கிருஷ்ணர் கூறியதை கேட்ட துரியோதனன் தன் முயற்சியை நிறுத்திவிடவில்லை. குருவம்சம் முழுவதுக்கும் நீ நடுநிலை வகித்துள்ளாய். அப்படி இருக்க குரு வம்சத்தின் ஒரு பகுதியை வேற்றார் ஆகவும் மற்றொரு பகுதியை உற்றாராகவும் பாகு படுத்திப்பார்ப்பது ஏன் என்று கிருஷ்ணனிடம் துரியோதனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பாண்டவ சகோதரர்கள் ஒருபொழுதும் தர்மத்திலிருந்து பிசகியவர்கள் அல்லர். அவர்கள் எப்பொழுதும் நேர்மையே வடிவெடுத்து இருக்கின்றார்கள். நீயோ அவர்களுக்கு ஜென்மசத்ரு அவர்களை ஒழித்துக்தள்ள தீர்மானித்திருக்கிறார். நல்லவர்களுக்கு பகைவன் எனக்கும் பகைவன் ஆகிறான். அவர்களை உனக்குச் சொந்தம் என்று நீ அங்கீகரிக்கும் வரையில் நான் உன்னிடத்தில் இருந்து விலகியிருக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறிவிட்டு கிருஷ்ணன் விதுரருடைய வீட்டுக்கு திரும்பிச் சென்றான்.
விதுரரும் கிருஷ்ணரும் நிலைமையை ஆலோசனை செய்து கொண்டார்கள். துரியோதனன் செருக்கே வடிவெடுத்து இருக்கின்றான். பிடிவாதக்காரனாக இருக்கின்றான். அவனுடைய சபா மண்டபத்திற்கு போவது சரியானதாக இருக்காது என்று விதுரர் கிருஷ்ணரிடம் தெரிவித்தார். ஆனால் கிருஷ்ணரோ கடைசி நிமிடம் வரையில் சமாதானத்திற்கு முயற்சி பண்ண வேண்டும் என்றும் அதன் விளைவு எதுவானாலும் ஆகட்டும் என்று கூறினார். அடுத்தநாள் துரியோதனனும் சகுனியும் திருதராஷ்டிரரின் பிரதிநிதிகளாக கிருஷ்ணன் இருக்குமிடம் வந்து அவனை சபா மண்டபத்திற்கு அழைத்தார்கள். கிருஷ்ணனும் அவ்வாறே வருவதற்கு சம்மதித்தார். விதுரரும் அவரைப் பின்பற்றிச் சென்றார். அஸ்தினாபுர சபா மண்டபத்தில் கிருஷ்ணன் தக்க மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். முதியோர்கள் அனைவரும் அவர்களுடைய பக்கத்தில் சேர்ந்திருந்த அரசர்கள் எல்லோரும் எழுந்து நின்று கிருஷ்ணருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஆரம்பத்தில் நடைபெற வேண்டிய வரவேற்பு முறைமைகள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணன் எழுந்து தன் கருத்தை சபையோருக்கு தெரிவித்தார். குருவம்சத்துக்குரிய அரசாங்கம் பலவீணமடைந்த பொழுது தங்களுடைய தம்பியாகிய பாண்டு குருவம்சத்தை பழைய பெருமைக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தினார். வனத்தில் பாண்டு மன்னன் மடிந்து போன பொழுது அவருடைய பிள்ளைகள் அனாதைகள் போன்று தங்களிடம் வந்து சேர்ந்தார்கள். பெரியப்பாவாகிய உங்களை தங்களுடைய தந்தைக்கு நிகராக கருதி உங்களை அவர்கள் சார்ந்து இருந்தார்கள். ஆரம்பத்தில் தாங்கள் யுதிஷ்டிரனை யுவராஜனாக நியமித்தது முற்றிலும் பொருத்தமாக இருந்தது. அவன் தந்தைக்கு அடிபணிந்து நடப்பது போன்றே தங்களையும் அடிபணிந்து வந்திருக்கின்றான். ஆனால் தாங்கள் அவனுடைய அடக்க ஒடுக்கத்தை தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொண்டீர்கள். தங்களுடைய தம்பியின் மக்களை எத்தனை எத்தனையோ வகையாக அல்லல்களுக்கு ஆளாக்கினீர்கள். மடிந்து போவதிலிருந்து அவர்கள் தப்பித்துக் கொண்டது தெய்வாதீனமானதாகும். தங்களுடைய மைந்தன் துரியோதனன் வேண்டுமென்றே அவர்களை பலபல ஆபத்துக்களுக்கு ஆளாக்கினான். அவர்கள் தப்பி கொண்டதும் தெய்வாதீனமானதாகும்.