மகாபாரதம் | 5 உத்தியோக பருவம் | பகுதி - 1
பாண்டவர்களின் எதிர்கால வாழ்வைப் பற்றி ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் அதற்காகவே அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் எல்லோரும் விராட நகர சபா மண்டபத்தில் கூடினார்கள். இது குறித்து கிருஷ்ணன் சபை நடுவே எழுந்து நின்று பேச ஆரம்பித்தான். பொருத்தமான பிரதிநிதி ஒருவன் அஸ்தினாபுரத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவன் ஆலோசனை சொன்னார். செல்பவன் யுதிஷ்டிரனுடைய நிலைமையை உள்ளபடி எடுத்து விளக்கி அவனுக்கு சேரக்கூடிய ராஜ்யத்தை அவனுக்கு கண்ணியமாக திருப்பித் தரும்படி கேட்டுக் கொள்ளவேண்டும். அடுத்தபடியாக கிருஷ்ணனுக்கு மூத்தவன் பலராமன் பேசினான். சகுனியுடன் சூதாடியதன் வாயிலாக யுதிஷ்டிரன் தவறு செய்து விட்டான். சூதாட்டத்தில் இழந்ததை திருப்பி கேட்பது முறை இல்லை. எனினும் பிரதிநிதியாக செல்பவன் ஏதேனும் ஒருவிதத்தில் பாண்டவர்களுக்கு கௌரவர்கள் சகாயம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளலாம் என்றான்.

பலராமனை தொடர்ந்து யாதவ வீரனான சத்யகி பேசினான். பலராமனுடைய கருத்தை அவன் முற்றிலும் எதிர்த்துப் பேசினான். யுதிஷ்டிரன் விரும்பி சூதாட செல்லவில்லை. அவனுடைய பெரியப்பா திருதராஷ்டிரன் பலவந்தமாக சூதாட்டத்திற்கு அழைத்துள்ளார். சகுனியோடு சூதாடி ஆகவேண்டும் என்று அவனுடைய கௌரவ சகோதரர்களும் வற்புறுத்தினார்கள். கொள்ளையடிக்கும் பாங்கில் யுதிஷ்டிரனுடைய ராஜ்யத்தையும் சொத்துக்களையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை கண்ணியமான முறையில் அவர்கள் திருப்பித் தந்தாக வேண்டும். அப்படித் தராவிட்டால் தர்ம யுத்தத்தின் வாயிலாக திருப்பி எடுத்துக் கொள்ளப்படும். கெஞ்சிக் கேட்பதற்கு இங்கு இடம் இல்லை என்று சத்யகி கூறினான்.

சத்யகியின் பேச்சை துருபத மன்னன் முற்றிலும் ஆமோதித்தான். தன்னுடைய ராஜ்யத்திலிருந்து தகுதிவாய்ந்த துதூவன் ஒருவனே அஸ்தினாபுரத்திற்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தையும் அது சம்பந்தமான விசயங்கள் அனைத்தையும் அவன் அறிந்தவனாக இருப்பான். இது ஒருபுறமிருக்க யுத்தம் வந்தால் தங்களுக்கு உதவி பண்ணக் கூடியவர்களை அதிவிரைவில் அணுகி அவர்களை தங்கள் பக்கம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதலில் போய் கேட்பவர்களுக்கு சம்மதம் கொடுப்பது அரசர்களுக்கு அன்றைய நடைமுறையில் இருந்தது.

இந்த விசயத்தில் பாண்டவர்கள் பிந்தலாகாது. நிச்சயமாக முதலில் துரியோதனன் ஓடோடி தன் பக்கம் யுத்தம் செய்ய அரசர்களை அழைப்பான். ஆகையால் யுதிஷ்டிரன் அதிவிரைவில் அரசர்களிடம் சென்று அவர்களின் உதவியை நாடுதல் அவசியம் என்று துருபதன் கூறினான். துருபதன் கூறியவற்றை கிருஷ்ணன் ஆமோதிக்கவும் பாராட்டவும் செய்தான். அங்கு குழுமியிருந்த அரசர்களும் அதே முடிவிற்கு வந்தனர். இப்போது இருக்கும் நெருக்கடியில் யுத்தம் கண்டிப்பாக நடைபெறும் ஆகவே அவரவர்களுக்குரிய சேனைகளை அதிவிரைவில் தயார் படுத்தும் நோக்கில் அவர் அவர்கள் பிரிந்து சென்றார்கள்.