மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 15
கந்தர்வர்கள் கௌரவர்களின் கையை கட்டி கைது செய்து காம்யக வனத்திற்குள் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். கௌரவர்களின் கதியை பார்த்து பீமன் அகமகிழ்வு எய்தி மிக நன்று மிக நன்று என்று கத்தினான். எங்களை ஏளானம் செய்ய திட்டம் போட்டவர்களின் வினைப்பயன் அவர்களையே சூழ்ந்து கொண்டது என்று கத்தினான். பழிக்குப்பழி வாங்கும் செயலை நாங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்களின் பிரதிநிதிகளாக கந்தர்வர்கள் இச்செயலை செய்து விட்டார்கள் என்று உரக்க கூறினான். பீமனுடைய பேச்சை யுதிஷ்டிரன் ஆமோதிக்கவில்லை. நம்முடைய குடும்ப தகராறுகள் நம்முடனே இருக்கட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வேற்றார் வந்து நம்முடைய உறவினர்களை தாக்குவதற்கு நாம் ஒரு போதும் அனுமதி தரக்கூடாது. அது மட்டுமில்லாமல் குடும்ப பெண்களையும் அவர்கள் சிறைபிடித்துச் செல்கின்றார்கள். குருவம்சத்துக்கு ஆபத்து என்று ஏதேனும் ஒன்று வந்தால் பாண்டவர்களாகிய நாமும் கௌரவர்களும் ஒன்று சேர்ந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினான்.

துரியோதனன் தங்களை காப்பாற்றுமாறு தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருந்தது பாண்டவர்களுக்கு கேட்டது. யுதிஷ்டிரன் தனது சகோதரர்களிடம் யாரேனும் ஒருவர் ஆபத்தில் அகப்பட்டு இருந்தால் அவர்களை காப்பாற்றுவது என்பது ஒரு பொது விதி. இப்போது ஆபத்தில் நமது உறவினர்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை காப்பற்ற நாம் அதிவிரைவாக ஒட நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். மேலும் துரியோதனன் காப்பாற்றுமாறு நம்மிடம் உதவி கேட்கிறான். இப்போது நான் யாக்ஞத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயுதம் எதையும் கையாளலாகாது. ஆகையால் நீங்கள் நால்வரும் நமது உறவினர்களை காப்பாற்ற விரைந்து செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.

யுதிஷ்டிரரின் ஆணைக்கு உட்பட்டு பாண்டவ சகோதரர்கள் நால்வரும் தங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கந்தர்வர்களோடு வீராவேசத்தோடு போர்புரிந்தார்கள். இந்தப்போராட்டம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது கந்தர்வர்களின் தலைவன் சித்தரசேனன் தான் இன்னானென்று காட்டிக்கொண்டு அர்ஜூனன் முன் வந்து நின்றான். இவ்வளவு நேரம் பயங்கரமாக போரிட்டு வந்த அர்ஜூனன் இந்திரலோகத்தில் தனக்கு குருவாக இருந்த சித்திரசேனனை பார்த்ததும் அவர் முன்பு வீழ்ந்து வணங்கினான். யுத்தம் நிறுத்தப்பட்டது. கௌரவர்களை ஏன் கைது செய்து அழைத்துச் செல்கின்றீர்கள் என்று இந்திர லோகத்து குருவான சித்திரசேனனிடம் மிகுந்த வணக்கத்துடன் அர்ஜூனன் கேட்டான்.

அதற்கு சித்திரசேனன் கஷ்டதிசையில் இருக்கும் பாண்டவர்களை பரிகாசம் செய்யும் பொருட்டு கௌரவர்கள் ராஜரீதியில் உடை அணிந்து ஆடம்பரமாக வனத்திற்குள் வந்தார்கள். அவனது நோக்கத்தை அறிந்து வந்த நாங்கள் அவனை தண்டித்தல் பொருட்டு கைது செய்து அழைத்துச் செல்கின்றோம் என்றார்.