மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 17
வனத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. பீஷ்மர் துரியோதனனை சபா மண்டபத்திற்கு வரவழைத்து அறநெறி பிறழாத பாண்டவர்களிடம் துரியோதனன் செய்த செயலை கண்டித்தார். துரியோதனன் பீஷ்மர் கொடுத்த புத்திமதியை பொருட்படுத்தவில்லை. பீஷ்மர் பாண்டவர்களை எப்பொழுதும் புகழ்வதாகவும் தன்னை இகழவும் செய்கின்றார். ஆனாலும் எனக்கு தீங்கு ஏதும் வரவில்லை. நான் நன்கு வாழ்ந்து வருகின்றேன் என்று தன் தொடையை தட்டி பலத்த ஓசை பண்ணிவிட்டு அங்கு பீஷ்மரை அவமதிக்கும் பாங்கில் அங்கிருந்து வெளியேறினான்.

துரியோதனன் கர்ணனிடம் யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யக்ஞத்தை பார்த்த நாள் முதல் அத்தகைய வேள்வி ஒன்றை தானும் நடத்தி மாமன்னன் என்ற உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று ஆசை இருக்கின்றது என்று தன்னுடைய எண்ணத்தை தெரிவித்தான். அதற்கு கர்ணன் அவனுடைய ஆசையை முற்றிலும் ஆமோதித்து ராஜசூய யக்ஞம் நடத்துவதற்கு முதலில் இவ்வுலகில் இருக்கும் மன்னர்கள் அனைவருடைய அனுமதியையும் பெறவேண்டும். தான் இந்த நிலவுலகை சுற்றிவந்து அனைத்து மன்னர்களின் அனுமதியையும் பெற்று யக்ஞம் நடத்தி உனக்குரிய உயர்ந்த அந்த பதவியை பெற்று தருகின்றேன். நான் இந்த நிலவுலகை சுற்றி வருவதற்குள் நீ யக்ஞம் நடத்த ஏற்படு செய்வாயாக என்று கூறினான்.

ராஐசூய யக்ஞம் நடத்துவதற்கு புரோகிதர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. புரோகிதர்கள் இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. ஏற்கனவே ராஐசூய யக்ஞம் நடத்திய யுதிஷ்டிரன் வாழ்ந்திருக்கும் போது துரியோதனன் மற்றொரு ராஐசூய யாக்ஞம் நடத்துவது பொருந்தாது மற்றும் மன்னராகிய திருதரஷ்டிரர் இருக்கும் போது அவருடைய மகன் யக்ஞம் நடத்துவது பொருந்த செயல் என்று தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள். இப்போது துரியோதனன் தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு வேறு ஒரு உபாயத்தை எடுத்துரைத்தான். வைஷ்ணவ யக்ஞம் சீரிலும் சிறப்பிலும் ராஜசூய யக்ஞத்துக்கு நிகரானது. ஆகவே வைஷ்ணவ யக்ஞம் செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டான். அனைவரும் சம்மதம் கொடுத்தார்கள். யக்ஞத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கம் இருக்கும் அனைத்து மன்னர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்புகள் எடுத்துச்சென்றவர்கள் முறையாக அனைத்து விஷயங்களையும் பாண்டவர்களிடம் எடுத்துரைத்தனர். அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் யக்ஞம் இனிது நிறைவேற வேண்டும் என்று ஆசிகள் கூறி பதிமூன்று வருடங்கள் வன வாசத்தில் இருக்கும் காரணத்தால் தங்களால் வரஇயலாது என்று கூறினான். அப்போது பீமன் அழைக்க வந்தவர்களிடம் எங்களுடைய பதிமூன்று வருட வனவாசத்திற்கு பிறகு நாங்கள் ஒரு யக்ஞம் செய்வோம். அந்த யக்ஞத்திற்கு திருதராஷ்டிரரின் மைந்தர்கள் அனைவரும் ஆஹீதியாக்க படைக்கப்படுவார்கள் இந்த செய்தியை துரியோதனனிடம் தெரிவிக்கவும் என்று கூறினான். அழைக்கவந்தவர்களும் நடந்தவைகள் அனைத்தையும் அரண்மனையில் தெரிவித்தார்கள்.