மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 4

மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 4
பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் 12 வருடகாலம் வனவாசத்தை நல்விதத்தில் பயன்படுத்திக் கொண்டதை முன்னிட்டு பக்குவப்பட்ட மனநிலையில் தாங்கள் வாழ்ந்து வந்திருந்த ராஜ வாழ்க்கைக்கு எதிரான வேலைகளை ஏற்றத்தாழ்வு இல்லாமல் அரண்மனையில் செய்தனர். தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். விராட நகரத்தில் சூத்திர தர்மம் வைசிய தர்மம் ஆகியவற்றை அமைதியாகவும் ஆர்வத்துடனும் நிறைவேற்றினர்.

விராட நகரத்தில் அப்பொழுது விழாக்கள் பல நிகழ்ந்தது. அவைகளில் சிவராத்திரியையொட்டி நடந்த விழாவானது சிறப்புற்று விளங்கியது சுமார் 10 நாட்கள் நடந்த விழாவில் விதவிதமான போட்டி விளையாட்டுகள் நடைபெற்றது. அதற்கு ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்திலிருந்தும் தூரத்தில் இருந்தும் போட்டி போடுபவர்கள் பலர் வந்து வந்து சேர்ந்தனர். எங்கிருந்தோ வந்திருந்த மற்போர் வீரன் ஒருவன் மற்றவர்களை எல்லாம் எளிதில் தோற்கடித்தான். விராட நகரத்தில் வசிக்கும் போர் வீரர்கள் வெறும் குழந்தைகளுக்கு நிகர் என்றும் தன்னை தோற்கடிக்க யாருக்கும் இயலாது என்றும் அவன் தன்னை குறித்து பெருமை அடித்துக்கொண்டான். அவ்வாறு அவன் கூறியது விராட மன்னனுக்கு மிகச் சங்கடமாக இருந்தது. அரசனுடைய மனநிலையை அவனுடைய தோழனாக புதிதாக வந்திருந்த கனகன் அறிந்து கொண்டான். அரசனிடம் சென்று தங்களுடைய புதிய சமையல்காரன் வல்லாளன் என்பவன் பல தடவை விளையாட்டிற்காக மல்யுத்தம் புரிவதை பார்த்திருக்கின்றேன். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற இந்த வீரனுடன் போட்டியிடும்படி வல்லாளனுக்கு ஆணையிட்டு பாருங்கள். ஒரு வேளை இவனை தோற்கடிக்க அவனுக்கு சாத்தியமாகலாம் என்றான்.

அக்கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வல்லாளனை வேந்தன் தன் முன்னிலைக்கு வரவழைத்தான். நீ மற்போர் புரிவதில் திறமைசாலி என்று என்னுடைய தோழன் கூறுகின்றான். கர்வமே வடிவெடுத்திருக்கின்ற அந்த வீரனை மற்போர் செய்து வெல்ல முடியுமா என்று முயற்சி பண்ணிப்பார் என்று கூறினான். இத்தகைய நல்ல சந்தர்ப்பம் தனக்கு வந்து வாய்க்கும் என்று வல்லாளன் எதிர்பார்க்கவில்லை. என் நாட்டின் மன்னனுடைய பெருமையின் பொருட்டு என்னால் இயன்றதை செய்கிறேன் என்று கூறிக்கொண்டு மறுப்போர் மேடைக்கு ஓடினான். அன்றைய விளையாட்டில் வெற்றி வீரனாக விளங்கியவனிடம் தன்னோடு மற்போர் புரியும்படி மரியாதையுடன் வல்லாளன் வேண்டினான். இருவருக்கும் இடையில் யுத்தம் துவங்கியது. இரண்டு சிங்கங்கள் ஒன்றோடொன்று சண்டை போடுவது போன்ற காட்சி தென்பட்டது. வேண்டுமென்றே வல்லாளன் தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தவில்லை. ஆகையால் மற்போர் சிறிது நேரம் தொடர்ந்து நிகழ்வதாயிற்று. தன்னுடைய திறமைகளை விதவிதமான பங்குகளில் காட்டிய பிறகு வல்லாளன் கர்வமே வடிவெடுத்த வீரனை தோற்கடித்தான். மன்னனுக்கு இந்நிகழ்ச்சி மட்டில்லா மகிழ்வை உண்டாக்கியது. நகரவாசிகள் ஆரவாரத்துடன் வல்லாளனுடைய வெற்றியை புகழ்ந்து பாராட்டினார்கள்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!