மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 12
ரதத்தை உத்தரன் ஓட்ட படையெடுத்து வந்த கௌரவர்களை எதிர்த்து விராட நகரத்தின் போர் வீரனாக புறப்பட்டுப் போனன் அர்ஜூனன். விராட நகரக் கொடி சிங்கத்தை அடையாளமாக கொண்டது. அர்ஜுனனுடைய கொடி குரங்கை அடையாளமாக கொண்டது. பிருஹன்நளா என பெயர் கொண்ட அர்ஜூனன் ரதத்திலிருந்த சிங்க கொடியை நீக்கிவிட்டு தன்னுடைய குரங்கு கொடியை கட்டி அர்ஜுனனை அடையாளமாகக் கொண்டு கௌரவர்களை எதிர்த்து போர் வீரனாக புறப்பட்டுப் போனான். போருக்கு வருபவன் யார் என்பது கௌரவர்களுக்கு விளங்கியது. இதைப்பார்த்த துரோணர் அர்ஜூனன் வருகின்றான். அவனை எந்த தேவனாலும் மனுடனாலும் வெல்ல முடியாது. 13 வருடங்களுக்கு பிறகு நான் அவனை காண்கிறேன் என்றார். அதற்கு கர்ணன் போர்க்களத்திற்கு இந்த பிராமணனை கொண்டு வந்து நாம் பிழை செய்து விட்டோம். எதிரியை பாராட்டிப் பேசி நம் பக்கம் இருக்கும் சேனேகளின் உற்சாகத்தை பாழ்படுத்துகிறார். அவருக்கு பொருத்தமான இடம் இந்த போர்களம் அல்ல. யாகசாலையோ அல்லது சபாமண்டபம் இவருக்கு ஏற்ற இடமாகும் என்றான்

துரியோதனன் பேசினான். கீச்சகனால் இடையறாது உபத்திரவப்படுத்தப்பட்ட சுதர்மனுக்கு உதவிபுரிய இந்நாட்டின் மீது நாம் படையெடுத்து வந்திருக்கின்றோம். சுதர்மன் நாட்டை தென்திசையில் தாக்கியதன் விளைவாக மன்னனும் அவனுடைய சேனை முழுவதும் அப்பக்கம் கவர்ந்து இழுக்கப்பட்டு விட்டார்கள். இந்நகரில் மறைந்திருக்கும் பாண்டவர்களை கண்டுபிடிப்பது நம்முடைய முக்கிய நோக்கமாகும். ஓர் வருட காலம் முற்றுப் பெறுவதற்கு முன்பே அவர்களில் ஒருவனை நாம் கண்டு பிடித்தாயிற்று. இது போதும் அதன் விளைவாக பாண்டவர்கள் மறுபடியும் பன்னிரண்டு வருட காலம் வனவாசம் செல்ல கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று துரியோதனன் கூறினான்.

கிருபர் பேசினார். தன்னந்தனியாக இருந்து அர்ஜுனன் ஏற்கனவே பல அரிய பெரிய செயல்களைச் செய்து உள்ளான். நேரடியாகவோ மறைமுகமாகவோ பாண்டவர்களை உபத்திரப்படுத்திய நம்மில் யாரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவரையும் அவன் தாக்க போகின்றான். ஆகையால் நாம் அனைவரும் ஒன்று கூடி நம்மை காப்பாற்றிக் கொள்ள முயல்வோம் என்று கிருபர் கூறினார்.

அசுவத்தாமன் பேசினான். விராட நாட்டுக்கு உரிய பசுக்களை நாம் கைப்பற்ற இங்கு வந்துள்ளோம் அவைகள் என்னும் அஸ்தினாபுரம் செல்லவில்லை. பசுக்கள் யாவும் இன்னும் விராட நாட்டின் நகரின் எல்லைக்கு உள்ளேயே இருக்கின்றன பெருமக்கள் வீண்பேச்சு பேசாமல் தங்கள் வீரத்தை செயலில் காட்டுகின்றார்கள் ஆனால் நாம் வீண் பேச்சை ஏராளமாக கையாளுகிறோம். வீரர்கள் பகடை விளையாடி ராஜ்யத்தை வெல்லாமல் வெளிப்படையாக போர் புரிந்து ராஜ்யத்தை வெல்கின்றனர். ஆனால் நாமோ பாண்டவர்களின் ராஜ்யத்தை போர் புரிந்து வெற்றி பெறாமல் பகடை விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். பசுக்களை மீட்டெடுக்க அர்ஜுனன் இங்கு வந்துள்ளான் அவனுடைய காண்டீபவில்லை நாம் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும் என்றான்.