மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 3
காம்யக வனத்தில் வனவாசத்தை அமைதியோடு ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் இப்பொழுது அதை முற்றிலும் தங்களுடைய ஆன்ம பலத்திற்க்கான பயிற்சிக்கு பயன்படுத்தினார்கள். வசதி நிறைந்த மாளிகை வாழ்க்கைக்கும் கஷ்டம் நிறைந்த வன வாசத்துக்கும் இடையில் அவர்கள் எந்தவிதமான வேற்றுமையையும் கொள்ளவில்லை. ஆயினும் திரௌபதி தன் கணவரின் போக்கை அறிந்து கொள்ள திரௌபதியால் இயலவில்லை. இளையவர்கள் நால்வரும் யுதிஷ்டிரனுடைய சொல்லிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். தீங்கை எதிர்ப்பது க்ஷத்திரிய தர்மம் ஆகும். ஆனால் யுதிஷ்டிரனோ தன்னுடைய பகைமை பங்காளிகள் தன் மீது சுமத்திய கஷ்ட திசைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான். கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் கொள்வது க்ஷத்திரியனுக்குரிய ஆயுதமாகும். ஆனால் அத்தகைய கோபங்கள் எதையும் யுதிஷ்டிரன் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகவே இருந்தான். திரௌபதியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கணவரிடம் இருந்த இத்தகைய சிறுமைக்கு காரணம் என்னவென்று அவள் பணிவுடன் யுதிஷ்டிரனிடம் கேட்டாள். அவள் கேள்விக்கு அவளுடைய குற்றச்சாட்டிற்கு பீமனும் துரௌபதியுடன் சேர்ந்து கொண்டான்.

நாம் அனுபவிக்கின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நானே என்பதை ஒத்துக்கொள்கிறேன். நம் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவர் சொற்படி நாம் எப்படி நடக்குமோ அதே விதத்தில் பெரியப்பாவாகிய திருதராஷ்டிரருடைய சொல்லுக்கு அடிபணிந்து நடக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். சூதாட்டத்தில் எனக்கு விருப்பம் இருக்கிறது என்று பெரியப்பாவுக்கு தெரியும். அவர் அதை பயன்படுத்தி நாம் அனைவரையும் இந்த கதிக்கு ஆளாகியிருக்கிறார். பதிமூன்று வருட காலம் வனவாசத்தில் இருக்க வேண்டுமென்ற அவர் விதித்திருக்கின்ற நிபந்தனைக்கு நான் உட்பட்டுள்ளேன். இப்பொழுது என் போக்கை நான் மாற்றிக் கொண்டால் அது சத்தியத்திலிருந்து பிசகுவதாகும். உயிர் போவதாக இருந்தாலும் நான் அப்படி செய்யமாட்டேன். இந்த 13 வருட காலம் வனவாசம் பூர்த்தியாகட்டும். அதன் பிறகு நீங்கள் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள நான் அனுமதிக்கிறேன். இப்பொழுது நமக்கு வாய்த்துள்ள துன்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டும். இந்த பதிமூன்று வருட காலத்தில் நாம் புரிகின்ற தவத்தின் வாயிலாக சூதாடிய பாவத்திற்கு விமோசனம் தேடிக் கொள்வோம். இந்த விஷயத்தில் நாம் எல்லோரிடத்திலும் மன ஒருமைப்பாடு அமைந்திருப்பது மிகவும் முக்கியமாகும். என்று யுதிஷ்டிரன் கூறினான். அதைக் கேட்ட சகோதரர்களும் திரௌபதியும் யுதிஷ்டிரனுடைய தீர்மானத்திற்கு முற்றிலும் இசைந்தனர்.

பாண்டவ சகோதரர்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் பொழுது வியாச பகவான் அவர்கள் முன்னிலையில் எழுந்தருளினார். அவருடைய வருகை பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. அவரை வரவேற்று அவருக்கு உரிய மரியாதை செய்தனர். போர் நடை பெறுவது உறுதி என்றும் தன் கட்சிக்கு அரசர்களை சேர்த்துக்கொள்வதில் துரியோதனன் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறான். பீஷ்மரும் துரோணரும் அவன் பக்கத்தில் இருந்து போர் புரிய இசைந்து உள்ளார்கள். அவர்களுக்கு நெருங்கிய நண்பன் கர்ணன். இம்மூவரும் பரசுராமருடைய மாணாக்கர்கள். ஆகையால் துரியோதனன் பக்கம் அமைந்திருக்கின்ற சக்தி மிக்க ஆள்பலம் மிகவும் அதிகமாகும். இந்த காரணங்களை முன்னிட்டு பாண்டவர்களும் தங்களை பலப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அர்ஜுனன் வடதிசை நோக்கிச் சென்று தெய்வீக ஆற்றல் படைத்த அஸ்திரங்களை தேடிக் கொள்வது அவசியம் என்று அவர்களுக்கு புத்திமதி கூறிவிட்டு வியாசர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.