மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 16
கந்தர்வர்களின் தலைவனான சித்திரசேனனிடம் அர்ஜுனன் வேண்டுதல் ஒன்றை வைத்தான். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் யுதிஷ்டிரன் முன்பு நிறுத்தும் படியும் யுதிஷ்டிரன் கூறும் தண்டனையை இவர்களுக்கு கொடுக்கும்படியும் வேண்டுகோள் வைத்தான். இதற்கு சித்திரசேனன் முழுவதும் சம்மதம் கொடுத்தான். கௌரவர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் முன்பு அழைத்துச் செல்லப்பட்டனர். துரியோதனன் செய்த பிள்ளைக்காக யுதிஷ்டிரன் அவனை சிறிது கடிந்து கொண்டான். இதுபோன்ற பொருளற்ற நடவடிக்கை ஏதும் இனி செய்ய வேண்டாம் என்றும் தலைமை பட்டணத்திற்கு திரும்பிப்போய் அமைதியாக வாழவேண்டும். பகையால் பயனேதுமில்லை. இப்போது நிகழ்ந்துள்ள தௌர்பாக்கியங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இன்புற்று வாழ்ந்து இருக்கும்படி துரியோதனனுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைத்தான். துரியோதனன் வெட்கத்தாலும் அவமானத்தாலும் முகம் வாடிப்போனவனாக அங்கிருந்து கிளம்பினான். உடன் வந்தவர்கள் அனைவரையும் அஸ்தினாபுரம் அனுப்பிவிட்டு அவன் தனியாக ஓரிடத்தில் தங்கினான்.

துரியோதனன் திரும்பி வந்ததை அறிந்த கர்ணன் திட்டப்படி துரியோதனன் காரியத்தை நிறைவேற்றி வந்திருக்கிறான் என கருதி துரியோதனனை கர்ணன் பாராட்டினான். ஆனால் துரியோதனனோ தனக்கு நேர்ந்த தௌர்பாக்கியத்தையும் யுதிஷ்டிரனின் மேன்மை தாங்கிய எண்ணமே தன்னை கந்தர்வர்களிடம் இருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது என்றும் தெரிவித்தான். தான் வெறுக்கும் பாண்டவர்களால் தன்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டதை எண்ணி மேலும் உயிர் வாழ்ந்திருக்க துரியோதனன் விருப்பமில்லை. துச்சாதனனை சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்து விட்டு பட்டினி கிடந்து உயிர் துறக்க தீர்மானித்தான் துரியோதனன்.

அவனுடைய தம்பிமார்கள் அவனுடைய பாதங்களில் விழுந்து கும்பிட்டு அத்தகைய தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து மாறவில்லை. அனைத்தையும் கேட்ட கர்ணன் அப்படி செய்வது பயங்கர பயந்தாங்கோலித்தனம் என்றும் க்ஷத்ரியன் ஒருவனுக்கு அது சரியானது இல்லை என்றும் தங்களை ஆண்டுவந்த வேந்தனுக்கு செய்ய வேண்டிய கடமையை தானே பாண்டவர்கள் செய்தனர் என்றும் கர்ணன் நிலைமையை எடுத்துக் காட்டி துரியோதனன் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்குமாறு கூறினான். ஆனால் துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காதவனாக தென்பட்டான்.

அத்தருணத்தில் தானவர்களும் தைத்யர்களும் துரியோதனன் முன்னிலையில் வந்து தேவர்களால் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை எடுத்து விளக்கினார்கள். தேவர்களோடு போர் புரிய அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். துரியோதனன் மடிந்து போனால் தங்களுடைய போர் வலிமை குறைந்துவிடும். பாண்டவர்களுக்கு துணை புரிய தேவர்கள் முன்வந்திருக்கிறார்கள். தேவர்களைத் தோற்கடிப்பதன் வாயிலாக பாண்டவர்களை தோற்கடிப்பது உறுதி என்று அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். அரக்கர்கள் கொடுத்த இந்த வாக்குறுதி துரியோதனனுக்கு புதிய வல்லமையை கொடுத்தது இத்தகைய புதிய நம்பிக்கை அடைய பெற்றவனாக துரியோதனன் அஸ்தினாபுரம் திரும்பி வந்தான்.