மகாபாரதம் | 4 விராட பருவம் | பகுதி - 5
விராட நகரத்தில் மகாராணி சுதேசனாவுக்கு சகோதரன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் கீச்சகன். வல்லமை மிகவும் வாய்க்கப் பெற்றவன். அரசனுக்கு மைத்துனன் ஆகையால் அந்நாட்டுக்கு சேனைத் தலைவன் என்ற மிக உயர்ந்த ஸ்தானத்தை வகித்து வந்தான். ஒரு போக்கில் அவனை விராட நாட்டு மன்னன் என்றே அழைக்கலாம். அந்த அளவுக்கு பலமும் செல்வாக்கும் கொண்டவனாக இருந்தான். பாண்டவர்கள் புரிந்து வந்த வனவாசம் அமைதியாக சென்று கொண்டிருந்தது. அப்போது உபத்திரம் ஒன்று உருவெடுத்தது.

கீச்சகன் தன் சகோதரியாகிய ராணியின் அந்தப்புரத்திற்கு ஒருநாள் உரிமையுடன் சென்றான். அப்போது தற்செயலாக சைரந்திரியைப் பார்த்தான். பார்த்ததும் அவள் மீது காதல் கொண்டான். அந்த வேலைக்காரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிறிதேனும் நாணம் இன்றி தன் சகோதரியிடம் அவன் வேண்டினான். அவன் அப்படிக் கேட்பது பொருத்தமற்றது என்று உடன்பிறந்தவள் எடுத்துக் கூறினாள். ஆனால் கீச்சகன் மட்டும் தான் எடுத்த தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அந்த வேலைக்காரி 5 கந்தர்வர்கள் பாதுகாத்து காப்பாற்றுகிறார்கள். அவளிடம் வம்பு செய்தாள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்தும் அவன் அதை பொருட்படுத்தவில்லை. அந்த பெண்ணை தனக்கு உரியவள் ஆக்குவேன் இல்லை என்றாள் அம்முயற்சியில் மடிந்து போவேன் என்று தீர்மானமாக தன் சகோதரியிடம் கூறினான்.

கீச்சகனுடைய மாளிகைக்கு உள்ளே சென்று கொஞ்சம் மதுபானம் கொண்டு வரவேண்டுமென்று சுதேசனா ராணி சைரந்திரிக்கு உத்தரவிட்டாள். இதனை புரிந்து கொண்ட சைரந்தரி வேலைக்காரியாக இருந்த தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்றும் தனக்கு பதிலாக வேறு வேலைக்காரியை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் பரிந்துரை செய்து விண்ணப்பித்தாள். ஆயினும் அவருடைய வேண்டுதல் அங்கீகரிக்கப்படவில்லை. அரசியின் ஆணைக்கு அடிபணிந்து அவள் நடக்க கடமைப்பட்டு இருந்தாள். தன்னை காப்பாற்றி அருள வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்ட சைரந்திரி அரசியின் ஆணைக்கு அடிபணிந்து கீச்சகனின் மாளிகைக்கு சென்றாள்.

சைரந்தரி என்ன நிகழும் என்று எதிர்பார்த்தாளோ அது அப்படியே நடந்தது. அவளைப் பார்த்த உடனே கிச்சகன் தனக்கு இணங்கும்படி அவளை கெஞ்சி கேட்டான். அவனுடைய போக்கு பொருந்தாதது என்று சைரந்திரி எடுத்து விளக்கினாள். ஆனால் கீச்சகனோ அவள் கையை பிடித்து இழுத்தான். வலிமை வாய்ந்த வேலைக்காரி ஒரே குலுக்கில் தன்னை விடுவித்துக் கொண்டு அரசனுடைய மண்டபத்திற்கு ஓடினாள். வெறிபிடித்த அந்த சேனைத்தலைவன் அவளைப் பின்தொடர்ந்து ஓடி சபைக்கு நடுவே அவளை தனது காலால் எட்டி உதைத்தான். இந்நாட்டில் திக்கற்ற பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லையா என்று சைரந்தரி ஓலமிட்டாள். விராட மன்னன் அமைதியாக இருந்தான். அங்கு குழுமியிருந்த அனைவரும் கிச்சனுக்கு நடுநடுங்கி நடந்துகொண்டனர். கனகனும் வல்லாளனும் சபையில் இருந்தனர். ஆனால் ஒர் வருட காலம் தங்களை மறைத்துக்கொண்டு அடங்கிக் கிடக்கும் நெருக்கடிக்கு அவர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். இந்த பிழையை சரி படுத்த முயன்று தங்களை இன்னாரென்று உலகுக்குக் காட்டிக் கொள்ளும் நெருக்கடியில் அவர்கள் அகப்பட்டுக் கொள்ளலாகாது. நிலைமை இப்படி இருந்தும் வல்லாளன் சிறுது சீற்றம் அடைந்தான். அதை கூறிப்பால் உணர்ந்து கொண்ட கனகன் விரைந்து சென்று சமைப்பதற்கு விறகு பிளக்க வேண்டும் என்று வல்லாளனுக்கு ஞாபகம் ஊற்றினான். அதன் உட்கருத்தை அறிந்து கொண்ட வல்லாளன் அமைதியாக அந்த சபையில் இருந்து வெளியேறினான்.