மகாபாரதம் | 2 சபா பருவம் | பகுதி - 5
கிருஷ்ணன் சிசுபாலனுடன் சண்டையிட போகிறேன் என்று சொல்லி சிசுபாலனை நோக்கி செல்வதை பார்த்து அரசர்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள். யுதிஷ்டிரன் துயரத்தில் இருந்தான். பீஷ்மர் புன்னகையுடன் இருந்தார். கிருஷ்ணன் சிசுபாலன் மீது கொண்டிருப்பது கோபம் அல்ல. அனுக்கிரக மூர்த்தியாக நின்று கொண்டு சக்கராயுதத்தை சிசுபாலன் மீது கிருஷ்ணன் ஏவினான். சக்கராயுதம் சூரியப் பிரகாசத்தோடு வெட்டவெளியில் சுழன்று சென்று சிசுபாலனுடைய தலையை அவன் உடம்பில் இருந்து விடுவித்தது. சக்கராயுதம் பிறகு கிருஷ்ணன் கையில் வந்து அமர்ந்தது. சிசுபாலனுடைய மேனியிலிருந்து ஒளி ஒன்று கிளம்பி கிருஷ்ணனின் பாதங்களில் வந்து ஒதுங்கியது. இந்த சிசுபாலன் வேறு யாருமில்லை வைகுண்டத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன் விஜயன் ஆகிய இருவருள் இவன் முன்னவன் ஆவான். மகாவிஷ்ணுவின் ஆணைக்கு உட்பட்டு அவருக்கு எதிராக எடுத்த மூன்றாவது பிறவியை முடித்துக் கொண்டு அவன் கிருஷ்ணனிடம் தஞ்சம் அடைந்தான்.

ராஜசூய யாக்ஞம் மங்களகரமாக முடிந்தது என்று கூற முடியாது. வேந்தர்களில் பலர் அதிருப்தி அடைந்திருந்தனர். பொருந்தாத சில சகுனங்கள் தென்பட்டன. உலகுக்குக் கேடு காலம் வந்து கொண்டிருக்கின்றது என்று ரிஷிகள் கூறினர். இத்தகைய சூழ்நிலையில் யுதிஷ்டிரன் சக்கரவர்த்திக்கு எல்லாம் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தைப் பெற்றான்.

துரியோதனன் சகுனி கர்ணன் ஆகிய கௌரவர்கள் அஸ்தினாபுரத்திற்கு உடனே திரும்பிப் போகவில்லை. மயனால் அமைக்கப்பட்டு இருந்த மாளிகையை நன்கு ஆராய்ந்து பார்க்க அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் தங்கியிருந்தார்கள். பாண்டவர்களும் அவர்களை அன்புடன் உபசரித்து வந்தார்கள். விருந்தினர்களாக தங்கியிருந்த அவர்களை மகிழ்விக்க பல பல இடங்களை காட்டினார்கள். இந்த மாளிகையினுள் வியப்புக்குரிய வேலைப்பாடுகள் பல இருந்தது. அவர்கள் அவைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்தார்கள். நீண்ட நடைபாதை ஒன்றின் வாயிலாக நடந்து கொண்டிருந்த பொழுது துரியோதனன் தடாலென்று தண்ணீருக்குள் விழுந்து முழுவதும் நனைந்து போனான். ஏனென்றால் தண்ணீரின் மேற்பரப்பில் முற்றிலும் நிலம் போன்று தென்பட்டது. வேறு ஒரு இடத்தில் துரியோதனன் வாயிலின் மேல் படியின் மீது தலையை மூட்டிக் கொண்டான். அதற்குக் காரணம் வாயில்படி இருந்தும் அது கண்ணுக்குப் புலனாகவில்லை. இதைப்போன்ற வியப்புக்குரிய அமைப்புகள் பல அந்த மாளிகையினுள் அமைந்திருந்தது. கௌரவர்கள் ஏமாற்றம் அடைந்த பொழுதெல்லாம் நகைப்புக்கு ஆளானார்கள். அவர்கள் இதனை விளையாட்டாக பொருட்படுத்தவில்லை. வெறுப்புடனும் பொறாமையுடனும் பார்த்தார்கள். ஆனால் அதை துரியோதனன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. விளையாட்டாக எடுத்துக் கொண்டது போன்று பாசாங்கு பண்ணினான்.