மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 3
காலையிலும் மாலையிலும் அரண்மனையில் பசுக்கள் இருக்கும் பண்ணையை சென்று பார்வையிடுவது மன்னனுடைய வழக்கமாக இருந்தது. ஒருநாள் அரசன் பசுக்களை பார்வையிடும் பொழுது பசுக்களை பற்றி சில கேள்விகள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களிடம் கேட்டான். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவன் பசுக்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை தெரிவித்தான். அவன் தெரிவித்த விவரங்கள் பசுக்களை பார்த்துக்கொள்பவர்களுக்கு புரியாதவகைகளாக இருந்தது. பசுக்களை பற்றி அனைத்தும் அறிந்தவனாக தென்பட்டவனிடம் யார் என்று மன்னர் விசாரித்தார். தன் பெயர் தந்திரிபாலன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த பண்ணையில் தனக்கு ஏதேனும் வேலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வந்தவனுடைய நடை பாவனைகளை பார்த்து இவன் ஒரு பிராமணன் அல்லது க்ஷத்திரனாக இருக்க வேண்டும் என்று அரசன் எண்ணிக்கொண்டு அவனை மாட்டுப் பண்ணையில் வேலைக்கு நியமித்தார். மாட்டுப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தவன் சகாதேவன்.

சைரந்திரி என்னும் பதத்தின் பொருள் வேலைக்காரி என்பதாகும். சைரந்திரி என்னும் பெயர் கொண்டவளாக திரௌபதி விராட நகரின் வீதிகளில் நடந்து சென்றாள். அவள் கந்தல் துணிகளை அணிந்து கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் இயல்பாகவே அவளுடைய அழகு மேன்மையானதாக இருந்தது. பாதையில் போய்க் கொண்டிருந்த மக்கள் அவளின் உடைகளை பார்த்து பரிகாசம் பண்ணினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் அவளைச் சூழ்ந்து வேடிக்கை செய்து கொண்டே பின் தொடர்ந்தனர். அரண்மனை மாடியில் மேல்தட்டில் இருந்த அரசியான சுதேனா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சைரந்திரியின் இக்கட்டான சூழல் அரசியின் கண்ணில் தென்பட்டது. தன்னந்தனியாய் போய்க் கொண்டிருந்த பெண்ணின் பரிதாப பரிதாபகரமான நிலை அவருடைய உள்ளத்தை தொட்டது. தாதிமார்கள் சிலரை அனுப்பி அவளை அரண்மனைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டான்.

இந்தப் பெண்ணின் பரிதாபகரமான பாங்கும் அவளுடைய கண்களிலிருந்து வந்த கண்ணீரும் அரசியின் உள்ளத்தை தொட்டது. அவள் யாரென்று அரசி விசாரித்தாள். தன்னுடைய பெயர் சைரந்திரி என்றும் தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்களாக இருக்கின்றார்கள் என்றும் ஒரு சாபத்தை முன்னிட்டு ஒர் வருட காலம் நான் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றேன். ஓர் வருடத்திற்கு பிறகு அந்த சாபத்திலிருந்து நான் விடுதலை பெறுவேன். அதுவரையில் தங்களிடம் நான் எனது பாதுகாப்பை வேண்டுகிறேன் என்றாள். தங்களுக்கு பூ மாலைகள் அழகாக தொடுக்க எனக்கு தெரியும். மிகவும் நேர்த்தியாக தங்களுடைய மேனியை அலங்கரிக்கவும் நான் வல்லவள் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். அரசி சிறிது சிந்தித்துப் பார்த்துவிட்டு ஓராண்டுக்கு உனக்கு ஆதரவு தருவதில் எனக்கு சிரமம் ஏதும் இல்லை. ஆனால் உன்னுடைய பேரழகு தான் அதற்கு இடைஞ்சலாக இருக்கின்றது. பருவத்தில் இருக்கும் ஆண்மகன் உன்னுடைய மேனி அழகில் மயங்கிவிடுவான். இங்கிருப்பதால் ஆண்களால் உனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணுகிறேன் என்றாள். தாயே நான் வெளியில் எங்கும் செல்லாமல் தங்களுடைய அந்தப்புரத்திலேயே தங்கி ஆண்களின் கண்களில் முடிந்தவரை படாமல் இருந்து கொள்கிறேன். மற்றொரு விஷயம் என்னுடைய கந்தர்வக் கணவர்கள் வெளித்தோற்றத்தில் இல்லாமல் என்னை காப்பாற்றி வருகிறார்கள். என்னிடம் யாராவது முறை தவறி தீண்டினால் அவனை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள் என்றாள். அனைத்தையும் கேட்ட அரசி அந்தப்புரத்தில் அடைக்கலம் புகுந்த அப்பெண் வாசித்திருக்க அனுமதி வழங்கினாள்.