பாண்டவர்களை பற்றி பேச்சு ஆரம்பமானதும் கர்ணனுக்கு இதைக் குறித்து பரபரப்பு மிக உண்டாயிற்று ஏனென்றால் பாண்டவர்கள் மறைந்து இருக்கும் காலம் பெரிதும் கடந்து போயிற்று. பாண்டவர்கள் மறைந்து வாழும் காலம் ஓர் வருடத்தில் இன்னும் சில நாட்களே உள்ளது. திறமை வாய்ந்த வேறு சில ஒற்றர்களை உடனடியாக அனுப்பி தீவிரமாக அவர்களைத் தேடிப் பார்க்க வேண்டும் என்று கர்ணன் தெரிவித்தான். பாண்டவர்கள் மறைந்து போயிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களே கண்டுபிடிப்பது சாத்தியமல்ல என்றும் துரோணாச்சாரியார் தனது கருத்தை தெரிவித்தார்.
துரோணாச்சாரியார் கருத்தை பீஷ்மரும் ஆமோதித்து கிருஷ்ணனுடைய கருணைக்கு பாண்டவர்கள் பாத்திரமாய் இருக்கிறார்கள். பாண்டவர்கள் தர்மத்தை விட்டு பிசகியது கிடையாது. பாண்டவர்கள் தர்மத்தை கடைபிடிப்பதால் அவர்கள் எங்கு வசித்து வருகின்றார்களோ அங்கு சௌபாக்கியங்களும் நிறைந்திருக்கும். அவர்கள் வசித்து வருவதை முன்னிட்டு அங்கு மழை ஒழுங்காக பெய்யும். அவர்கள் வசித்து வரும் இடத்தில் மக்கள் சண்டை சச்சரவு ஏதும் செய்ய மாட்டார்கள் என்று பீஷ்மர் தெரிவித்தார். மேலும் பாண்டவர்களுக்குரிய ராஜ்யத்தை துரியோதனன் தனக்கு சொந்தமாக்கி நன்கு அனுபவித்தாகி விட்டது. ராஜ ரீதியான முறையில் அவர்களிடம் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குரிய நாட்டை அவர்களிடமே ஒப்படைப்பது சரியானதாகும். அப்படி செய்வது துரியோதனுடைய கண்ணியத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார்.
ஒற்றர்களின் புதியதொரு படை நாடு முழுவதும் சுற்றிப்பார்த்து விட்டு விராட நகரை பற்றிய செய்தி ஒன்றை அஸ்தினாபுரத்தில் கொண்டு வந்தார்கள் பெண்பால் ஒருத்தியிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக வலிமை வாய்ந்த கீச்சகன் கந்தர்வன் ஒருவனால் கொல்லப்பட்டான் என்பது அந்த செய்தி. அந்த செய்தியைப்பற்றி துரோயோதனன் எண்ணிப்பார்த்தான். கந்தர்வன் என்று சொல்லப்படுவான். நிச்சயம் பீமனாக இருக்கவேண்டும். அந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பெண் துரௌபதியாக இருக்க வேண்டும். ஆகவே பாண்டவர்கள் மாறுவேடம் பூண்டு விராட நகரில் இருக்கின்றார்கள். அந்த நகரை முற்றுகையிட்டு போர் புரிய வேண்டும். விராட நகரம் தங்களை பாதுகாப்பாக வைத்ததற்கு கைமாறாக பாண்டவர்களும் போருக்கு கிளம்புவார்கள். போருக்கு வராமல் நகரில் மறைந்திருந்தாலும் ஊர் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்து அவர்களை கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு உடன்படிக்கையின்படி பாண்டவர்கள் மறுபடியும் பன்னிரண்டு வருடகாலம் வனவாசம் செய்ய வேண்டும் என்று எண்ணி விராட நகரை தாக்க முடிவு செய்தான்.
விராட நகரம் மீது எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது. விராட நாட்டு அருகில் உள்ள திரிகார்த்த நாட்டு வேந்தனாகிய சுதர்மன் விராட நாட்டை தென்புறத்தில் இருந்து தாக்க வேண்டும். இந்த ஆலோசனைக்கு சுதர்மன் மத்திய நாட்டு மன்னன் என்னுடைய விரோதி எனக்கு ஓயாது உபத்திரவம் கொடுத்து வந்த கீச்சகன் இறந்துவிட்டான். ஆகையால் இப்போது விராடநகரம் வலிவற்று இருக்கிறது. விராட நாட்டை தாக்கி அந்நாட்டுக்குறிய பசுக்களை நான் கைப்பற்றிக்கொள்கின்றேன் என்றான்.