மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 5
இந்திரன் அர்ஜூனனிடம் தெய்வீக ஆயுதங்களை உபயோகிக்கும் முறையை கற்றுக்கொள்ள ஐந்து வருட காலம் இந்திரலோகத்தில் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அர்ஜூனனும் தனது சகோதரர்களுக்கு தாம் இங்கு பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்தி விட்டால் ஐந்து வருடகாலம் இங்கு இருப்பதாக உறுதியளித்தான். மேலும் லலித கலைகள் மற்றும் நடனம் சங்கீதத்திலும் அவன் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேவலோகத்தில் கலைகள் யாவற்றிலும் சிறந்தவரான சித்திரசேனன் என்பவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்திரலோகத்தில் அர்ஜுனன் நலமாக இருக்கிறான் என்ற செய்தியை பாண்டவர் சகோதரர்களுக்கு தெரிவிப்பதற்காக லோமஸ ரிஷி இந்திரனால் மண்ணுலகிற்கு அனுப்பப்பட்டார். ஐந்து வருடகாலம் பயிற்சிகள் யாவும் முற்றுப் பெற்ற பிறகு சித்திரசேனன் அர்ஜுனனை ஒரு நெருக்கடியான சோதனைக்கு ஆளாக்கினார்.

ஊர்வசி என்பவள் தேவலோகத்துப் பெண் அவள் எப்பொழுதும் தேவலோகத்தில் இருப்பவள். அவளுடைய அசாதாரணமான அழகை கண்டு விண்ணவர்களையும் மண்ணுலகத்தவரையும் காம வலையில் மயக்கி அவர்களை சோதனைக்குள்ளாக்குவது அவளது வேலை. அர்ஜுனனை காதல் வலையில் அகப்படும் தூண்டுதல் வேலைக்கு அந்த தேவலோக பெண் நியமிக்கப்பட்டாள். அவளும் அதற்கு இசைந்தாள். ஆனால் அர்ஜுனன் அவளை தன் அன்னையாக போற்றி வழிபட்டான். அதனால் அவளுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இத்தகைய தோல்வி அவளுக்கு நிகழ்ந்தது இதுவே முதல் தடவை ஆகவே அவள் மிகவும் கோபத்திற்கு ஆளானாள். அத்தகைய கோபத்துடன் அவள் அர்ஜுனனை ஒரு பேடுவாக மாறிப்போகும் படி சாபமிட்டாள். பெண்களுக்கு முன்னிலையில் அவன் நடனம் புரிந்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். இதுவே அப்பெண் அர்ஜுனனை கிட்ட சாபமாகும்.

அர்ஜுனன் திகைத்துப் போனான். தன்னுடைய தந்தையான இந்திரனிடம் தனக்கு நிகழ்ந்த பரிதாபகரமான நிலையை தெரிவித்தான். இந்திரன் ஊர்வசியை தன் முன்னிலைக்கு வரவழைத்தான். அவளின் சாபம் வீண் போகாமல் சாபத்தில் ஒரு சிறிய மாறுதலை அமைக்கும்படி இந்திரன் வேண்டினான். அதன் விளைவாக ஒரு திருத்தம் செய்தாள். சாபத்திற்கு ஆளான அர்ஜூனன் தேவை ஏற்படும்பொழுது அந்த சாபம் அவனை ஒரு ஆண்டுக்கு மட்டும் வந்து பிடித்துக் கொள்ளும். அதன் பிறகு மீண்டும் பழைய உருவத்திற்கு அர்ஜூனன் மாறி விடுவான். இந்த சாபத்தை அக்ஞான வாசத்தின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திரன் அர்ஜுனனுக்கு ஆறுதல் கூறினான். இது சாபம் போன்று தென்பட்டாலும் ஒரு வருட அக்ஞான காலத்தில் மறைந்திருக்க நல்ல வாய்ப்பு என்று கருதி அர்ஜூனன் ஏற்றுக்கொண்டான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருக்கும் ரிஷிகளிடத்தில் காணப்படும் தெய்வீகத் தன்மை வாய்ந்த புலனடக்கத்தை பெற்றுருப்பதாக இந்திரனும் சித்திரசேனனும் அர்ஜூனன் பெரிதும் பாராட்டினர்.