நிச்சயமான ஒரு முடிவிற்கு வரலாம் இவ்வாறு சிந்தித்து சகுனி மறுபடியும் எழுந்தான். துரியோதனன் மாமா ஆசனத்தில் அமருங்கள். இவள் முதல் ஆட்டத்தில் இவள் ஜெயித்தாலும் நமக்கு இரண்டாவது ஆட்டம் இருக்கிறது. அமர்ந்தபடியே இவளுக்கு பதில் கூறுங்கள் என்றான்.