மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 18
திரோபதியின் சபதத்தை கேட்ட பீமன் எழுந்து திரௌபதியின் இரு சபதத்தையும் நிறைவேற்ற நானும் என் கதையும் துணை நிற்போம் இது சத்தியம் என்றான். அர்ச்சுனன் திரௌபதியின் இந்த சபதத்திற்கு மூல காரணமான கர்ணனை என் காண்டீபத்திலிருந்து புறப்படும் பாணங்களினால் துளைத்து மடியச் செய்வேன் இது சத்தியம் என்றான். திருதராஷ்டிரன் இபோது திரௌபதியை சமாதானம் செய்தால் நிலமையை சீர் செய்யலாம் அவளது சபதத்தை திரும்ப பெற செய்யலாம் என்ற எண்ணத்துடன் திரௌபதி உனக்கு வரம் தருகிறேன் என்றான். அதற்கு திரௌபதி இந்த சபையில் சூதால் தோற்ற அவர்களை சூதாலேயே வென்று பெற்று விட்டேன். பாண்டவர்களுக்கு அவர்கள் இராஜ்யம் வேண்டும். அதை நான் வரமாகக் கேட்க முடியாது. அது அவர்கள் தேசம். க்ஷத்திரியர்களான பாண்டவ புத்திரர்கள் தங்கள் ராஜ்யத்தை யுத்தம் செய்து வென்று பெற்றுக்கொள்வார்கள். ஆகையால் இப்போது தங்களின் வரம் தற்போது வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

மன்னன் திருதராஷ்டிரன் யோசிக்கிறான். பாண்டவர்கள் ஐவரும் இப்போது சுதந்திரமானவர்கள். இப்போது மேலும் பேச்சை வளர்த்தினால் இன்றே யுத்தம் துவங்கிவிடும். இதற்கு உடனே அணை போட வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு யுதிஷ்டிரா இங்கு சபையில் நடந்தவைகள் யாருக்கும் விருப்பமில்லாதவைகளாய் நடந்துவிட்டன. நாளை சபை கூடியதும் மறுபடியும் பேசலாம். இப்போது நீங்கள் ஐவரும் திரௌபயும் சென்று ஓய்வெடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தான். பாண்டவர்கள் வெளியேறியதும் பலரும் சபையை விட்டு தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

துரியோதனன் மற்றும் அவன் உடன் பிறந்தவர்கள் துரியோதனனின் நலம் விரும்பிகள் திருதராஷ்டிரரிடன் ஆலோசனை செய்ய வேண்டும் என்று அந்த மண்டபத்திலேயே இருந்தார்கள். பாண்டவர்கள் நாடு நகரம் செல்வம் இவைகள் அனைத்தும் இல்லையென்றாலும் இப்போது சுதந்திரம் ஆனாவர்களாக இருக்கின்றார்கள். திரோபதியின் சபதத்தை முன்னிட்டு பீமனும் அர்ஜூனனும் துரியோதனனையும் துச்சாதனனையும் கொல்வதாக சபதம் எடுத்திருக்கின்றார்கள். நாளையே அவர்கள் யுத்தத்திற்கு வந்தால் அனைவரும் அவர்களுக்கே துணை நிற்பார்கள். ஆகவே இதற்கு ஓர் தீர்வு காணவேண்டும் என்று விவாதிக்கின்றாரகள். இறுதியில் பாண்டவர்களை 12 வருடகாலம் வனவாசம் செல்ல வேண்டும். ஒரு வருடம் அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் அப்படி அவர்கள் செய்தால் பகடையில் தோற்ற நாடு செல்வங்கள் அனைத்தையும் அவர்களுக்கு திருப்பி கொடுப்பதாக சொல்லி காட்டிற்கு அனுப்ப வேண்டும். ஒரு வருட அக்ஞாத வாசத்தில் அவர்களை கண்டு பிடித்து விட்டால் மீண்டும் 12 வருட காலம் காட்டில் இருக்க வேண்டும். இதை திருதராஷ்டிரர் யுதிஷ்டிரரிடம் சொல்லவேண்டும். மன்னரின் ஆணையை யுதிஷ்டிரன் தட்டமாட்டான். இதை செய்யாவிட்டால் பாண்டவர்கள் தாங்கள் எடுத்த சபதத்தின்படி யுத்தத்திற்கு வருவார்கள் என்று திருதராஷ்டிரரிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள்.