மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 7
பாண்டவர்கள் நால்வரும் திரௌபதியும் தீர்த்த யாத்திரையை கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியில் முடித்துக்கொண்டு மேற்கு கடற்கரை மார்க்கமாக விருஷ்ணிகள் வாழும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் பிரபாஸை என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களுடைய வருகை பற்றிய செய்தி விருஷ்ணிகளுக்கு எட்டியது. பலராமனையும் கிருஷ்ணனையும் தலைமையாகக் கொண்டு விருஷ்ணிகள் தீர்த்த யாத்திரை செய்து கொண்டிருந்த தங்களுடைய உறவினர்களை சந்திக்க விரைந்து சென்றனர். சந்திப்பு இருதரப்பினருக்கும் பெரும் மகிழ்வை ஊட்டியது. தன்னுடைய தோழன் அர்ஜுனன் இந்திரலோகத்தில் தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் இன்னிசை பயிற்சியும் பெற்று வருவதை கேட்டு கிருஷ்ணன் பெருமகிழ்வுற்றான்.

அப்போது பலராமன் துரியோதனன் திருட்டுத்தனமாக பாண்டவர்களின் ராஜ்யத்தை அபகரித்து அதை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றான். இந்த ராஜ்யத்துக்கு சொந்தக்காரர்கள் காட்டில் எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் பட்டாடை அணிந்து கொண்டு சுகவாசியாக இருக்கின்றான். பாண்டவர்கள் போதாத உணவு அருந்தி தவித்துக் கொண்டிருக்கும் பொழுது துரியோதனன் ராஜபோகத்தில் மூழ்கி இருக்கின்றான். தர்மம் கஷ்டதிசையில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது அதர்மம் தலைதூக்கி வருகிறது. பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டவளின் உறவினர்களாகிய நாம் வலிமையற்றவர்களாக இருந்து இந்த அக்கிரமங்களை சகித்துக் கொண்டு வருகின்றோம் என்றும் இந்த சூழ்நிலை தமக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினான்.

பலராமன் கூறியதை கேட்ட சாத்யகி கோபத்துடன் கௌரவர்கள் செய்யும் அனைத்து செயலுக்கும் நாம் அனுமதி தருவது சரியாகாது. கொடுமை வாய்ந்த கௌரவர்களை அறவே தோற்கடிக்கும் வல்லமை விருஷ்ணிகளிடத்தில் இருக்கிறது. நாம் படையெடுத்துச் சென்று அபகரிக்கப்பட்ட ராஜ்யத்தை மீட்டெடுத்து அபிமன்யுவை அதற்கு தற்காலிக மன்னனாக நியமித்து வைப்போம். தான் கொடுத்துள்ள வாக்குகள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு யுதிஷ்டிரன் திரும்பி வரும் வரையில் அவனுக்கு வாரிசாக இருக்கின்ற அபிமன்யு மன்னன் ஸ்தானத்தில் இருக்கட்டும் என்றாள்.

கிருஷ்ணர் புன்னகையுடன் பாண்டவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு யாராலும் அழிக்க முடியாது. இது யுதிஷ்டிரன் பொறுமையோடு காத்திருக்கும் பொழுது அவனுடைய திட்டத்தில் நாம் அவசரப்பட்டு நுழைந்து அதற்கு கேடு ஏதும் செய்யலாகாது. அவருக்கு நாடாள்வதை விட மேலானது சத்தியவிரதம். இப்பொழுது அவர் வலிமையற்று இருப்பவர் போன்று தென்படுகிறார். தக்க காலம் வருகிற பொழுது அவர் திறமையை வெளிப்படுத்துவார். அப்போது நாம் அனைவரும் அவரோடு சேர்ந்து கொள்வோம் என்றார். யுதிஷ்டிரனுக்கு பெருமகிழ்வு உண்டாயிற்று. ஏனென்றால் அவன் எண்ணத்தை கிருஷ்ணன் சரியாக அறிந்து கொண்டிருந்தான். விருஷ்ணிகளோடு சிறிதுகாலம் உறவாடிய பிறகு பாண்டவர்கள் பிரபாஸை விட்டு புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றனர்.