மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 18
விராட மன்னனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் உறவு நன்கு வளர்ந்து வருகையில் துரியோதனனுடைய ஒப்பந்தம் ஒன்றை எடுத்துக் கொண்டு தூதுவன் ஒருவன் வந்தான். அந்த ஒப்பந்தத்தின் படி 13 ஆண்டுகள் பூர்த்தி ஆவதற்கு முன்பே அர்ஜுனனை நாங்கள் பார்த்துவிட்டோம். ஆகையால் நீங்கள் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு வனவாசம் செல்ல வேண்டும். நமக்கிடையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்துக் கொண்டுள்ள ஒப்பந்தத்தில் இருந்து நீங்கள் பிசகுவீர்காளாகில் உங்களுக்கு சொந்தமான தர்மத்திலிருந்து பிசகிப்போனவர்கள் ஆவீர்கள் என்று தூதுவன் கூறினான். அதைக் கேட்ட யுதிஷ்டிரன் வாய்விட்டு கடகடவென்று சிரித்தான். நாம் இருவருக்கும் போற்றத்தக்க பாட்டனாராக இருக்கின்ற பீஷ்மர் 13 ஆண்டுகளை நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினோமா இல்லையா என்பதை கூறட்டும். அவருக்கேற்ற பேரப்பிள்ளைகளான நாம் இருவரும் அவருடைய தீர்மானத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வோம். அப்படி நாம் நடந்து கொள்வது நம்முடைய குடும்பத்தின் கௌரவத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும் என்று அதற்கு மறுமொழியாக ஒற்றனிடம் செய்தி சொல்லி அனுப்பினான்.

விராட மன்னனுக்கு சொந்தமாக இருந்த உபப் பிளவ்வியா என்னும் பட்டணத்திலே பாண்டவர்கள் வசித்து வரலாயினர். வனவாசத்திலிருந்து பாண்டவர்கள் வெளியே வந்து விட்டார்கள் என்ற செய்தி அதிவிரைவில் எங்கும் பரவியது. அதைக் கேள்வியுற்ற நண்பர்களும் அபிமானிகளும் பாண்டவர்களை பார்ப்பதற்கு கும்பல் கும்பலாக வந்தனர். வந்தவர்களில் கிருஷ்ணனும் துருபத மன்னனும் முதன்மை வகித்தார்கள். பாண்டவர்களும் கிருஷ்ணனுக்கு சந்திக்கும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சி மிக்கதாக இருந்தது.

கிருஷ்ணா உன்னுடைய அனுக்கிரஹத்தால் பதிமூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டவர்களாக இருந்து நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம். உன்னுடைய எண்ணப்படி நடந்து கொள்ள நாங்கள் இப்போது ஆயத்தமாக இருக்கின்றோம் என்றார்கள். திரௌபதி அழுதபடி ஸ்தப்பித்து நின்று கொண்டிருந்தாள். அவள் கண்ணீரை துடைத்த கிருஷ்ணன் பெண்பால் ஒருத்தியுடைய புனிதத்திற்கு பங்கம் பண்ணுகின்ற பாதகன் தண்டனையிலிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள மாட்டான். நீ பட்டுள்ள மானபங்கத்திற்கு ஈடு செய்வேன் என்று பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு காம்யக வனத்தில் உனக்கு வாக்கு கொடுத்திருக்கின்றேன். அதிவிரைவில் நீ மகிழ்வுற்றிருக்கும் நாள் வரப்போகிறது. என்றார்.

சுபத்திரையும் அவளுடைய மகன் அபிமன்யுவும் விராட நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அபிமன்யு அவனுடைய தந்தை அர்ஜுனனை போன்றே ஆற்றல் மிகப்படைத்தவனாக இருந்தான். சில கூறுகளில் அவன் தந்தைக்கு மிக்கானாக இருப்பான் என்னும் அறிகுறிகள் அவனிடம் தெரிந்தன. வந்தவர்களை விராட நகரத்தின் மகாராணி சுதேசனை மகிழ்வுடன் வரவேற்றாள். மற்ற உறவினர்களும் அதிவிரையில் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர். அவர்கள் எல்லோருடைய முகங்களிலும் மகிழ்வு ததும்பிக் கொண்டிருந்தது. ராஜகுமாரி உத்தரையை அபிமன்யுவிற்கு திருமணம் செய்து முடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் அதிவிரைவில் ஆயத்தமாகி பெருமகிழ்வுடன் இனிதாக திருமணம் நடந்தது. யுதிஷ்டிரனை பார்க்க வந்த வேந்தர்கள் பலர் இந்த விவாகத்தில் கலந்து கொண்டனர்.  

விராட பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து உத்தியோக பருவம்