மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 16
திரௌபதி யுதிஷ்டிரனை பார்த்து நான் இப்போது தங்களில் பாதி. சுதந்திர புருஷனாக தாங்கள் பக்கத்தில் இருக்கும் போது என்னால் என்னையே பணயமாய் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதே போல் உங்களையும் பணயமாய் வைக்க முடியாது. இப்போது நான் இருமுறை ஆடுவேன் என்ற சொல்லிய படி இரண்டாம் ஆட்டம் ஆட வழி கேட்டு தங்கள் முன் நிற்கிறேன். தர்மத்தை உணர்ந்த தாங்கள் எனக்கு இரண்டாம் முறை ஆட அனுமதியையும் பணயம் வைப்பதற்கு வழியையும் காட்டுங்கள் என்றாள். அதற்கு யுதிஷ்டிரர் திரௌபதி உன்னை நன்கு உணர்வேன். நாம் இருவரும் பணயமாய் இரண்டாம் ஆட்டத்திற்கு உட்படுவதை தவிர எனக்கு வழி ஏதும் தெரியவில்லை. சூதில் ஒன்றுக்கு இரண்டாய் வெற்றி பெருவாய் என் ஆசிகள் என்றான்.

மன்னரே இரண்டாம் முறை ஆடுவேன் என்று கூறி தர்ம சங்கடத்தில் இருந்த எனக்கு யுதிஷ்டிரர் அனுமதி கொடுத்து பணயத்திற்கு தன்னையும் என்னையும் காட்டி விட்டார். அவர் சொன்ன வார்த்தைப்படி ஒன்றுக்கு இரண்டு என்றபடி எங்கள் இருவரையும் பணயமாய் வைத்து மற்ற நால்வரையும் மீட்க இரண்டாம் ஆட்டத்திற்கு நான் தயார் என்றாள். துரியோதனனுக்கு தான் நினைத்தபடி பாண்டவர் மீதி நால்வரை மட்டும் தான் இவள் கேட்கிறாள். இந்த முறை மாமா தோற்றாலும் நமக்கு வெற்றிதான். நாடு முழுவதும் நமக்குத்தான் என்று மனம் குதூகலித்தது.

சகுனி மனத்தில் கலக்கமுடன் இருக்கின்றான். இப்போது எனது இடது மடியில் இருக்கும் இன்னொரு பகடைக்காயை முன்பு மாண்ட என் முன்னோர்கள் எலும்பில் செய்து அதற்கு சக்தியூட்டி என் எண்ணப்படி எண்கள் விழும்படி செய்திருக்கிறேன். இதை எடுத்து ஆடலாம். ஆனால் திரௌபதி அதோ அனாதையாய் கிடக்கும் அந்த கட்டொழிந்த செந்நிற காய்களை வைத்து மறுமுறையும் ஆடுவேன் என்று சொல்லிவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு என்ன வழி என்று சகுனி யோசிக்கின்றான்.

சகுனி அவர்களே இரண்டாவது ஆட்டத்திற்கு நான் தயாராகி விட்டேன். பகடை ஆட்டத்தில் தங்களின் முதல் அஸ்திரம் தோற்றுவிட்டது. இந்த இரண்டாம் ஆட்டத்திற்கு இரண்டாம் அஸ்திரம் இருந்தால் அதை எடுத்து தாங்கள் பிரயோகிக்கலாம். அது மற்றொரு செந்நிற காயானாலும் சரி அல்லது தந்தம் போன்ற வெண்ணிற காயானாலும் சரி தங்கள் விருப்பம் என்று கூறினாள். பகடை ஆட வந்த சகுனி ஆடிப்போய் விட்டான். இவள் யுத்தத்தில் எதிர்வரும் அஸ்திரத்தைப் பார்த்து அதை முறியடிக்கும் அஸ்திரத்தைப் பிரயோகிக்கும் வீரனைக் காட்டிலும் அடுத்த அஸ்திரமான உன் வெள்ளைக்காயை எடு என சூளுரைக்கிறாள். இதையும் இவள் வென்று விடுவாளா? எப்படியோ அடுத்த அஸ்திரத்தை எடு என்று கூறி இடது மடியில் உள்ள காய்களை எடுத்து விட சம்மதம் கொடுத்து விட்டாள். சகுனி உடனேயே தன் இடது மடியில் இருந்த வெள்ளைப் பகடைக் காய்களை எடுத்து வேகமாய் வந்து திரௌபதியின் காலடியில் வைக்கிறான்.