மகாபாரதம் | 3 வன பருவம் | பகுதி - 9
பீமன் குரங்கிடம் நீங்கள் சாதாரண குரங்கு அல்ல. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன், உங்கள் முன் நான் மண்டியிடுகிறேன் என கூறி குரங்கின் முன் வீழ்ந்து வணங்கினான். பாண்டவ சகோதரர்களில் ஒருவன் நான். நீங்கள் யாரென்று தயவு செய்து கூறுங்கள் என்று கேட்டான். அதற்கு குரங்கு வாயு பகவானுடைய அனுக்கிரகத்தால் அஞ்சனா தேவிக்கு மகனாகப் பிறந்தவன் நான். சிறிது நேரத்திற்கு முன் அனுமனைப் பற்றி கூறினாயே அந்த அனுமன் நான் தான். நான் ராமதாசன். நீ எனக்கு தம்பி என்று கூறி தன் சுய ரூபத்தை அடைந்த அனுமன் பீமனுக்கு ஆசி வழங்கி பீமனை கட்டித் தழுவினார். அதன் விளைவாக தன்னிடத்தில் புதிய ஆற்றல் வந்ததை போல் பீமன் உணர்ந்தான். பீமனுக்கு அனுமான் வரம் ஒன்று கொடுத்தார்.

வரத்தின் படி போர் களத்தில் பீமன் சிங்கமாக உறுமும் போது அனுமானின் குரலும் சேர்ந்து கொள்ளும். அதனால் பாண்டவர்களின் சேனையில் பலமும் கௌரவர்கள் சேனையில் குழப்பமும் உண்டாகும். நான் அர்ஜுனனின் ரதத்தில் உள்ள கொடியில் இருப்பேன். நீ ஜெயம் கொள்வாய் என அனுமான் ஆசி அளித்தார். இப்போது கௌரவ சகோதரர்களுடன் இனி நிகழும் போராட்டத்தில் வென்று விடக்கூடிய வல்லமை பீமனுக்கு வந்தது. சௌகந்திகா மலரை பறிக்க தான் நீ வந்திருக்கிறாய் என எனக்கு தெரியும். நீ மலர்களை எடுக்க போகும் பாதையில் ஆபத்து இருக்கிறது. இது ஆண்டவர்களுக்கான பாதையாகும். மானிடர்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. ஆதனால் உன்னை எச்சரிக்கவே நான் வந்தேன். இந்த மலர் இருக்கும் குளத்தை நான் உனக்கு காண்பிக்கிறேன். உனக்கு வேண்டிய பூக்களை எடுத்து கொண்டு செல் என கூறினார். பீமனும் பூக்களை எடுத்து வந்து திரௌபதியிடம் அளித்தான். அர்ஜூனன் சென்று நீண்ட நாட்கள் ஆகிவிட்ட படியால் அர்ஜூனனுடைய வரவிற்காக பாண்டவ சகோதரர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் வானத்தில் மிகவும் பிரகாசத்துடன் இந்திரனுடைய மேன்மை தாங்கிய ரதம் நிலவுலகை நோக்கி வந்தது. அது பூமியில் வந்து இறங்கிய உடன் அர்ஜுனன் அதிலிருந்து குதித்து இறங்கினான். தேவலோகத்து தந்தை கொடுத்திருந்த ஆயுதங்களையும் கீரிடத்தையும் அவன் அணிந்திருந்தான். வந்தவன் தனது மூத்த சகோதரர்களான யுதிஷ்டிரனையும் பீமனையும் வணங்கினான். அந்த சந்திப்பில் பூரிப்பு நிறைந்திருந்தது. அர்ஜுனன் சிவனோடு கொண்ட இணக்கம் இந்திரலோகத்தில் வாழ்ந்த வாழ்வு அங்கு பெற்ற பயிற்சிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கினான் அவன் வாழ்ந்து வந்த வாழ்வின் விவரங்கள் அனைத்தையும் விரிவாக அறிந்து கொள்ள சகோதரர்கள் விரும்பினார்கள் அவர்கள் விரும்பியபடி அனைத்தையும் அர்ஜுனன் சளைக்காது அவர்களுக்கு எடுத்துக் கூறினான்.