மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 14
ரிஷிகள் முனிவர்கள் யோகிகள் ஆகியோர் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர். கிருஷ்ணனும் அடிக்கடி பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு தக்க ஆதரவு கொடுக்கின்றான். அங்கு ஓயாது வந்து கொண்டிருக்கும் விருந்தினர்களுக்கு திரௌபதி அறுசுவை உணவை திருப்திகரமாக கொடுத்துக் கொண்டிருக்கிறாள். யுதிஷ்டிரன் இருக்குமிடம் கைலாசத்துக்கு வைகுண்டத்திற்கும் நிகரானது போல் தென்படுகிறது. போர்க்கலையில் அவர்கள் உச்ச ஸ்தானம் பெற்றிருக்கின்றார்கள். என்று பிராமணன் திருதராஷ்டிரன் தெரிவித்தார்.

பிராமணன் கூறிய அனைத்தையும் கேட்ட திருதரஷ்டிரருடைய மனதில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது. அவருடைய மனதில் போராட்டம் பன்மடங்கு அதிகரித்தது. துரியோதனன் மீது அவர் வைத்திருந்த பாசம் அவனுடைய உள்ளத்தில் பன்மடங்கு இருந்ததாலும் பாண்டுவின் பிள்ளைகள் மீது அவர் வைத்திருந்த பாசம் வெறும் பெயரிலேயே இருந்ததும் அவரின் வேதனைக்கு காரணமாய் இருந்தது. அனைத்தையும் கேட்ட துரியோதனன் பாண்டவர்களிடம் ராணுவ பலம் இல்லை என்றும் தன்னுடைய ராணுவத்தை அசைக்க முடியாத படி தாம் பலப்படுத்தியிருப்பதாவும் எண்ணி உள்ளம் பூரிப்படைந்ததான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய ராணுவத்தை பற்றியும் அதனுடைய பலத்தை பற்றியும் திருதரஷ்டிரரிடம் விளக்கி கூறினான்.

கர்ணனும் சகுனியும் துரியோதனனும் சதியாலோசனை ஒன்று செய்தார்கள். காம்யக வனத்திற்கு அருகில் அஸ்தினாபுரத்திற்கு சொந்தமான மாட்டுப்பண்ணை ஒன்று இருந்தது. அதை தாங்கள் பார்வையிட போவதாக திருதராஷ்டிரனிடம் சொல்லி அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். பின் அத்திட்டத்தின் படி பாண்டவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. திருதராஷ்டிரரின் அனுமதியுடன் பெண்களை தங்களோடு அழைத்துக்கொண்டு பெருங்கூட்டமாக அவர்கள் புறப்பட்டு வனத்துக்குச் சென்றார்கள். அரச குடும்பத்து பெண்கள் ஆடம்பரத்துடன் பட்டாடைகள் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்து திரௌபதி தன் விதியை எண்ணி வருந்த வேண்டும். தாங்கள் ராஜபோகத்துடன் இருப்பதை பார்த்து பாண்டவர்களை வருத்தப்பட்டு துன்புறுதல் வேண்டும் என்றும் பல வகைகளில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு காம்யக வனத்திற்கு கிளம்பினார்கள்.

காம்யக வனத்திற்குள் வந்த கௌரவர் கூட்டத்தினர் அங்கு தூய நீர் நிறைந்திருந்த தடகம் ஒன்றை பார்த்தார்கள். முதலில் அதில் நீராடி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே விண்ணுலகில் இருந்து வந்த கந்தர்வர்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். கந்தர்வர்கள் நீராடிக்கொண்டிருந்தது கௌரவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆகவே அத்தடாகத்தை உடனே காலி பண்ணவேண்டும் என்று அவர்களுக்கு துரியோதனன் உத்தரவிட்டான். ஆனால் கந்தர்வர்கள் அந்த உத்தரவை முற்றிலும் நிராகரித்து துரியோதனனை பொருட்படுத்தவில்லை. அங்கு தகராறு ஒன்று ஏற்பட்டது. அதி விரைவில் தகராறு ஒரு பெரிய போராட்டமாக வடிவெடுத்தது. கௌரவர்கள் விரைவில் தோற்கடிக்கப்பட்டனர். கர்ணன் தன்னுடைய ரதத்தை இழந்து அவமானத்துக்கு ஆளானான். மேலும் தான் ஆபத்துக்கு ஆளாகாத வண்ணம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். கந்தர்வர்கள் பெண்கள் உட்பட கௌரவர்கள் அனைவரையும் அவர்களது கைகளை கட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.