கிருஷ்ணர் மேலும் பேசினார். குருவம்சத்தை சேர்ந்த துரியோதனும் அவனுடைய கூட்டாளிகளும் பாவம் நிறைந்த அதர்மத்தை செய்து வந்திருக்கின்றார்கள். அதற்கு அரசனான தங்களும் ஒருவிதத்தில் உடந்தையாக இருந்திருக்கின்றீர்கள். அத்தகைய ஆடாத பாவச்செயல்களை மன்னிக்கவும் மறக்கவும் யுதிஷ்டிரன் இப்போது ஆயத்தமாய் இருக்கின்றான். இப்பொழுதும் தங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்ள அவன் ஆயத்தமாய் இருக்கின்றான். பகடைவிளையாட்டின் முடிவில் அமைத்து வைத்த ஒப்பந்தப்படி அவர்கள் தானாக சம்பாதித்துக் கொண்ட ராஜ்யத்தை அவர்களுக்கு திருப்பித் தந்துவிட வேண்டும் என்பது ஒன்றே அவர்களுடைய வேண்டுகோள் ஆகும் என்று கிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.
திருதராஷ்டிரன் பேசினார். இது ஒரு ஓயாத குடும்பத்தகராறு. ஆயினும் இது விரைவில் அமைதியாகவும் பெருந்தன்மையான முடிவுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். ஆனால் என் மகன் துரியோதனன் என் சொல்படி கேட்க மறுக்கிறான். அவன் கர்ணன் சகுனியுடம் சேர்ந்து கொண்டு தன் போக்கில் விபரீதமாக நடந்து கொள்கின்றான். கிருஷ்ணா தயவு செய்து நீ தான் அவனை நல்வழியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணன் துரியோதனிடம் ராஜ குடும்பத்தில் பிறந்தவன் அதற்கேற்றவாறு பெருந்தன்மையோடு நடந்து கொள்வது சரியானது. கீழோன் ஒருவன் கடைபிடிக்கின்றன சிறுநெறிகள் உனக்கு ஒரு பொழுதும் பொருந்தாது. நீசனாக இருப்பவன் பேராசை பிடித்தவனாகின்றான். மற்றும் தயாள குணம் படைத்திருப்பது மன்னனின் மகனாக பிறந்து இருப்பவனுடைய பாங்கு ஆகின்றது. நீ முற்றிலும் மன்னனுடைய மாட்சிமை படைத்தவனாக இருப்பாயாக. பெற்றோர் சொல்லை கேட்பதனால் அறநெறியில் நிலைத்திருப்பவன் ஆகின்றாய். சகோதரர்களோடு நல்லிணக்கம் பூணுவதன் வாயிலாக உன்னுடைய வல்லமையும் மகிமையும் நீ வளர்க்கின்றாய். இதற்கு நேர்மாறாக யுத்தத்தில் இறங்குவாய் என்றால் அதன் விளைவாக குரு வம்சம் முழுவதும் அழிந்து பட்டுப் போகும். வேறு சில பல அரச குடும்பங்களும் அழிந்து போகும் என்று கிருஷ்ணன் துரியோதனிடம் கூறினார்.
கிருஷ்ணன் கொடுத்த அரிதிலும் அரிதான புத்திமதியை பீஷ்மரும் துரோணரும் முற்றிலும் ஆமோதித்தார்கள். தயாளகுணம் படைத்தவனாக துரியோதனன் இருக்கவேண்டுமென்று அவனிடத்தில் அன்போடு அவர்கள் எடுத்துரைத்தார்கள். விபரீதத்தை தவிர்ப்பதற்கு பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக் கொள்வது ஒன்றே சரியான உபாயம் என்று எடுத்துரைத்தார்கள். அடுத்தபடியாக இதே விதத்தில் விதுரரும் துரியோதனிடம் முறையாக வேண்டிக்கொண்டார். துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரரும் தாய் காந்தாரியும் பிடிவாதம் பிடித்தவனாக இருக்க வேண்டாம் என்று அவனிடம் கேட்டுக்கொண்டார்கள்.